நாம் எதிர்கொள்ளும் "காலநிலை நெருக்கடி"யைச் சிலர் "காலநிலை மாற்றம்" என்று தீங்கற்ற முறையில் அழைக்கிறார்கள். இப்போது நாம் எதிர்கொண்டு நிற்பது சிறிய மாற்றமா? இல்லை, இது நமது அற்புதமான காலநிலை இயந்திரத்தைத் தகர்த்திருக்கும் சிதைப்பு.
எந்தக் குற்றவாளியும் தன் செயலைக் குற்றம் என்று சொல்லமாட்டார், இல்லையா? நம்முடையப் பொறுப்பற்ற வளர்ச்சி நடவடிக்கைகளால் நம்மிடம் இருந்ததைத் திட்டமிட்டு அழித்துவிட்டோம். அதன் விளைவாக நமக்குக் கிடைத்திருப்பது பேரழிவுதான்.
காலநிலை அழிவு என்பது முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், விஞ்ஞானம் மற்றும் வளர்ச்சிவாதத்தின் விளை பொருளான "தொழிற்புரட்சி" என்று அழைக்கப்படுவதிலிருந்து வெளிப்படுகிறது. இந்ததொழிற்புரட்சியின் காரணமாக, நீராவி என்ஜின்கள் இன்றியமையாதவையாக மாறின. அந்த இயந்திரங்களை இயக்க நிலக்கரிச் சுரங்கம் முக்கியமான ஒன்றானது. எனவே, கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படும் நிலக்கரி, நமது பிரபஞ்சத்தின் மையமாக மாறியது.
முதல் தொழிற் புரட்சி 1760 மற்றும் 1820 &க்கு இடையில் நடந்தேறியது. இயந்திரமயமாக்கப்பட்ட ஜவுளி உற்பத்தி, நீராவி இயந்திரம் போன்ற இயந்திரங்கள் தோன்றின. சாலைகள், கால்வாய்கள், இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன, இதன் விளைவாக செல்வம் அதிகரித்தது மற்றும் நுகர்வோர் பொருட்களுடன் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. எனவே மேற்கத்திய மக்கள் சிறந்த உணவு முறைகள், வீடுகள் மற்றும் பலவற்றை அனுபவித்தனர்.
ஏர் பிரேக், தொலைபேசி, மின்விளக்கு, தட்டச்சு இயந்திரம் போன்ற பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட 1870 முதல் 1914 வரையிலான காலக்கட்டம் இரண்டாவது தொழிற் புரட்சி என்றழைக்கப்பட்டது.
மூன்றாவது தொழிற்புரட்சி மின்சாரம் கண்டுபிடிப்பால் குறிக்கப்பட்டது. நான்காவது தொழிற்புரட்சி தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் பலவற்றின் தோற்றத்தைக் கண்டது. ஐந்தாவது தொழிற் புரட்சி தற்போதைய சுற்று ஸ்மார்ட் தொழில்நுட்பங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைமுகத்துடன் தொடர்புடையது.
சரியாகச் சொல்வதென்றால், காலநிலைத் தகர்ப்புக்கு தொழிற் புரட்சி மட்டும் காரணம் அல்ல. நமது மனிதகுலத்தின் சில குமுகங்கள் தங்களை பிரபஞ்சத்தின் அதிபர்களாகக் கருதுவது, இன மேலாதிக்கப் போக்குகளைக் கடைபிடிப்பது, இயற்கையைத் தங்கள் சொந்த இலாபத்திற்காகச் சுரண்டுவது, நுகர்வுக் கலாச்சாரத்தைக் கைக்கொள்வது மற்றும் ஆண்டு அனுபவிப்பது (ஹீடனிசம்) போன்றவையும்தான். ஆனால் தொழிற் புரட்சிதான் இயந்திரமயமாக்கல், தானியங்கிமயமாக்கல் (ஆட்டோமேஷன்), அதிகரித்த உற்பத்தி, மாசுபாடு, இலாபவெறி, தலைகீழான வளர்ச்சி, கடன் பொறி, வீணான வாழ்க்கை முறை மற்றும் பிற அழிவுகரமானப் போக்குகளுக்கு வழிவகுத்தது.
