அது குளிர்கிற மார்கழி மாதம் என்றாலும், அப்போது கொளுத்தும் வெயிலிலும் கபடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர் சிறுவர்கள். அதுவும் ஞாயிற்றுக் கிழமை வேறு; கேட்கவா வேண்டும். நேரம் காலம் போவது தெரியாமல் உற்சாகமாக கபடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இரு அணியாக இருந்து ஒருவரோடு ஒருவர் தோளோடு தோள் நின்று, தங்கள் அணி வெற்றி பெற விளையாடுகின்றனர். ஆட்டம் முடிந்தது. அனைவரும் ஆலமரத்தடியின் நிழலில் உட்கார்ந்து அளவளாவுகின்றனர். அப்போதுதான் ஆலமரத்தடிக்கு வந்து சேர்கிறார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனைப் பார்த்து இனியன், “என்ன கிருஷ்? ஏன் வெளயாட வரல” என்கிறார்.

கிருஷ்ணன் இனியனைப் பார்த்து, “ஆத்துல ஹோமம் இருந்துச்சுடா. அப்பா வெளயாட விடல. அதான் வர முடியல” என்றார்.

இனியன் சிரித்துக் கொண்டே, “ஹோம் வொர்க் மிஸ் பண்ணாலும் பன்னுவ, ஹோமத்த மிஸ் பன்ன மாட்ட போல இருக்கே!” என வேடிக்கையாய் சொல்லிக்கொண்டே, “நீ வந்திருந்தா நம்ம அணிக்கு ஆள் இல்லாம இருந்ததுக்கு ஒரு வாய்ப்பா இருந்திருக்கும்” என்கிறார்.

கிருஷ்ணன் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டே, “நா என்னடா பண்றது? நா எவ்வளவோ ட்ரை பண்ணேன். ப்ச்... முடியலியே” என்றார் பரிதாபமாக.

இனியன், “சரி பரவாயில்ல கிருஷ். உடு இன்னொரு வாரம் பாத்துப்போம்”.

பேச்சு மெதுவாக அப்போதுதான் தொடங்கிய ஆங்கில புத்தாண்டை ஒட்டி திரும்பியது. அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஜனவரி ஒன்று அன்று என்ன செய்தனர் என்று பரிமாறிக்கொள்கின்றனர்.

இனியன், “நீங்கல்லாம் இந்த ஆண்டுக்கு ஏதாவது உறுதிமொழி எடுத்துருக்கீங்களா?” என நண்பர்களைப் பார்த்து வினவினார்.

ஒரு நண்பர், “நா இந்த வருசத்தில, எனக்கு கிடைக்கிற பணத்த சேமிச்சு ஒரு விளையாட்டு பொருள் வாங்கலாம்னு உறுதிமொழி எடுத்திருக்கேன்.”

மற்றொரு நண்பர், “நா எங்க அப்பாகிட்ட திட்டு வாங்காம இருக்கணும்ன்னு உறுதிமொழி எடுத்திருக்கேன்” என்று சொல்லியதுதான் தாமதம், நண்பர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர்.

மற்றொரு நண்பர், “நா இந்த வருஷம் எப்படியாச்சும், ஒரு கை கடிகாரம் வாங்கணும்னு இருக்கேன்” என்றார்.

கிருஷ்ணன், “நா இந்த வருஷமாச்சும் காலையில எட்டு மணிக்காவது எந்திரிச்சு, ஸ்கூலுக்கு ரெடியாகணும்னு விஷ் பண்ணி இருக்கேன்.” என்றார்.

உடனே இனியன், “இப்போ தெரியுது கிருஷ். நீ ஏன் பள்ளிக்கூடத்துக்கு தாமதமா வரன்னு?” என சிரிக்கிறார். “அது சரி! எல்லாரும் உறுதிமொழியெல்லாம் நல்லாதான் எடுக்கிறோம். ஆனா இன்னும் ரெண்டு வாரத்தில தமிழ்ப் புத்தாண்டு வரப்போதே. அது வரைக்காவதாச்சும் நம்ம உறுதிமொழியெல்லாம் ஞாபகத்தில இருக்குமா?“ என கேட்கிறார்.

