கதிரவன் கிழக்கில் மெல்ல எட்டிப்பார்த்தது. குயில்கள் காலைப் பண் பாடத் தொடங்கியது. கதிரவன் ஒளி முகத்தில் பட்டவுடன், போர்த்தி இருந்த போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு படுக்கிறார் ஆதவன். காலை குளிரில் முழுதும் போர்த்திக் கொண்டு கட்டிலில் படுத்திருப்பதுதான் என்னே சுகம்!

ஆதவன் அருகில் வந்த நின்ற தாத்தா, “யப்பா ஆதவா, தாத்தா ஆத்துக்கு போறேன். வறீங்களா?” என்றதை கேட்டதுதான் போதும், மின்னலென போர்வையை விட்டு இருட்டைக் கிழித்துக் கொண்டு துள்ளி குதிக்கிறார் ஆதவன்.

‘‘வந்தேன் தாத்தா” என்று விறு விறுவென பல்லை விளக்கச் செல்கிறார்.

பல் விளக்கி, பால் அருந்திவிட்டு, தாத்தாவுடன் ஆற்றில் சென்று குளிப்பதற்காக மாற்றுத்துணிகள், துண்டு, சோப்பு ஆகியவற்றை ஒரு பையில் எடுத்து வைத்துக் கொள்கிறார். தாத்தாவும் தன் பங்குக்கு தனக்குத் தேவையானவற்றை ஒரு பையில் எடுத்து வைத்துக் கொள்கிறார். தாத்தா கிளம்பி தயாராகும் முன்னே, ஆதவன் கிளம்பி தாத்தாவின் சைக்கிளின் அருகே தயாராய் தாத்தாவின் வருகைக்காக காத்திருக்கிறார். இருக்காதா பின்னே, ஆற்றுக்கு போக வேண்டுமே!

ஆதவனுக்கு ஆற்றில் குளிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். உடல் தூய்மைக்கு மட்டுமல்ல; நகரத்தில் சதுர அடியில் அளந்து நீச்சல் குளம் கட்டி, அதற்குள் நெருக்கடியில், நீ, நான் என்று நீந்தி கற்கும் பயிற்சியைக் காட்டிலும், ஓடும் ஆற்றில், ஆடும் மீனோடு, எல்லையில்லாமல் விளையாடும் பாங்கு மனத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாய் இருக்கும். அதுவே ஆதவன் ஆற்றில் குளிக்க விரும்பும் ஊர் அறிந்த ரகசியம்.

அதோடு ஆற்றுக்கு போகும் வழியில், தாத்தாவோடு சைக்கிளில் போகும்போது பேசிக்கொண்டே, ஆலமரம், அரசமரம், குளம், குட்டை, வயல், வாய்க்கால், வரப்பு, தோப்பு என்று பார்த்துக்கொண்டே செல்வது ஆதவனுக்கு இதமாய் இருக்கும்.

தாத்தா தயாராகி சைக்கிள் அருகே வருகிறார்.

ஆதவன், “தாத்தா, இன்னிக்கு நா சைக்கிள் ஓட்டவா?”

தாத்தா சிரித்துக்கொண்டே, “இந்த சைக்கிள்ள சைட் ஸ்டாண்ட் இல்லப்பா. உனக்கு உயரம் பத்தாது. தோது பத்தாது. இன்னும் கொஞ்ச நாள் செல்லட்டும், அப்ப ஓட்டலாம். சரியா?”

ஆதவனும் தாத்தா பேச்சைக் கேட்டுக்கொண்டு, “சரி தாத்தா” என்கிறார்.

தாத்தா சைக்கிளில் அமர்ந்தவுடன் ஆதவனும் சைக்கிளில் ஏறி அமர்ந்துகொண்டு, பேருந்தில் நடத்துனர் சொல்வது போல், “ரெய் ரெய்” என சொல்ல, தாத்தாவும் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார்.

ஆதவன் சைக்கிளில் செல்லும்போது, தன் கண்களை அகல விரித்தபடி, தான் பார்த்து பார்த்து வியந்த ஊரை மீண்டும் மீண்டும் பார்த்து வியக்கிறார். சைக்கிள் எவ்வளவு நேரம் சென்றிருக்கும் என்று தெரியவில்லை. மெல்ல மெல்ல சைக்கிளின் வேகம் குறைந்தது. பக்கவாட்டில் சாய்ந்து எட்டிப் பார்த்த ஆதவனுக்கு, குளக்கரையை நெருங்குவது தெரிந்தது. குளக்கரையில் ஒர் அழகிய அரசமரம். அரசமரத்தடியில் சைக்கிளை நிறுத்தினார் தாத்தா.