காலநிலை நெருக்கடி பற்றிப் பல்வேறு மற்றும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இந்த வேறுபாடுகளை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? அவரவர் கைக்கொள்ளும் அரசியலைப் பொறுத்து, சிலர் காலநிலைச் சிதைப்புப் பிரச்சினையை முக்கியமானதாக எடுத்துக்கொள்கிறார்கள், மற்றவர்கள் அதை நிராகரிக்கிறார்கள். இந்த இரண்டு நிலைகளையும் ஒரு நேர்கோட்டின் இரு முனைகளில் நாம் குறிக்கலாம். இவற்றுக்கு இடையே மற்ற நிலைகளின் முழு வரிசையையும் நாம் அடையாளம் காணலாம்.
அவற்றுள் இரண்டை மட்டும் வேறுபடுத்திப் பார்ப்போம்: ஒரு தரப்பு, பிரச்சினையைப் பற்றி தெளிவான புரிதல் இல்லாமல் எதையாவது பேசுபவர்கள். இன்னொரு தரப்பு, தங்கள் சொந்தச் சமூக-பொருளாதார- அரசியல் ஆதாயங்களுக்காக வேண்டுமென்றே பொதுமக்களைக் குழப்பி, தவறாக வழிநடத்துபவர்கள். இப்படியாக நான்கு A, B, C, D நிலைகளை நாம் அறியலாம்:
ஏற்றுக்கொள்பவர்கள், உளறுபவர்கள், குழப்பவாதிகள், மறுப்பவர்கள் (Acceptors - Babblers - Confusers - Deniers)!
A என்பது ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கிறது. அவர்கள் பிரச்சினை இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். நெருக்கடியைக் கையாள்வதில் இது மிக முக்கியமான முதல் படியாகும்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பிரெஞ்சுக் கணித விற்பன்னர் ஜோசப் பொரியர் (Joseph Fourier) பசுமைக் குடில் (greenhouse) விளைவுகள் பற்றி விவாதித்திருக்கிறார்.
George Monbiotஎழுதிய Heat, Fred Pearce எழுதிய When the Rivers Run Dry, and The Rough Guide to Climate Change, Jonathan Neal எழுதிய Stop Global Warming: Change the World (Bookmarks, 2008), and Mark Lynas எழுதிய Six Degrees: Our Future on a Hotter Planet (Fourth Estate, 2007) போன்றவை காலநிலைப் பேரிடரை ஏற்றுக் கொள்ளும் சில புத்தகங்கள்.
உகாண்டாவின் ஜனாதிபதி யுவேரி முசெவேனி, அதிகரித்து வரும் கரியமில உமிழ்வை ஏழைகளுக்கு எதிரான பணக்கார நாடுகளின் "வன்முறைச் செயல்" என்று அழைத்தார். COP26 பேச்சுவார்த்தையில், ஒரு சிறிய பசிபிக் தீவு நாடான பலாவ் நாட்டு ஜனாதிபதி, "காலநிலை அழிவுக்குப் பதிலாக நீங்கள் எங்கள் மீது குண்டுகளை வீசலாம்" என்று கூறினார். The Nutmeg’s Curse எனும் அவரது சமீபத்திய புத்தகத்தில், பிரபல எழுத்தாளர் அமிதாவ் கோஷ், காலநிலைப் பிரச்சனையை ஒரு "கிரக நெருக்கடி," "ஒரு வகையான உயிர்-அரசியல் போர்" என்று விவரிக்கிறார்.
