ஒருவர் உலகத் தலைவர் ஆக வேண்டுமெனில்... போர் ஆற்றலால், படையெடுப்பால் - தன் பக்கமும் எதிரிகள் பக்கமும் ஏராளமான உயிர்களைப் பலி கொடுத்து - பெரும் படையைக் கொண்ட படைதலைவனோ, படையாற்றல் மிக்க அரசுத் தலைவனோ - சோழப் பேரரசன் இராசேந்திரனைப் போல, அலெக்சாண்டர், நெப்போலியன், இட்லர் போல - ஏன் - பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே இப்பூவுலகில் ‘அவதாரம்’ எடுத்து, பயங்கரப் போர்களை நடத்தும் புஷ் போல - மேலும் மேலும் மக்களை அழித்து, நாடுகளைப் பிடித்து யாரேனும் ஒருவர் வருங்காலத்தில் உலகத் தலைவர் ஆனாலும் ஆகலாம்! கற்பனைக்காவது பொருந்துகிறது.

ஒரு தத்துவத் தலைவர் உலகத் தலைவர் ஆவது இயலுமோ?

பெரியார் - தமிழ் நாட்டை அல்லது இந்தியாவை - அதன் மக்களை, அவர்களது வாழ்முறையை, உளவியலை - நிலவும் சிக்கல்களை, இழிவுகளை, கொடுமைகளை கண்டுணர்ந்து, தனது நீண்ட நெடிய அனுபவத்தால், நுண்ணறிவால், உடன் கலந்த உறவாடலால் - அவற்றுக்கான காரணங்களை ஆய்ந்தறிந்து, உய்த்துணர்ந்து - அவற்றைப் போக்கவும், உழைக்கும், ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மக்களை உயர்த்தவும், அவர்கள் தங்களையும், தங்கள் உரிமையையும் உணர்வான அறிவைப் பெறவும் - இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான, பொருத்தமான தீர்வுகளைச் சொன்னவர்; செயல்படுத்தியவர்.

அவர் பேசிய பகுத்தறிவை உலகின் பல நாடுகளில், பல அறிஞர்கள் பேசியிருக்கிறார்கள்.

அவர் விரும்பிய பொதுவுடைமை பல நாட்டில் மலர்ந்துள்ளது; உலகத்தில் ஏராளமானோர் விரும்புகிறார்கள்.

அவர் பேணிய மனித நேயம் உலகம் முழுதும் பேணப்படுகிறது; மக்களை மடையர்களாக்கும் மதங்களும் பேணுகின்றன.

அவர் உயர்த்திப் பிடித்த பாலியல் நீதி - பெண்ணுரிமை - ஆதிக்க தனியுடைமை முதலாளித்துவ நாடுகளிலும், அடிமைத்தளையிலிருந்து தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டிருக்கும் ஆப்ரிக்க நாடுகளிலும், புத்துலகை, புத் தெழுச்சியை இந்நூற்றாண்டில் உண்டாக்கும் தென் அமெரிக்க நாடுகளிலும், இயல்பாக சோசலிச நாடுகளிலும் முழங்கப்படுகின்றன. முழு வீச்சில் எழுச்சி பெற்றுள்ளன.

இவற்றை மட்டும் வைத்தா பெரியாரைப் போற்றுகிறோம்? பின்பற்றுகிறோம்?

இல்லை! இல்லவே இல்லை!

உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் மூலதன முதலாளி களைவிட - நோகாமல், நுணங்காமல் உழைக்கும் மக்களைச் சுரண்டும் பிறவி முதலாளிகளை அவர்கள் உருவாக்கிய சூழ்ச்சிப் பொறியான பார்ப்பனிய சிந்தனைகளை - எல்லா நச்சுகளுக்கும் மூல ஊற்றான பார்ப்பனர்களை, சுரண்டலுக்கு தத்துவ அங்கீகாரம் அளித்துள்ள இந்து மதத்தை, வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை - இந்த சூழ்ச்சி விளக்கின் பால் பாமரரை ஈர்க்கும் கல் முதலாளிகளை - இந்த சுரண்டல்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ள இந்தியா என்ற செயற்கையான நாட்டமைப்பை - தமிழர்களின் கலை, இலக்கியம், கலாச்சாரம், சமய இயல் எல்லாவற்றிலும் மனுதர்மம் நுழைய வழி அமைக்க திணிக்கப்படும் இந்தியை - அடையாளங் காட்டியதில், அம்பலப்படுத்தியதில், அழிக்கும் முயற்சிகளில் அல்லவா பெரியார் தனித்து நிற்கிறார்! நமக்குத் தலைவராகிறார்!

