பூலோக சொர்க்கம் என்று போற்றப்படும் காஷ்மீரின் மக்கள் - ஆதிக்க வெறிகொண்ட ஆட்சியாளர்களால் அனுபவிக்கும் சொல்லொணாக் கொடுமைகள் குறித்து யாரேனும் கவலையுற்றாலோ, கண்ணீர் விட்டாலோ, கவிதை வடித்தாலோ, கட்டுரை எழுதினாலோ அவருக்கு “தேசத்துரோகி” என்ற முத்திரை, ரத்தத்தால் குத்தப்படும்.

காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ரசித்து, மகிழும் சேடிச சேவுகமணிகளைத் தேசியமாமணி என்ற பாசிசம் கொண்டாடும்.

அண்மையில் (13.3.2020) 7 மாதங்களாகக் காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபருக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவரைப் போலவே பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்  (Basic Security Act) கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மஹபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

நாடறிந்த தலைவர்களுக்கே இந்தக் கொடுமை என்றால் சாதாரண மக்கள் அனுபவித்துவரும் அசாதாரணக் கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வன்மமும், கொடூரமும் நிறைந்தவை.

உலகிலேயே காஷ்மீரில் மட்டும் ஒரு சங்கம் உள்ளது. அதன்பெயர் “காணாமல்போன குழந்தைகளின் பெற்றோர் சங்கம்”. பூவுலகில், பொய்மை அரசியலால் வஞ்சிக்கப்பட்ட சாவுலகமாகச் சதாரணம் பட்டுக் கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரங்களை உலகம் கண்டு விடாதபடியும், கண்டு வெகுண்டு விடாதபடியும், --- உதவுகின்றன தேசியப் படுதாக்கள்.

ஜனவரி 1989 முதல் 2016 வரை காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 94.391 பேர். கைம்பெண்களாக்கப்பட்டப் பெண்களின் தொகை 22,816 பேர். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 10,193 பேர் என்று காஷ்மீர் ஊடகச் சேவையகம் புள்ளிவிவரம் தருகிறது. பதிவுக்கு வராத பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதை விடவும் அதிகமாகவே இருக்கும்.

2011ஆம் ஆண்டு காஷ்மீர் மனித உரிமை ஆணையம், வடக்குக் காஷ்மீரின் பாரமுல்லா, பண்டியூர், குப்வாரா மாவட்டங்களில் 38 இடங்களில் 2,730 அடையாளம் காணப்படாத சடலங்கள் புதைக்கப்பட்ட தகவலை அம்பலப்படுத்தியது.

இந்தச் சடலங்கள் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளுடை யவை என்று வாய்மையே வடிவான(?) அரசப்படையால் அடையாளமிடப்பட்டன.

இறந்தவர்களை ஏன் பயங்கரவாதிகளாக்குகிறார்கள்? விருதுகளும், பதவி உயர்வுகளும் வேண்டுமல்லவா, அதற்காகத்தான்!

15 பேருக்கு ஒரு வீரர், நூறு மீட்டருக்கு ஒரு வீரர் என ராணுவம் குவிக்கப்பட்ட காஷ்மீரில் எந்த வீட்டிலும் வீரர்கள்(?) புகுந்து எது வேண்டுமானாலும் செய்யலாம், யாரையும் தூக்கிச் செல்லலாம். இதைக் கொடுமை என்று கூறுவதினால் நீங்களும் ஒரு தேச விரோதியாக ஆக்கப்படலாம்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AEFSPA - Armed Forces Special Power Act) அங்கே நடைமுறையில் இருக்கிறது. அதன் குறைந்தபட்ச தண்டனையே மரண தண்டனைதான். யாரையேனும் பயங்கரவாதி என்று படையினர் சந்தேகித்தாலே போதும்; கொன்றுவிடலாம்.

இந்திய ஒன்றியத்துடன் காஷ்மீர் இணைந்தபோது, “பாதுகாப்பு, நாணயச் செலாவணி, வெளியுறவு, மக்கள் தொடர்பு” ஆகிய நான்கு கூறுகளுக்கான உரிமை மட்டுமே இந்திய அரசுக்கு, மீதி அனைத்து உரிமைகளும் காஷ்மீர் நாடாளுமன்றத்திடமே இருக்கும் என்று ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், காஷ்மீரின் இவ்வுரிமை குறித்து, கோபால்சாமி அய்யங்காரால் எழுதப்பட்ட 370வது பிரிவு சேர்க்கப்பட்டது. காஷ்மீரின் முதல்வர் ஷேக் அப்துல்லாவும், அவருக்கு அடுத்து வந்த பகூ குலாம் முஹம்மதும் பிரதமர் என்றே அழைக்கப்பட்டனர்.

அதன்பிறகு காஷ்மீரின் சிறப்புரிமை மட்டுமல்ல, காஷ்மீரிகளின் வாழ்வுரிமைகள் எப்படி எல்லாம் அரசியல் சூதாடிகளால் அலங்கோலமாக்கப்பட்டது என்பது நெடிய வரலாறு.

இந்திய நாட்டில் நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சிறப்புத் தகுதி இருக்கும் நிலையில், காஷ்மீரின் சிறப்புத் தகுதியை மட்டும் நீக்க வேண்டும் என்பதை மதவெறி கொண்ட சங்பரிவாரத்தின் அரசியல் பிரிவான பா.ஜ.க தனது அரசியல் இலட்சியங்களைக் கொண்டு செயல்பட்டு வந்தது.

அதை 2019இல் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, காஷ்மீரின் சிறப்புத் தகுதியைத் தில்லி இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 370 விதியைப் பயன்படுத்திப் படுகொலை செய்தது. காஷ்மீரை மூன்று ஒன்றியப் பகுதிகளாகக் கூறு போட்டது.

வரலாறு காணாத வன்முறை காஷ்மீர் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்த காஷ்மீர் தலைவர்களும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர்.

அலைபேசி, இணையத் தொடர்புகள் மாதக் கணக்கில் துண்டிக்கப்பட்டது.

உணவில்லை, மருந்தில்லை, தகவல் தொடர்பில்லை, மின்சாரமில்லை. இப்படி ஏராளமான சிக்கல்கள். ஆனால், மத்திய மதவாத அரசு மனமிரங்கவில்லை. காரணம், காஷ்மீர் மக்கள் விடுதலையின் காதலர்கள், தேசிய இன உணர்வு மிக்கவர்கள். மானத்தை உயிராய்க் கருதுபவர்கள். அனைத்துக்கும் மேலாக அவர்கள் முஸ்லீம்கள்.

எனவே அவர்கள் சாவது பற்றி காவிவெறி கவலைப்படாது. யாரேனும் கவலைப்பட்டால் அவர்களை தேசவிரோதிகள் என்று கூறத் தயங்காது.

Pin It