அய்யாவின் தேர்வு எப்போதும் சோடை போனதில்லை. சோடை போயிருந்தால் அது அய்யாவின் தேர்வாக இருந்திருக்காது. அய்யாவே நேரடியாகத் தேர்வு வைத்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மிக முக்கியமானவர்கள் இரண்டு பேர். அவர்கள் இருவர் இல்லாமல் தமிழ்ச்சமூக, அரசியல் வரலாறு எழுதப்பட முடியாது. இருவரில் முதலாமவர் பேரறிஞர் அண்ணா. இரண்டாமவர் ஆசிரியர் கி. வீரமணி!.

திருப்பூரில் தனக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்த இளைஞரிடம், ‘என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டால் அய்யா ‘படித்து முடித்துவிட்டேன், சமூகப் பணியாற்றவே விருப்பம்” என்கிறார் அந்த இளைஞர் ‘என்னோடு வந்துவிடுகிறீர்களா? ஏன்று கேட்டார் அய்யா, அப்படி அய்யாவுடன் கிளம்பியவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக அண்ணா!.

‘‘விடுதலை’ ஏட்டை நிறுத்திவிடலாம், அதைக் கவனித்து நடத்த யாருமில்லை” என்ற கவலையை அந்த இளைஞனிடம் அய்யா சொல்கிறார். ‘கொள்கையை விளக்க ‘விடுதலை’ நாளேடாக வருவது தான் சிறந்தது, அதை நிறுத்திவிட்டு வார ஏடாகத் தொடங்குவது பின்னோக்கிச் செல்வது மாதிரி ஆகிவிடும். நம் இன எதிரிகளுக்கும் அது வாய்ப்பாக ஆகிவிடும்” என்கிறார் அந்த இளைஞர்.  ‘நீங்கள் சென்னை வந்து ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்துவதற்கு ஒப்புக் கொண்டால் கவலை இல்லாமல் உங்களிடம் ஒப்படைக்கத் தயார்” என்கிறார் அய்யா. அப்படி 1962-ஆம் ஆண்டு கிளம்பி வந்த இளைஞர் தான் 86 வயதில் ‘விடுதலை’யை மட்டுமல்ல, சமூக விடுதலை இயக்கமாம் திராவிடர் கழகத்தின் தலைவராய், இன எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாய் இருக்கும் ஆசிரியர் கி.வீரமணி. இந்த டிசம்பர் மாதம் 2-ஆம் நாள் அவருக்குப் பிறந்த நாள். அவர் கொண்டாடுவது இல்லை. இனம் கொண்டாடுகிறது!.

தோழர் வீரமணி அவர்கள், நான் உட்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து, பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு, தொண்டாற்ற ஒப்புக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார். இது நமது கழகத்திற்கு கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி திரு. வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முழு நேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிகாரத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்” - (விடுதலை 10.8.1962) - என்று அன்பால் எழுதி வரவேற்றார் அய்யா அவர்கள்.

பெரியாரே ஆசிரியர் அவர்களை அழைத்துச் சென்று ‘விடுதலை’ அலுவலகத்தின் ஆசிரியர் இருக்கையில் அமர வைக்கிறார். ‘வீரமணி கிடைத்தது ஒரு பெரும் நல் வாய்ப்பு, நற்செய்தி” என்ற சொற்களைப் பெரியார் அவர்கள் சும்மா ஒப்புக்குப் பயன்படுத்தவில்லை என்பதற்கான உதாரணம் இந்தக் காட்சி. எந்தவொரு இயக்கமும் தலைவரால், அவர் உருவாக்கிய தத்துவத்தால் மட்டும் நிலைத்து நிற்பதில்லை நீடிப்பதுமில்லை. அந்தத் தலைவருக்குப் பிறகு, தத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே இயக்கமும் நீடிக்கிறது. அந்தத் தலைவரும் உயிர்ப்போடு உச்சரிக்கப்படுவார். பெரியாருக்குப் பிறகு வீரமணி, அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் என்ற வரிசை, வார்ப்பு சரியாக அமைந்ததால் தான் இது இன்னமும் ‘திராவிட நாடாகவே” தொடர்கிறது. இங்கு ஆட்சியாக இருந்தாலும் ‘திராவிட ஆட்சி’யாகத் தான் இருக்கும், சுடுகாடாக இருந்தாலும் ‘திராவிடச் சுடுகாடாக’த்தான் இருக்கும். இதற்கு இந்த நான்கு பேர் தான் நடுநாயக கர்த்தாக்கள்.

