மாகாணப் பார்ப்பனீயம் மீண்டும் அறைகூவி அழைக்கிறது. இதற்கு மாகாணப் பார்ப்பனரல்லாதார் அளிக்கப்போகும் பதில் யாது? இன்றைய மாகாணச் சர்க்கார் நமது பார்ப்பனர் அல்லாதார் கட்சியில் நடைபெற்று வருகிறது. சென்ற மாதத்திற்கு முன் மாகாணச் சட்டசபையில் இனாம்தார்களின் பார்ப்பனப் பணக்காரர்களின் குடிகளுக்கு நியாயம் வழங்க ஓர் சட்டம் நிறைவேறியது. இச்சட்டத்தால் இனாம்குடிகளுக்குப் பரிபூரண நன்மை எதுவும் ஏற்படாவிட்டாலும் ஓர் சாதாரண உரிமையை மட்டும் ஒப்புக்கொள்வதாகவே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டு மாகாணப் பார்ப்பனீயம் ஒன்றுபட்டு எதிர்க்க முயற்சித்தது. முடிவில் மாகாணக் கவர்னர் பெருமானைப் பேட்டிகண்டு நிறைவேற்றப்பட்டுள்ள இனாம் குடிகள் சட்டத்திற்கு ஓர் திருத்தம் கொண்டுவரும்படி இன்றைய பிராமணீயம் செய்துவிட்டது. இதற்கு மாகாணப் பார்ப்பனரல்லாதார் கட்சி செய்யப்போகும் பரிகாரம் யாது என்பதுதான் நமது கேள்வியாகும்.
அதிகாரத்தில் உள்ள சட்ட சபையில் மெஜாரிட்டியாகவுள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சர்க்கார் மெம்பர்களுடைய பரிபூரண ஒத்துழைப்பையும் பெற்று இச் சட்டத்தை நிறைவேற்றினார்கள். இச் சட்டத்தால் இனாம்தார்களுக்கு எத்தகைய கஷ்டமோ, நஷ்டமோ நேர்ந்துவிடவில்லை. ஆனால் இம் மாகாணப் பார்ப்பனீயத்திற்கு செல்வாக்கா? அல்லாதார்களியக்கத்திற்கு ஆதரவா? என்பதைப் பரீட்சிப்பதுபோலவே இச்சட்டம் எண்ணப்பட்டது. சட்டசபையில் எதிர்க்கட்சி மெம்பர்களில் பலரும் இதை ஆதரித்தார்கள். அப்படியிருந்தும் மாகாணப் பார்ப்பனர்கள் தங்களின் ஆதிக்கத்திற்குப் புது உயிர் கொடுக்க இச் சம்பவத்தை உபயோகித்துக் கொள்ள எண்ணியதால் அவர்கள் முழுச் சக்தியும் ஒன்று கூடி மேன்மைதங்கிய கவர்னர் பெருமான் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்று விட்டது.இந்த நெருக்கடியான நிலைமையில் நமது மாகாணச் சட்டசபையில் உள்ள ஜஸ்டிஸ் கட்சி, அதன் தலைவர்கள் இவர்கள் ஒன்றுபட்டு தங்களின் முந்திய செய்கையை மீண்டும் உறுதிப்படுத்தப்போகிறார்களா? அல்லது கவர்னர் பெருமான் திருத்தம் கொண்டுவர ஆசைப்படுவதால் நாம் மீண்டும் பழைய முறையை வற்புருத்தினால் சர்க்கார் பெரிய மனிதர்களின் கோபம் வந்துவிடும் என்று பயந்து நாளைய நிலைமையைக் கைநழுவவிடப் போகிறார்களா? என்பது தெரிந்துவிடவேண்டும். தாங்கள் செய்த நியாயமான ஓர் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்புங்கூட, மாகாணப் பார்ப்பனர்கள் அத்தனைபேரும் எதிர்த்துத் தோற்கடிக்கச் செய்து விட்டார்களே! என்ற ரோஷம் கடுகளவு நமது அல்லாதார் தலைவர்களுக்கு இருந்து விட்டால் நாளை வரவிருக்கும் திருத்தமும் தோற்கடிக்கப்படப் போவது நிச்சயம். ஆனால் அவ்விதம் செய்வார்களா? மே. த. கவர்னர் பெருமான் அடுத்த மாதம் விலகப் போகிறவர். தன்னை வந்து கேட்டுக் கொண்ட பார்ப்பனப் பிரதிநிதிக் கூட்டத்தார்களின் வேண்டுகோளின்படி மீண்டும் ஓர் சான்ஸ் கொடுக்க தாம் சம்மதப்படுவதாக அவர் கூறிவிட்டது ஆச்சரியமல்ல. மே.