வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (13)

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.

அடுத்தக் குற்றச்சாட்டு “சேதுரத்தினம் அய்யரை அமைச்சராகச் சேர்த்துக் கொண்டது”. 1926இல் சுயேச்சை அமைச்சரவை அமைத்த சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சுயராச்சிய கட்சியை சேர்ந்த அரங்கசாமி முதலியார் ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் சைமன் கமிஷனை டாக்டர் சுப்பராயன் வரவேற்றதை கண்டித்து பதவி விலகினர். டாக்டர் சுப்பராயன் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டது. அன்றைய ஆளுநர் நீதிக்கட்சியினரை அழைத்து டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண் டார். நீதிக்கட்சியைச் சார்ந்த முத்தையா முதலியாரையும் சுயராச்சிய கட்சியில் இருந்து விலகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு வந்த சேதுரத்தினம் அய்யரையும் அமைச்சரவையில் சுப்பராயன் சேர்த்துக் கொண்டார்.

1926 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தது. சுய ராஜ்ஜிய கட்சி தான் வெற்றி பெற்றிருந்தது. நீதிக்கட்சியில் 21 சட்டமன்ற உறுப்பினர்களும், சுயராச்சிய கட்சியில் 41 சட்டமன்ற உறுப்பினர்களும் சுயேச்சைகள் 36 பேரும் அப்போது இருந்தனர். சுயராச்சிய கட்சியில் பெரும்பாலும் பார்ப்பனர்களே அதிக அளவில் இருந்தனர். அவர்களின் எதிர்ப்பை சமாளிக்க பார்ப்பனரான சேதுரத்தினம் அய்யர் சுயேச்சை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப் பட்டார். சேதுரத்தினம் அய்யர் திருச்சியை சேர்ந்தவர். 1920 தேர்தலில் சுயேச்சையாகவும், 1923, 1926 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியிலிருந்து சுயராஜ்ய கட்சி வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பா.குப்பன் பார்வையில் இராஜாஜியும், சத்திய மூர்த்தி அய்யரும் தமிழ்ப் பார்ப்பனர்களாக இருக்கும் போது மணல்தட்டை சேதுரத்தினம் அய்யர் மட்டும் எப்படி தெலுங்கு பார்ப்பனராக மாறிவிட்டார் என்பது நமக்கு புரியவில்லை.

ம.பொ.சி ஆதரித்தால் அவர்கள் தமிழ்ப் பார்ப்பனர்கள். ம.பொ.சி எதிர்த்தால் இவர் தெலுங்கு பார்ப்பனரா? என்ன அளவுகோலை வைத்திருக்கிறார் பா.குப்பன்? மஞ்சள் காமலை வந்தவன் கண்களுக்கு பார்க்கப்படும் பொருள்கள் அனைத்தும் மஞ்சளாகவே தெரியுமாம். அதைப் போலத்தான் நீதிக்கட்சி என்றாலே குப்பனுக்கு தெலுங்கராகத் தெரிகிறார் போலும். அந்தப் பார்ப்பனரை அமைச்சர் அவையில் வைத்துக் கொண்டு தான் முத்தையா முதலியார் வகுப்புரிமை அடிப்படையில் அரசாணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தினார். சத்திய மூர்த்தி பார்ப்பனர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த போதும் டாக்டர் சுப்பராயன் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றினார். விபச்சாரத் தடுப்புச் சட்டத்தை நிறை வேற்றினார். அதைக்கூட சத்திய மூர்த்தி எதிர்த்தார். விபச் சாரத்தை ஒழித்து விட்டால் காமவெறியர்கள் குடும்பப் பெண்களை எல்லாம் கெடுத்து விடுவார்கள். ஆகவே விபச்சார ஒழிப்பு சட்டம் கூடாது என்று வாதாடினார். இவர்தான் ம.பொ.சி.க்கு தலைவர், பா.குப்பனுக்கும் தலைவர். டாக்டர் சுப்பராயன் கொண்டு வந்த எந்தச் சட்டத்தையும் சேதுரத்தினம் அய்யர் எதிர்க்கவில்லை. அதற்கு ஆதரவாகவே செயல்பட்டார். இதைக் கொண்டு “நீதிக்கட்சியினருக்கு பார்ப்பன எதிர்ப்பு இல்லை அது போலியானாது” என்று பா. குப்பன் கூறுவதில் உண்மை யில்லை என்பது புலப்படும்.

“நெல்லூர் பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் அமைச்சரவையில் மட்டும் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற பெரியாரின் தீர்மானத்தைக் காட்டி பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு போலியானது” என்கிறார் பா.குப்பன் (பக் 49)

நெல்லூர் மாநாடு 5, 6-10-1929இல் நடைபெற்றது. அதற்கு முந்தைய வாரமே ‘குடிஅரசு’ இதழில் பெரியார் நீதிக்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். “பார்ப்பனர்களை தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுவது என்கிற முடிவுக்கு வந்தால் அன்றே அந்த இயக்கம் தோல்வி அடைந்துவிட்டது. செத்துப் போய் விட்டது என்பதை மாத்திரம் ஒவ்வொரு வரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்... பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளுவது என்கிற விஷயம் நிறைவேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் மிகவும் முக்கியமான விஷயம்... எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால் இவ்வியக்கம் அன்றே தன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட்டது போல் இயக்கம் செத்து பார்ப்பன ஆதிக் கத்திற்கு மற்றொரு சாதனமாய் மாறிவிடும் என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக உறுதியாய்ச் சொல்லுவோம்”

“பார்ப்பனரர்களுக்குள்ள அரசியல் பங்கை மோசம் செய்ய வேண்டும் என்றும் நாம் சொல்வதில்லை. நமது கொள்கைக்கும், நன்மைக்கும் விரோதமில்லாத பார்ப்பனர் களுக்கு அவர்களது பங்கைக் கொடுக்க நாம் தயராகவே இருக்கிறோம்”. (குடிஅரசு 22-9-1929)

(தொடரும்)

Pin It