சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற  சமூக நீதி - சமத்துவப் பரப்புரைப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு.

7.8.2017 அன்று காலை 10 மணியளவில் தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் (காஞ்சிபுரம்) அக்பர் அலி தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்பு அளித்து ஜாகீர் உசேன் உரை நிகழ்த்தினார். பின் இரா. உமாபதி, விரட்டுக் கலைக் குழு ஆனந்த், விழுப்புரம் அய்யனார் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர். ம.தி.மு.க.வை சார்ந்த தாம்பரம் மணி வண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.2000 நன்கொடை அளித்தார். பிறகு 12 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. பொத்தேரியில் தெள்ளமிழ்து, தினேஷ் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளித்தும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தனர். கூடுவாஞ்சேரி ராஜேஷ் ரூ.500 நன்கொடை அளித்தார்.

மாலை 4 மணியளவில் சிங்கபெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் அருகிலும், மாலை 5.30 மணியளவில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், காமராசர் சிலை அருகிலும் பரப்புரை நடைபெற்றது. காஞ்சி இரவி பாரதி உரை நிகழ்த்தினார். இரவு தங்குவதற்கும் இரவு உணவு, காலை உணவு ஆகியவற்றுக்கும் கல்பாக்கம் முருகேசன், திராவிடர் கழக மறைமலை நகர் நகரத் தலைவர் துரைமுத்து ஏற்பாடு செய்தனர்.

திண்டிவனம்

8.8.2017 அன்று காலையில் துரைமுத்து தனது இல்லத்தில் தோழர்களுக்கு தேநீர் அளித்து பரப்புரை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பயண ஒருங்கிணைப்பாளர் விழுப்புரம் அய்யனாருக்கு சால்வை அணிவித்தார். காலை 10 மணியளவில் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகிலும், 12 மணியளவில் சித்தாமூர் பேருந்து நிறுத்தம் அருகிலும் பரப்புரை நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தோழர்கள் வரவேற்பு அளித்தனர்.

மதிய உணவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில பொறுப்பாளர் ஆ.விடுதலைச் செல்வன் ஏற்பாடு செய்தார். இரா. உமாபதி, விரட்டுக் கலைக் குழு ஆனந்த், விழுப்புரம் அய்யனார் ஆகியோருக்கு ஆ. விடுதலைச் செல்வன் சால்வை அணிவித்தார். பிற்பகல் 3.30 மணியளவில் மரக்காணம் அம்பேத்கர் சிலை அருகிலும், மாலை 5 மணியளவில் திண்டிவனம் மார்க்கெட் அருகிலும் பிரச்சாரம் நடைபெற்றது. இரவு தங்குவதற்கு பேராசிரியர் கல்வி மணி, முருகப்பன் ஏற்பாடு செய்தனர். இரவு மற்றும் மறுநாள் காலை உணவு த.மு.மு.க. மாவட்ட துணைச்  செயலாளர் அலாவுதின் ஏற்பாடு செய்தார். மனித நேய மக்கள் கட்சியைச் சார்ந்த தோழர்கள் பிரச்சாரக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இருளர் பழங்குடியினர் அமைப்பின் சார்பில் பேராசிரியர் கல்விமணி ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

மயிலம்

9.8.2017 அன்று காலை 10 மணியளவில் மயிலம் பேருந்து நிறுத்தம் அருகிலும், பகல் 12 மணியளவில் விக்கிரவாண்டி பேருந்துநிலையம் அருகிலும் நடைபெற்றது. மதிய உணவு மனித நேய மக்கள் கட்சி யைச் சார்ந்த விக்கிரவாண்டி நகர செயலாளர் டி. சாதிக் பாஷா, சலாம் பாஷா ஏற்பாடுசெய்தனர். மாலை 4 மணியளவில் கண்டமங்கலத்திலும், 6 மணியளவில் அரசூர் நான்கு முனை சாலையிலும் பரப்புரை நடைபெற்றது. மயிலம் கண்ட மங்களத்தில் இளையரசன் உரை நிகழ்த்தினார். அரசூரில் த.பெ.தி.க.வை சார்ந்த பாபு, பிரதீப் ஆகியோர் தேநீருக்கு ஏற்பாடு செய்தனர். இரவு மாட்டுக்கறி உணவு, பொய்கை அரசூரைச் சார்ந்த ஸ்டாலின் ஏற்பாடு செய்தார். இரவு தங்குவதற்கு திருமண மண்டபம் இராயப்பேட்டை முருகேசன் ஏற்பாடு செய்தார். ஒரு நாள் நிகழ்வில் விழுப்புரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம்

10.8.2017 அன்று காலை 10 மணியளவில் திருவெண்ணெய் நல்லூர் மார்க்கெட் அருகிலும், 12 மணியளவில் திருக்கோவிலூர் காந்தி சிலை அருகிலும் பரப்புரை நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அம்பேத்வாசன், தோழர்களுக்கு தேநீர் வழங்கினார். மதிய உணவு கிருஷ்ண குமார் ஏற்பாடு செய்தார்.

