Me Too இயக்கம் பார்ப்பனர் மற்றும் மேட்டுக்குடிப் பெண்களுக்குத்தான் பயன்படுகிறது என்ற கருத்து சரிதானா.?

ஒருவகையில்  பார்த்தால் அந்தக்கருத்து சரிதான். ஏனெனில் இந்த மீ டூ என்ற இயக்கமே இணையதளத்தில் நடக்கிறது. அதன் அடிப்படையைப் புரிந்து கொள்ளும் அறிவும் பயன்படுத்தும் பழக்கமும் பார்ப்பனர்களுக்கும் பணவசதி  படைத்தவர்களுக்கும் இயல்பாகக் கிடைக்கும்.  மற்ற ஒரு முதன்மையான காரணம் இருக்கிறது. குடும்பத்தினரின் ஆதரவு. கல்வி நாட்டுவேலை வாய்ப்புகள் சமூக மாற்றங்களை தம் சுய முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் அறிவு ஆகியவை பார்ப்பனர்களிடம் உள்ளன. மாற்றங்களை யார் முன் எடுத்தாலும் அதை கைக் கொள்வதில் பார்ப்பனர்களே முன் நிற்பார்கள். அவர்கள் ஏற்றுக் கொண்டபின்பு அடுத்த நிலையில் இருக்கும் உயர் சாதிகளும் பணக்காரர்களும் அதை பின்பற்றி ஏற்றுக் கொள்வார்கள்.

அந்த அடிப்படையில் என்றோ நடந்த ஒரு பாலியல் சீண்டலையோ வன்முறையையோ இப்போது வெளியே சொல்வதற்கும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கும் அவர்களின் குடும்பங்கள் துணை நிற்கின்றன. பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஆணாதிக்க மனப்பான்மை இன்றும் தொடர்கிறது. இன்று ஒரு பிரச்சனையை வெளியில் சொன்னால் இன்னும் என்னென்ன விசயங்களை மறைத்தாளோ என்று மேலும் குதறி விடும் சூழ்நிலை இருக்கிறது. மேலும் நடுத்தர மற்றும் ஏழைப் பெண்களாலும் ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பெண்களாலும் இதை வெளியில் சொல்லவே முடியாது. ஏனெனில் பெண்ணுக்கு எதிரான எந்தக் குற்றத்திற்கும் அந்தப் பெண்ணையே காரணம் காட்டும் மனநிலை ஒருபுறம். எளியவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியில் சொன்னால் அவர்களை ஏளனமாகப் பார்க்கும் ஆதிக்க சாதி மனப்பான்மை மறுபுறம். மீ டூ-வில் பதிவிடும் பெண்கள் யாருமே இத்தகைய கொடுமைகளைப் பற்றி வாய் திறக்கவும் மாட்டார்கள். எனவே இதன் பயன் சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்குத்தான் பயன்படும். இந்த மேல்தட்டில் பார்ப்பனர்கள், பணக்காரர்கள், பதவி அதிகாரம் மிக்கவர்கள் மற்றும் கல்வியால் உயர்நிலை அடைந்தவர்களுக்கு மட்டுமே பயன்படும். அந்த அளவுக்கு உண்மையாகப் பயன்பட்டாலே பலரது கோரைப் பற்கள் வெளியில் தெரிந்து விடும். மற்றவர்கள் கொஞ்சம் விழிப்புணர்வு பெற அது வழிவகை செய்யும்.

இன்றைக்கு பெருமளவில் தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் செய்தி #metoo என்பது தான். 2006ஆம் ஆண்டு Tarana Burke (தரானா பூர்கே) என்ற சமூக செயற்பாட்டாளர் மைஸ்பேஸ் (My Space) எனும் சமூக வலைத்தளத்தில் இதைத் தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் பெண்கள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட இனங்களைச் சார்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவு பற்றி பதிவு செய்ய இதைத் தொடங்கினார். “Empowerment through empathy” என்ற பரப்புரையின் மூலம் இதைத் தொடங்கி வைத்தார். பின் அக்டோபர் 15, 2017 ஆம் ஆண்டு நடிகை அலைசா மிலானோ (Alyssa Milano) மீண்டும் பாலியல் சீண்டல் குறித்து தெரிவிக்க இதைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சி இன்று தமிழ்நாட்டை வந்து அடைந்திருக்கின்றது. இதில் சின்மயி என்ற திரைப்பாடகி பல கர்நாடக சங்கீத துறையைச் சேர்ந்தவர்களை இணைத்து அவர்கள் எப்படி தனக்கு பாலியல் தொந்தரவு தந்தனர் என்பதை டிவிட் செய்திருந்தார். அந்த பட்டியலோடு கவிஞர் வைரமுத்து பெயரும் இடம்பெற்றது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழலை சற்றே நாம் தள்ளிவைத்து இந்தப் பிரச்சினையை முதலில் அணுகலாம்.

