அளவுக்கு மேற்பட்ட பிரசாரத்துக்குப் பின் அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி அங்கத்தினர்களும், அகில இந்திய சுயராஜ்யக் கட்சியின் தூண்களும் ராஞ்சியில் கூடினார்கள். காந்தியார், ஆச்சாரியார், சரோஜினியார் முதலிய பழைய பிரபல தலைவர்கள் அங்கு விஜயமானார்கள். அந்தரங்கமாகவும், பகிரங்கமாகவும், சம்பாஷணை மூலியமும், பல கூட்டங்கள் நடந்தது. கடைசியாய் சில தீர்மானங்கள் செய்ததாக எல்லா பத்திரிகைகளுக்கும் கிடைக்கும்படி செய்தி அனுப்பி இருக்கிறார்கள்.

இது வரையில், சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் போய் என்ன செய்யப் போகிறோம் என்பதை பற்றி பல பிரசங்கங்கள் செய்திருக்கிறார்கள். இவையாவும் ஒன்றுக்கொன்று மிகுந்த முரண்பட்டதாகவே இருந்து வந்தது. சீர்திருத்த அறிக்கையை கண்டிப்பது மட்டும் எங்கள் நோக்க மென்பவர்களும், முஸ்லீம்களுக்கு அதிக சலுகை காட்டப்பட்டதை மட்டும் கண்டித்தவர்களும் சட்ட சபையில் புகுந்து சர்க்காரை திக்கு முக்கலாடச் செய்வதே எங்கள் நோக்கமென்றவர்களும், காந்தி சொன்ன ஆலயப் பிரவேச தீர்மானத்துக்காகவே சட்டசபை போகிறோம் என்றவர்களும், சட்ட சபையில் வரும் ஆலயப்பிரவேச மசோதாவை தோற்கடிக்கவே நான் போகிறேன் என்ற மூர்த்தி போன்றோரும், இவ்விதம் பலவிதமான பிரசங்கம் செய்த தலைவர்கள் அங்கு கூடி தீர்மானங்களை தயாரித்து இருக்கிறார்கள்.periyar with baby 500இத்தீர்மானங்கள் 18ந் தேதி கூடவிருக்கும் காங்கிரஸ் கமிட்டி பாட்னா கூட்டத்துக்கு பின்பே உயிருடையதாகுமென்று தெரிவதால், நாம் அதிகம் அதைப்பற்றி பிரஸ்தாபிப்பது பயனற்றதாகவும் இருக்கலாம். இந்த ராஞ்சி கூட்ட தீர்மானங்களை நமது மாகாணப் பத்திரிகைகளில் ஜஸ்டிஸ் ஒன்று தவிர ஏனைய சகல பத்திரிகைகளும் அப்படியே ஆதரித்து எழுதி வருவதுதான் மிக விசேஷமானதாகும். ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார், இப்பத்திரிகைகள் தான் இப்படி எழுதுகிறதென்று எண்ணி விடுவதற்கில்லை. நமது அல்லாதார்கள் பத்திரிகைகள் இருக்கிறதே இவைகளும் இக்கூட்ட நடவடிக்கைகளைப் பற்றி தங்களின் உண்மை நிலையை வெளியிடாதது பெருந்தவறாகும். இவைகள் எதற்காக பயப்படுகிறது என்பதையும், பயப்படவில்லையானால், ராஞ்சி திட்டமானது எந்த முறையில் நாணையமானது என்பதையும் ஏன் பகிரங்கமாக எழுதக்கூடாது. இவ்விதம் இவர்கள் நடந்தால் தமிழர்கள் கண் விழிக்கும் காலத்தில் தங்களின் இழி செய்கையைப் பார்த்து ஏளனமாக எண்ண மாட்டார்களா? என்பதையும் சிந்தித்து பார்த்த பின்பாவது, ஐயருக்கும், ஐயங்காருக்கும் பயப்படாது தங்கள் கடமையை செய்யுமென நம்புகிறோம்.

ராஞ்சியில் கூடிய கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானங்கள்:

1. அகில இந்திய சுயராஜ்யக் கட்சியை ஏற்படுத்த முடிவு செய்கிறது.

2. அக்கட்சி இந்திய சட்டசபைக்கு அபேக்ஷகர்களை நிறுத்த முயலுதல்.

3. இக்கட்சிக்கு ஓர் வேலைத் திட்டம். இதன் வேறு பெயர் அபேதவாத திட்டமென்பது.