கிளாஸ்கோவில் நடந்த COP26 ஐநா காலநிலை மாற்ற மாநாட்டிற்கு முன்னதாக, ஐநா 'We, The Change' எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இந்தியாவில் 18 முதல் 33 வயதிற்குட்பட்ட 18 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களைத் தேர்ந்தெடுத்தது. இவர்கள், உணவகங்களில் தண்ணீரைச் சேமிப்பது, ஆலிவ்-ரிட்லி ஆமைகளை இழுவைப் படகுகளில் இருந்து காப்பாற்றுவது, தொழிற்சாலைக் கழிவுகளை அகற்றுவது, உள்ளூர் மொழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக வானொலியைப் பயன்படுத்துவது போன்ற பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
B என்பவர்கள் உளறல் பேர்வழிகள். 2022 இல் கிளாஸ்கோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு, 17 வயதான ஃபின்லாந்து நாட்டு காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், சில உலகத் தலைவர்களின் நேர்மையற்ற அறிக்கைகளை "ப்ளா, ப்ளா, ப்ளா" என்று முத்திரை குத்தினார். இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10- ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கர் கூறுகையில், இளைஞர்களுக்கு நீதி வழங்கத் தவறிய தலைவர்கள் மீது கோபப்படுவதற்கு எல்லாக் காரணங்களும் உள்ளன என்றார். இந்த பிரச்சினை மற்றும் உலகத்தில் அதன் தீவிர தாக்கங்கள் பற்றிய உண்மையான புரிதல் உளறுபவர்களுக்கு இல்லை.
C வகையினர் குழப்பவாதிகள். அவர்கள் தங்களுக்குள் முரண்படுகிறார்கள் மற்றும் தெளிவான புரிதல் அல்லது உறுதியான நிலைப்பாடு இல்லாமல் கையில் உள்ள பிரச்சினையில் முன்னும் பின்னுமாகச் செல்கிறார்கள். எடுத்துக் காட்டாக, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரில் அமர்ந்து பட்ஜெட் அறிக்கையைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தியதால், ஐ.நா. காலநிலை மாநாட்டில், COP27 இல் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தார். பின்னர் திடீரென மனம் மாறி சுனக் ட்வீட் செய்தார்: "காலநிலை மாற்றத்தில் நடவடிக்கை இல்லாமல் நீண்ட கால வளர்ச்சி இல்லை. புதுப்பிக்கத்தக்க முதலீடு இல்லாமல் எரிசக்திப் பாதுகாப்பு இல்லை. அதனால்தான் நான் அடுத்த வாரம் COP27- ல் கலந்துகொள்கிறேன் என்றார்
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஒருவர் 'இயற்கை அன்னை' ஓர் உயிருள்ள நபரின் அனைத்து உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் கொண்ட சட்டப்பூர்வ நபரின் அந்தஸ்தைக் கொண்ட "உயிருள்ள உயிரினம்" என்று அறிவித்தார். 'இயற்கை அன்னையை'ப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு உத்தரவிட இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.
D வகையினர் மறுப்பாளர்கள். இந்த பழமைவாதம் பிரச்சினையின் இருப்பை மறுக்கிறது. எடுத்துக் காட்டாக, Wag TV ஒன்று பிரிட்டனின் சேனல் 4 க்காக 'The Great Global Warming Swindle' என்ற 90 நிமிட ஆவணப்படத்தை உருவாக்கியது. அதன்படி, மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றம் என்பது "பொய்...நவீன காலத்தின் மிகப்பெரிய மோசடி. உண்மை என்னவென்றால் புவி வெப்பமடைதல் என்பது பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலகளாவிய தொழில் ஆகும். அது தொழில்துறை எதிர்ப்பு சுற்றுச்சூழல்வாதிகளால் உருவாக்கப்பட்டது; உடந்தையான அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களால் முட்டுக் கொடுக்கப்பட்டது... உண்மை என்னவென்றால், COP26 -க்கு உலக வெப்பநிலையுடன் எந்த நிரூபிக்கப்பட்ட தொடர்பும் இல்லை... சூரியச் செயல்பாடுதான் குற்றவாளியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது."