த. கவர்னருக்குச் சட்டசபையிலுள்ள மெஜாரிட்டி மெம்பர்கள் இச்சட்டத்தை ஆதரிப்பதும், ஆதரித்ததும் நன்கு தெரியும். இச் சட்டம் நிறைவேற்றப்படுவதால் மாகாண ÷க்ஷமத்துக்கோ, இனாம்தார்கள் ÷க்ஷமத்துக்கோ, குடிகள் ÷க்ஷமத்துக்கோ பெரும் ஆபத்து வருமென்று மே. த. கவர்னர் நினைத்தால் முன்னமேயே வேறு நிலைமை ஏற்பட்டிருக்கும்; இதை அக்காலத்தில் சர்க்கார் மெம்பர்கள் ஆதரித்து இருக்கவுமாட்டார்கள். ஆனால் சட்ட பூரணமாக நிறைவேற்றப்பட்டபின்பு இம்மாகாணத்தில் ஏற்பட்ட புது நிலைமைதான் இன்று மாகாணச் சட்டசபையை மீண்டும் தன்னால் செய்யப்பட்ட சட்டத்திற்குத் திருத்தம் வரும்படியான நிலைமையை உண்டுபண்ணிக்கொள்ளச் செய்தது. ஆதலால் ஜஸ்டிஸ் கட்சிக்காரர் முதலில் கவர்னர் பெருமான் கோபித்துக் கொள்ளுவாரென்று பட்டிக்காட்டான் சொல்லவிருக்கும் சமாதானத்தைச் சொல்லித் தப்பிக்க முடியாது. திருத்தம் வந்தால் தைரியமாக அதை எதிற்கச் சற்றும் தயங்கக்கூடாது. அப்படித் தயங்கினால் இவர்கள் இனாம்தார்களின் குடிகளிடம் பரிதாபப்படாமல் மாகாணப் பார்ப்பனீயத்துக்கு விரோதமாக க்ஷõத்திரத்தின்மேல் செய்யப்பட்ட செய்கை என்று மே.த. கவர்னரிடம் பார்ப்பனப் பிரதிநிதிகள் கூறியது உண்மையாகி விடும்.
கவர்னர் பெருமான் இவர்கள் செய்கையை பின்பு கேவலமாக எண்ண இடமேற்பட்டாலும் ஏற்படக் கூடுமாதலால் அதற்கு இஷ்டப்படமாட்டார்கள் என்று நம்புகிறோம். மாகாணச் சட்டசபையில் மைனாரிட்டியாகத் தனது கட்சி இருக்கும்போதும் தனது திறனால், ராஜதந்திரத்தால், சுயநலமின்மையினால் சட்டசபையில் மெஜாரிட்டி கொண்டு வரமுடியும் என்பது காலம் சென்ற பனகால் மன்னனின் முடிவாகும். அவ்விதம் கொண்டுவந்தும் அக்கால மந்திரி கட்சிகளைச் சிதர அடித்தும் இருக்கிறார். அத்துடன் மட்டுமல்ல, மாகாண எல்லையைத் தாண்டி மத்திய சர்க்காரின் செய்கையிலும் தலையிட்டுத் தனது சமூகமான பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு விரோதமாக இருந்த ஒருவரை சர்.சி.பி. ராமசாமி ஐயர் அவர்களைச் சட்டமெம்பராக வர முடியாது செய்தார் என்று ஹிந்து பத்திரிகையே எழுதியிருக்கிறது. அக்கக்ஷியின் பின் தலைவர்கள் இன்று மத்திய சர்க்காரிடம் தங்கள் செல்வாக்கை உபயோகிக்க வேண்டாம். மாகாண சர்க்கார் பகிரங்கமாக எதிர்க்கும் ஓர் செய்கைக்கும் எதிராக நிற்கவேண்டாம். மாகாண மே. த. கவர்னராலும், சர்க்கார் மெம்பர்களாலும், ஒரே மனதாய் ஒப்புக்கொள்ளப்பட்டு, பெரும்பான்மையான ஓட்டுகளினால் மூன்று மாதத்திற்கு முன் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை காற்க வழி இல்லை என்றால் இது மிக இழிவு போன்றதாகும்.
ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களே!
