கொள்ளையை தடுத்த நீதிக்கட்சி

இந்து சமய அறநிலையத்துறையே! அறமில்லாத அறநிலையத்துறையே! ஆலயத்தை விட்டு வெளியேறு! என்ற வசனங்களும் திராவிட ஆட்சியால்தான் கோவில் சொத்துக்கள் கொள்ளை போகின்றன என இமாலய பொய்களை இழவு வீட்டின் ஒப்பாரிபோல பார்ப்பனீயத்தின் குரலாக பல்வேறு இந்துத்துவ அமைப்புகள் முழங்கி வருகின்றன. இப்படிப்பட்ட இமாலய பொய்களும் போலி ஒப்பாரியும் பொது வெளியில் சில குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வேளையில் அதனை தெளிவுப்படுத்தி, போலி முகத்திரையை கிழித்தெறியும் பொறுப்பு நம் இதழுக்கு உண்டு காரணமென்னவெனில், கொள்ளையை தடுத்து கோவிலை சமத்துவ தளமாக்கிய  நீதிக்கட்சியின் வரலாற்றுக்கு உரிமைக் கொண்டவர்கள் நாம்.

சங்க பரிவாரங்களும், பிஜேபியும் தொடங்கப்பட்ட காலம் முதல் அவர்களுடைய ஒவ்வொரு மாநாட்டு தீர்மானமும் ஆலயங்களை அரசிடம் இருந்து பறித்து மீண்டும் கொள்ளையடிக்கும் செயல்திட்டத்துடனேயே முடிவடைந்து வந்துள்ளது. பக்தியின் காரணமாக மக்களும் அரசர்களும் நன்கொடையாக அளித்த பல்லாயிரம் கோடிக்கணக்கான கோவிலின் அசையும் மற்றும் அசையா சொத்துகளைக் கேள்விக் கேட்க ஆளின்றி காலம் காலமாக கொள்ளையடித்து கொழுத்த ஆரிய கூட்டமும், அந்த கொள்ளையில் பங்கு வாங்கி கொழுத்த தர்மகர்த்தா கூட்டமும் தங்கள் கொள்ளையை தொடர பெரும் தடையாக ஆட்சிக்கு வந்தவர்தான் நீதிக்கட்சியின் முதல்வரான பனகல்அரசர் ராமராயநிங்கர்.   உயர் சாதியினர், பார்ப்பனர்கள், இவர்களுக்கு ஆதரவான காங்கிரசார் என எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி 1922ஆம் ஆண்டு  ‘இந்து பரிபாலன சட்டம்’  கொண்டு வந்தார்  பனகல்அரசர்.  1925ஆம் ஆண்டு இந்து பரிபாலன சட்டத்தில் 500 திருத்தங்களை முன்மொழிந்து எப்படியேனும் கொள்ளையை தடுக்கும்  சட்டத்தை முடங்க செய்துவிட வேண்டுமென தீரத்துடன் செயலாற்றிய சத்தியமூர்த்தி அவர்கள் கடைசியாக திருப்பதி கோவிலை மட்டுமாவது நாங்களே நிர்வகிக்க அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து, அறநிலையத் துறையின் ஆதி சட்டத்தை ஒழித்துக்கட்ட படாதபாடுபட்டார் என்பது வரலாறு. இறுதியாக எவ்வித தடை முயற்சியும் எடுபடாமல் 1927ஆம் ஆண்டு இந்து சமயஅறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையும், கணக்கு வழக்கற்ற சொத்துக்களை ஆவணப்படுத்தி அரசு பதிவேட்டில் பதிந்து பக்தர்களின் எண்ணத்திற்கேற்ப கோவிலின் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொணர்ந்து, கொள்ளை கூட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட முதல் ஆட்சியாக நீதிக்கட்சியின் ஆட்சி விளங்கியது.

சமூக நீதியும் அறநிலையத் துறையும்

சமூக நீதிக் கொள்கையில் தந்தை பெரியாரின் வழி ஆட்சி புரிந்த காமராசர் அவர்கள் 1954ஆம் ஆண்டு அறநிலையத் துறையில் இருந்த சில தளர்வுகளையும் இறுக்கமாக்கி மேலும் சிறப்பு செய்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலய நுழைவுக்காக போராட்டங்களை நிகழ்த்தி வந்த சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பறையர் மகாஜன சபா  தொடங்கி, அதனை திராவிட மகாஜன சபா என மாற்றி திராவிட இயக்கம் கண்ட முன்னோடியான  திவான் பகதூர். தாத்தா ரெட்டை மலை சீனிவாசனின் பெயரன் பரமேஸ்வரனை அறநிலையத்துறைக்கு அமைச்சராக்கி வரலாற்று சாதனை செய்தார்.

தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என பேதங்களின் பிறப்பிடமாக திகழ்ந்த கோவிலுக்கு தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனை அமைச்சராக்கி அழகுபார்க்க காரணமாக இருந்தது சமூக நீதி அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட அறநிலையத்துறையே!