இனியன் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டு இடைமறித்த கிருஷ்ணன், “டேய் தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் நாலு மாசம் இருக்கே. சித்திரையிலதானடா தமிழ்ப் புத்தாண்டு” என சொல்ல.

இனியன், “அப்படியா? எங்க வீட்ல தமிழ்ப் புத்தாண்டு தை ஒன்னுதான் கொண்டாடறோம். ஒரே கன்பீசன் மை லார்ட் கிருஷ்” என பதில் சொல்ல, நண்பர்களும் தங்கள் இல்லங்களில் தை ஒன்றையே தமிழ்ப்புத்தாண்டு ஆக கொண்டாடுவதாகச் சொல்கின்றனர்.

இன்னும் சிறிது நேரம் நண்பர்கள் அரட்டை அடித்துவிட்டு, ஞாயிறு மறையும் நேரம் வர, மாலை வேளை தொடங்க, ஒருவருக்கு ஒருவர் நாளை பள்ளியில் சந்திக்கலாம் என்று சொல்லிக்கொண்டு தங்கள் இல்லம் நோக்கிச் செல்கின்றனர்.

ஆலமரமோ ஆள் அரவம் இன்றி அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்காகக் காத்திருக்கிறது.

இல்லம் வந்ததும், இனியன் கை, கால், முகம் கழுவிவிட்டு, அம்மாவுக்கு வீட்டு வேலைக்கு உதவி செய்கிறார். பின்னர் மறு நாள் பள்ளிக்குத் தேவையான புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி பையில் வைக்கிறார். வெளியே சென்ற அப்பாவும் இல்லம் வர. மாலை வேளைச் சிற்றுண்டியை குடும்பமாக எடுத்துக் கொண்டே, தொலைக்காட்சியில் எந்த சேனல் பார்த்து தங்களை தொலைத்துக் கொள்ளலாம் என்று தேடுகின்றனர். ஒரு சேனலில், சிறுவர்கள் பார்க்க ஏதும் இல்லாத, பயங்கரமான அடிதடிக் காட்சிகள் மற்றும் ரத்தம் நிறைந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதைப்பார்த்த இனியனுக்கு, “அம்மா, இந்த திரைப்படம் பார்க்கலாமா?” என்று கேட்க.

அம்மா, “இதெல்லாம் சிறுவர்கள் பாக்கற படம் இல்லப்பா. இது வேணாம். வேற படம் பாப்போம்” அப்டின்னு சொல்ல.

அம்மா அப்பாவை பாத்து, “உங்களுக்கு ஏதாவது படம் பாக்கனுமா?” என்று கேட்க.

அப்பா, “ஓ! தொலைக்காட்சியில் நா விரும்பற படத்த பாக்கற உரிமையெல்லாம் எனக்கு இருக்கா?” என்று சிரித்துக் கொண்டே கேட்க, அம்மா சற்றே முறைக்க. அப்பா அமைதியாய் தன் டெசிபலை குறைத்துக்கொண்டார். தாயும் சேயும் பார்க்கும் திரைப்படம்தான் தந்தையும் பார்க்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதியைப் பின்பற்றினார் தந்தை.

விளம்பர இடைவேளைக்கு இடையில் ஓடிய திரைப்படத்தை சலிப்பில்லாமல் பார்த்தனர் குடும்பத்துடன். பெரும்பாலான விளம்பரங்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தது. புத்தாண்டு விளம்பரங்களைப் பார்த்த இனியன் அம்மாவிடம், “அம்மா, புத்தாண்டுன்னா என்னம்மா? அது எதுக்காக இருக்கு?” என்று கேட்கிறார்.

இதைக் கேட்ட அம்மாவும் அப்பாவும் இனியனைப் பார்த்தனர். அப்பா ரிமோட்டில் மியூட் பட்டனை அமுக்கினார்.

அம்மா இனியனைப் பார்த்து, “ஒரு ஆண்டு அப்படின்னா, உலகம் சூரியனை ஒரு முறை சுத்தி வந்திருக்கு அப்படின்னு அர்த்தம்.”