அவர் எதிர்த்த இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் அல்லது தென்னாட்டில் - மேலும் விரித்தால் இந்தியாவில் நிலவும், நிகழும் தீமைகள் அல்லவா?

அவர் எப்படி உலகத் தலைவர் ஆவது?

தங்கள் சொந்த ஜெர்மன் நாட்டையும், வெளியேறி வாழ்ந்த பல அய்ரோப்பிய நாடுகளையும் பட்டறிந்தும், உலகின் பல சிந்தனைகளைப் படித்தறிந்தும் மார்க்சிய மூலவர்கள் விஞ்ஞான பூர்வமாக படைத்த தத்துவங்கள்கூட - லெனினால் ரஷ்யாவில் - மாவோவால் செஞ்சீனத்தில் - வியட்நாமில், கியூபாவில்.... அந்தந்த நாட்டின் புவியியல், உளவியல், உற்பத்தி முறைகளுக்கேற்ப, அவ்வப்போது நிலவிய உலக, அரசியல் சூழல்களுக்கேற்ப தகவமைத்து, மாற்றித் தானே பயன்படுத்தப்பட்டன! பயன்படுத்த முடிந்தன!

ஏன்? உலகம் முழுவதும் பரவியுள்ள மதங்களில்கூட - உயிர்களை நேசித்த பவுத்தம் குளிர் மிகுந்த பனிமலை ‘லடாக்’ பகுதியில் மாமிச உணவுக்கு இசைகிறதே!

சூரியனே மறையாமல் ஒளிரும் பல மாதங்களைப் பகலாகவே கொண்ட துருவ நாடுகளில் பகலில் உண்ணாத ரம்ஜான் நோன்பை அங்கு முஸ்லீம்கள் வாழ்ந்தால் நோற்க முடியாதே!

கடல் தாண்டினால் ‘மதப் பிரஷ்டம்’ என்ற இந்துமதக் கட்டளையை பெரும் சம்பளத்துக்காக நாக்கில் நீர் வடிய அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளுக்குப் பறக்கும் தீவிர இந்துக்கள், அங்கு போயும் பூணூலையும், சாதி குல கோத்திரங்களையும்விட ஒப்பாத ‘பிராமணோத்தமர்கள்’ பின்பற்ற முடியுமா? பணத்தைக் கொட்டி பளிங்குக் கற்களால் கோவிலைக் கட்டினாலும் சிவாச்சாரிகளும், பட்டர்களும் தங்கள் ஆச்சாரங்களுக்குத் தோஷம் வராமல் அர்ச்சனை செய்ய அங்கு போகத்தான் முடியுமா?

விளக்கெண்ணெய் விளக்கங்கள் சொல்லும் மதங்களே உலகப் பட்டம் பெற இத்தனைச் சிக்கல்!

அப்புறம், தத்துவங்கள் எப்படி உலகளாவி நிற்க முடியும்? பெரியார் எப்படி ‘உலகத் தலைவர்’ ஆக முடியும்?

ஆக முடியாது என்கிறீர்களா? ஆக்க முடியும் என்று சாதித்துக் காட்டியுள்ளார் ‘தமிழர் தலைவர்(!?)’ ‘ஆசிரியர்’ டாக்டர் கி. வீரமணி அவர்கள்!

எப்படி என்கிறீர்களா?

‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு பாகம் 2’ என்ற நூலை எழுதித்தான்!

அது என்ன பாகம் - 2 என்கிறீர்களா?

