“அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதா? இது என்ன அநியாயம்! சம்பிரதாயங்களைச் சாம்பலாக்கலாமா? புனிதம் கெட்டு விடாதா?

ஒவ்வொருக் கோயிலுக்கென்றும் ஒவ்வொரு சம்பிர தாயம் உள்ளனவே. அதனை உருக்குலையச் செய்யலாமா?

கடவுள் இல்லை என்று கூறும் தி.க.வும், கம்யூனிஸ்டுகளும் இதில் மூக்கை நுழைக்கலாமா?

சட்டமும், தீர்ப்பும் என்ன சொன்னால் என்ன? சம்பிரதாயங்களும், சாஸ்திரங்களும் என்ன சொல்லுகின்றன என்பதுதான் முக்கியம்! என்று வானத்துக்கும், பூமிக்கும் குதித்துவரும் ஆன்மிகப் போர்வையில் ஒளிந்திருக்கும் பார்ப்பனர்களின், ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் யோக்கியதை என்ன?

sabarimalai 600‘’சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களும் போக அனுமதி வேண்டும் என்று வழக்குத் தொடுத்தவர்கள்

"பெண் ஒருவர் கோயிலுக்குள் செல்லுகிறார் என்றால் அதைத் தடுக்க தனி மனிதருக்கோ அமைப்பிற்கோ உரிமையில்லை; அப்படி செய்வது தவறான வழி காட்டுதலுக்கு எடுத்துக்காட்டாகி விடும்; சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்" என்று வழக்குத் தொடுத்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இன்று வேறு எதையோ தின்றுவிட்டு பேசுவதுபோல் உளறினால் என்ன அர்த்தம்? நாம் ரொம்ப யோசிக்க வேண்டிய அவசியமில்லை.

காரணம் இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பார்ப்பனர் வட்டாரம் பல்டி என்றால் சாதாரண பல்டியல்ல - அந்தர் பல்டி அடிக்கின்றனர் என்றால், இந்தக் கூட்டத்தின் அறிவு நாணயம், யோக்கியதை என்னவென்று தெரிய வேண்டாமா?

இவர்கள் எந்த மோசமான எல்லைக்கும் செல்லக் கூடிய "ஏய்ப்பர்கள்" என்பது விளங்கிடவில்லையா?

கோணிப்புளுகன் கோயபல்சும் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டுமல்லவா! இந்த இரு பெண்களும் இந்த வழக்கைத் தொடுப்பதற்கு முன் ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியமானவர்களையெல்லாம் கலந்து ஆலோசித்தோம் என்று கூறியுள்ளதை நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும்.

இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய தலைவர்களின் யோக்கியதையும் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். வழக்கு தொடுப்போம் தீர்ப்பு இதுபோல் வராது என்று இவர்கள் எண்ணியிருக்க வேண்டும் அல்லது இதுபோன்று இந்த தீர்ப்பை கொடுங்கள். வடக்கே ராமன் மூலம் கலவரம் செய்து பிழைப்பு நடத்துவதுபோல், இதை வைத்து தெற்கே கலவரம் செய்து அதன் மூலம் கால் வைத்து அரசியல் பிழைப்பு நடத்த, இது அமையட்டும் என்று நினைத்து செயல்படுகிறார்களா? ஆம் இது உண்மைதான்... இதோ ஆதாரம்:-

கடந்த மாதம் கோவில் திறந்த போது நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் கேரளா பாஜக தலைவர் சிறீதரன் பிள்ளை பேசி இருக்கிறார். பாஜக உறுப்பினர்கள் முன்னிலையில் பேசியுள்ளார் என்பதுதான் முக்கியம். இதில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது கசிந்து இருக்கிறது. மலையாள அலை வரிசைகள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளன. அதில் கேரளா பாஜக தலைவர் சிறீதரன் பிள்ளை, “இந்த சபரிமலை பிரச்சினைதான் கேரள பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு. இதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இந்துக்கள் எல்லோரும் நம்மிடம் சரண் அடையும் நிலைக்கு வந்துள்ளனர். அரசால் இந்தப் பிரச்சினையை எளிதாகத் தீர்க்க முடியாது.

நாம் சபரிமலைக்குச் சென்றோம். அங்கு நாம் செய்ய வேண்டியதை செய்து வருகிறோம். நாம் இதில் பெரிய வெற்றி அடைந்து இருக்கிறோம். சிறீஜித் அய்பிஎஸ் அந்த கோவிலுக்குள் பெண்களை அழைத்துச் செல்ல முயன்ற போது, மக்களை அழைத்து வந்து அதை தடுத்து நிறுத்தியது நாம்தான். வெளி உலகத்திற்கு இது தெரியாது. இன்னும் நாம் இதில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. சபரிமலை தலைமை தந்திரி என்னிடம் பேசினார். அவர் முதலில் பெண்கள் உள்ளே நுழைந்தால் கோவிலை மூடிவிட முடிவெடுத்து இருக்கிறார். அதன்பின் நீதிமன்றத்திற்குப் பயந்துள்ளார். நான்தான் கோவிலை மூடுங்கள் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அவர்களுக்கு பாஜகவை தவிர வேறு யாருமில்லை. அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்குப் பயந்தார். ஆனால் நான்தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தால் எங்கள் மீதுதான் வரும், நீங்கள் துணிந்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறினேன்" என்று அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார். இதுதான் இவர்களின் யோக்கியதை.