சூரியன் பிரச்சினையாகக் கருதப்படுவதால், அவர்களில் சிலர் முன்மொழிந்த தீர்வு, பூமியை அடையும் சூரிய ஒளியில் சிலவற்றைத் தடுப்பதாகும். கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் ஆய்வகத்தில் உள்ள அணு ஆயுத விஞ்ஞானிகள் குழு ஒவ்வொரு ஆண்டும் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட ஒரு மில்லியன் டன் சிறிய அலுமினிய பலூன்களை வளிமண்டலத்தில் செலுத்த முன்மொழிந்தது. கொலராடோ மாநிலம் போல்டர் எனும் ஊரிலுள்ள வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மைய விஞ்ஞானியின் மற்றொரு திட்டம் பில்லியன் கணக்கான டன் கடல் நீரை காற்றில் தெளிக்க வேண்டும் என்பது. மற்றொரு திட்டம் சல்பேட் துகள்களை வளிமண்டலத்தில் செலுத்துவதாகும். மற்றொரு திட்டம் ஒரு பெரிய கண்ணாடியை பூமியின் சுற்றுப்பாதையில் திருப்புவது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் ஓசோன் படலத்தை அகற்றும், வறட்சியை ஏற்படுத்தும், மழைப்பொழிவை மாற்றும். இவற்றில் எதுவுமே வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு செறிவைக் குறைக்காது.
மார்ச் 2009 - இல், ஹார்ட்லேண்ட் இன்ஸ்டிடியூட், சிகாகோவை தளமாகக் கொண்ட ஓர் சிந்தனைக் குழு, காலநிலை நெருக்கடி மறுப்பாளர்களின் மாநாட்டை ஏற்பாடு செய்தது, அதில் 600 பேர் கலந்துகொண்டனர், அவர்கள் அனைவரும் வெள்ளையின ஆண்கள் மற்றும் அவர்களில் பெரும்பாலோர் ஓய்வு பெறும் வயதைக் கடந்தவர்கள். 70 பேச்சாளர்களில் இருவர் மட்டுமே பெண்கள் மற்றும் ஓர் ஆப்பிரிக்க- அமெரிக்கர். அவர்கள் Ayn Rand Institute, Carbon Sense Coalition, Committe for A
Constructive Tomorrow போன்ற வலதுசாரி சிந்தனையாளர்களுடன் இணைந்திருந்தனர். இந்த மறுப்பாளர்கள் குடியரசுக் கட்சியின் பழமைவாதப் பிரிவு மற்றும் கிறிஸ்தவ வலதுசாரிகளின் தீவிரப் பிடியில் இருந்து வந்தவர்கள். இந்த மாநாட்டுடன் இணைக்கப்பட்ட ஐம்பது சிந்தனைக் குழுக்களில் பெரும்பாலானவை எக்ஸானிடமிருந்து $47 மில்லியன் நிதியைப் பெற்றன.
புவி வெப்பமயமாதலை "புரளி" என்று நிராகரித்த குடியரசுக் கட்சியின் செனட்டரான ஜேம்ஸ் இன்ஹோஃப்பின் உதவியாளரான மார்க் மொரானோ, நான்கு முக்கிய ஊடகங்கள், காங்கிரஸ் மற்றும் வெள்ளை இனத் தலைமை ஆகியவற்றில் என்ன நடக்கிறது என்பதற்கு இந்த மாநாடு ஒரு எதிர் தாக்குதல் என்று கூறினார்.
காலநிலை நெருக்கடியின் அரசியல் மற்றும் கொள்கைத் தாக்கங்களை அவர்கள் விரும்புவதில்லை, எனவே அவர்கள் அதை நம்ப வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் பிரதிநிதி பால் பிரவுன், காலநிலை நெருக்கடி என்பது "விஞ்ஞானச் சமூகத்திற்கு வெளியே நிகழ்த்தப்பட்ட" ஒரு "புரளி" என்பதைத் தவிர வேறில்லை என்று அறிவித்தார்.