திரைத்துறையில் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் இடர்கள், ஊடகங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்தையும் நாம் அறிவோம். இதுவரை இவை பற்றி cinegossips என்ற முறையில் கிசுகிசுக்களாக செய்திகள் வந்து கொண்டு இருந்தன. முதல் முறையாகப் பாதிக்கப்பட்டப் பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்களைப் பேசுகின்றனர். அந்த தளத்தை நாம் முன்முடிவுகளோடு அணுகுதல் கூடாது. பேசட்டும்; உண்மைகள் என்ன? என்று அறிய விசாரணைகள் நடைபெற வேண்டும் என்பது இரண்டாவது கட்டம் தான், முதலில் ஒரு பெண் தான் சார்ந்த துறையில் தனக்கு பாலியல் தொந்தரவு உள்ளது என அனைத்து மனத்தடைகளையும் மீறி வெளியே வருவதை நாம் எந்தக் காரணம் கொண்டும், பார்ப்பனப் பெண் என்பதாலோ அய்யத்தோடு பார்க்கத் தேவை இல்லை. ஏனெனில் இந்த பரப்புரையை தொடங்கிய Tarana Burke (தரானா பூர்கே) அவர்கள் #metoo பரப்புரையின் முக்கியத்துவத்தை பற்றிக் கூறும் போது,

“this idea - one that we call 'empowerment through empathy, to not only show the world how widespread and pervasive sexual violence is, but also to let other survivors know they are not alone. #metoo." என்கிறார்.

அதாவது இந்த பரப்புரையின் நோக்கம் என்பது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளாவியது மட்டுமல்ல அதை எதிர்க்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு நீங்கள் தனி அல்ல என்பதை தெரியப்படுத்துவதற்காகவும் தான் என தெரிவித்தார்.

சின்மயி காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டியது தானே, இத்தனை ஆண்டுகள் என்ன செய்தார்?, திட்டமிட்டு பழிவாங்குகின்றார் என்ற கருத்துகளை வெளியிடும் முன்னர் இதை ஒரு மாநில அளவிலான அரசியலோடு சுருக்காமல் சற்றே பரந்த பார்வையோடு உலகம் முழுதும் இந்த பரப்புரை பெண்களை பேச வைத்ததை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆளுநர் புரோகித் பன்வாரிலால் செய்த லீலைகளை திசை திருப்ப இந்த செய்தி பயன்படும் என்ற வாதத்தில் உண்மை இருப்பினும், ஆளுநரால் பாதிப்படைந்த எண்ணற்ற பெண்கள் இந்த #metoo வின் மூலம் பேச ஒரு தளம் ஏற்பட்டிருக்கின்றது என நாம் சிந்திக்க வேண்டும்.

சிறுமியாக இருந்தபோது ஒரு பெண் குழந்தைக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவை அப்போதே வீட்டில் சென்று கூறி, காவல் துறையில் நடவடிக்கை எடுக்கும் சமூகமாக நாம் இருக்கின்றோமா? இல்லையே! பல வருடங்கள் கழித்தும் அந்த வடு அந்தப் பெண்ணின் மனதை அரித்துக்கொண்டிருக்கும் நிலையில் தங்கள் வலிகளைப் பகிர்ந்து கொள்ள இது முக்கியமானது என்பதை உணர வேண்டும். இதை நக்கல் அடிப்பதன் மூலம் நாம் உள்ளிருக்கும் ஆணாதிக்கச் சமூகத்தின் தன்மைகளை வெளியே காண்பிக்கின்றோம் என்பதே உண்மை. கோவையில் மன நல உளவியலராக இருக்கும் திரு. எழில் அருள் அவர்கள் மிகச் சரியாக இந்த # metoo பற்றி தன் முகநூலில் எழுதியிருந்தார். அதன் சில வாக்கியங்களை நீங்கள் படிக்க கீழே தருகின்றேன்.