இது ஒரு புறம் இருக்க 1950. சபரிமலை அய்யப்பனின் நிலை என்ன?

இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற நேரம். அதாவது 1950. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத் தீயிட்டுவிட்டு ஓடிவிட்டனர் பிறசமயத்தவர்கள். சபரிமலைக் கோவில் மட்டுமின்றி அய்யப்பன் சிலையும் தீயில் பழுதாகின. கேரளத்தில் அன்று ஆண்ட அரசும், இந்துக்கள் என்று பெருமை பேசுவோரும் கோவிலைப் புதுப்பிக்கவும், மீண்டும் அய்யப்பன் சிலையை நிறுவவும் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. பல ஆண்டுகள் சபரி மலையில் வழிபாடே இல்லை. ஆம்! வழிபாடே இல்லை.

கேரளத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சிலர் தமிழவேள் பி.டி. இராசனை அணுகிக் கோயில் திருப்பணி, அய்யப்பன்சிலை புதிதாக உருவாக்குவது குறித்து உருக்கமாக வேண்டியபோது, மறுக்காமல் அவர் ஏற்றுக்கொண்டு அவர்கள் விரும்பியவாறு அய்யப்பன் சிலையைக் கும்பகோணத்தில் செய்ய ஏற்பாடு செய்தார்.

பி.டி.ராசன் அய்யப்பன் சிலையைச் செய்து லாரி ஒன்றின் முன்புறம் மேலே வைத்து ஊர்வலமாகப் பல ஊர்களுக்கு எடுத்துச்சென்றார். இதற்கு என்ன பெயர் தெரியுமா? "அய்யப்பச்சாமி திக் விஜயம்". ஒவ்வொரு ஊரிலும் உள்ள முதன்மைக்கோவில்களில் அய்யப்பன் சிலையை வைத்துக் கோவில் மூர்த்திக்கும், அய்யப் பனுக்கும் ஒரே சமயத்தில் அர்ச்சனை, அபிடேகம், தீபாராதனை எல்லாம் நடைபெற்றன.

இன்றைக்கு ஏதோ அய்யப்பனுக்குச் சொந்தக் காரர்கள் போல், பாரம்பரியம், மரபு, வழக்கம் என்று பேசும் வைதீகப் பார்ப்பனர்கள் அன்றும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அய்யப்பன் - அய்யனார், அவரை ஊர் எல்லை கடந்து உள்ளே கொண்டு வரக்கூடாது என்று காட்டிய எதிர்ப்பு சலசலப்பிற்கு அஞ்சாமல் சட்டை செய்யாமல் அய்யப்பன் திக் விஜயம் தொடர்ந்தது.

சபரிமலையில் அய்யப்பனைப் பிரதிட்டை செய்ய பி.டி.ஆர் - ஆம்! திராவிட இயக்கத் தலைவர் 60 கி.மீ. தூரத்தை நடந்தே சென்றார். அவரைக் கண்ட கேரள அய்யப்பப் பக்தர்கள்அவரைப் பாண்டியநாட்டு அரசர்?' என்று கூறி அவரைத் தொட்டு வணங்கினர். பின்னரே கோடிக்கணக்கில் சபரிமலை யாத்திரை வரத் தொடங்கினர்.

பரம்பரை, 1200 ஆண்டுக்காலப் பழக்கம் என்பதும் கப்சா. 1955 வரை பெண்கள் அனைவரும் வயது வேறு பாடின்றிச் சென்றார்கள். அதற்குப் பின்னும் அரச குடும்பத்து வி.அய்.பி.பெண்கள் சென்று வந்தது உண்மை. எனவே பாரம்பரியம் என்பது புருடா. 1200 ஆண்டுக்கால மரபு என்பதற்கு ஆதாரம் காட்டச் சொன்னதே உச்சநீதிமன்றம். காட்டுவது தானே. 1955 வரை பெண்கள் வயது வேறுபாடின்றி வழிபட்டனர் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. சிவாகமம், வைணவ ஆகமம் ஏதாவது அய்யப்பன் கோயிலுக்குச் சபரி மலைக்குப் பெண்கள் வயதுவேறுபாடின்றி வரக்கூடாது என்று கூறுகின்றனவா, இல்லை வேதம் தான் கூறுகிறதா? இல்லை. அய்யப்பன் கூறினாரா? இல்லை. எல்லாம் இந்த ஆண்கள் உருவாக்கியவை.

இந்த நிலையில் நைஷ்டிக பிரமச்சாரி, சபரிமலைக் கோவிலுக்கென்று உள்ள சம்பிரதாயம், என்றெல்லாம் கூறி வாதிடுவோர், 41 நாட்கள் பெண்கள் மாதவிடாய் ஏற்படுவதால் கோவிலுக்குச் செல்ல இயலாது என்றும், கடுமையான பாதை என்பதால் பெண்களால் இயலாது எனவும், புலி இரத்த வாடைக்கு அடித்து விடும் எனவும் சொத்தை வாதங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.