அவரது நாடு புதைபடிவ எரிபொருட்களின் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் என்ற போதிலும், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் 2001 இல் பதவியேற்றதிலிருந்து காலநிலை நெருக்கடிக்கு எதிரான நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். G8 தலைவர்கள் வணிகத்திற்கு தீங்கு விளைவிக்காமல் வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை ஆதரிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஜூலை G 6-8, 2005 அன்று ஸ்காட்லாந்தில் G8 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, அவர் பிரிட்டனின் ITV-யில் ஒரு நேர்காணலில் புவி வெப்பமடைதல் "நாம் சமாளிக்க வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க, நீண்டகாலப் பிரச்சினை" என்று ஒப்புக் கொண்டார். இருப்பினும், கியோட்டோ ஒப்பந்தம் போல் இருந்தால், ஸ்காட்லாந்து உடன்படிக்கைக்கு அவர் செல்ல மாட்டார். அவர் கூறினார்: "கியோட்டோ ஒப்பந்தம் நமது பொருளாதாரத்தைச் சிதைத்திருக்கும்."
தூதரக வட்டாரங்களிலும் மறுப்பவர்கள் உள்ளனர். எடுத்துக் காட்டாக, ஐ.நா. ஏப்ரல் 2007 இல் மக்கள் இந்தப் பிரச்சனையைப் பற்றிச் சிந்திக்கும் விதத்தை மறுவடிவமைப்பதற்காக முதன் முறையாக காலநிலைப் பிரச்சினையை விவாதித்தது. ஆனால் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. நாம் ஏற்கனவே விவாதித்தபடி விவாதத்தில் பெரிய தவறுகள் உள்ளன. வடக்கு- தெற்கு இடைவெளி குறிப்பாகக் கவலையளிக்கிறது.
1992 ஆம் ஆண்டு ரியோவில் நடந்த பூமி உச்சி மாநாட்டில் 2000 ஆம் ஆண்டளவில் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 1990 அளவுக்குத் தாமாக முன்வந்து குறைக்கத் தொழில்மயமான நாடுகள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பின்னர் 1995 &இல் பெர்லினில் 11 நாள் காலநிலை மாநாடு நடந்தது, கிட்டத்தட்ட 120 நாடுகளைச் சேர்ந்த சுமார் 900 பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர். பணக்கார வடக்கு மற்றும் ஏழை தெற்கு நாடுகள் இடையேயான விவாதங்கள் இந்த மாநாட்டின் மையமாக இருந்தன. ஜெர்மனியின் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஏஞ்சலா மெர்க்கல், “நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்” என்றார். ஆயினும்கூட, அமெரிக்காவின் தனிநபர் கரியமில உமிழ்வு வளரும் நாடுகளில் உள்ளதை விட 15-&20 மடங்கு அதிகமாக உள்ளது என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது.
2009 ஆம் ஆண்டு கார்டியன் நாளிதழ் விசாரணையில் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு முந்தைய ஏழு ஆண்டுகளில் பருவநிலை நெருக்கடிக்கு ஏற்ப உதவ 18 பில்லியன் டாலர்கள் வாக்குறுதி அளித்தன, ஆனால் அந்தப் பணத்தில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளன. அந்தச் சிறிய தொகை கூட வெளிநாட்டு உதவி வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மாற்றப்பட்டது. ஜார்ஜ் மான்பியோட் சொல்வது போல், "பணக்கார உலகம் ஏழைகளுக்கு [கார்பன் உற்பத்திக்காக] செலுத்த வேண்டிய சுற்றுச்சூழல் கடன் ஒருபோதும் விடுவிக்கப்படாது" என்பது போல, பழங்குடி மக்களின் இனப்படுகொலைகள், அடிமை வர்த்தகம், காலனித்துவ கொள்ளை மற்றும் பலவற்றிற்கு எந்த இழப்பீடும் செலுத்தப்படவில்லை.
