சகோதரர்களே! சகோதரிகளே!
நமது மாநாட்டின் நடவடிக்கைகள் எல்லாம் அநேகமாய் முடிவு பெற்று விட்டன. மகாநாடுகளின் வழக்கப்படி பார்த்தால் மகாநாட்டு தலைவர் என் கின்ற முறையில் எனது முடிவுரை என்பதாகச் சில வார்த்தைகளையாவது நான் சொல்லியாக வேண்டும்.
நீங்களும் அதைக் குறிப்பாய் எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை உணருகிறேன். மகாநாட்டு நடவடிக்கைகளில் ஆதி முதல் இதுவரை ஊக்கத்தோடும் உணர்ச்சியோடும் இடையறாக் கவனத்தோடும் கலந்திருந்த உங்களுக்கு இனி நான் அதிகமாய் ஒன்றையும் சொல்ல வேண்டியதில்லை யென்றே நினைக்கின்றேன்.
ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே சீர்திருத்தம் என்பதைப் பற்றிப் பேசப்பட்டு வருகிறதாய் அறியக்கிடக்கின்றது. எவ்விதச் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசப்பட்டு வந்ததோ அது ஒரு சிறிதும் காரியத்தில் வெற்றி பெறவில்லை.
சீர்திருத்தக்காரர்களும் தங்கள் சீர்திருத்தங்களைப் பற்றி வாயளவில் பேசிக்கொண்டு வந்திருக்கிறார்களேயொழிய காரியத்தில் கொண்டு வருவதில் வெற்றியடையவே இல்லை.
ஆனாலும் இப்போதும் அம்மாதிரியாகவேதான் வாய்ப்பேச்சிலும் வெறும் தீர்மானத்திலும் நடைபெறுகின்றதேயொழிய காரியத்தில் நடைபெறச் செய்யும் மார்க்கத்திற்குக் கொண்டு போய்விடும்படியான சீர்திருத்தம் செய்வதற்கு ஆள்களைக் காணோம்.
இந்த மாதிரியான வாய்ப்பேச்சு சீர்திருத்தத்திற்கும் எதிர்ப்புச் சீர்திருத்தங்கள் வெளிப்படையாயும் மறைமுகமாயும் சூழ்ச்சியாயும் நடந்துகொண்டே வந்திருக்கின்றன.
அவைகளில் ஒன்றுதான் அரசியல் இயக்கம் என்பதும். திரு. காந்தியின் வருணாசிரமப் பிரச்சாரம் என்பதும், மற்றும் வருணாசிரம தர்ம பரிபாலன மகாநாடு, பிராமண மகாநாடு, இந்து மகாநாடு, ஆரிய தர்ம பரிபாலன மகாநாடு, சைவ சித்தாந்த மகாநாடு, வைணவச் சித்தாந்த மகாநாடு, ஆத்தி கர்கள் மகாநாடு என்று சொல்லப்படுபவைகள் போன்றவை களும், இராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் முதலிய புராண இதிகாசக் காலட்சேபங்களும், வேத, சாத்திரப் புராணப் பாடசாலைகள் முதலியவைகளும், இவைகளுக்கு அடிக்கடி பாஷியங்கள் கிளப்புவது முதலியவைகளுமாகும்.
ஆதலால் வெறும் சீர்திருத்தங்கள் எப்பேர்ப்பட்ட வீரர் களால் செய்யப்படினும் அவைகளை மேற்கண்ட கரையான்கள் அடியோடு அழித்துக் கொண்டே வந்துவிடுமேயொழிய ஒரு சிறு பாகத்தையும் மீதியிருக்கவிடாது என்பதைத் தயவுசெய்து உணருங்கள்.
(அதிகப்படுத்தவுமே வேண்டும்)... ஆகையால் நீங்களெல்லோரும் இம்மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்களைத் தைரியமாக நடத்தையில் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். உண்மையான சீர்திருத்தத்தை நமது நாட்டிற்கு விரும்புபவர்கள், முதலில் சீர்திருத்தக் கொள்கைக்கு இடையூறாக இருக்கும் புல்லுருவிகளையும், கரையான்களையும் அழிக்கத் தைரியமாய் முற்படவேண் டும். பழக்கவழக்கம் என்கின்ற பிசாசுகளை முதலில் ஓட்டிவிட வேண்டும்.