ஆசிரியர் திராவிடமணி இல்லையென்றால் ஆசிரியர் வீரமணி இல்லை. பத்து வயதில் பகுத்தறிவு விதையை தண்டபாணியின் மூளை அதற்காகவே பதப்படுத்தப்பட்ட களமாக இருந்ததால் சட்டென முளைத்தது. ‘திராவிட நாடு” இதழில் கலிங்கராணி கதையை அண்ணா எழுதி வந்தார். அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ‘வீரமணி”. கடலூர் எஸ்.டி.ஜி. உயர்நிலைப்பள்ளியில் முதல் பாரத்தில் (I Form)சேர்க்க தண்டபாணியை அழைத்துச் சென்ற திராவிடமணி, ‘வீரமணி” என்று எழுதிச் சேர்த்தார். ‘திராவிடநாடு’ இதழுக்கு நன்கொடை திரட்டி நிதிவழங்கும் பொதுக்கூட்டம் 1943 ஜுன் மாதம் 27-ஆம் நாள் கடலூரில் நடந்தது. அன்று முதன்முதலாக மேடையேறி ஒலிக்கத் தொடங்கிய வீரமான, இனமான மணியோசை இன்று வரை ஒலிக்கிறது.

‘கடைத் தெருவில் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள திடலில் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பன்னிரெண்டு வயது நிரம்பாத அந்தச் சிறுவன் ஏறி நின்று பிராமணர்களையும் நமது புராணங்களிலுள்ள ஆபாசங்களையும் கடவுள்களையும் ‘கிழி கிழி” என்று கிழிப்பதை வாயைப் பிளந்து கொண்டு நானும் பார்த்தேன்’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் பிற்காலத்தில் எழுதினார். பன்னிரெண்டு வயதில் மட்டுமல்ல 86 வயதிலும் வாயைப் பிளந்து கொண்டு கேட்கும் அளவுக்கு ஆச்சர்யப் பேச்சு கொண்டவர் ஆசிரியர். ஏதிரிகளின் வாதங்களை மட்டுமல்ல, அவர்களது தோலையும் உரித்து ரத்தச் சுத்திகரிப்பு செய்யக்கூடியது அவரது பேச்சு. ஒருமுறை வலம்புரி ஜான் சொன்னார், ‘ஆசிரியர் பேச்சு’ மட்டும் தான் பல்கலைக் கழகப் பாடம் கேட்பது போல் இருக்கும்” என்று. அதனால் தான் அவர் ‘ஆசிரியர்’. நடத்துவது இனப் பாடம் என்பதால் ‘சிலபஸ்’-க்கு முற்றுப்புள்ளியே இல்லை!.