இனியன், “ஓ!”

அப்பா, “ஜனவரி 1 தொடங்கி, டிசம்பர் 31 வரும் போது, உலகம் சூரியனை ஒரு முறை உலா வந்திருக்கும். அந்த ஒரு சுற்றுதான் ஒரு ஆண்டு”

இனியன், “ஓ!”

அப்பா, “ஏன் புத்தாண்டு கொண்டாடறோம்னா, புது ஆண்டுல, புத்துணர்ச்சியோடு பல புதிய வேலைகளை உத்வேகமா செய்யத்தான். மகிழ்ச்சியை எல்லார்கிட்டயும் பகிர்ந்துக்க. அன்பை எல்லார்கிட்டயும் பகிர்ந்துக்க. இதெல்லாத்துக்கும் ஒரு வாய்ப்புதான் புத்தாண்டு”

இனியன், “தமிழ்ப்புத்தாண்டு எந்த மாசம்? தை மாசமா? சித்திரை மாசமா? இன்னைக்கு கபடி வெளயாடிட்டு இருந்தோம். வெளயாடி முடிச்சிட்டு பேசிட்டு இருந்தப்ப தமிழ்ப்புத்தாண்டு பத்தியும் பேசினோம். எல்லோரும் தை மாசம்தான் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடறோம். அப்ப ஏன் கிருஷ்ணன் வீட்ல மட்டும் சித்திரை மாசம் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடறாங்க? அப்படின்னா நமக்கு மட்டும் ரெண்டு உலகம் இருக்கா? தை உலகம், சித்திரை உலகம் அப்படின்னு?” ரெண்டு விரலை காட்டியபடியே, இப்படி அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறார் இனியன்.

அம்மாவும் அப்பாவும் இனியன் கேட்ட கேள்விகளைக் கேட்டுச் சிரிக்கின்றனர்.

இப்போது, அப்பா தன் கையில் இருந்த ரிமோட்டினால், தொலைக்காட்சியை நிறுத்திவிட்டார்.

அப்பா, “அதெல்லாம் இல்லப்பா. ஒரே ஒரு உலகம்தான் இருக்கு. ஒரு சிலருக்கு ஜனவரி 1 புத்தாண்டா தொடங்குது. ஒரு சிலருக்கு தை 1 புத்தாண்டா தொடங்குது. ஒரு சிலருக்கு சித்திரை 1 புத்தாண்டா தொடங்குது. அவ்ளோதான். வேற ஒன்னும் இல்ல.”

இனியன், “ஆனா ஆங்கிலப் புத்தாண்டுல ஒரு மாசம் மட்டும்தான வருது. தமிழ்ப்புத்தாண்டுல மட்டும் ஏன் ரெண்டு மாசம் வருது?”

அப்பா பொறுமையாகவும் நிதானமாகவும்,

“தமிழர்க்கு புத்தாண்டு ஒன்னுதான்.

அது தை ஒன்னுதான்.”

அம்மா இந்த ரைமிங்கை கேட்டுவிட்டு, “நீ எங்க கண்ணுதான்.......” என சொல்ல இனியன் மகிழ்கிறார்.

அப்பா மேலும், “கொஞ்சமே கொஞ்சம் பேர், அதுவும் அறியாமையால் சித்திரை 1-அய் புத்தாண்டா கொண்டாடறாங்க. அவ்ளோதான். தமிழ்மொழிப் பற்று இருக்கறவங்களுக்கு தை ஒன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு. அதுதான் பொங்கல் விழாவும். உழவர் திருநாளும்.”

இனியன், “ஏன் சித்திரை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு இல்ல?”

அப்பா, “சித்திரை 1 வருஷப் பிறப்பு அப்படிங்கறது, சமஸ்கிருதம் தாய்மொழியா கொண்டவங்களுக்கு வேணா இருக்கலாம். மொத்தம் 60 வருஷப் பெயர் இருக்கு. ஒவ்வொரு சித்திரை ஒன்று அன்றும், அந்த 60 வருஷத்தில ஒன்னு பிறக்கும். அதாவது ‘பிரபவ’, ‘விபவ’, ‘சுக்கில’, ‘ஹே விளம்பி’, ‘குரோதி’, ‘விரோதி’ அப்படின்னு மொத்தம் 60 வருஷப் பெயர் இருக்கு. இதில ஒன்னு கூட தமிழ்ப்பெயர் கிடையாது.”

