சுதந்திர நாட்டில் அனைவரும் சுதந்திரமாக இருக்கும் உரிமை இருந்தாலும் நாம் அனைவரும் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது விதி. விதி என்றுதான் குறிப்பிடுகிறேன், தலைவிதி என்று குறிப்பிடவில்லை, அரசியல் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது விதிமுறை என்று தான் குறிப்பிடுகிறேன்.

குற்றம் செய்யாத நபர்களே கிடையாது என்று சொல்லும் காலகட்டத்தில் தான் இருந்து வருகிறோம். இன்றெல்லாம் மக்கள் அதிகம் பயன்படுத்துவது முகநூல் போன்ற சமூக வலைதளங்களைத் தான். அவர்கள் இன்று வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் பயன்படுத்தாமல் தன்னுடைய வெறுப்பு, விருப்பங்களை முகநூல் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படி அவர்கள் பகிரும் கருத்துக்களில் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் அப்படி பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே சில சட்டதிட்டங்களை வகுத்து உள்ளனர். அப்படி வகுக்கப்பட்ட சட்டதிட்டங்களை அனைவரும் தெரிந்து இருக்கிறார்களா? என்றால் இல்லை, என்ற பதிலே அதிகம் வருகிறது.

facebook 600ஏ என்ன சொல்கிறது?

இந்தியாவில் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும், வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துக்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிறரை எரிச்சலூட்டும் வார்த்தைகள், அச்சுறுத்தல், ஏளனம், புண்படுத்துதல், பகை உணர்வைத் தூண்டுதல் போன்ற கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோரைக் கைது செய்யலாம் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும். தற்போது இச்சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையடுத்து, வலைதளக் கருத்துச் சுதந்திரம் மீட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்களை முழுமையாக விரிவான ஆதாரங்களுடன் இந்தப் பகுதியில் தந்துள்ளோம்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம்

இலக்கமுறை (டிஜிட்டல்) கையெழுத்து, பாதுகாப்பு, மற்றும் திருட்டு செய்தல் (ஹேக்கிங்) உள்ளிட்ட இணையப் பயன்பாடு மற்றும் வர்த்தகத்தைக், கட்டுப்படுத்த ஒரு சட்டக் கட்டமைப்பை அளிக்க ஜூன் 2000-ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றம் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தை உருவாக்கியது. சட்டம் மின்னணு ஆபாசத் தகவல்களை வெளியிட குற்ற நடவடிக்கையாக்குகிறது. மேலும் சட்டத்தை மீறும் தனிநபர்களைக் கைது செய்யவும் எவ்விடங்களையும் ஒரு ஆணை இல்லாமல் தேடவும் காவலர்களுக்கு (போலீஸுக்கு) அதிகாரங்களை வழங்குகிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தம்(2008)

இணைய தளங்கள் மற்றும் உள்ளடக்கம் மேலும் தூண்டக் கூடிய அல்லது குற்றமுள்ளதாகக் கருதப்படும் குற்றச் செய்திகளைத் தடுக்க அரசு அதிகாரத்தை வலுப்படுத்தியது. தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு (2000) (ITA) ஒரு நிகராக “2011 தகவல் விதிகள்” ஏற்கப்பட்டன.அதிகாரிகளால் ஆட்சேபணைக்குரியதாக கருதப்படும் குறிப்பாக “சிறார்களுக்குத் தீமையானது”, “வெறுப்பானது”, ‘‘தீங்கானது”, அல்லது “பதிப்புரிமையை மீறுவதாக” உள்ளதாக இருக்கும் எந்த உள்ளடக்கத்தையும் இணைய நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என தேவையளிக்கிறது. இணையக்கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களைப் பாதுக்காக்க வேண்டும்.

அவர்களுடைய கடைகளை எப்படி அமைக்கவேண்டும்?. அனைத்து கணினித் திரைகளும் பார்வையில் படும்படி இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்களின் உலாவல் வரலாற்றின் பிரதிகளை ஒரு ஆண்டு வரை வைத்திருக்கவேண்டும். இவ்வகைப் பதிவுகளை ஒவ்வொரு மாதமும் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் போன்ற பரைந்துரைகள் உள்ளன. 2003-இல் இந்திய அரசு இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்த “செயல்திறனுடன் நடவடிக்கை மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பு மூலம் இந்தியத் தகவல் தொடர்பு மற்றும் தகவல் உட்கட்டமைப்புப் பாதுகாப்பை மேம்படுத்த” இந்திய கணினி அவசரநிலைப் பிரதிசெயல் (CERT-IN) நிறுவனத்தை நிறுவியது.