4. சுயநிர்ணய சுதந்திரத்தை யொட்டி தேசத்தின் எதிர்கால அரசியலை நிர்ணயித்துக் கொள்வதற்காக, பிரதிநிதித்வ சபையை இனி கூட்டி வைக்க வேண்டுமென்பது.

5. அரசியல் திருத்த அறிக்கையை நிராகரிக்கிறது. (ஆனால் வகுப்பு பிரச்சினை முடிவில், பிரதிநிதித்வ முறையைப்பற்றி வெளியிடப்பட்டுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்வதைப் பற்றியோ, நிராகரிப்பதைப் பற்றியோ யோசிப்பதற்கு இது ஏற்ற சமயமல்லவென்று கருதுகிறது.)

நமது தேசீயத் தியாகிகள் இன்று பத்து வருடங்களாக இந்நாட்டின் ஏழை மக்களின் நன்மைக்காகச் செய்து வந்துள்ள முயற்சியின் பலனாய் என்ன நன்மைகள் ஏற்பட்டு இருக்கின்ற தென்பதையும், இதுவரையில் அவர்கள் பொதுஜனங்களை யேமாற்ற எத்தகைய ஜெகஜாலங்களையெல்லாம் செய்து வந்திருக்கிறார்கள் என்பதையும், இவர்கள் உழைப்பின் பயனாய் மக்களின் நித்திய வாழ்க்கையில்; புத்தி களிமண்ணானதுடன், புதிய சீர்திருத்தத்தினால் அதிக அரசாங்க செலவு இவைகளைத் தவிர வேறெந்த நன்மையையும் இதுவரையில் நாம் கண்டதில்லை. இந்த முறையிலேயே இன்று தங்கள் நலத்திற்காகவே பொதுஜனப் பெயரால் ஓர் நாடகம் நடிக்கிறார்களென்பதை நாம் சொல்லாமலிருப்பதற்கில்லை.

உதாரணமாக ராயல் கமிஷன் நியமித்து, அது இந்திய நாட்டில் விசாரணை செய்த பிறகுதான் சீர்திருத்தம் பார்லிமெண்டில் கொண்டுவர வேண்டுமென்றார்கள். சைமன் கமிஷன் நியமனமானதும், அதில் இந்தியரில்லை; ஆதலால் அதை பகிஷ்கரிக்க வேண்டுமென்றார்கள். அதே சமயத்தில் எல்லா இந்தியக் கூட்டத்தைக் கூட்டினார்கள். அதில் சுயராஜ்யத் திட்டமென்று நேரு திட்டத்தைத் தயாரித்தார்கள்.

இத் திட்டத்தை எல்லா முஸ்லிம்களும் ஆதி திராவிடர்களும் எதிர்த்தார்கள். சர்வ கட்சி மகாநாட்டைக் கூட்டி நேரு திட்டம் நிறைவேற்றப்படுமென்றார்கள். அதே சமயத்தில் இந் நாட்டுக்கு விஜயஞ் செய்த கமிஷனிடம் ஹிந்து மகாசபைப் பேராலும், சீர்திருத்தச் சங்கப் பேராலும், தனித்தனி தலைவர்கள் பேராலும், சைமன் கமிஷனிடம் நேரில் சொல்லாமல் புத்தகம் அடித்துத் தங்கள் கோரிக்கைகளை வெளியிட்டார்கள்.

இக் கமிஷன் அறிக்கையை இங்கிலாந்தில் யோசிக்கும்போது இந்தியப் பிரதிநிதிகளும் இருக்க வேண்டுமென்றார்கள். இதற்குள் இந் நாட்டில் இத் தேசீயத் தலைவர்களின் சமூகத்தாரால் பாதிக்கப்பட்டு நைந்து ஏமாந்திருந்த சமூகங்களான, முஸ்லீம்களும், ஆதிதிராவிடர்களும் தங்கள் குறைகளை கமிஷனிடம் சொல்லியதால், இவைகளுக்கு பரிகாரம் கிடைத்துவிடுமோ என்று இவர்கள் பயந்து உப்புக்காச்ச புறப்பட்டார்கள்.