இனியன், “ஓ! ஆனா நீங்க 60 வருஷத்தோட பேரும் சமஸ்கிருதத்தில் இருக்குன்னு சொன்னீங்க. நீங்க சொல்லும்போது 6 பேரத்தான சொன்னீங்க. மீதி 54 வருஷப் பேரயும் சொல்லுங்க”

கிடைத்த நேரத்தில் எல்லாம் அப்பாவுக்கு எதிராக கிடா வெட்டுவதுதான் அம்மாவுக்கு பிடித்ததாயிற்றே.

அம்மா, “ம்க்கும். 6 வருஷ பேர ஞாபகத்தில் வெச்சி சொன்னதுக்கே, கணிதத்தில் நோபல் பரிசு கொடுக்கனும் உங்க அப்பாவுக்கு. இதில 60 வருஷ பேரயும் சொல்லிட்டாலும்....” என நீட்டி முழங்க, இனியன் புன்னகைக்கிறார். இனியனும் அம்மாவும் Hi-fi தட்டி சிரிக்கின்றனர்.

இனியன் விறு விறு என்று சென்று, அப்பாவின் மடிக்கணினியை எடுத்து வந்து, அதில் கூகுள் தேடு பொறியில் 60 சமஸ்கிருத வருஷப் பெயரையும் தேடி வாசித்து, அவை சமஸ்கிருதம்தானா என்று சரி பார்க்கிறார்.

சரி பார்த்தபின், அம்மாவைப் பார்த்து, “அம்மா! ஆ...மாம்மா... அப்பா சொன்ன மாதிரிதான் இருக்கு. எந்த ஆண்டு பேரும் தமிழ்ல இல்லம்மா.”

இனியன் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “ஆனா ஒரு சந்தேகம்ப்பா”

அப்பா, “ம். சொல்லுங்க. சந்தேகம் வரலன்னாதான் வியப்பு. என்ன சொல்லுங்க.”

இனியன், “60 வருஷம் இருக்கு. 61 எங்க? 62 எங்க? 63, 64, 65, 66, 67, 68, 69,70 .........”

அப்பா சிரித்துக்கொண்டே, “யப்பா! போதும்பா. அப்டியே ஆயிரம், லட்சம், கோடி வரைக்கும் போயிடாதீங்க. சற்றே நிறுத்தவும்”

இனியன் சிரிக்கிறார்.

அப்பா தொடர்கிறார், “சம்ஸ்கிருதத்தின் அடிப்படையில் வருஷப்பிறப்பு கொண்டாடறவங்க நம்பிக்கை படி, இந்த 60 ஆண்டும் சுழற்சி முறையில் இருக்கும் அப்படின்னு நம்பறாங்க. அதாவது 60க்கு அப்புறம் திரும்பவும் 1-லேந்து தொடரும்.”

இனியன், சிரித்துக் கொண்டே, “என்னது? மறுபடியும் மொதல்லேந்தா? செம ஜாலியா இருக்குப்பா. இப்ப தாத்தாவோட வயசு 85. பாட்டியோட வயசு 75. அப்படின்னா இந்த சுழற்சி முறையில் எண்ணினா, தாத்தா வயசு 25, பாட்டி வயது 15. செம காமெடியா இருக்குப்பா”

அப்பா, “ஆமா இனியா. அப்பாவுக்கே இப்ப வயசு 45, அம்மாவுக்கு 40. அப்ப அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தாத்தா பாட்டிய விட வயசு அதிகம்ல. உங்களுக்கு 10 வயசு. அதாவது பாட்டிய விட அஞ்சு வயசுதான் கொறச்சல்”

அம்மா, அப்பா, இனியன் மூவரும் சிரிக்கின்றனர்.