ஆதவன் தாத்தாவைப் பார்த்து, “ஏன் தாத்தா சைக்கிளை நிறுத்துறீங்க. ஆத்துக்கு அழச்சிட்டு போறேன்னுதான சொன்னீங்க. இப்ப குளத்தில வந்து நிறுத்தறீங்க?” என வினவினார்.

தாத்தா, “ஆத்துக்குத்தாம்ப்பா போறோம். அரசமரத்தடியில ஒரு பிள்ளையார் சிலை இருக்கு. அந்த பிள்ளையார் சிலை கையில இருக்க கயிறை கழட்டி கையில் கட்டிகிட்டா, நோய் நொடி, காத்து கருப்பு அண்டாதுன்னு ஒரு அய்தீகம். அதான், அந்த கயிற எடுத்து உனக்கு கட்டி விடலாம்னு, சைக்கிள நிப்பாட்டினேன்” என்றார்.

ஆதவன் யோசித்தவாறே, “எனக்குத்தான் தடுப்பூசி எல்லாம் போட்டிருக்காங்களே. சத்தான உணவு, பால், எல்லா காயும், எல்லா பழமும், எல்லா கறியும் சாப்பிடறேனே. அப்பறம் ஏன் எனக்கு நோய் நொடி வரப்போகுது?” என்றார்.

தாத்தாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.‘‘அதெல்லாம் ஒரு அய்தீகம்ப்பா” என்று மட்டும் சொன்னதோடு நிறுத்திக் கொண்டார்.

ஆதவன் விடுவதாய் இல்லை, “ஓ! அது சரி! அது என்ன தாத்தா ‘காத்து கருப்பு'? காத்துன்னா Wind. கருப்புன்னா Black. ‘காத்து கருப்பு’ அப்படின்னா Black Wind-ஆ? Windக்கு எப்படி தாத்தா Colour இருக்கும்?”

தாத்தா, “காத்துக் கருப்புன்னா பேய்ப்பா. அது அண்டாம இருக்கத்தான் இந்தக் கயிறு” என்றார்.

ஆதவன் அமைதியாய் கேட்டுக்கொள்கிறார்.

அரச மரத்தடியில் உள்ள விநாயகர் சிலை அருகே சென்றனர் இருவரும். அந்த சிலையை உற்றுக் கவனித்தார் ஆதவன். அந்த சிலை கழுத்தில் ஒரு தெறிப்பு இருந்தது.

ஆதவன், “தாத்தா, இந்த சிலை கழுத்துல ஒரு தெறிப்பு இருக்கே. அது எப்படி வந்துச்சு? யாராச்சும் உடச்சிட்டாங்களா இந்த சிலைய?” என்றார்.

தாத்தா, “தெரியலப்பா. நா சின்ன புள்ளயா இருந்தப்பலேந்து இத கவணிச்சிருக்கேன். இந்த தெறிப்பு கழுத்தில இருக்கு. எங்க தாத்தா காலத்துலல்லாம் இதே அரச மரத்தடியில புத்தர் சிலை இருந்துச்சாம். அப்புறம் கொஞ்ச காலத்தில, பக்கத்து டவுனுல வேதக் கோயில் வந்த உடனதான் சுத்துப்பட்டுல நிறைய புள்ளயார் செல முழைச்சுச்சு. அப்படித்தான் ஒரு நாள் காலையில பாத்தா இங்க இருந்த புத்தர் சிலைக்கு பதிலா புள்ளையார் சிலை இருந்துச்சாம். ஊர் பெரியவங்க எல்லாம் விசாரிச்சு பார்த்தாங்க. இந்த புள்ளயார் சிலய எடுத்தா ஊருக்கு ஆகாது, சாபம் ஆயிடும்ன்னு, பக்கத்து டவுன் வேதக் கோயில் புரோகிதர் சொல்லவும், ஊர் பெரியவங்க, இத அப்படியே உட்டுட்டாங்கன்னு கேள்வி பட்டேன்.”

ஆதவன், “செம சுவாரசியமா இருக்கு தாத்தா. ராத்திரி புத்தர். தூங்கி எந்திரிச்சா, காலையில தலையில ஆபரேஷன் செஞ்சு புள்ளயார் ஃபிட்டிங். செம இன்ட்ரெஸ்டிங் டுவிஸ்ட் தாத்தா” என சிரித்துக் கொள்கிறார்.