பழக்கவழக்கங்களை விடவேண்டுமானால் மனிதன் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படிப் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது; அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது; கடவுளாலோ, மகாத் மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக் கூடாது.
ஏதாவது ஒரு விஷயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரசக்தி என்றோ நம்பிவிடக்கூடாது. எப்படிப்பட்ட விஷயமானாலும் நடுநிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும். அப்படி இருந் தால்தான் கண்மூடித்தனமான பழக்கவழக்கம் முதலியவை களை ஒழிக்க முடியும்.
அப்படிக்கில்லாமல், ‘எதையும் நம்பித்தானாக வேண்டும்’; ‘பெரியவர்கள் நடந்தபடிதான் நடக்க வேண்டும்’ என்று நினைப்போமானால், எதை நம்புவது? யார் சொன்னது சரி? யார் சொன்னது தப்பு? எந்த எந்தப் புத்தகம் கடவுள் சொன்னது? அதில் எதெது மத்தியில் நுழைக்கப்பட்டது? அவைகளில் அறிவாளிகளுக்கு எழுதியது எது? புத்தியில்லாத பாமர மக்களுக்கு எழுதியது எது? பெரியவர்கள் யார்? - இவை போன்ற விஷயங்களுக்குச் சமாதானம் எங்கே இருக்கிறது? நமது சீர்திருத்த வேலையின் ஜீவநாடி இந்த இடத்தில்தான் இருக்கிறது. இங்குதான் மனிதன் தைரியமாயும் உறுதி யாயும் இருக்க வேண்டும்.
தீவிர சீர்திருத்தங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி முழுவதையும் சரிப்படுத்திவிடலாம் என்று எண்ணுவதும் மிகுதியும் பைத்தியக்காரத்தனமாகும்.
ஏனெனில், நமது பிரச்சாரத்தைச் செய்வதற்கு நமக்குள்ள சந்தர்ப்பத்தைக் காட்டிலும் - நமது சீர் திருத்தத்திற்கு எதிரிகளான வைதிகர்கள், பண்டிதர்கள், சுயநலப் பார்ப்பனர்கள், அவர்களது கூலிகள் ஆகியவர்களுக்கே மிகுதியும் சந்தர்ப்பங்களும் சவுகரி யங்களும் அதிகமாய் இருக்கின்றன.
எப்படியெனில், கோயில்கள், புராணங்கள் சித்திரப்படங்கள் ஆகியவைகளும்; அவைகளின் உற்சவம், காலட்சேபம், பஜனை, சம்பிரதாயம் ஆகியவைகளும்; பள்ளிக்கூடப் படிப்பு, பாடப் புத்தகம் முதலியவைகளும் யாருடைய பிரயத்தனமும் இல்லாமல் மக்களுக்குள் சீர்திருத் தத்திற்கு விரோதமான விஷயத்தைப் புகுத்திவிடு கின்றன. இது தவிர, கோடிக்கணக்கான ரூபாய்கள் வருவாய் கொண்ட மக்களும் மடாதிபதிகளும் °தாப னங்களும் வெட்டி ஆள்களும் இருக்கின்றனர்.
அன்றியும், ஜனப்பிரதிநிதித்துவமான ஓட்டுகள் பெற்று அதன்மூலம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவர்களால் சட்டங்கள் செய்யப்பட்டு, முழு சீர்திருத்தங்களையும் செய்துவிடலாம் என்று எண்ணுவதும் அறியாமையே ஆகும். ஏனெனில், ஜனப்பிர திநிதித்துவமான ஓட்டுகள் என்பன பெரிதும் பாமர மக்களிடையே இருக்கின்றன.
பிரதிநிதிகளாக வருபவர்களும் பெரிதும் சீர்திருத்த விரோதிகளுக்குப் பயந்தவர்களாகவும், சரியான சீர்திருத்த அறிவு இல்லாதவர்களாகவுமே இருக்கிறார்கள்.
சர்க்காரும் நம்முடைய கேவல நிலையினால் வாழ வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அதனால், உண்மையானதும் முடிவானதுமான சீர்திருத்தம் ஒரு நாட்டிற்கு வரவேண்டுமானால், ஏகச் சக்ராதிபத்தியத் தன்மை கொண்ட ஒரு வீரனின் ஆட்சியில்தான் முடியும்.