இனியன், “அது ஏம்ப்பா 60 ஆண்டு சுழற்சி? ஒரு 10 வெச்சிருக்கலாம்ல? இல்ல ஒரு 50 வெச்சி இருக்கலாம்ல? உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம், ஒரு 100-னாவது வெச்சிருக்கலாம்ல?”

அப்பா, “அந்த காலத்தில் இருந்த அறியாமையில், அப்ப எத உண்மைன்னு நெனச்சாங்களோ அதுப்படி 60-ன்னு நம்ப ஆரம்பிச்சிட்டாங்க. இந்த 60, ஏன் வந்திச்சுங்கறதுக்கு ஒரு சுவாரசியமான புராண கதை இருக்கு. அந்த கதையிலேந்துதான் இந்த 60 வருஷமும் பிறந்ததா நம்பறாங்க”

இனியன் கதை கேட்கும் ஆவலுடன், ”அது என்ன கதைப்பா?” என அப்பாவை வைத்த கண் வைத்தபடியே பார்க்கிறார்.

அப்பாவோ அம்மாவைப் பார்க்கிறார்.

அம்மாவோ அப்பாவை முறைக்கிறார்.

அம்மா, “ஏங்க, இதெல்லாம் சின்ன புள்ளங்க கேக்கற கதையா? அந்த கதையெல்லாம் சொல்லாதீங்க. சின்ன புள்ள கெட்டு போறதுக்கா” என கடிந்து கொள்கிறார்.

இனியனுக்கு இப்போதான் அந்தக் கதை கேட்க வேண்டும் எனும் ஆவல் டபுள் டோஸ் ஆகிறது.

இனியன், “ஏம்மா அப்பாவ கதை சொல்ல வேணாம்னு சொல்லறீங்க. நீங்க சொல்லுங்கப்பா.”

அம்மா, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு திரைப்படத்தை தொலைக்காட்சியில் பாக்கலாமான்னு கேட்டீங்கள்ல. நாங்க கூட அந்த திரைப்படத்தை நீங்க பாக்க கூடாது அப்படின்னு சொன்னோம்ல. அந்த மாதிரிதான் இந்த கதையும்.”

இனியன் விடுவதாய் இல்லை, “நா பாக்க கூடாதுன்னு சொன்ன திரைப்படத்துக்கும் இந்த புராண கதைக்கும் என்னம்மா சம்மந்தம்?”

அம்மா பொறுமையாக, “சில திரைப்படத்தை, சிறுவர்கள் தனியாவே பாக்கலாம். சில திரைப்படத்தை சிறுவர்கள், பெற்றோரோடுதான் பாக்கலாம். சில திரைப்படத்தை, பெரியவங்க மட்டும்தான் பாக்கலாம். அது மாதிரிதான் இந்த ஹிந்து மத புராண கதையும். இந்த கதையை பெரியவங்க மட்டும்தான் கேக்க முடியும். சிறுவர்கள்கிட்ட சொல்றதுக்கு ஏத்த கதை இல்லை அது. அதனாலதான்.”

இனியன், “ஓ! சரிம்மா...”

அம்மா, அப்பாவின் மண்டையில் நங்கென ஒரு குட்டு குட்டி, “இதப்பத்தியெல்லாம் உங்கள சொல்ல சொன்னாங்களா? இவன் வயசுக்கு என்ன சொல்லனுமோ, எத சொல்லனுமோ, அத மட்டும் சொல்லுங்க” என்கிறார்.

அப்பா மண்டையில் குட்டுப்பட்ட இடத்தை தடவிக்கொண்டே, “யெஸ் யுவர் ஆனர்” எனச் சொல்ல, அம்மாவும் இனியனும் மகிழ்ச்சியுடன் சிரிக்கின்றனர்.

அம்மாவும் அப்பாவும் கடைசி வரையிலும், கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்தவையே அந்த 60 சமஸ்கிருத வருஷம் எனும் புராணக் கதையை இனியனிடம் சொல்லவே இல்லை.

இனியனுக்கோ மடிக்கணினியும் கூகுள் தேடுபொறியும் இன்னும் கையிலேயே இருக்கிறது.

Pin It