இங்கிலாந்து வட்டமேஜை மகாநாடானது உண்மை பிரதி நிதித்துவமுள்ளதல்ல வென்றார்கள். டாக்டர் அன்சாரி ஒருவர்தான் முஸ்லீம்களின் உயிர் நாடி; அவர் இல்லாத வட்ட மேஜை மகாநாடு வட்ட மேஜை மகாநாடல்ல; நாலு மூலை மகாநாடு என்றார்கள். அகில இந்திய முஸ்லீம்களின் முயற்சிக்கு எதிரிடையாக டாக்டர் அன்சாரியை பிடித்து தேசீய முஸ்லீம்கள் கட்சி என்று கத்தினார்கள்.

பின் பிரதிநிதித்துவமற்றதென்ற வட்ட மேஜைக்கு காந்தியும், சரோஜினியும், மாளவியாவும், ராதாபாயும், ரெங்கசாமி ஐயங்காரும் சென்றார்கள்.

அங்கு இவர்களுக்கு சகல சௌகரியங்களும் செய்து கொடுத்தும் அன்சாரி வராததற்கு வருந்தினார்கள்.

முதன் மந்திரி மெக்டனால்டு "நீங்களெல்லோரும் ஒன்று கூடி ஓர் திட்டம் தயாரியுங்கள்; அதைப்பற்றி ஆலோசிப்போம்" என்றதற்கு, அது இவர்களால் முடியவில்லை. முஸ்லீம்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் விசேஷ சலுகை காட்டப்பட்டதைக் கண்டித்தார்கள். இங்கு வந்து எல்லா சட்டங்களையும் மீறு என்றார்கள். இறுதியில் புனா பட்டினியும், ஆதிதிராவிட ஏமாற்றமும் தான் மிஞ்சியது.

இந்த நிலைமையில் இதுவரையில் இவர்கள் சொல்லி வந்ததுக்கும், செய்து வந்தவைகளுக்கும், அல்லது தீர்மானித்ததுக்கும் நடந்து கொண்டவைகளுக்கும் ஏதாவது கடுகளவு சம்பந்தமோ, நாணையமோ, யோக்கியதையோ இருக்கிறதா? என்பதை சிந்திக்கக் கோருகிறோம்.

அடுத்தாற்போல் இன்று அபேதவாதத்திட்டமும் மீண்டுமொரு சர்வகட்சி மகாநாடும் என்கிறார்களே! இதிலாவது ஏதாவது உண்மையோ உருப்படியான நன்மையுடைய செய்கையோ இருக்கிறதா? என்பதையும் சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு இவைகளெல்லாம், இவர்கள் கண்மூடித்தனமாகச் செய்யவில்லை என்பதும், மனதில் கொண்ட சூழ்ச்சியின் பயனாகவே, அன்சாரியைப் பிடித்து, அபேதவாதத்திட்டம் தயாரித்து, அகில இந்திய சர்வகட்சி கூட்டம் போடப் போவதாகக் கூறுகிறார்கள் என்பது விளங்காமல் போகாது.

இன்று அன்சாரிக்கும் அபேதவாதத்துக்கும், அகில இந்திய கூட்டத்துக்கும் வந்த அவசியமென்ன? இதற்காகவா? இவ்வைந்து வருடமாக சட்ட மறுப்புகள், உப்புப் போர்கள், ஈச்சமரம் வெட்டுதல், பாங்கி மறியல், ஜவுளிக்கடைகள் மறியல் உண்ணாவிரதம் பல ஆயிரம்பேர் சிறைவாசம் என்பதை எல்லாம் யோஜித்தால், இக்கஷ்ட முழுவதையும் ஓர் கூட்டத்தார் தங்கள் நன்மைக்கு உபயோகப்படுத்திக்கொள்வதிலேயே கருத்துடையவர்களாக இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிய வரும்.

பாமர மக்களை ஏமாற்ற எந்தெந்த வார்த்தைகளையும், எந்தெந்த பேர்களையும், எப்படி உபயோகிக்க வேண்டுமென்பது நமது தேசீய தியாகிகளுக்கு தெரியாததல்ல.

மௌலானா மகமதிலிக்கும், ஷெளகதலிக்கும் கொடுத்த சிரப்பைவிட, காலம் சென்ற பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய் அவர்களுக்கு கொடுத்த சிறப்பைவிட, மதிப்பைவிட, விளம்பரத்தைவிட அதிகம் இன்று டாக்டர் அன்சாரிக்கு கொடுத்து விடவில்லை.