அதாவது, ‘இந்தப் பொதுக் கோயிலுக்குள் செல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு’ என்று விளம்பரம் செய்ய வேண்டும். யாராவது ஆட்சேபித்தால் அவர் களைச் சிறையிலிட வேண்டும். இதைப் பொது ஜனங் கள் கூட்டம் போட்டுக் கண்டிக்க ஆரம்பித்தார்களானால் உடனே இடித்தெறிந்து விடவேண்டும்.
சாதி வித்தியாசமோ உயர்வு தாழ்வோ கற்பிக் கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும்; மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். உயர்வு-தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொது ஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளைத் தீவாந் தரத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.
சாமிகளுக்கு உள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற் றையும் பறிமுதல் செய்து, அவைகளை விற்றுப் படிப் பில்லாதவர்களுக்குப் படிப்பும், தொழில் இல்லாதவர் களுக்குத் தொழிலும் ஜீவனமும் ஏற்படுத்த உபயோ கப்படுத்திவிட வேண்டும்.
இதுபோன்ற காரியங்கள் செய்யத்தக்க உரம் கொண்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டுவர வேண் டும். அப்பேர்ப்பட்ட வீரர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடு கள்தான் இன்று சுயமரியாதையும் சீர்திருத்தமும் பொலிந்து விளங்குகின்றன.
அப்பேர்ப்பட்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டு வர வேண்டுமானால், அநேக சீர்திருத்தக்காரர்கள் உயிர்துறக்கத் தயாராயிருந்து கொண்டு பாமர மக் களிடையில் உண்மையைப் பரப்ப முன்வர வேண்டும்.
நம் நாட்டுப் பார்ப்பனர்கள் நம் சீர்திருத்தங்களை எதிர்க்க வெளியில் வருவதில்லை. ஒரு விதத்தில் ஒளிந்து கொண்டார்கள். ஆனாலும், நம்மவர்களிடையே சில கூலிகளையும் ஏமாந்த சோணகிரிகளையும் பிடித்து அவர்களை நம்மீது ஏவிவிட்டுத் தடை வேலை செய்யச் செய்துவிட்டு, தங்களுக்குள் ஒற்றுமையும் கட்டுப்பாடும் செய்துகொள்ள வருணாசிரம தர்ம மகாநாடு, ஆரிய தர்ம பரிபாலன மகாநாடு, பிராமணர்கள் மகாசபை, சனாதன தர்மிகள் மகாநாடு, வேதவித்துக்கள் மகாநாடு, புரோகிதர்கள் மகாநாடு, பண்டிதர்கள், சாஸ்திரிகள், கனபாடிகள் சம்மேளனம் ஆகிய பல மகாநாடுகள் திருட்டுத்தனமாகவும் சூழ்ச்சியாகவும் கூட்டி, அவற்றில் பல இரகசியத் தீர்மானங்கள் செய்து, இரகசிய சமாச்சாரப் போக்குவரத்து மூலம் தெரிவித்துக் கொண்டு கட்டுப்பாடாய் வேலை செய்து வருகிறார்கள்.
இவ்வளவும் செய்துவிட்டு, சீர்திருத்த இயக்கத்திற்கு, ‘நாத்திக இயக்கம்’ என்ற பெயரைக் கொடுத்து, அதற்குப் பல தப்பர்த்தங்களையும் பழிப்புக்களையும் கற்பித்து வருகிறார் கள். இதைச் சில பார்ப்பனரல்லாதவர்களும் நம்பிக்கொண்டு அர்த்தமில்லாமல் குற்றம் சொல்கின்றார்கள். ஆனாலும், சீர்திருத்தக்காரர்கள் என்பவர்கள் நாத்திக மதம் என்கின்ற பூச்சாண்டிக்குப் பயப்படக்கூடாது. அது ஒரு அர்த்தமற்ற வார்த்தை.
அதன் உண்மை அர்த்தமும் உண்மைப் பிரயோகமும் என்னவென்றால், ‘பார்ப்பனியத்தில் அதாவது பார்ப்பனர் களுடைய வேதம், சாத்திரம், இதிகாசம், புராணம் ஆகிய வைகளில் நம்பிக்கை இல்லாதவன்; பார்ப்பனர்களின் புரட்டுக் களைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துகின்றவன்’ என்பதாகும். இந்நிலையில், நாம் எல்லோரும் நல்ல உறுதியான நாத்திகர்களே ஆவோம்.