தாத்தாவும், பேரனின் நகைச்சுவை உணர்வை எண்ணி சிரிக்கிறார். சிரித்துக் கொண்டே தாத்தா விநாயகர் சிலையில் இருந்து ஒரு கயிறை எடுத்து, வாயால் தூசு தட்டிவிட்டு, துண்டில் துடைத்துவிட்டு, ஆதவன் கையில் கட்டி விடுகிறார். ஆதவன் அந்த கயிறை கட்டிக்கொண்டு ஸ்டைல் செய்துகொள்கிறார். தாத்தாவும் ஆதவனும் சைக்கிளில் ஏறி ஆற்றை அடைகின்றனர்.

ஆற்றில் ஆனந்தக் குளியல் செய்கிறார் ஆதவன். மீனோடு தானும் நீந்தி மகிழ்கிறார். ஆற்றை விட்டு வெளியே வந்து, தான் போட்டிருந்த உடுப்பை எல்லாம் ஒரு பையில் போட்டுக் கொண்டு, மறு உடுப்பு உடுத்திக் கொள்கிறார்.

மீண்டும் சைக்கிள் பயணம். தற்போது, இல்லம் நோக்கி. ஆற்றை நோக்கி வரும் போது, ஊரை நோக்கிய ஆதவன் கண்கள். திரும்பவும் இல்லம் நோக்கிச் செல்லும் போது, கையில் கட்டி இருந்த கயிறையே நோக்கின ஆதவன் கண்கள். கயிறை அவ்வப்போது தடவியபடியே ஏதோ யோசனையில் இருந்தார்.

இல்லம் வந்து சேர்ந்தவுடன், அம்மா, அப்பா, பாட்டி என அனைவரிடமும், ஊர் சுற்றிய அனுபவத்தையும், அரசமரம், புத்தர், விநாயகர் சிலை, குளம், ஆறு, கயிறு என எல்லாவற்றையும் பற்றியும் கொஞ்சமும் கயிறு திரிக்காமல், கண்டதை கண்டபடி சொல்லிக் காட்டினார்.

அம்மா, “சரி ஆதவா, நீ போட்டிருந்த சட்டை துணிகள் எல்லாம் அழுக்காயிருக்கும். அது எல்லாத்தையும் துவைக்கிற கூடையில் போடுப்பா” என்கிறார்.

ஆதவன், “ஏம்மா, ஒரு தடவ போட்ட துணிய இன்னொரு தடவ போடக் கூடாதாம்மா? ஏன் அந்த துணியல்லாம் துவைக்கணும்?”

அம்மா, “தினமும் குளிக்கறீங்களே. அது ஏன்?”

ஆதவன், “அப்பதான் உடம்புல இருக்கற அழுக்கெல்லாம் போய், பாக்டீரியா, கிருமி எல்லாம் இல்லாம சுத்தமா இருக்க முடியும் அதான்.”

அம்மா, “ம், சரி! அதே போலதான் துணிக்கும். நாள் பூரா உடம்பில் இருந்த அழுக்கு, அப்புறம் வெளிப்புற அழுக்கு எல்லாம் சேந்து சட்ட துணியெல்லாம் அழுக்கு ஏறிடும்.”

ஆதவன், “அப்படியா? அந்த அழுக்கு துணியவே திரும்ப போட்டுகிட்டா என்ன ஆகும்?”

அம்மா, “துணில இருக்கற கிருமி உடம்புல வந்து உக்காந்துகிட்டு நோய் வந்திடும்.  நோய் இல்லாம நம்மள பாதுகாக்கனும்னா, நாம சுத்தமா இருக்கனும். நாம சுத்தமா இருக்கனும்னா, உடம்பும் சுத்தமா இருக்கனும். உடையும் சுத்தமா இருக்கனும். அத விட முக்கியம் உள்ளம் சுத்தமா இருக்கனும். புரிஞ்சுதா சுட்டிப் பையா?” என் மண்டையில் செல்லமாய் ஒரு குட்டு வைக்கிறார்.

ஆதவன், “ம். புரியுதும்மா. உள்ளத்த எந்த சோப் போட்டு குளிப்பாட்டறதும்மா?” என சிரித்துக் கூறிக்கொண்டே கேட்கிறார். ஆதவன் சற்றே யோசித்துவிட்டு, தன் கையில் தாத்தா கட்டிய கயிறைக் காட்டி சந்தேகத்தோடு,  “இந்த கயிறுலயும் கிருமி இருக்குமோ?” எனக் கேட்கிறார்.

ஆதவனின் அடுக்கடுக்கான அறிவான கேள்விகளை அமைதியாய் ஆனந்தமாய் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்த தாத்தா, இப்போது கத்திரிகோலைத் தேட ஆரம்பித்தார்.

Pin It