 1. ‘விடுதலை”யைத் திராவிடத்தின் போர்வாளாக வளர்த்தெடுத்தது.
 2. பெரியாரின் சிந்தனைகளுக்கு சட்டபூர்வ அரண் அமைத்தது.
 3. அய்யாவின் மறைவுக்குப் பிறகு மணியம்மையாருக்கு இயக்கத் தொண்டில் உறுதுணையாய் இருந்தது.
 4. அவசர நிலைப் பிரகடனக் காலத்தில் இயக்கத்தை காத்ததும் - ஓராண்டு காலச் சிறையும்.
 5. மணியம்மையார் மறைவுக்குப் பின்னர் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று கொள்கைப் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
 6. அய்யா விட்டுச் சென்ற கழகம் - நிறுவனங்கள் - டிரஸ்ட் ஆகியவைகளை தனது தனித் திறனால் காப்பாற்றியது.
 7. 1980-களின் தொடக்கம் முதல் அந்தப் பத்தாண்டு காலமும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை தமிழகம் முழுவதும் விதைத்தது.
 8. விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு தம்பி பிரபாகரனுக்கு தோன்றாத் துணையாக இருந்தது.
 9. எம்.ஜி.ஆரின் பொருளாதார ஸ்கேலை உடைத்துப் போட்டு சமூக நீதி அளவுகோலைத் தூக்க வைத்தது.
 10. மண்டல் ஆணையத்தின் அறிக்கையை செயல்பட வைத்தது.
 11. பெரியாரின் இயக்கத்தையும், கொள்கைகளையும் வடபுலத்துக்கு எடுத்துச் சென்றது.
 12. தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை வலிமைப்படுத்தும் வண்ணம் அரசியல் சட்டத்தில் சட்டப் பாதுகாப்பு கொடுத்தது.
 13. பகுத்தறிவு - மூடநம்பிக்கைப் பிரச்சாரத்தை விடாமல் தொடர்வது.
 14. பெரியாரின் கல்விப் பணியை, நிறுவனமயப்படுத்தி நிலை நிறுத்தியது.
 15. மாட்டுக்கறி மதவாதத்துக்கு மரண அடி கொடுப்பது.
 16. தர்மபுரி சாதியவாதத்துக்கு தடியடி கொடுப்பது.
 17. இன்றும் பார்ப்பனக் கூட்டத்துக்கு பாகற்காயாகக் கசப்பது.
 18. நம் இன அரசியல் இது தான் என அனைவரையும் வழிநடத்துவது.
 19. ‘இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்” என்று பெயரெடுத்தது.
 20. ‘இவரது பாராட்டைப் பெற வேண்டும்” என்று நினைக்க வைத்தது.

- இப்படி எழுதிக் கொண்டே  போகலாம். 100-க்கும் மேல் எழுதலாம், நூறைக் கடந்தும் அவர் வாழ வேண்டும் என நினைக்க இந்த இருபதும் அடிப்படைக் காரணங்கள்.

அய்யா இறந்த போது, ‘அப்பாடா, நாஸ்திகன் ஒழிந்தான், நிம்மதி” என்று நினைத்தது அந்தக் கூட்டம். பெரியார் அவரை விட ‘மோசமான’ வீரமணியை விட்டுச் சென்றார் என்பதை அடுத்தடுத்த ஆண்டுகளில் உணர்ந்தார்கள். அய்யா ‘‘வெளியில்” இருந்து செய்ய வைத்தார், ஆனால் ஆசிரியர் ‘கிரவுண்ட் ஒர்க்” பார்த்து செயல்படவும் வைத்தார். இது அவர்கள் எதிர்பாராதது. ஆவர்கள் எதிர்பார்ப்பை உடைப்பதே ஆசிரியர் வீரமணியின் வாத வலிமை, எழுத்து வலிமை, செயல் வலிமை, பத்து வயதிலேயே பதியம் போட்டதால் வலிமையான, வலிமை.

அய்யா சொன்ன சொல்லை நினைவுபடுத்திப் பாருங்கள், ‘வீரமணி ஒரு பெரும் நல்வாய்ப்பு, அதிசயத்தோடு வரவேற்கிறென்” என்பவை பெரும் சொற்கள். அய்யா, காசு சிக்கனக்காரர் மட்டுமல்ல சொற்களையும் சிக்கனமாகப் பயன்படுத்துபவர், யாரையும் எளிதில் பாராட்டிவிடமாட்டார்.  அதுவும், பொதுவில் பாராட்டிவிட மாட்டார். அதுவும், எழுத்தில் பாராட்டி விட மாட்டார். அதவும், முன்கூட்டியே பாராட்டிவிட மாட்டார். இவை எல்லாமே ஆசிரியரைப் பொறுத்தவரை ஆரம்பத்திலேயே கிடைத்துவிட்டது என்றால், தண்டபாணி என்ற சிறுவன் வீரமணியாக ஆகும் போதே இனமணியாக இருந்ததால் தான்.

‘தமிழன் அடிமை தவிர்த்து குன்றென நிமிர்தல்

வேண்டும் என்றே நிகழ்த்தும்

பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக்

கருதிய கருத்து வீரமணியை

வீண்செயல் எதிலும் வீழ்த்தவில்லை!”  -

என்றார் புரட்சிக் கவிஞர். இந்தப் புரட்சிச் சொல் 1958இல் சொல்லப்பட்டது.  2018-இல் மீண்டும் சொல்லப்படுகிறது. வீழ்த்தப்பட முடியாத வீரமணி வாழ்க!                

Pin It