ஆகையால், நாம் ஒவ்வொருவரும் தைரியமாய் நம்மை நாத்திகர் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும். சீர்திருத்தக்காரர்கள் தங்களுடைய பெயரின் இறுதியில் ‘நாத்திகன்’ என்ற பட்டத்தையே சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாத்திகப் பூச்சாண்டியைக் கொல்ல முடியும்.
நமக்கும் வேதத்துக்கும் என்ன சம்பந்தம்? அதை யார் உண்டாக்கினார்கள்? யாருக்காக உண்டாக்கப்பட்டது? என்ன பாஷையில் செய்யப்பட்டது? அதில் நமது நிலைமை என்ன? மேற்கண்ட விஷயங்களை யோசித்துப் பார்த்தால், அதை நம்பலாமா? நாம் ஒப்புக்கொள்ளலாமா? அது நமது மக்களிடையே பரப்பப்படுவதற்கோ இருப்பதற்கோ இடம் கொடுக்கலாமா? என்பன விளங்கும்.
கடைசியாக, சீர்திருத்தக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.
மதவெறியும் சமயவெறியும் பிடித்தவர்களும் - பொது வாகப் பார்ப்பனர்களும், சமத்துவம், சுதந்தரம், சுயமரியா தை, பகுத்தறிவு ஆகியவைகள் கொண்ட சீர்திருத்தத்திற்கு எப்போதுமே விரோதிகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒருவர், ‘எங்கள் மதத்தில் மேற்கண்ட சீர்திருத்தமுண்டு’ என்பார். ‘ஆனால் எங்களைப்போல் வேடம் போட்டுக் கொள்ள வேண்டும்; எங்கள் வேதத்தை நம்ப வேண்டும்; எங்கள் சாமியையும் தூதனையும் வணங்க வேண்டும்’ என்று சொல்லுவார்கள்.
மற்றொருவர், ‘எங்கள் சமயத்தில் சீர்திருத்தம் உண்டு. ஆனால், எங்களைப் போல் வேடம் போட்டுக் கொண்டு எங்கள் சாமிகளையும் புராணங்களையும் நம்ப வேண்டும்’ என்பார்கள். நம்பாவிட்டால் ‘நாத்திகர், அஞ்ஞானி, பாவிகள், சமயத் துவேஷி’ என்று சொல்லிவிடுவார்கள். இவர்கள் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், இவர்கள் உண்மைச் சீர்திருத்தத்திற்கு விரோதிகள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், பார்ப்பனர்களில் சிலர் சீர்திருத்தக்காரர்கள் என்று சுலபத்தில் பட்டம் பெற்றுப் ‘புரட்டு’ விடுவார்கள். அதாவது, கள்ளும் சாராயமும் குடித் தால் அதனாலேயே அவர் ஒரு சீர்திருத்தக்காரர் ஆகிவிடு வார். ஒருவர் ஆடு, மாடு, பன்றி சாப்பிட்டால் அதனாலேயே அவர் ஒரு சீர்திருத்தக்காரர் ஆகிவிடுவார். மற்றொருவர் வெட்டிச் சோறாக யார் வீட்டிலும் கிடைத்ததையெல்லாம் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டு திரிந்தால் அதனா லேயே அவர் ஒரு பெரிய சீர்திருத்தக்காரர் ஆகிவிடுவார்.
மற்றொருவர், ஒழுக்கமில்லாமல் யாரையும் எந்தப் பெண் ணையும் கலியாணமாகவோ வைப்பாட்டியாகவோ வேசியா கவோ அனுபவித்துக் கொண்டு திரிந்தால் அதனாலேயே அவர் ஒரு பெரிய சீர்திருத்தக்காரர் ஆகிவிடுவார். ஜனங் களும் முட்டாள்தனமாக அவர்களை வித்தியாசமற்றவ ரென்றும் சீர்திருத்தக்காரர்கள் என்றும் நம்பிவிடுவார்கள். ஆனால், அவர்களால் சீர்திருத்தத்திற்கு மாத்திர மன்னியில் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே பெரிய ஆபத்து என்பதை மறந்துவிடாதீர்கள்.
