ஆரியர் பழக்க வழக்கமும் அவர்களது மதம், கடவுள் ஆகியவைகளும் அவை பற்றிய யோக்கியத் தன்மை, சக்தி, நடப்பு முதலியவைகளும் தமிழர்களாகிய நமக்குப் பெரிதும் பொருத்தமற்றவை என்பது நமது கருத்தாகும். இதை மறுத்து அவற்றுள் எதையாவது நமக்கு பொருத்தமுள்ள தென்றும், "அவை நம்முடையவையே ஒழிய ஆரியருடையதல்ல' வென்றும், நம் சைவப் பண்டிதர்களைப் போல் தமிழர் யாராவது ஆதாரத்தோடு வழக்காடுவார்களேயானால், அப்படி இருந்தாலும் அவை அந்தக் காலத்தில், அதுவும் ஒரு சமயம் அன்று இருந்த மக்களுக்குப் பொருத்தமாயிருந்தாலும் இருக்கலாமே ஒழிய, இந்தக் காலத்திற்கு அவை கண்டிப்பாய் ஒதுக்கித் தள்ள வேண்டியவைகளேயாகும் என்பதும் நமது அபிப்பிராயம்.

பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்க வழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால், அவர்களுக்குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை. நாளாவட்டத்தில் அவர்கள் இந்தக் கால தேசவர்த்தமானத்திற்கு தகுந்தபடி – எது மேன்மையாகக் கருதப்படுகிறதோ, அதைத் தங்கள் பழக்க வழக்கங்களாக மாற்றி அமைத்துக் கொண்டு வந்து, இன்றைய நிலைமைக்கு அவர்கள் வந்திருக்கக் கூடும் என்றாலும், வேத புராண இதிகாச காலங்களில் அவர்கள் மிருகப் பிராயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதே அவற்றிலிருந்து தெள்ளென விளங்குகின்றதாகும்.

நம் பண்டிதர்கள் பெரிதும் அவற்றைத் தங்கள் சமயத்திற்கும், தங்கள் கடவுள் நடப்புக்கும் பொருத்திக் கொண்டதால், அந்தக் கேவலமான சேதிகளை வெறுக்க யோக்கியமற்றவர்களாகி, மூடி வைத்து தொல்லை கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அதனாலேயே அவை நம்மாலும் வெறுக்கப்படாமல் உயர் சமயமாகப் போய்விட்டதெனலாம். ஆரியர்களின் முதல் ஆதாரம் வேதம் என்பதாகத்தான் தெரிகிறது. அந்த வேதம் பெரிதும் விபச்சாரம், மதுமாம்சம் அருந்துதல், தாங்கள் அல்லாதவர்களை (ஆரியரல்லாதவர்களை) இழிவாய்ப் பேசுவதும், அவர்களை அடியோடு அழிக்கவும், தங்களுக்கு ஏவலாளாகக் கொள்ளவும், பழிவாங்கும் தன்மைபோல் கொடுமை செய்வதும் ஆன காரியங்களையே கொள்கையாக வும், பிரார்த்தனையாகவும் கொண்டிருக்கின்றன.

இந்திர விழா சிலப்பதிகாரத்திலேயே கொண்டாடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஆரியர்கள் தவிர, தமிழர்களும் ஆதிகாலத்தில் இருந்தே இந்திர விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள் என்றும், ஆதிகாலத்திலிருந்தே தமிழர்கள் தன்மானமிழந்து ஆரியர்களுக்கு அடிமைப்பட்டு வந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. பழந்தமிழ் அரசர்கள் என்று சொல்லி உரிமை கொண்டாடப்படுபவர்களான மூவேந்தர் (சேர சோழ பாண்டியர்) எவருமே உண்மைத் தமிழனாக இருந்ததாகச் சொல்லுவதற்கு ஆதாரமே காண முடியவில்லை.

இன்றயை அரசியல் உலகத்தில் ஒரு முத்துரங்க முதலியாரும், பண்டிதர்கள் உலகத்தில் ஒரு கதிரேசன் செட்டியாரும், "கலைவாணர்'கள் உலகத்தில் ஒரு சிதம்பரநாத முதலியாரும் ஆகிய பெரியோர்கள் இன்று எப்படித் தமிழர்களாக இருந்து வருகிறார்களோ, அப்படித்தான் பழங்கால தமிழரசர்கள் உலகத்திலும் – சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்களே ஒழிய, இன்று தமிழர்களின் உள்ளத்தில் உதித்தெழுந்த உணர்ச்சிப்படியான தமிழன் ஒருவனைக்கூட அக்காலத்தில் இருந்ததாகக் காண முடியவே இல்லை.

தமிழர்களுக்கு ஆரியர் வேதம், கடவுள், சமையாதாரம் ஆகியவைகள் தவிர்த்த தனித்தமிழக் கொள்கையோ, முறையோ ஏதும் இருந்ததாகச் சொல்ல – நம் ஆராய்ச்சியாளர்களுக்கு இடமில்லாமலே, நம் இன்றைய தமிழ்ப் பண்டிதர்களும், பழங்காலப் பண்டிதர்களும் இன்றைய அரசர்களும் பாந்தமிழ் அரசர்களும் செய்து விட்டார்கள்.

பெரிய புராணத்தையும், பக்த லீலாமிர்தத்தை யும், கந்தப் புராணத்தையும், கம்பராமாயணத்தை யும் கட்டிக் கொண்டு அழும் தமிழன் எவனாகட்டும், அவன் தனித் தமிழர் கொள்கை இதுவென எதையாவது காட்ட முடியுமா என்றும், இப்படிப்பட்ட தமிழன் யாராய் இருந்தாலும் அவன் பண்டார சன்னதியாயிருந்தாலும் அவன் நாஸ்திகனல்லாமல், அதுவும் முழு முழு நாஸ்திகனேயல்லாமல் கடுகளவு ஆஸ்திகனாகவாகிலும் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

அன்பே கடவுள், உண்மையே கடவுள், ஒழுக்கமே கடவுள், ஒப்பு நோக்கே (சமரசமே) கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தமிழ் ஆஸ்திகன் மேற்கண்ட பெரிய புராணõதிகளையும், அவற்றில் வரும் கடவுளர்களையும், அவர்களது செயற்கைகளையும் பாராட்டி வழிபடுகிறவனாக இருந்தால், அவன் எப்படி தமிழ் ஆஸ்திகனாவான்? என்று கேட்கிறோம்.

தமிழனென்று தன்னைச் சொல்லிக் கொள்ள வேண்டுமென்றும், தமிழனுக்கு என்று தனிக் கொள்கைகள் அடையாளங்கள் ஒன்றும் இருக்க வேண்டியதில்லை என்றும் கருதிக் கொண்டு, தமிழனில் பெரியவனாகத் தன்னைக் கருத வேண்டும் என்றிருப்பவர்கள் நம் மீது கோபித்துதான் தீருவார்கள். அதற்கு நாம் என்ன செய்யலாம். இவர் கோபத்தை விட, அதனால் ஏற்படும் கேட்டை விட, தமிழர்களின் மானம் பெரிது என்று எண்ணுவதால், இவர்கள் கோபத்தால் வந்தது வரட்டும் என்கின்ற துணிவு கொள்ள வேண்டி இருக்கிறது.

(குடி அரசு 13.11.1943)

Pin It