தமிழர் விழாவும் தமிழர்புத் தாண்டும்

அமிழ்தினிய தைம்முதலில் ஆமே! - உமிழும்

வடவர் திணித்த வருடத்தைக் கொள்ளல்

மடமையே ஆகும் மதி.

பொங்கல் விழாவும் பொதுமைத் தமிழாண்டும்

தங்குமே தைம்முதலில் தாமென்று - மங்கா

மறைமலையார் சொன்னார்! மதியுடையார் ஏற்றார்!

குறையில்லை என்றும் குறி.

தைம்முத லாண்டே தமிழர்க்குப் புத்தாண்டாம்!

ஐயமே யின்றி அறிந்திடு! - பொய்ப்புனைவாம்

பார்ப்பனர் ஆண்டுதனைப் பாராதே! எஞ்ஞான்றும்

ஈர்ப்பன எந்தமிழாண்டு.

அஞ்சல் எழுதுகையில், ஆவணம் ஆக்குகையில்,

எஞ்சா தெழுதி இயற்றுகையில் - துஞ்சாது

வள்ளுவ ராண்டை வழங்கிடுக! இல்லையேல்

எள்ளுவர் பின்னோர் இகழ்ந்து!

ஆங்கில ஆண்டை அலுவலிற் கொண்டிடினும்

நீங்காது கொள்க நின்ஆண்டை! - தீங்கான

பார்ப்பன ஆண்டைப் பகராதீர்! என்றென்றும்

வேர்ப்பன வேண்டா! விடுக.

தந்தைப் பெரியார், தமிழ்நிறை நற்சான்றோர்

தந்தது வள்ளுவர் தம்ஆண்டே! - செந்தமிழா,

தாயை மதியாமல் தந்தைசொற் கேளாமல்

பேயை மதிப்பரோ? பேசு.

Pin It