மற்றும், எந்த விஷயத்திலும் சாமியையும் மதத் தையும் குறுக்கே கொண்டு வந்து போட்டுவிடு கின்றார்கள். ஆகவே, உங்களுடைய முன்னேற்றத் திற்குத் தடையாக எந்த மதமாவது கடவுளாவது குறுக்கிட்டால் அவற்றைத் தைரியமாக எதிர்க்க வேண்டுமென்றே கேட்டுக் கொள்கின்றேன்.
இனி, பார்ப்பனர்கள் நம்மிடம் வித்தியாசம் காட்டுவது டன், பார்ப்பனரல்லாதாருக்குள்ளும் பற்பல சாதியார் ஒரு வருக்கொருவர் வித்தியாசம் பாராட்டுகின்றனர். மேல்சாதி யார்களை நீங்கள் உங்களுக்குச் சமமாக இருக்க வேண்டு மென்று விரும்புவீர்களானால், உங்களுக்குக் கீழேயுள்ள சாதியார்களுக்கும் நீங்கள் சமத்துவம் அளிக்க வேண்டும். நம்மிடமிருக்கும் கொடுமை, பார்ப்பனர்கள் காட்டும் கொடு மைகளைவிடச் சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால், நாம் பார்ப்பனர்களை ஏன் அதிகமாகச் சொல்லு கிறோமென்றால், அவர்கள் வைத்த தீ தான் நம்முடைய வீடுகளிலும் பிடித்துக் கொண்டது. நாம் மேல்சாதி என்பா ரோடு சண்டை செய்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையில் வெற்றி பெற்றால், கீழ்சாதியார்களெனச் சொல்லப்படுகிறவர்களுக்கும் அவர்களுக்குரிய பங்கை நாம் கொடுக்க வேண்டும்.
சர்வகட்சி மகாநாட்டுத் திட்டத்தில் எல்லா வகுப்பாருக்கும் சமத்துவம் கொடுக்க வேண்டுமென்ற விஷயமே காணப் படவில்லை. பார்ப்பனர்களுக்குப் பயந்தே எல்லோரும் அதில் கையெழுத்துப் போட்டுவிடுகிறார்கள். முதலில் எல்லா வகுப்பாருக்கும் சமத்துவம் கொடுப்பதைவிட வேறு என்ன சீர்திருத்தம் வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
பிச்சை எடுப்பதற்கு உபயோகமாயிருக்கும் வேதப்படிப் பிற்காக, கொள்ளை கொள்ளையாக இலாபம் சம்பாதிக்கும் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள், பார்ப்பனர்களுக்குச் சோறும் போட்டுப் படிக்கும்படிச் செய்கின்றார்கள்.
இம்மாதிரியான உதவி ஆதித் திராவிடப் பிள்ளைகளுக்கு அளிக்கப்படுமானால், அவர்களில் வயிற்றுப்பிழைப்பிற்கு வழியின்றிச் சிறுவயதிலேயே கூலிக்குச் செல்லும் எத்தனையோ பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று படித்து மந்திரி வேலைக்குத் தயாராக இருப்பார்களென்பதை நினைத்துப் பாருங்கள்.
இனி, சிலர் வேதங்களும் புராணங்களும் பழங்கதை என்று சொல்லிக் கொண்டு, பண்டிகை, திதி, திவசம், கிரகணம் ஆகியவைகள் வரும்போது, அவர்கள் அப் புத்தகங்களையே முதலில் திறந்து பார்ப்பார்கள். ஆனால், அவர்களைக் கேட் டால், ‘வழக்கத்திற்கு விரோதமாக நடக்கலாமா?’வென்று கூறுகிறார்கள். அவர்களை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பது?
கடைசியாக, சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விருத்தி செய்யவும், ஜீவன்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும் சுயமரியா தை உணர்ச்சியையும் அதிகப்படுத்தவுமே அமைய வேண்டும்.
ஆகையால் நீங்களெல்லோரும் இம் மகாநாட்டில் நிறை வேறிய தீர்மானங்களைத் தைரியமாக நடத்தையில் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
(26.11.1928இல் சென்னையில் தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தலைமை முடிவுரை; ‘குடிஅரசு’, 9.12.1928)