1939 ஆம் ஆண்டு வரையிலான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சாமி சிதம்பரனார் எழுதிய நூல் ‘தமிழர் தலைவர்’. (சாமி. சிதம்பரனார் தமிழ்ப் புலவர்; தமிழ் அறிஞர். எனவே தான் இந்த ‘தமிழர் தலைவர்’ என்ற தலைப்பு - ஒரு வேளை குத்தூசி குருசாமியோ, அழகிரி சாமியோ, பேராசிரியர் ந. இராமநாதனோ எழுதியிருந்தால் சமூகப் போராளி - சமத்துவப் போராளி - புரட்சியாளர் - சிந்தனையாளர் - என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்று இருந்திருக்க வாய்ப்புண்டு.)

அதன் தொடர்ச்சியான நூலின் தலைப்புதான் ‘உலகத் தலைவர் பெரியார் - பாகம் 2’...

அதெப்படி?

ஒன்று, ‘தமிழர் தலைவர் பாகம் 2’ ஆக இருந்திருக்க வேண்டும். அல்லது ‘உலகத் தலைவர் பாகம் 1’ ஆக இருந்திருக்க வேண்டும். அல்லது பொருத்தமான காரணம் வேறெதாவது இருக்க வேண்டும்! காரணம்?

இருக்கிறது!

இரண்டாம் பாகத்தை எழுதியவரும், தமிழர் தலைவர்; நூலின் தலைப்பும் தமிழர் தலைவர் என்றிருந்தால் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான் பெரியாருக்கு உலகத் தலைவராக பதவி உயர்வைப் பெற்றுத் தந்துள்ளது!

இந்தப் பதவி உயர்வுக்கான காரணங்கள் (சப்பை கட்டுகள் என்று சொல்லலாம்) நூலின் முன்னுரையிலேயே காணக் கிடக்கின்றன.

1) அய்.நா. பண்பாட்டு மன்றம் (யுனெஸ்கோ) கொடுத்த விருது. (மன்னிக்க வேண்டும்! முன்னுரையில் உள்ள முதல்வர் கலைஞரால் வழங்கப்பட்ட என்ற சொல்லை நாமும் சேர்த்தே சொல்லிவிடுகிறோம்! வீணாக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்திய குற்றம் நம் மீது விழாமல் இருக்கட்டும்)

2) சிகாகோவிலும், லண்டனிலும் பெரியார் பன்னாட்டு மையம் தொடங்கியுள்ளமை.

3) சிங்கப்பூர், மலேசிய நாட்டு அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள எழுத்துச் சீர்திருத்தம் - சுயமரியாதைத் திருமணம்.

4) மண்டைச் சுரப்பை ‘உலகு’ தொழும் - என்ற பாரதிதாசனின் வரிகள்.

கொஞ்சம் - கொஞ்சமோ கொஞ்சம் - அறிவைப் பயன்படுத்தி இதை அலசுவோமே!
எதையும் உன் சொந்த அறிவால் ஆராயாமல் ஏற்காதே என்று சொன்ன பெரியார் குறித்த செய்திகள் அல்லவா இவை? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!

1) விருது வழங்கிய அய்.நா.வின் உலகப் பண்பாட்டு மையம் அளித்த விளக்கக் குறிப்பு (Citation) - ‘தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்றுதான் கூறுகிறது - ‘உலகின் சாக்ரடீஸ்’ என்று அல்ல! ஒரு இயக்கத்துக்கு உலக நாடுகளில் கிளைகள் இருப்பதாலேயே உலகத் தலைவர் என்று கூறிட முடியுமா?

2) சிகாகோ, லண்டன் ஆகிய இரண்டு ஊர்களில் சில உறுப்பினர்களைக் கொண்ட கிளைகளுக்காக உலகத் தலைவர் பட்டம் எனில் - சாயிபாபா, ரஜ்னீஷ், பால யோகி, அமிர்தானந்தமாயி, ஆர்.எஸ்.எஸ். ஹெக்டேவர் - ஏன், நம்ம “இரட்டை ஆயுள்” பிரேமானந்தா எல்லோருக்குமே உலகப் பெருந்தலைவர் ஆவதற்கு கூடுதல் வாய்ப்புகள் உண்டே!

