ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாகப் பல லெக்ஷம் ஜனங்கள் தங்கள் வயிற்றுச் சோற்றுக்கே திண்டாட்டமாகி, இருப்பதா இறப்பதா என்ற ஆலோசனையில் ஆழ்ந்து கிடந்தனர். அவர்களது வயிற்றுக்கு உணவு கிடைக்கவும், அவர்களுக்கு வேலை கிடைக்கவும், சில திட்டங்களை வகுத்துக் கோடிக்கணக்கான பொருளை அதற்கென ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் செலவழித்து வேலையில்லாது திண்டாடும் பெரும்பாலோருக்கு வேலை கொடுத்து வருவதாகவும், இது பெரும் மெச்சத் தகுந்த காரியமென்றும் பல முதலாளி அரசாங்கங்கள் பறை சாற்றுகின்றன.

periyar 355ஆனால் நாம் இது முதலாளி ஆட்சியின் அழிவிற்கு முன்னால் செய்யப்படும் கடைசி முயற்சி என்று கருதுவதுடன், கண்டிப்பாய் இன்று இல்லாவிட்டாலும் இன்னும் பத்து வருடங்களிலாவது இம்முறை சமதர்மத்தில் தான் கொண்டு போய்விடும் என்று பரிபூரணமாக நம்புகிறோம். ஏனெனில் இன்று முதல் ஒரு ஐந்து வருடங்களுக்கோ அல்லது பத்து வருடங்களுக்கோ செய்யக் கூடிய பெரும் வேலைத் திட்டத்தையும் அதற்குப் பொருளையும் ஹிட்லர் உண்டு பண்ணி வேலையற்றவர்களுக்கு வேலை கொடுத்து அவர்களது உயிர் பசியால் உடலை விட்டுப் பிரிய முடியாத அளவிற்கு ஆகாரம் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தலாம். ஆயினும் எத்தனை காலத்திற்கு ரோட்டுகள் போடுவது, காடுகள் சீர்திருத்துவது, கட்டடங்கள் கட்டுவது போன்ற வேலைகள் இருக்கும். இவைகளைச் செய்து முடித்த பின் அந்நாட்டில் அவர்களுக்கு என்ன வேலை கிடைக்கும். அந்த நிலையில் அவர்களது கடைசி முயற்சி என்ன என்பதை வாசகர்களே யோசிக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

(புரட்சி துணைத் தலையங்கம் 25.03.1934)

சர்.கே.வி. ரெட்டி

சமீபத்தில் ஸர்.எம். கிருஷ்ணன் நாயர் அவர்கள் தமது சட்ட மந்திரி பதவியிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாகவும் அந்த ஸ்தானத்திற்கு ஸர். கூர்மா வெங்கிடரெட்டி நாயுடு அவர்கள் நியமிக்கப்படப் போவதாகவும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. இது உண்மையானால் நாம் கொள்ளும் மகிழ்ச்சிக்கு அளவில்லை யென்றுதான் சொல்ல வேண்டும். ஸர். ரெட்டி அவர்கள் சென்ற முப்பது வருடங்களாக சமூக சீர்த்திருத்தம் அவசியம் என்பதையும் அதற்கு பார்ப்பனீயம் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறதென்பதையும் உணர்ந்து பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம், பார்ப்பன மத ஆதிக்கத்தினின்று விடுபடுவதுதான் என்பதை எழுத்திலும், பேச்சிலும், செய்கையிலும் காட்டி வரும் ஒரு சீர்திருத்தப் பிரியர்.

நிற்க நமது மாகாண பார்ப்பனரல்லாதார் கக்ஷியென வழங்கும் ஜஸ்டிஸ் கக்ஷி, ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களுக்கு பல துரோகங்களைச் செய்திருப்பினும், அவர் அதைப் பொருட்படுத்தாது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கும் இயக்க வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய புனிதர். ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களது திறமையை அறிந்த அவர்களது சகாக்கள் பொறாமையினால் அவரை ஒதுக்கி வைத்திருந்த போதிலும், அரசாங்கத்தார் அவரது திறமையை உணர்ந்து அவ்வப்போது அவருக்குரிய ஸ்தானத்தை அவருக்கு கொடுத்து வருவதை பாராட்டுகிறோம்.

(புரட்சி துணைத் தலையங்கம் 25.03.1934)

Pin It