“Emotional instability இருப்பவர்கள் வாழ்க்கை பாதிப்படையத்தான் செய்கிறதென்பதால் அவர்களும் பேசட்டும். நம்மைப் போன்றுதான் பெரும்பாலோர்க்கு நடந்திருக்கிறது என்பதை உணரும் போது தன்னிடமிருக்கும் guilt, fear, anxiety போன்றவற்றிலிருந்து எளிதில் வெளி வர முடியும் என்பதே ##Me too வின் முக்கிய நோக்கமாய்க் கருதுகிறேன்.” என்கிறார்.

இது தான் இந்த பரப்புரையின் முக்கிய நோக்கம். நீங்கள் அரசியல் காரணங்களுக்காக அதை குற்றம் சொல்வது சரியானதாக இருக்க முடியாது. பலர் இதில் வெகுளி ஆண்கள் பாதிப்படைவார்கள் என கண்ணீர் வடிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் கேஸ் அடுப்பு வெடித்து எத்துனை பெண்களை நாம் அநியாயமாக இழந்திருப்போம்? ஆனால் அந்த வலிகளைப் பற்றிக் கவலைப் படாமல் dowry prohibition Act மூலம் வெகுளி ஆண்கள் பாதிப்படைகின்றார்கள் என கண்ணீர் சிந்திய சமூகம் தானே நாம்? சதவீதத்தில் பெண்கள் எதிர்க்கொள்ளும் துன்பமும் உயிர் இழப்புகளும் அவஸ்தைகளும் இந்த வெற்றுக் கூச்சல் முன் ஒன்றும் இல்லை என்பதை உணராத நடுநிலைவாதிகள் தானே நம் சமூகம்?

மொள்ளமாரித்தனத்தில் இருவரும் விரும்பி ஈடுபட்டால்...- We two.

அதில், ஒருவர் மட்டும் விரும்பி இருந்தால்...

#metoo..

அவ்ளோ தான் சார் வாழ்க்கை..

போன்ற வன்மப் பதிவுகள் எல்லாம் #metoo பரப்புரையைக் கிண்டல் செய்வதாக தெரிந்தாலும் ஆழ் மனதில் பல ஆண்களுக்கு உள்ள பதட்டத்தைக் காண்பிப்பதாகவே உள்ளது. இனி விளையாட்டிற்கேனும் பெண்களைப் பாலியல் சீண்டல் செய்யும் முன், யாருக்குத் தெரியப்போகிறது என்ற எண்ணம் இல்லாது தயக்கம் ஏற்படும். அந்தத் தயக்கமே இந்த பரப்புரையின் வெற்றி!

பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்; அய்யோ இந்தச் சமூகத்திற்கு முன் நாம் பதில் சொல்ல வேண்டிவருமோ? என்ற தயக்கங்கள் துறந்து பேசட்டும்! அவர்களின் குரலை எந்த காரணம் கொண்டும் தந்தை பெரியாரின் மண் மிதிக்காது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்! 1920களில் ஆண்மை அழிய வேண்டும் அப்போது தான் பெண்களுக்கு விடுதலை என முழங்கியவர் தந்தை பெரியார். அவரின் பெண் விடுதலை முழக்கங்கள் பார்ப்பனப் பெண்களுக்கும் சேர்த்தே இருந்தது என்பதை அவர்கள் மறந்திருக்கலாம்; நாம் மறக்கலாமா? மனுவின் படி பெண்கள் அனைவரும் பாவ யோனியில் பிறந்தவர்கள் தானே? பஞ்சமர்களுக்கும் கீழானவர்கள் தானே பெண்கள்!?

பொய்யும் புரட்டும் நீண்ட நாட்கள் நிலைபெறாது ஆகையால் ஒரு பாலியல் தொந்தரவு குரல் ஒலிக்கும் போதே அது பொய்யாக தான்இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு சற்றே பரந்த மனப்பான்மையோடு இந்தப் பரப்புரைக்குத் துணை நிற்போம்!

- நேர்காணல் தொடரும்.

Pin It