திரிபுவாத திம்மன்கள் - யார்? (5)

அவ்வப்போது ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு 'ஆலவட்டம் வீசி' அதிகார மய்யத்தின் அரவணைப்பைத் தேடிக் கொண்டிருப்பவர் கி.வீரமணி. இந்த அரவணைப்புக்காக அவர் மேற்கொள்ளும் 'யுக்திகளுக்கும்', அதனடிப்படையில் வெளியிடும் சந்தர்ப்பவாத அறிக்கைகளுக்கும் கொள்கை முலாம் பூசிக் கொள்கிறார்கள்.

ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழிப்பதற்கும், நாடு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே கல்வி வெளிச்சம் பரவுவதற்கும், காமராசர் ஆட்சியை தீவிரமாக ஆதரித்தார் பெரியார். அதற்காக அவர் அதிகார மய்யத்திடம் சரணடைந்துவிடவில்லை.

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை காமராசர் ஆட்சியின் போதுதான் நடத்தினார். தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை காமராசர் ஆட்சியில் தான் அறிவித்தார். அதேபோல், இப்போது நடந்தால் ஆட்சிக்கு தொல்லை தரவே இத்தகைய போராட்டங்களை பெரியார் நடத்துகிறார் என்று, கி.வீரமணி அறிக்கைகளை வெளியிட்டிருப்பார்.

பார்ப்பனர் ஜெயலலிதா ஆட்சிக்கு ஆதரவும், பாராட்டுகளையும் குவித்துக் கொண்டிருந்தபோது, அந்த 'யுக்திக்காக' பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பும், கடவுள் எதிர்ப்பும், அவரது லட்சியமல்ல ஒரு வழிமுறைதான் என்ற 'வியாக்யானத்தை' வீரமணி முன் மொழிந்ததை கடந்த இதழில் சுட்டிக் காட்டியிருந்தோம். மற்றொரு கொள்கை புரட்டை இங்கே எழுதுகிறோம்.

1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெரியாருக்கு உடன்பாடானது அல்ல. கட்டாய இந்தியைக் கொண்டு வந்த பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி, 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கினார். தி.மு.க.வும் அப்போது ராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சியை தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருந்தது.

பெரியார் இந்தப் போராட்டத்தை பார்ப்பனர் நடத்தும் கலவரம் என்று கூறினார். பெரியாரின் எதிர்ப்புக்கு உள்ளான அந்தப் போராட்டத்தை கி.வீரமணி, பெரியாருக்குப் பிறகு அங்கீகரித்தார். அதற்கான பின்னணியும் 'யுக்தி' தான்! ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் திடலில் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு தியாகிகளுக்கு ஒரு பாராட்டுக் கூட்டத்தை கி.வீரமணி ஏற்பாடு செய்தார்.

ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியான சசிகலாவின் கணவரும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான நடராசன் - 1965 ம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். அவருக்கு விருது வழங்கி மகிழ்விக்க, நடராசன் ஆலோசனைப்படி கி.வீரமணி நடத்திய பாராட்டுக் கூட்டமே அது. அந்த 'விருது வழங்கும்' நிகழ்ச்சியின் விளம்பரம் 'தினமணி' நாளேட்டில் வெளியிடப்பட்டது.

திராவிடர் கழகத்தின் பெயரால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில் திராவிடர் கழகக் கொடிக்கு பதிலாக, அ.இ.அ.தி.மு.க. கொடிகளோடு விளம்பரம் வெளிவந்தது. பெரியாரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு போராட்டத்தை பெரியார் மறைவுக்குப் பிறகு, அதை அங்கீகரித்து போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு விருது வழங்கியது - பெரியாரைத் திரிப்பது அல்லவா? அதிகாரத்தில் உள்ளவர்களை மகிழ்விப்பதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடிய - இந்த வீரமணிதான், பெரியார் நூல்களை, மற்றவர்கள் வெளியிட்டால், திரித்து விடுவார்கள் என்கிறார். பெரியார் திராவிடர் கழகத்தை 'திரிபுவாத திம்மன்கள்' என்கிறார்! பெரியாரைத் திரிப்பது யார்? பதில் வருமா?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)

Pin It