வித்தியாசமான விளக்கங்கள் மற்றும்/அல்லது தீர்வுகளைக் கொண்டு வரும் அசத்தல் அறிவுஜீவிகள் வடக்கில் நிறைய உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் பெண்டி லிங்கோலா, ஃபின்லாந்தின் சுற்றுச்சூழல் பாசிச சிந்தனையாளர். அதிக மக்கள்தொகை, குறைந்து வரும் இயற்கை வளங்கள், உயிர்க்கோளத்தின் தொழில்துறை குப்பைகள் போன்ற உலகின் பிரச்சினைகளுக்கு, அவர் ஒரு முன்மொழிவைக் கொண்டுள்ளார்: "பெரும்பாலான மனித இனத்தை அழித்தல்." அவரைப் பொறுத்தவரை, உலகிற்கு இப்போது தேவை பஞ்சமும் நல்ல போரும். அவர் கூறுகிறார்: "கடந்த 100 ஆண்டுகளில் நாம் உருவாக்கிய அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்." ஆனால் அவர் தொலைபேசி மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார் மற்றும் அவர் ஆதரிக்கும் வன்முறையை அவர் ஏற்றுச் செயல்படவில்லை. அவர் சொற்பொழிவு ஆற்றுவது போல யாரையும் கொல்லவுமில்லை.
55 வயதான கனடா நாட்டு உளவியல் பேராசிரியரும் கலாச்சாரப் போராளியுமான ஜோர்டான் பி பீட்டர்சன் தற்போது மேற்கத்திய உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க பொது அறிவுஜீவி ஆவார். வலதுபுறத்தில் இருந்து ஆபத்துக்களைக் குறைத்து மதிப்பிடும்போது இடதுபுறத்தைப் பேய்த்தனமாகச் சித்தரிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பழக்கம் அவருக்கு உள்ளது. Spotify-இன் மிகவும் பிரபலமான போட்காஸ்டில் புதிய நான்கு மணி நேர நேர்காணலின் போது, காலநிலை நெருக்கடியில் நிபுணராக இல்லாத பீட்டர்சன், காலநிலையின் எதிர்கால நிலையைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் மாதிரிகளை நம்ப முடியாது என்று கூறினார்.
பீட்டர்சன் கூறினார்: "காலநிலை மாடலிங் செய்வதைத் தூண்டும் மற்றொரு பிரச்சனை என்னவென்றால், நீங்கள் காலப்போக்கில் மாதிரிகளை விரிவுபடுத்தும்போது, பிழைகள் தீவிரமாக அதிகரிக்கும். எனவே நீங்கள் ஒரு வாரம் அல்லது மூன்று வாரங்கள் அல்லது ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்தைக் கணிக்கலாம், ஆனால் நீங்கள் எவ்வளவு தூரம் கணித்தீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் மாடல் பிழையில் உள்ளது என்று பீட்டர்சன் கூறினார், "எல்லாவற்றையும் பற்றியது" காலநிலை இருந்தால், "உங்கள் மாதிரிகள் சரியாக இல்லை" ஏனெனில் அவர்களால் எல்லாவற்றையும் சேர்க்க முடியாது.
செஞ்சுரி (பீக்கன் பிரஸ், 2007) மற்றும் த ரஃப் கைடு டு க்ளைமேட் சேஞ்ச் (டார்லிங் கிண்டர்ஸ்லி, 2011), ஜொனாதன் நீலின் ஸ்டாப் குளோபல் வார்மிங்: சேஞ்ச் தி வேர்ல்ட் (புக்மார்க்ஸ், 2008), மைக்கேல் மேனின் தி எவர் க்ளைமேட் வார்: தி ஃபைட் டு டேக் பேக் (பெங்குயின், 2021), அல் கோர் ஆவணப்படம், அன் இன்கன்வீனியண்ட் ட்ரூத் (2006) ஆகியவை பிரச்சினையின் நீளம் மற்றும் அகலம் மற்றும் ஆழத்தைப் புரிந்துகொள்ள உதவும் சில புத்தகங்கள் மற்றும் ஆவணப்படங்கள் ஆகும். யாரோ சொன்னது போல், காலநிலை விவாதத்தை அறிவியல் மற்றும் காட்சிகளிலிருந்து அரசியல் மற்றும் முன்னெச்சரிக்கைக்கு நகர்த்துவதற்கான நேரம் இது.