ராஜா பனகால் இறந்ததும், நமது கட்சி சிதர ஆரம்பித்தது. ஹிந்து ஆசிரியர் ஏ. இரங்கசாமி ஐயங்கார் காலமானதும் மாகாண பார்ப்பனர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள். இது உங்கள் கட்சிக்கு வெட்டப்பட்ட பெறும்பள்ளத்தில் மீண்டும் மண் தோண்டுவதாகும். சர்.சி.பி. கட்சியும், ரைட் ஆனரபில் சாஸ்திரி கட்சியும், வெங்கட்டராம சாஸ்திரிகள் கட்சியுடன் ஒன்றுபட்டு விட்டது. இதை இவர்களின் விரோதிகளாய் இருந்த சீனிவாச ஐயங்கார் கட்சியும், எ. இரங்கசாமி கட்சியும், ஒன்றுபட்டு ஆதரிக்கிறது. இவர்கள் அத்தனை பேருக்கும் நேற்று வரையில் பரம விரோதியாக இருந்த குட்டி காந்தி தோழர் சக்கிரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கட்சி ரிஜிஸ்டர் செய்த கட்சியாக ஒன்றாக்கிவிட்டார். சுருங்கச் சொன்னால் தொழிலாளி பேரால் உள்ள பார்ப்பன தலைவர்கள், மதத்தின் பேரால் உள்ள வைதீகப் பார்ப்பன தலைவர்கள், அரசியலில் பல கட்சி பேரால் தனித்தனி ராஜ்யம் நடத்திய பார்ப்பன தலைவர்கள் இவர்கள் அத்தனை பேரும் ஒன்றாகி விட்டார்கள். ஓட்டல் பார்ப்பானும் இனாம்தார் சட்டத்தை கண்டிக்கிறான், உத்தியோக பார்ப்பன தலைவரான அல்லாடி அய்யர்வாளும் இனாம்தார் சட்டத்தை கண்டிக்கிறார். இவைகளுக்கு அர்த்தம் இனாம்தார்கள் சட்டத்தால் சிதறி சீரழிந்து கிடந்த ஐயர் ஐயங்கார் சாஸ்திரி ஆச்சாரி ஆகிய சகல ஆரியரும் ஒன்றாகி விட்டார்கள் என்பதே அர்த்தமாகும். இதை அகில இந்திய பார்ப்பன தாஸாதி தாஸனாகவும் சம்பந்தியாகவும் உள்ள நமது காந்தி பாபுவும் ஆதரிக்கிறார். மயிலை ஐயங்கார் வீட்டுக்கு காந்தி விஜயம் இதைத்தான் காட்டுகிறது. மாகாண முழுவதும் உள்ள சகல பார்ப்பனரும் ஒன்றாக இருப்பதும், இம்மாகாணத்திலுள்ள நான்கு தினசரி ஆங்கில பத்திரிகைகளும், மூன்று தமிழ் தினசரி பத்திரிகைகளும், குட்டிப் பத்திரிகைகளும், மாகாண பார்ப்பனீயத்துக்கு ஆதரவு காட்டி எங்கும் இனாம்தார்களுக்கு ஆபத்து என்ற "கெங்காதரா மாண்டாயோ" எனும் கூச்சல் போடுவதும் மே.த. கவர்னருக்கு தெரியும். ஆதலால் அவர் திருத்தத்தை ஆதரித்தார். இதை கண்டு கலங்காது முன் சொன்ன பலத்தைவிட 100க்கு 97 பேர்களாக உள்ள மக்களின் எதிர்ப்பு இனி ஏற்படும் என்பதை ஜஸ்டிஸ் கட்சியார் இன்று சர்க்காருக்கு உணர்த்த வேண்டும். இவ்விதம் உணர்த்துவது சட்டவிரோதமல்ல.
ஜஸ்டிஸ் கட்சியாரால் கொண்டு வரப்பட்ட, நிறைவேற்றப்பட்ட ஓர் சட்டம், சில பார்ப்பன கனவான்களின் எதிற்புக்கு பயந்து உடைத்து எரியப்படுமானால், அது இனி இம்மாகாணத்தில் பார்ப்பனீயத்தை எதிர்த்து எவனும் வாழ முடியாது என்பதைத்தான் காட்டும். நீங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு பெறும் நன்மை எதுவும் செய்யாவிட்டாலும், உங்களால் தீமை வராது இருக்கும்படியாகவாவது நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். நாளை வரும் திருத்தம் பெறும் கட்டுப்பாடுடன் எதிர்க்கப்பட்டு, இம்மாகாணப் பார்ப்பனீயத்துக்கு சாவு மணி அடிக்கப் போகின்றீர்களா? அல்லது சிலர் சொல்லுகிறபடி திருத்தம் வரும்போது சண்டப் பிரசண்டமாகப் பேசி விட்டு ஓட்டு எடுக்கும்போது வெளியே சென்றுவிடப் போகிறீர்களா? என்று பார்ப்பனரல்லாத சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. திருத்தத்தை எதிர்க்க முடியாவிட்டாலும், எப்படியும் திருத்தம் சட்டசபையில் நிறைவேற்றப்படுமானால் ஜஸ்டிஸ் கட்சி அத்தனை பேரும் சட்டசபையை விட்டு, வீரர்களாக வெளிவர தயாராக இருக்கிறீர்களா? அப்படி இருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால், இந்நிலை ஏற்பட்டுகூட யிருக்காது. எப்படியோ ஏற்பட்டு விட்டது. இனியாவது உங்களை நம்பிய கோடானு கோடி மக்கள் பார்ப்பனர் முன் நிமிர்ந்து நடக்கும்படியாகச் செய்யத் தவரக்கூடாது.