நடந்து சென்று தரிசிக்க இயலாத ஆண்களை டோலி என்பதில் வைத்துச் சுமந்து செல்கிறார்கள். 41 நாள் விரதம் எல்லாம் எல்லோரும் இருப்பதில்லை. முதல் நாள் ரயிலில் புறப்பட்டு, காலையில் பம்பையில் இருமுடிசாமான்களை வாங்கி மலையேறித் தரிசித்து ரயிலை அன்றே பிடித்து மறுநாள் வீடு வந்து சேரும் அளவிற்கு விதிகள் தளர்ந்துள்ளன. இன்று 100க்கு 90 பேர் 41 நாள் விரதம் கிடையாது.

மேலும் ஒரு தகவல்: 41 நாள் விரதம் என்பது 18 படிகள் வழி ஏறிச்செல்ல வேண்டும் என்றாலே, இருமுடி கட்டாதவர்களுக்கு என்று உள்ள தனிவழியே சென்று அய்யப்பனை வணங்கியும் வர அனுமதி உண்டு. இதை வாதிடுகின்றவர்கள் சவுகரியமாக மறைத்து 41 நாள், 41 நாள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இவர்கள் எதை நினைத்து இதுபோல் செயல் பட்டார்களோ? அந்தக் கனவு இவ்வளவு சீக்கிரம் சுக்கு நூறாக நொறுங்கும் என்று இந்தக் கூட்டங்கள் ஒரு நாளும் நினைத்திருக்காது. காரணம்

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 2 இடங்களை மட்டுமே பிடித்தும், ஒற்றை இலக்க எண்களில் வாக்குகளைப் பெற்றும் மரண அடி வாங்கி கடைசி மூச்சை விட்டுக் கொண்டுள்ளது. இது பாஜக தலைமைக்குக் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலத்தில் காலியாக இருந்த உள்ளாட்சிப் பகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடந்தது.

சபரிமலை விவகாரத்தால் கம்யூனிஸ்டு அரசுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பர். இடைத் தேர்தல்களில் நாம் பெரும் வெற்றியைச் சுவைக்கலாம் என்ற நப்பாசையில் தான் அய்யப்பன்கோவில் விவகாரத்தில் தன்னுடைய முழு பலத்தையும் காட்டின, பிஜேபி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள். ஆனால் அங்கு நிலைமையோ வேறாக இருந்தது. 100 சதவிகிதம் படிப்பறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் பொதுமக்கள் மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவற்றை யோசித்து, வகுப்பு வாதத்தை வேரறுக்கும் வகையில், தங்களது வாக்குகளைப் பதிவிட்டு உள்ளனர். அதன்படி 39 உள்ளாட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவில், கேரள ஆளும் இடதுசாரி கூட்டணி 22 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 13 இடங்களையும், பாஜக கூட்டணி தனித்துப் போட்டியிட்ட இடங்களில் வெறும் ஒற்றை இலக்க 2, 5, 9 என்ற வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன. சில தொழிலாளர் அமைப்புகளுடன் கூட்டணி வைத்த இடங்களில் 2-இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்த பாஜக தனது கட்சியின் வளர்ச்சிக்கு, இந்த உள்ளாட்சித் தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கையில், கேரள மக்கள் பாஜக தங்களுக்குத் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வாக்களித்து உள்ளனர்.

குறிப்பாக சபரிமலை அமைந்துள்ள பகுதியான பந்தனந்திட்டா மற்றும் சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் பந்தளம், நிலக்கல் பகுதியில் பாஜக மோசமான தோல்வியையே சந்தித்து உள்ளது. பந்தனந்திட்டாவில் 7500 வாக்குகள் பெற்று கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. பந்தளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் பாஜகவுக்கு வெறும் 2 வாக்கு களும், பந்தனந்திட்டாவில் வெறும் 5 வாக்குகளும், புன்னப்புரா பகுதியில் வெறும் 9 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. 3 இடங்களிலும் சேர்த்து மொத்தமே வெறும் 16 வாக்குகள்தான் பெற்றுள்ளன. இது பாஜகவுக்குக் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேரள மாநிலத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகள், வகுப்புவாதத்தை ஊக்குவித்து வரும் பாஜகமீது மக்கள் வைத்துள்ள எண்ணத்தின் வெளிப்பாடே என்பதில் அய்யமில்லை.

இந்தத் தகவலை அகில இந்திய அளவில் கொண்டு போவது அவசியம். கேரள மக்களின் உணர்வே அனைத்து மாநிலங்களின் உணர்வு என்ற எண்ணத்தை மேலும் மேலும் வளர்த்து எடுக்க வேண்டியது மதச் சார்பற்ற சக்திகள், சமூகநீதியாளர்களின் முக்கிய கடமையும் அவசியமும் ஆகும்.

Pin It