3) மலேசிய, சிங்கப்பூர் நாட்டு அரசுகள் ஏற்றுக் கொண்ட எழுத்துச் சீர்திருத்தம் தமிழுக்கு மட்டும் தானே! உலக மொழிகள் அனைத்துக்கும் அல்லவே!

சுயமரியாதைத் திருமணத்தைப் பதிவு செய்ய - அரசின் பதிவு அலுவலகங்களைத் தவிர - மாதாகோவில், மசூதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் போல - அங்குள்ள மலேசிய திராவிடர் கழக கிளைகளுக்கு வழங்கியுள்ள அங்கீகாரம் தானே!

4) மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற பாடல் வரி மட்டுமே உலகத் தலைவருக்குப் போதும் எனில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற திரைப்படத் தலைப்பு, எம்.ஜி. ஆரை உலகத் தலைவர் பட்டத்துக்கு தகுதிபடுத்துமே!

ஒரு காலத்தில், சின்ன அண்ணாமலை நடிகர் சிவாஜி கணேசனுக்கு, அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் தொடங்கியதும் முசிறிப்புத்தன், - அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் தொடங்கினார்.

அதுகூட தனது தலைவரை உயர்த்திக் காட்டும் நோக்கத்தோடு தான்! தனக்கு அந்த பட்டத்தின் மேல் உள்ள ஆசையால் அல்ல! ஆனால், இங்கோ ‘தமிழர் தலைவர்’ பட்டத்தைப் போட்டியில்லாமல் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே பெரியார் உலகத்தலைவர் ஆக்கப்பட்டிருக்கிறார். பெரியாரை ‘உலகத் தலைவராக்க’ நூல் ஆசிரியர் கி. வீரமணி முன் வைக்கும் வாதங்கள் - அப்படியே அவருக்கும் பொருந்திவிடும்!

‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் படிக்கப்படுவதாலும், தோழர் வீரமணி அவர்களின் படம் மற்றும் ‘விடுதலை’யில் வெளிவரும் அவரது உரைகள் இணைய தளத்தில் வருவதால் உலகம் முழுவதும் பார்க்கப்படுவதாலும் -

அடிக்கடி, வீரமணி உலக நாடுகள் சிலவற்றுக்கு பயணம் செய்வதாலும், ‘தமிழர்தலைவர்’ டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு வருங்காலத்தில் ‘உலகத் தலைவர்’ பட்டம் வழங்கவும், வாய்ப்புகள் உண்டு. தற்போதைய நிலவரப்படி ‘உலகத் தலைவர்’ பெரியார். அப்போது ‘பேரண்டத் தலைவர்’, பிரபஞ்சத் தலைவர்’ என பதவி உயர்வு பெற ஒளிமயமான வாய்ப்புகள் உள்ளமை நமது ஊனக் கண்களுக்கு இப்போதே தென்படுகிறது!

அய்யோ! கொடுமையே! தலைப்புக்கே இவ்வளவு நீண்ட அறுப்பா எனும் அலுப்பா? நூலைப் பற்றி ஏதேனும் சொல்லித் தொலைங்களேன் என்ற தவிப்பா? விட்டுத் தள்ளுங்கள்! நூலையும் கொஞ்சம் பார்த்து விடலாம்!

இடையில் ஓர் அன்பான வேண்டுகோள்! (தடங்கலுக்கு வருந்துகிறோம்) ஏற்கனவே படித்திருந்தாலும் சரி, இன்னொரு முறை சாமி சிதம்பரனாரின் ‘தமிழர் தலைவர்’ என்ற 1939 வரையிலான பெரியாரின் வரலாற்று நூலை - வரிவரியாக இல்லாவிட்டாலும் - ஒரு திருப்பு திருப்பிவிட்டு, மேற் கொண்டு இந்த கட்டுரையைத் தொடர்வீர்களாக!