லெக்ஷக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டத்தில் அலி சகோதரர்களது சட்டைப் பைக்குள் என்றவர்கள் முஸ்லீம்கள் நன்மையையும், முஸ்லீம்களை ஏமாற்றும் வடநாட்டு ஹிந்து தலைவர்களின் புரட்டையும் அலி சகோதரர்கள் எடுத்துரைத்ததும் அவர்கள் தேசத்துரோகிகள் என்று தூற்றப்பட்டதையும் யாராவது மறந்துவிட முடியுமா?

சட்டசபையில் முட்டுக்கட்டை போடப்போகிறோம் என்று ஓட் பெற்றுக்கொண்டு இந்திய சட்டசபையில் சர்க்காருடன் ஒத்துழைப்பது அயோக்கியத்தனமானதல்லவா? சர்க்காருடன் முட்டுக்கட்டைபோட எண்ணமில்லையென்றால் கண்ணியமாக சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் இந்திய சட்டசபையில் இனி ஒத்துழைக்கவே போகிறோமென்று ஏன் சொல்லக்கூடாது? என்று லாலாஜீ கேட்டதும் தேசீயப் புலிகள் கண்ணுக்கு லாலாஜீ தேசத் துரோகியாய் மாறிவிடவில்லையா? இது வடநாட்டுப் பார்ப்பனத் தலைவர்கள் செய்கையென்றால், நமது மாகாணத்தில் "ஜஸ்டிஸ்" கட்சிக்காரர்களை எதிர்த்து தோற்கடிக்கிறவரையில் தோழர்கள் டாக்டர் வரதராஜுலுவும் திரு.வி. கல்யாணசுந்திரமும், நமது தலைவர் ஈ.வெ.ராமசாமியும் இம் மாகாண எல்லாப் பார்ப்பனர்களாலும் கொண்டாடப்பட்டதும், வண்டிகளில் வைத்து இழுக்கப்பட்டதும் இவர்கள் படத்தை எங்கு பார்த்தாலும் திறந்து வைத்து தென்னாட்டுத் திலகர், தமிழின் மணம், வைக்கம் வீரரென்றெல்லாம் புகழ்மாலை பாடிய நமது தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் இவர்கள் சட்டசபைத் தேர்தல் காலத்தில் இந்திய சட்ட சபைக்குத் தமிழ்நாட்டின் ஆறு ஸ்தானங்களுக்கும் ஆறு ஐயங்கார் பார்ப்பனர்களைத்தானா போடவேண்டுமென்று கேட்டதும் இம்மூவரும் தேசத் துரோகியாகவும், சர்க்கார்தாசர்களாகவும் மாறிவிட்டது யாருக்குத் தெரியாது?

இப்படிப்பட்ட மலைகளெல்லாமே தூளாகிக் கருவேப்பிலையாகி இந்நாட்டு அகில இந்தியப் பார்ப்பனர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வந்ததெனில், இவர்களையே தங்கள் வேலை முடிந்ததும் பார்ப்பனர்கள் காலை வாரியெறிந்து விட்டார்களென்றால் டாக்டர் அன்சாரி விளம்பரப் படுத்தப்படுவதில் ஆச்சர்யமொன்றுமில்லை.

இன்று இவர்களால் ஏமாற்றப்பட வேண்டுவது முஸ்லீம் சமூகமாகும். இதற்கு முன்னதாகவே விளம்பரமாகி இருக்கும் ஓர் முஸ்லீம் கனவானைப் பிடித்து தங்களின் திருவிளையாடல்களைத் தொடங்கி விட்டார்கள். அதுவும் சமூகத் தீர்ப்பைப் பற்றி ஒன்றும் சொல்லாமல், அரசியலறிக்கையை கண்டிப்பதில் மட்டும்தான் அன்சாரி ஒத்து வருகிறார். இவர்கள் எதிர்காலத்தில் கூட்டப்போகும் அகில இந்திய சர்வ கட்சி மகாநாடு இருக்கிறதே அக்காலத்தில் இவர்கள் திட்டத்தை நாம் பார்த்துக் கொள்ளலாம்.

அபேதவாதமா? இது மிக உற்சாகமுள்ள பதம் என்பதற்காகவே இதை பிடித்து போட்டார்கள். லாகூரில் கூடிய அ.இ.கா. தீர்மானித்த திட்டமே சுயராஜ்ய திட்டமென்றதுக்கு உள்பட்டே இன்று அபேதவாத சுயராஜ்ய கட்சி வேலைத்திட்டமும் தயாரிக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். லாகூர் காங்கிரஸ் தீர்மானமான சுயராஜ்ய தீர்மானத்தைப்பற்றி அன்றே நாம் கண்டித்து கூறியிருக்கிறோம். அதிலுள்ள பாதுகாப்புகள் பயனற்ற ஏமாற்ற சொற்கள் என்று எழுதியிருக்கிறோம்.