மாலை 4 மணியளவில் பகண்டை கூட்ரோட்டில் பரப்புரை நடைபெற்றது. இங்கு இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தைச் சார்ந்த பூமாலை தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தேநீர் வழங்கினார். மாலை 6 மணியளவில் சங்கராபுரம் அண்ணாசிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த திராவிடச் சந்திரன். விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர். இரவு உணவு, தங்குவதற்கு இடம், மறுநாள் காலை உணவு ஆகியவற்றை விழுப்புரம் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

11.8.2017 அன்று காலை 10 மணியளவில் மூரார் பாளையத்திலும் 12 மணியளவில் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகிலும் பிரச்சாரம் நடைபெற்றது. மதிய உணவுக்கு கல்லை ஆசைத்தம்பி ஏற்பாடு செய்தார். மாலை 4 மணியளவில் சின்னச் சேலம் காமராசர் சிலை அருகிலும் 6.30 மணியளவில் ஆத்தூர் பெரியார், அம்பேத்கர் சிலை அருகிலும் பரப்புரை நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் மாவட்டத் தலைவர் மதி உரையாற்றினார். மாவட்டப் பொறுப்பாளர்கள் சி. சாமிதுரை, மு. நாகராஜ், வெற்றிவேல், வினோத் குமார், கார்மேகம் ஆகியோர் பங்கேற்றனர். இரவு உணவு, இரவு தங்குவதற்கு, காலை உணவு ஆத்தூர் மகேந்திரன் ஏற்பாடு செய்தார்.

மங்களபுரம்

12.8.2017 காலை 10 மணியளவில் மங்களபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் துரை அருண் பங்கேற்று உரை நிகழ்த்தினார். 12 மணியளவில் இராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை நடைபெற்றது.கழகத் தோழர் பிடல் சேகுவேரா தோழர்களை வரவேற்றார். வீ. பாலு, நா. சோதிபாசு (மதிமுக), நல்வினைச் செல்வன் (த.ம.க.), நீலவானத்து நிலவன் (வி.சி.க.), மணிமாறன் (சி.பி.ஐ.), ராசா முகமது (ம.நே.ம.க.), தட்சணாமூர்த்தி (த.தே.மு.), சுப. கார்த்திகேயன் (த.ம.ம.க.), ஆ. இளங்கோவன், கிஷோர்குமார், மகேந்திரன், பூபதி உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர். மூன்று நாள் நிகழ்வுகளில் விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் க.இராமர் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

ஏழு நாள் பரப்புரைப் பயணத்திலும் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழுப்புரம் ந. அய்யனார் உரை நிகழ்த்தினார். விரட்டுக் கலைக் குழுவைச் சார்ந்த ஆனந்த், ரத்னா, குபேந்திரன், போதும் பொண்ணு, கார்மேகம் ஆகியோர் பாடல், வீதி நாடகம் மூலம் மக்களிடையே பரப்புரை செய்தனர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், இரண்டு நாள் பரப்புரையில் பங்கேற்றார். மயிலை சுகுமார் ஒலி பெருக்கி ஏற்பாட்டைச் சிறப்பாக அமைத்து தந்தார். இயக்க வெளியீடுகளை  மயிலாடுதுறை யுவராஜ் மிகச் சிறப்பாக விற்பனை செய்து வந்தார். நூலின் செய்திகளை மக்களிடையே எடுத்துச்சொல்லி ரூ.10000-க்கு புத்தகங்களை விற்பனைசெய்தார் கழகத் தோழர் அருண். பரப்புரை வாகனத்தை ஓட்டி வந்ததோடல்லாமல், கடை வசூல், மக்களிடையே துண்டறிக்கையை வழங்கி வந்தார் ராஜேஷ். தனி நபரிடம் துண்டறிக்கை கொடுத்து உண்டியல் ஏந்தி வசூல் செய்தார்.

தோழர்கள் தி. இராவணன், நா.விவேக், மு. தமிழ், முழக்கம் உமாபதி, த. குமரன், மு. முரளி ஆகியோர் ஏழு நாட்களும் பரப்புரையில் பங்கேற்று கடை கடையாகச் சென்று சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் துண்டறிக்கை கொடுத்து கடை வசூல் செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தோழர்கள் யேசுகுமார், ப. முனுசாமி, இரா. செந்தில் குமார், மா.தேன்ராஜ், செந்தில் உள்பட, அந்தந்தப் பகுதியைச் சார்ந்த தோழர்களும் பரப்புரையில் பங்கேற்று களப்பணியாற்றினர். தபசி குமரன், பிரகாஷ், மோகன், ஜேம்ஸ் ஆகியோர் இரண்டு நாள் பயணத்தில் பங்கேற்றனர்.

செய்தி தொகுப்பு : அய்யனார்

Pin It