வீரமணி அவர்களின் நூலைப் பற்றி எழுதுவதென்றால் - அவர் எழுதியுள்ள முன்னுரையில் இருந்து தொடங்குவோமே!

‘இப்படிப்பட்ட மனித குல மாமேதையின் முழு வாழ்க்கை வரலாறு முழுமையாக, அகிகாரபூர்வமாக தரப்படவில்லையே என்ற பலரது ஏக்கம் நியாயமானது; குற்றச்சாட்டுகள் எங்களால் ஏற்கத்தக்கன என்பதை உணர்ந்தே’ (முன்னுரை பக்.5)

சாமி சிதம்பரனாரின் ‘தமிழர் தலைவர்’ என்ற பெரியாரின் 1939 வரையிலான 60 ஆண்டுகளுக்கான வரலாறு - 1939லேயே வெளியிடப்பட்டு விட்டது. அதற்குப் பிறகு - 68 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பெரியார் மறைந்து கூட 34 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதுதான் அந்த மனித குல மாமேதையின் முழு வாழ்க்கை வரலாறு - அதுவும் முழுமையாக அல்ல 1940-1949 என்ற 10 ஆண்டு வரலாற்றை மட்டும் - அதிகாரபூர்வமாக - ஆம்! ஆம்! அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். (அதிகாரபூர்வ யோக்யதைகளை பிற்பகுதியில் ஆய்வோம்).

பெரியாரின் முழுமையான வரலாறு உருவாகவில்லையே என்ற பலரது ஏக்கத்தின் நியாயத்தையும், கவலையையும் உணர - டாக்டர் வீரமணிக்கு இத்தனை ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது!

இவ்வளவு காலம் கழித்து - இந்தப் பணியைத் தொடங்கியதும்கூட - அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இதை வீரமணியே தனது முன்னுரையில் சுட்டிக்காட்டுகிறார்.

‘பல்வேறு பணிச்சுமை அழுத்தங்களுக்கிடையே இந்த பாரத்தையும் சுமக்கத் துணிந்தோம்’ (அச்சச்சோ! பாவம்! பாவம்!) என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் படித்தவுடன் பெரியார் திடலில் அடிக்கடி நடக்கும் கிறித்துவ நற்செய்தி, எழுப்புதல், அற்புத சுகமளிக்கும் வெளிப்பாட்டு, பிரார்த்தனை அல்லோலோயா கூட்டங்களில் கேட்ட “கஷ்டப்பட்டு பாரம் சுமப்பவர்களே!” என்ற வரிகள் வேறு நம் நினைவுக்கு வந்து தொந்தரவு செய்கின்றன.!

ஆனால், ‘உலகத் தலைவர் பெரியார் பாகம் - 2’ அய்ப் படித்தவுடன் ‘தமிழர் தலைவர்’ இவ்வளவு கஷ்டப்பட்டு பாரம் சுமந்திருக்க வேண்டியதில்லை என்றே நமக்குப்பட்டது.

ஏனெனில், ‘விடுதலை’ நாளேட்டில் வெளியான பெரியார் குறித்த செய்திகளை நாள் வரிசைப்படி தொகுத்து, ‘பெரியார் வாழ்க்கை வரலாறு’ என்ற பெயரால் அந்த தலைப்பில் “பாரமான பெரும்பணியை” ஏற்கனவே கவிஞர் கருணானந்தம் அவர்கள் செய்து முடித்து விட்டார்கள். நாள் வரிசைப்படி - நிகழ்ச்சிகளைத் தொகுப்பதா வரலாறு?

இதற்காகவா நீண்ட நெடிய 68 ஆண்டுகள் காத்துக் கிடந்தோம்!

ஒரு வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ளத்தான் சாமி சிதம்பரனாரின் ‘தமிழர் தலைவர்’ வரலாற்று நூலை மீண்டும் ஒருமுறை புரட்டச் சொன்னோம்! ஒப்பிட்டுப் பார்க்க ஓரளவாவது பயன்படுமே என்று! ‘உலகத் தலைவர்’ வரலாற்றில் பெரியாரின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் - வரலாறுகளாக்கப்பட்ட ‘அதிசயம்’ - நடந்து முடிந்திருக்கிறது. அதைகூட விடுவோம்.