அனைத்து உரிமம் பெற்ற இந்திய ஐஎஸ்பி-க்கள் சிஇஆர்டி-இன் முடிவுகளுக்கு இணங்க வேண்டும். மறு ஆய்வு அல்லது முறையீடுகள் இல்லை. இது குறிப்பிட்ட வலைதளங்களில் அணுக்களை தடுக்கிறது மற்றும் வேண்டுகோள்களை மறு ஆய்வு செய்கிறது. தொலைத் தொடர்புத் துறைக்கு (DOT) தடை உத்தரவுகளை வழங்கும் தனி அதிகாரத்தைப் பெற்றது.

பிரிவு 66 முதல் 69 வரை

66 ஏ பிரிவு: தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2008 ரொம்ப விரிவானது. சமூக வலைதளம் சார்ந்த குற்றங்களுக்கானது மட்டுமில்லை. தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்கள், வலைதள தகவல்திருட்டு, காப்புரிமை இதெல்லாமும் சேர்ந்தது. இணைய தளத்தில் தவறான, அவதூறான தகவல்களை பதிவதைப் பற்றியது தான் 66 ஏ பிரிவு. இந்த சட்டத்தின் 66 முதல் 69 வரையிலான எல்லாப் பிரிவுகளிலும் இணைய தளம் சார்ந்த குற்றங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

யாரேனும் ஒருவர் கணினி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்தியோ விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலைத் தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பைத் தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடன் மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது யாரேனும் ஒருவருக்குத் தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

பிரிவு 67: பாலுறவு தொடர்பான காட்சிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் வெளியிடுவோரை முதல் தடவை தண்டிக்கும்போது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மறுமுறை இதே தவறை மீண்டும் செய்தால் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இவற்றோடு இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமும் விதிக்கலாம்..

69(1) பிரிவு மற்றும் 69(2) பிரிவு

மத்திய அரசு, மாநில அரசு அல்லது அதன் அதிகாரிகள் இதற்கென சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் விருப்ப அதிகாரத்திற்கு உட்பட்டு, இந்திய அரசின் இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு, பாதுகாப்பு, நட்பு நாடுகளின் நலன்கள் அல்லது பொது ஒழுங்கு ஆகியவற்றைக் காத்திட, மேற்குறித்தவைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றம் ஏதேனும் இழைப்பதைத் தடுத்திட, அக்குற்றங்கள் குறித்து புலன் ஆய்வு ஏதேனும் மேற்கொள்ள, எழுத்து மூலம் காரணங்கள் பதிவு செய்து, எந்த ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு முகவாண்மையையோ, கணினி வழியாக அனுப்பப்படும் எந்த ஒரு தகவலையோ, கணினியில் காத்து வைக்கப்படும் தகவலையோ, இடையீடு செய்து கண் காணிக்க, மறித்திட, உத்தரவு அளித்து செயல்பட முடியும். இவ்வகை செயல்பாட்டிற்கு உகந்த வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன்படி, காவல்துறைக்கு எல்லை மீறிய அதிகாரத்தை இச்சட்டம் அளிக்கிறது. அரசாங்கங்கள் உங்களின் மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி உரையாடல் போன்ற, அனைத்து தகவல் தொடர்பு நடவடிக்கைகளையும், கண்காணித்திட முடியும். நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லாமலே, காவல்துறை ஆய்வாளர் ஒருவர், ஒரு இல்லத்தில் நுழைந்து தேடுதல் நடவடிக்கை செய்திடமுடியும், கணினியைக் கைப்பற்ற முடியும், புலன் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.

ஆதாரம்: லாயர்ஸ் லைன் மாத இதழ்

இவ்வாறு லாயர்ஸ் லைன் மாத இதழ் மூலம் நாம் அறிந்த செய்திகள் அனைத்தும் உண்மையானவைகளே! இதன் மூலம் நாம் அறிவது முகநூலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தவறான பதிவுகளைப் பதிவிடுவோர் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட முடியும் இதனால் இவர்கள் இந்த தவறுகளைச் செய்யாமல் இருக்க இந்தக் தகவல் பயன்படும் என்று கருதி வெளியிடுகிறோம்.

“தவறுகள் நடப்பதைக் குறைப்போம்...!

தவறுகள் இல்லா உலகைப் படைப்போம்...!

Pin It