தோழர் காந்தியவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் கட் டளைப்படி செய்வதாகச் சொல்லி வருவது யாவரும் அறிந்ததாகும். பலர் அதை உண்மையென்று நம்பியும் வருகிறார்கள். ஏன் அந்தப்படி இருக்கக் கூடாது என்று வாதமும் பேசுகிறார்கள். தோழர் காந்தியவர்கள் ஏர்வாடா சிறையில் சென்ற வாரம் இருந்த காலத்தில் ஹரிஜனங்களுக்கு வேலை செய்ய சகல சௌகர்யங்களும் சர்க்கார் தனக்கு அளிக்காவிட்டால் பட்டினி கிடக்க வேண்டுமென்று கடவுள் கட்டளை இட்டதாகச் சொல்லி பட்டினி இருந்தார். சர்க்காரை எந்தவிதமான தனி சுதந்திரமும் கடவுள் கேட்க வேண்டாம் என்று சொன்னார் என்று, வேண்டியதில்லை என்றார். பிறகு ஹரிஜன சேவை செய்ய கடவுள் சொல்லுகின்றார் என்று சொல்லி சில சுதந்திரம் கேட்டார். சர்க்கார் சில சௌகரியங்கள் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தவுடன் பட்டினியை நிறுத்தும் படி கடவுள் கட்டளையிட்டதின் பிரகாரம் பட்டி னியை நிறுத்தி விட்டதாக சர்க்காருக்கு வாக்கு கொடுத்து விட்டார். பிறகு மாலையில் கடவுள் அந்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் மறுபடியும் காந்தியாரைப் பட்டினி கிடக்கும்படி செய்தது மாத்திரமல்லாமல் காந்தி யாரை மன்னிப்புக் கேட்கும்படியும் செய்து விட்டார்.
கடவுளின் இந்த மாதிரியான வாக்குத்தவறுதலானது அனாவசியமாய் காந்தியார் தலையில் பழி விழுந்து மன்னிப்பும் கேட்டுக் கொள்ளச் செய்ததென்றால் கடவுளின் யோக்கியப் பொருப்பற்ற தன்மைக்கு வேறு ருஜு வேண்டுமா? எது எப்படியானால்தான் என்ன எவ்வளவு வாக்குத் தவறுதல்கள் ஏற்பட்டால்தான் என்ன யார் எவ்வளவு மன்னிப்புக் கேட்டுக் கொண்டால்தான் என்ன முடிவில் காரியம் கைகூட வேண்டியது தானே புத்திசாலித்தனமான லட்சியமாகும். ஆதலால் கடவுள் தனது பக்தனாகிய காந்தியாரை விடுதலை செய்விப்பதற்காக என்ன என்ன எல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டியது தான் கடமையாகும். அதிலும் “கபட நாடக சூஸ்தரதாரியாகிய கடவுள்” என்னதான் ஏன்தான் செய்ய மாட்டார். “கடவுள் செயலைப் பற்றிப் பேச எவருக்கும் யோக்கியதையும், உரிமையும் இல்லை” ஆதலால் நாம் இதுபேசியதுகூட அதிகப்பிரசங்கித் தனமென்று இப்பொழுது கருதுவ தால் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
('சித்திரபுத்திரன்', குடி அரசு - கட்டுரை - 03.09.1933)