வாழ்க்கை வரலாற்று நூல்களில் சிறந்த நூலாக, ஆங்கில இலக்கிய மேதை டாக்டர் ஜான்சனைப்பற்றி - அவரது மாணவர் பாஸ்வெல் எழுதியதைச் சொல்வார்கள். தனது ஆசானைப் பற்றிய வரலாற்றில் தனது பெயரைச் செருகிக் கொள்ள பாஸ்வெல் முயலவில்லை; விரும்பவில்லை.

அம்பேத்கர் மற்றும் வீரசவர்க்கர் வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் கூட நூல் முழுவதும் பரவலாக அம்பேத்கர் வீரசாவர்க்கரைப் பற்றி விடாமல் எழுதினாரே தவிர சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவுவதைப் போல தன்னைப் பற்றிய செய்திகளை இணைக்க முயற்சிக்கவில்லை.

ஆனால், இந்த நூலின் முடிவுக் கட்டமான 1949-ல் 16 வயதை மட்டுமே எட்டியிருக்கக் கூடிய ‘தமிழர் தலைவர்’ பற்றிய குறிப்புகள் சுமார் 20 இடங்களில் தென்படுகின்றன.

அதுவும்...

29.7.1944 அன்று கடலூர் மஞ்சக் குப்பத்தில் பேசிவிட்டு கடிலம் ஆற்றுப் பாலத்தின் மீது ரிக்ஷாவில் சென்றுக் கொண்டிருந்த பெரியார் மீது பாம்பும், செருப்பும் வீசப்பட்ட போதும்...

22.7.1945 அன்று புதுச்சேரி நிகழ்ச்சியொன்று முடிந்து திரும்பிக் கொண்டிருந்த கலைஞரை குற்றுயிரும், கொலையுயிருமாக அடித்து வீசியதாகக் கூறப்படும் நிகழ்ச்சியின் போதும் தானும் (டாக்டர் வீரமணி) உடனிருந்ததாக புதிய வரலாற்றுக் குறிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

(ஓ! ‘தமிழர் தலைவர்’ புதிய வரலாறு படைப்பதாக தி.க. மேடைகளில் இதை மனதில் வைத்துக் கொண்டு தான் பேசப்படுகிறதா? சரி... சரி...!)

இவை மட்டுமே கவிஞர் கருணானந்தத்தின் வரலாற்று நூலுக்கு மேலாக கொடுக்கப்பட்டிருக்கிற கூடுதல் செய்திகள்! இதைத் தவிர நூலில் வேறு புதிய செய்திகள் உண்டு என்றால், அவை நூலாசிரியர் எழுதியவை அல்ல. முதல் இரண்டு அத்தியாயங்கள் பெரியாரே எழுதியவை! கடைசி அத்தியாயம் பெரியார் - மணியம்மை திருமணம் என்ற நூலில் உள்ளவை!

அவை போக புதிதாக உள்ளவை பெரியார் பேசிய பேச்சுகளும், பெரியார் எழுதிய தலையங்கங்களும், அறிக்கைகளும் தான். ‘விடுதலை’யில் வெளிவந்ததை அப்படியே எடுத்துப் போட்டவைதான். பல்வேறு அழுத்தங்களுக்கிடையே பாரம் சுமந்த கதை இது தான்!

15.11.1946 அன்று சேலம் கல்லூரி தத்துவக் கலைக் கழகத்தின் சார்பில் பெரியார் உரை நிகழ்த்தினார் என்று இந்த நூலில் குறிப்பு வருகிறது. ‘பாரம் சுமந்து’ வந்த இந்த வரலாறு - பெரியாரின் வரலாறுகளை - எப்படி தோண்டித் தோண்டி அகழ்ந்து - அள்ளி வீசியிருக்கிறது என்பதற்கு, சில உதாரணங்களைப் பார்ப்போமா!

