சென்னையில் மே மாதம் கடைசி வாரத்தில் நடக்கும் கார்பரேஷன் கூட்டத்தன்று, சென்னையில் வேலையற்று பசி பட்டினியால் வருந்தி வாடும் தொழிலாளர்களின் கூட்டம் ஒன்று திரண்டு சென்று சென்னைக் கார்பரேஷன் கட்டிட வாயிலில் முற்றுகையிடுமென்று இன்று ஓர் செய்தி கிடைத்திருக்கிறது. இது வாஸ்தவமானால் எந்த எண்ணத்துடன் இது ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதை வரவேற்கிறோம்.
இம்மாகாணத்தின் தலைநகரான சென்னையில் "உயர்தரப் படிப்பு" படித்தவர்கள் மட்டும் வேலையில்லாது 2400க்கு அதிகம் இருப்பதாகவும், இவையன்றி, தங்க இடமோ செய்ய வேலையோ இல்லாது, எச்சல் இலை சோற்றை தின்றுவிட்டு டிராம்வே லையன்களிலும், வால்டோக்ஸ் ரோட்டிலும், சாக்கடை ஓரங்களிலும் படுத்துறங்கி காலம் கழிப்போர் 8000க்கு அதிகம் இருப்பதாகவும், இவைகளன்றி மாமூல் தொழிலற்ற தோழர்களும் உண்டு. உணர்ந்தவர்களுக்கு இச்செய்தி ஆச்சர்யத்தைக் கொடுப்பதிற்கில்லை.ஆனால் இந்த வேலையற்ற தொழிலாளிகளைத் திரட்ட முயலுகிறவர்கள் பெயரைக் கேட்டே சிறிது கவலைப்படுகிறோம். தான் ஏழைகளின் தாதா! என்று பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு ஏமாந்தவர்களை உனக்கு விரோதமாக தூண்டிவிடுவேன் என்று முதலாளிமாரை பயமுருத்தி, இத்தொல்லையில் இருந்து தப்ப விரும்பும் முதலாளிகளிடம் பணம் பெற்று தங்கள் பெண்டு பிள்ளைகளுடன், சுகமாக வாழும் தலைவர்கள் சென்னையில் பலர் உண்டு. அவர்கள் சொன்னதை நம்பிச் சென்று உதையும் அடியும் பெற்று திரும்பிய, திரும்பும் தொழிலாளிகளும் பலருண்டு. இத்தகைய கூட்டங்களிலெதும் இக்கார்ப்பரேஷன் முற்றுகையில் தலையிடாது இருப்பார்களேயானால் இப்பட்டினிப்போர் சிறிது பலனை அடையக்கூடும்.
சென்னை கார்ப்பரேஷன் தோழர் சத்தியமூர்த்திக்கும், தோழர் வெங்கட்டறாம சாஸ்திரிக்கும் சொந்தமாக இருப்பது போல் அதன் சில நடவடிக்கைகளிலிருந்து உணர இடமிருக்கிறது. மீண்டும் பார்ப்பன ஆக்ஷியை கார்ப்பரேஷனில் நிலைக்கச் செய்யவும் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனராக ஓர் பார்ப்பனரைக் கொண்டு வரச் செய்யப்படும் முயற்சிகளுக்கு உதவியாக இக்கிளர்ச்சி இருக்காதென எண்ணுகிறோம்.
பம்பாய் கார்ப்பரேஷன் தலைவர் வேலையற்றோர் பிரச்சினையை தீர்க்க சிறிது உதவி செய்ய ஏற்பாடுகள் செய்வதை அறிவீர்கள். நமது சென்னை கார்ப்பரேஷன் தலைவரும், தனது கடமையைச் செய்ய தவறார் என்றே எண்ணுகிறோம்.
(புரட்சி துணைத் தலையங்கம் 29.04.1934)