கோவில் நுழைய அநுமதி கிடைக்காதவர்கள் 7 கோடி இருக்கிறார்கள். ஹிந்துக்கள் 18 கோடி என்றால் இதில் 7 கோடி போக மிஞ்சிய 11 கோடியில் ஒரு கோடிக்கு உட்பட்ட பார்ப்பான் பிழைக்கவே அது இருக்கிறதே தவிர, பெரும்பகுதி மக்களுக்கு 18 கோடிபேருக்கு 1 கோடி பார்ப்பானுக்குள்ள சுதந்திரமில்லையே? மதப்பாதுகாப்பு என்றால் 1 கோடிக்கா 18 கோடிக்கா என்று கேட்டோம்.

நிலப்பாதுகாப்பு என்றார்கள். இந்நாட்டில் உள்ள 35 கோடி மக்களில் 33 கோடி மக்களுக்கு நிலச் சொந்தம் என்றாலே இன்னதெனத் தெரியாதே! 35 கோடி மக்களுக்காக உள்ள நிலத்தை இரண்டு மூன்று கோடி மக்கள் ஆண்டு அநுபவிக்கிறார்களே? நிலப்பாதுகாப்பு என்றால் 33 கோடி மக்களுக்கா 2 கோடி நிலச் சொந்தக்காரர்களுக்கா என்றும் கேட்கிறோம்.

இதைப்போன்றே ஏனையவைகளுமிருக்கிறது. "சுயராஜ்யம்" என்றார்கள். "குடியேற்ற நாட்டு சுயராஜ்ய"மென்றார்கள், "பரிபூரண சுயராஜ்யம்" என்றார்கள். இம்மூன்றும் பழசாகி விட்டதால், மக்கள் மனதை கவருகிறமாதிரியில் தோழர் இளைய நேரு "பொதுவுடமை திட்டமென்றார்." இது சட்ட திட்டத்திற்கு உட்பட்டதா உட்படாததா? என்று பேசிக் கொண்டார்கள். அதற்குள் சில பிரபுக்களிடம் பணம் பரித்து, பிரபுக்களாக வாழ்பவர்கள் பொதுவுடமை என்றால், காங்கிரஸ் இயக்கத்தில் பணக்காரர்கள் மில் சொந்தக்காரர்கள் இவர்கள் பிரிந்து விடுவார்கள் என்று கண்டிக்க புரப்பட்டதைக் கண்டதும், புதிதாக பணக்காரனையும் பாமர மக்களையும், ஒரே வார்த்தையில் ஏமாற்றுகிற மாதிரியில் "அபேதவாதம்" என்ற பெயரைச் சேர்த்து இருக்கிறார்கள்.

ஆதலால் அன்சாரி பேரைப் பார்த்து முஸ்லிம்கள் ஏமாந்துவிடக் கூடாதென்று நாம் சொல்வதைப் போலவே, அபேதவாதம் என்ற பதத்தைப் பார்த்ததும் தமிழ் நாட்டு பொது ஜனங்களும், சிறப்பாக இந்நாட்டின் ÷க்ஷமத்தில் முழு ஆசை கொண்ட தமிழ் நாட்டு காங்கிரஸ் தோழர்களும், ஏமாந்துவிடக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.

இனி நமது மாகாண சுயராஜ்ய கக்ஷி பேரால் இப்பொழுதே பார்ப்பன கூலிகள், பார்ப்பன தலைவர்கள், சட்டசபைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டதால், அடுத்த தேர்தலில் இந்திய சட்டசபைக்கு இம்மாகாணப் பிரதிநிதியாக போக யார் யார் தகுதியுடையவர்கள் என்பதை முடிவு செய்வதற்குள் இன்றைய சுயராஜ்யக்கக்ஷி பிரசார கூலிகளின் வீண்கூச்சலில் ஏமாறாது உஷாராக இருக்க வேண்டுமென்று மட்டும் கேட்டுக் கொள்கிறோம்.

(புரட்சி தலையங்கம் 06.05.1934)

Pin It