“15.11.1946 அன்று சேலம் கல்லூரி தத்துவக் கலைக் கழகத்தின் சார்பில் பெரியார் உரை நிகழ்த்தி னார். விழாவுக்கு பிரின்சி பால் அ. இராமசாமி கவுண்டர் எம்.ஏ., எல்.டி., தலைமை தாங்கினார். இவர் நெற்றியில் ஒரு கோடாக நாமம் அணிந்திருப்பார். ஆயினும், தலை சிறந்த இன உணர்வாளராகத் திகழ்ந்தார்” - இப்படி, சேலம் தத்துவக் கல்லூரியில் பெரியார் உரையாற்றினார் என்பதோடு - ‘பாரம் சுமந்து’ எழுதப்பட்ட ‘வரலாறு’ முடிந்து விடுகிறது. ஆனால், இந்த உரை தான் ‘தத்துவ விளக்கம்’ என்ற பெயரில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டு இன்றளவும் பல மறுபதிப்புகளைக் கண்ட சொற்பொழிவு என்பது கூட குறிப்பிடப்படவில்லை.

தலைமை தாங்கிய பிரின்சிபால் இராமசாமி கவுண்டர் ஒற்றை நாமம் போட்டிருந்த இனஉணர்வாளர் என்பதோடு, அவரைப் பற்றிய வரலாறு நூலில் முடிந்துவிட்டது. ஆனால், இதைவிட பெருமைப்படக் கூடிய நிகழ்வுகளும் உண்டு. அவர் ஓர் இன உணர்வாளர் என்பதற்கு மேலாக - 1943 இல் சேலத்தில் கம்பராமாயணம், பெரிய புராணங்களை எரிப்பது, சரியா தவறா என்று அண்ணாவும், நாவலர் சோமசுந்தரபாரதியும், நேருக்கு நேர் வாதாடும் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றவர்.

இந்த விவாதம் தான் பிறகு ‘தீ பரவட்டும்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. அப்போது - தனது தலைமை உரையில் - கம்பராமாயணம், பெரிய புராணத்தையும் எரிப்பது - ஆரியக் கலைகளைக் கண்டிக்கும் ஒரு போராட்ட முறைதான் என்று பேசினார்.

அன்னிய துணிகளை எரிப்பதுபோல், அன்னியப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பது போன்ற போராட்டமே இது என்று, நியாயப்படுத்தினார். ஆரிய மொழி இந்தி வந்தால், தமிழ்மொழி கெடும் என்று போராடிய நாவலர் சோமசுந்தர பாரதியார். ஆரியக் கலைப் பரப்பும் இராமாயணத்தால் - தமிழர் கலை சீரழிவதை எதிர்த்துப் போராடாமல், இராமாயணத்தை ஆதரிக்கலாமா என்று நேருக்கு நேர் கேட்டார்.

பெரியார் கம்பராமாயணத்தைப் படிக்காததால்தான் அதில் ஆபாசம் இருக்கிறது என்கிறார், என்று சோமசுந்தர பாரதியார் பேசியபோது - “நான் கம்பராமாயணத்தைப் படித்தவன்; நான் கூறுகிறேன்; அதிலே பல ஆபாசங்கள் உள்ளன” என்று சோமசுந்தரபாரதியாரின் வாதத்துக்கு தனது தலைமையுரையில் பதிலடி தந்தவர்.

• 16.1.1946 இல்சின்னாளப்பட்டியில் நடந்த, பெரியார் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் கல் வீச்சு, கலவரங்கள் நடத்ததை நூல் குறிப்பிடுகிறது. ஆனால், அந்தக் கல் வீச்சில் அடிபட்ட இடது கை, இறுதிவரை சிறு ஊனத்துடனே இருந்தது என்று, பெரியாரே பல நேரங்களில் வெளிப்படுத்தியக் கருத்து, பதிவு செய்யப்பட வில்லையே!