காலநிலை நெருக்கடி இங்கு அதிகம். வலைப்பின்னல், பேசுதல், எழுதுதல், ஆராய்ச்சி செய்தல் மற்றும் பிரச்சாரம் செய்தல் ஆகியவை எந்த அர்த்தமுள்ள விதத்திலும் நிலைமையை மாற்றாது. அதற்குப் பதிலாக, நாம் நமது விழுமியங்கள், விருப்பங்கள், முன்னுரிமைகளை மறு பரிசீலனை செய்தாக வேண்டும். நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், கொள்கை அளவிலான மாற்றங்களைச் செய்ய வேண்டும். கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நமது காலநிலை அரசியல் மட்டுமே காலநிலை நெருக்கடியை நிறுத்தவும், அதை மாற்றவும், சேதங்களைத் தவிர்க்கவும் மற்றும் நமது உலகளாவிய காலநிலை இயந்திரத்தைப் புதுப்பிக்கவும் உதவும். விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கால நிலை வல்லுநர்கள் மற்றும் பலர் அறிவியல் மொழியைப் பயன்படுத்துவதையும், சிக்கலைப் பலவிதமாக விளக்குவதையும் நாம் கேட்கிறோம். எடுத்துக் காட்டாக, சிலர் நெருக்கடியை விளக்க மருத்துவ மொழியைப் பயன்படுத்துகின்றனர்: பூமிக்குக் காய்ச்சல் இருப்பதாகவும், அதை மறைத்து பாதுகாக்கும் போர்வை கிழிந்துவிட்டது, அதனால் துன்பம் மோசமாகி வருகிறது என்கின்றனர். ஓசோன் சிதைவு, புவி வெப்பமடைதல், பனி உருகுதல், கடல் மட்ட உயர்வு, வெப்ப அலைகள், மேக வெடிப்புகள் போன்ற சீரற்ற வானிலை, மக்களின் இடம்பெயர்தல், சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகள் மற்றும் பலவற்றைப் பற்றி பேசத் தொடங்கினோம். அரசியல் பக்கம் வெகு காலத்திற்குப் பிறகுதான் நமக்குப் புலப்பட்டது.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் மற்றும் பிற மேற்கத்தியப் பயணிகள் பூர்வீக மக்களின் எல்லைக்குள் நடத்திய ஊடுருவல் மற்றும் படையெடுப்பு "கண்டுபிடிப்பு" என்றும், காலனித்துவ ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கம் தீங்கற்ற முறையில் "முதல் தொடர்பு" என்றும் அழைக்கப்படுவது போல, மென்மையான உலகளாவிய காலநிலை இயந்திரத்தை மேற்கத்திய வளர்ச்சி அழித்தொழித்து "காலநிலை மாற்றம்" என்று அழைக்கிறது. அதேபோல், இயற்கையின் மீது நடத்தப்படும் இடைவிடாதச் சுரண்டலை "இயற்கை இழப்பு" என்று அவர்கள் அழைக்கிறார்கள், மேலும் நமது சூழலியல் மற்றும் காலநிலையை அழிக்கும் "மாசு" எனும் மாபெரும் பிரச்சினையுடன் "தொழில்துறை" அல்லது "வளர்ச்சி" போன்ற முன்னொட்டுகளைச் சேர்ப்பதை கவனமாகத் தவிர்க்கிறார்கள். மேற்கத்திய அரசியல், இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் ஊடகங்கள் பயங்கரவாதம், குடியேற்றம், முஸ்லிம்கள், ஆப்பிரிக்கர்கள் என்றெல்லாம் கவனத்தை திசைத்திருப்பாது, "உலகமயமாக்கல்", "வளர்ச்சி", "பாதுகாப்பு" மற்றும் "காலநிலை மாற்றம்" பற்றிப் பேச வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் மொழி, சொல்லாட்சி, புரிதல், நெஞ்சுரம், நேர்மைத் திறன் தெளிவாக இருக்க வேண்டும்.
- சுப. உதயகுமாரன்