நமது முதன் மந்திரி அவர்களுக்கு, கனம் அல்லாடி ஐயர் அவர்கள் இச்சட்டம் போன்றதுகள் வந்தால் ரஷ்யாவின் பொதுவுடைமை உடனே வந்துவிடும் என்று பொய்க்கதை கூறி உங்களை பயமுறுத்தும் போது அதை ஆண்மையுடன் தாங்கள் மறுத்ததை மாகாணப் பார்ப்பனரல்லாதார் மறந்துவிடவில்லை. அத்துடன் மட்டுமல்ல. ரஷ்யாவில் ஏற்பட்ட கலகம் இங்கு உண்டாகாதிருக்க அதைத் தடுக்கும் பொருட்டு இந்நாட்டு ஏழைக் குடிகளுக்குப் பாதுகாப்பும் நம்பிக்கையும் உண்டாவதற்காகவே இச் சட்டம் கொண்டு வந்ததாகக் கூட தாங்கள் கெம்பீரமாகக் கூறியது இன்னும் கேட்டுக்கொண்டு இருக்கிறது. நாளைய திருத்தம் தோற்கடிக்கப்படாமல் போனால் அது உங்கள் கட்சிக்கு மட்டும் நஷ்டமென்பதல்ல. உங்கள் கட்சியின் பேர் எந்தக் கோடிக்கணக்கான மக்களின் பேரால் இருக்கிறதோ அவர்களுக்கு துரோகம் செய்ததாக ஆகும் என்பதையும் ஞாபகமூட்ட ஆசைப்படுவதுடன் இந்நிலை ஏற்பட ஜஸ்டிஸ் கட்சி இடம் கொடாது என்று சிறிது உள்ள நம்பிக்கையே இதைப்பற்றி வற்புறுத்தத் தூண்டியது.
நாளை சட்ட மெம்பராக வரவிருக்கும் கனம் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் ஜஸ்டிஸ்கட்சி முயற்சியால் சிபார்சால் லா மெம்பராக வரவில்லை என்பது பார்ப்பனத் திண்ணைப் பிரசாரமாகும். சர். ரெட்டி நாயுடு அவர்களைவிட தகுந்த ஓர் கனவான் இம் மாகாணத்தில் இல்லை யென்பதைப் பார்ப்பனீயம் ஒப்புக்கொண்டாலும் லா மெம்பர் நியமனமானது பார்ப்பன சிபார்சால் வந்ததாக முழுப் பொய் பிரசாரத்தைச் செய்து வருகிறார்கள். இதற்குக் காரணம் ஓர் மாகாணத்தில் மேன்மை தங்கிய கவர்னரிலிருந்து சகல நிர்வாகக் கமிட்டி மெம்பர்களும் பார்ப்பனரல்லாதார் கட்சியாகவிருக்கும்போது இதில் ஓர் அய்யருக்கு இடம் கொடுக்கப்படல் நியாயம் என்பது அவர்கள் ஆசையும் முயற்சியுமாகும். அடுத்த காலியாகும் இடத்துக்கு ஓர் அய்யர் பிரபு வருவதற்கு மாகாணப் பார்ப்பனர்கள் இன்றுவரை செய்துவரும் பிரயத்தனம் அளவிட முடியாதனவாகும். வகுப்புவாதத்தை வெறுப்பதாகக் கூறும் தினசரி ஆங்கில தமிழ் பார்ப்பனப் பத்திரிகைகள், அல்லாடி அய்யர்வாள் இருக்க வேண்டுவது அவசியமென்று பறையடிக்கிறது.
இனாம்தார் மசோதாவுக்குத் திருத்தம் வந்து அது நிறைவேறிவிடும் பட்சத்தில் அதன்பின் ஜஸ்டிஸ்கட்சி செய்யப் போவது யாது? பார்ப்பனீயம் நிலைநாட்டப்படுமானால் அதன்பின் பார்ப்பனரல்லாதாருக்கு உண்டாக்கப்பட்ட நஷ்டத்துக்குப் பார்ப்பனரல்லாதார் கட்சி செய்யப் போகும் பரிகாரம் யாது? இம் மாகாணப் பார்ப்பனர் அல்லாதார் கட்சி செய்யப்போவதென்ன என்பதை நாம் பொருத்திருந்து பார்ப்போம்.
நமது அரசியல் நிருபர்
(புரட்சி கட்டுரை 25.03.1934)