ஆண்டின் முக்கியமான தினங்களான சுதந்திர தினம், அண்ணா நினைவு தினம் போன்ற நாட்களில் ஒரே நேரத்தில் அனைத்து மக்களும் சிறப்பு வழிபாடு செய்ய வழிவகை செய்ததும், அனைத்து  மக்களுக்கும் சாதி பேத, வர்க்க பாகுபாடுகளின்றி பொதுவிருந்து  கோவிலுக்குள் நடை பெறுவதும் என சமூகநீதிக் கொள்கையை கொண்டிருக்கும் காரணத்தினாலேயே தான் அறநிலையத்துறை இந்தளவுக்கு வெறுக்கப்படுகிறது

அபகரிக்க துடிக்கும் அவாள்

கோவில் சொத்துக்களை காக்க, அறநிலையத் துறை வசமிருக்கும் நிர்வாகத்தை எங்களிடமே ஒப்படையுங்கள் என கேட்கும் கொள்ளையர்களிடமிருந்து தான் 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 1683 ஏக்கர் பரப்புள்ள 2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களை கணக்கு வழக்குடன் கவனமாக கையாலும் அரசு நிர்வாகத் துறைகளுள் ஒன்றான இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து எப்படியேனும் பறித்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமே இவர்களுக்கு மிகையாக இருக்கிறதே தவிர மற்றபடி நல்லெண்ண அக்கறையெல்லாம் ஏதும் இல்லை. 1983ஆம் ஆண்டு “சிலை கடத்தல் பிரிவு” தொடங்கப்படும் முன்பு வரை ஏராளமான கோவிலின் விலை மதிப்பு மிக்க  சிலைகளை பக்தர்களின் கண்களை மறைத்து வெளிநாடுகளுக்கு விற்ற பெரும்பாலானவர்களெல்லாம் யாரென்றால், கோவில் சொத்துக்களை எங்களிடமே ஒப்படையுங்கள் என கேட்கும் போலி பக்திமான்கள் தான்.

கோவில் எங்களுடையது அதன் நிர்வாகம் எங்கள் பொறுப்பிலே இருக்க வேண்டுமென அவாளெல்லாம் போராடி  வாங்கித் தந்த சிதம்பரம் தில்லை கோவிலின் உள்ளே ஒவ்வொரு மூலையிலும் கல்லாபெட்டி திறக்காத குறையாக அர்ச்சனைக்கு 200 ரூபாய், சிறப்பு அர்ச்சனைக்கு 500, 1000, ரூபாய் என வெறுமனே  வெள்ளை காகிதத்தில் எழுதிக் கொடுத்து கட்டண கொள்ளை நடத்தி வருகிறார்கள். இது போன்ற கொள்ளைகளை எல்லா கோவில்களிலும் நிகழ்த்தவே அவாளெல்லாம் துடியாய்த் துடிக்கிறார்கள்.

அனைவரும் ஏற்கும் அறநிலையத்துறை

கோவிலின் வருவாயை அரசு வேறு பல திட்டங்களுக்கு செலவு செய்கிறது என்ற ஆதாரமற்ற பொய்களை இந்துத்துவவாதிகள் கோவில் நிர்வாகத்தை அபகரிக்கும் உள் நோக்கத்துடன் தவறான பிரச்சாரங்களைச் செய்கிறார்கள்.

வருவாய் அதிகமுள்ள கோவிலின் வருவாயிலிருந்து அறவே வருவாய் அற்ற கோவிலுக்கும், கிராம கோவிலுக்கும் ஒருகால பூசைக்காக குறிப்பிட்ட தொகை செலவிடப்படுகிறது.

கோவிலின் வருவாயிலிருந்து வசூலிக்கப்படும் 14%  வரியிலிருந்தே அறநிலையத்துறை ஊழியர்களான ஆணையர் முதல் செயல்  அலுவலர் வரை எல்லோருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது.

பழனியாண்டவர் கல்லூரி,  பூம்புகார் கல்லூரி, பராசக்தி கல்லூரி என 5 கல்லூரி உள்ளிட்ட 51 கல்வி நிறுவனங்கள் ஆலய சொத்துக்கள் மற்றும் நன்கொடை மூலமான வருவாயிலிருந்து  முறையாக தணிக்கை கணக்குடன் செலவிடப்டுகிறது.

முதியோர் இல்லம், மனநல காப்பகம், மருத்துவமனை உள்ளிட்ட 44 நிறுவனங்களையும் அறநிலையத் துறை பொது நோக்கத்துடன் பக்தர்களின் எண்ணத்திற்கு ஏற்றாற் போலவே செலவு செய்துவருகிறது.

இது தவிர கிராம கோவில் பூசாரிகளுக்கு ஊதியம் ஓய்வூதியம் என்பன போன்ற பல்வேறு  சிறப்பம்சங்களை கொண்டதும் மக்களின் சமூக நீதிக்காகச் செயல்படும் அறமுள்ள அறநிலையத் துறையை ஒருபோதும் அழித்துவிடமுடியாது.

அறமுள்ள அறநிலையத்துறையை உருவாக்கி சமூக நீதியை நிலைநிறுத்திவருவது திராவிட இயக்கங்களின் வரலாற்றுச் சாதனையாகும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

Pin It