• 15.9.1946 இல் திருப்பத்தூரில் ஈ.வெ.கி. சம்பத் - சுலோச்சனா திருமணத்தில் பேசிய பெரியார் பெண்கள் அலங்கார பொம்மைகளாக நகை மாட்டும் °டாண்டுகளாக இருக்கக்கூடாது என்று குறிப் பிட்டார். ‘திராவிட நாடு’ ஏட்டில் இதை வெளியிட்ட அண்ணா, பெரியாரைக் கேலி செய்யும் வகையில் (பெரியார் நகையைக் கண்டித்துப்பேசிய போது) “மணமகள் சுலோச்சனா, பெரியார் அணிந்திருந்த பச்சைக் கல் மோதிரத்தைப் பார்த்து நகைத்தார்” என்று எழுதினார். இதைச் சுட்டிக் காட்டுகிறார் டாக்டர் - தமிழர் தலைவர் வீரமணி.

• 17.9.1946 இல் ராபின்சன் பூங்காவில் நடந்த தி.மு.க. தொடக்க விழா கூட்டத்தில், “இதயபூர்வமான தலைவர் - இதயத்திலே குடியேறிய தலைவர் - நமக்கெல்லாம் அப்போது நல்வழி காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவியை, நாற்காலியைக் காலியாகவே வைத்திருக்கிறோம்.

அந்த பீடத்திலே, நாற்காலியிலே வேறு ஆள்களை அமர்த்தவோ அல்லது நாங்களோ அல்லது நானோ அமரவோ விரும்பவில்லை” என்ற அண்ணா உறுதியளித்துப் பேசியதற்கு (நூலில் - பக்.376) மாறாக கலைஞர் கருணாநிதி பெரியார் உயிரோடிருந்த காலத்திலேயே தலைவர் நாற்காலியில் உட்கார்ந்ததை - அப்போது பலமுறை ‘விடுதலை’ ஏட்டில் மாய்ந்து மாய்ந்து எழுதியவர். இப்போது மட்டும் ஏன் சுட்டிக் காட்டவில்லை. வீரமணியே தலைவர் நாற்காலியில் உட்கார்ந்து விட்டார் என்பதாலா?

இந்த லட்சணத்தில் நூலின் முன்னுரையில் சில புதிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன!

‘இதன் தொடர்ச்சியாக மூன்றாம் பகுதி 1950 முதல் 1963 வரையும், நான்காம் பகுதி 1963 முதல் 1973 வரையும் ஆதாரங்களை முறைப்படி திரட்டி, வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்’ என்கிறார் நூலாசிரியர்.

“மலையேறும் மலைப்பான மகத்தான பணிதான் என்றாலும் (ம.. ம... ம... நல்ல அடுக்குமொழி... பொருள்தான் குழப்பம்) வாசக நேயர்களின் உற்சாகமும், ஊக்கமும், அன்பும் நிச்சயம் நமக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பது உறுதி” என்று நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர்.

ஆனால், இவர்கள் இந்த வெளியீட்டில் காட்டிய உற்சாகம், ஊக்கம், அன்பு என்ன? என்பது நூல் வெளியீடு குறித்து ‘விடுதலை’யில் வந்த செய்திகளே நமக்குப் புரிய வைக்கின்றன!

தமிழர் தலைவருக்கு வேன் வழங்கும் விழா பற்றி வண்ணப் படங்கள், பக்கம், பக்கமாக செய்திகள், கட்டுரைகள் எல்லாம் வெளியிட்ட ‘விடுதலை’ ஏடு அதே நிகழ்வில் நடந்த இந்த ‘வரலாற்று நூல்’ வெளியீட்டு செய்தியை மட்டும் முக்கியத்துவம் தராமல் விட்டுவிட்டது, ஏன்? ‘பெரியார் வரலாறு’ வெளியிடப்படுவதைவிட தனக்கு வேன் வழங்கிப் பாராட்டப்பட்டதுதான் அவர்களுக்கு முக்கியமானதாகி விட்டது! இப்படி புதிய வரலாறு படைக்கும் ‘புரட்டுகள்’ பற்றி - அடுத்த வாரம் தொடர்வோம்!