பறி போகும் தமிழர் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களிடையே துண்டறிக்கை; மண்டல மாநாடுகள்; டிசம்பர் 29இல் சேலத்தில் தலைமை செயற்குழுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு கூட்டம் டிசம்.16, 2017 காலை 11 மணியளவில் ஈரோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கழகப் பொறுப்பாளர்கள் கடந்த அக்டோபரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக கழக செயல்பாடுகள் குறித்து கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் குழுவில் கருத்துகளை முன் வைத்தனர். செயல்பாடுகள் இல்லாத கழக அமைப்புகள் - செயல்படக் கூடிய கழக அமைப்புகள் - அமைப்புகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கழக செயல்பாடுகளை மேலும் தீவிரமாக்குவது குறித்தும் விவாதிக்கப் பட்டது.

கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் தலைமைக்குழு விவாதித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடுவண் ஆட்சி தலையீட்டால், தமிழக இளைஞர்களை கடுமையாகப் பாதிக்கும் வேலை வாய்ப்புகள், தமிழக தேர்வாணையத்தின் அறிவிப்புகள், நீட் திணிப்பால் உருவாகியுள்ள நெருக்கடிகள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்களாக பிற மாநிலத்தவர்களை தேர்வு செய்தல், மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் பாதியளவுகூட நிரப்பப்படாமல் இருக்கும் அவலம் - இவைகளை விளக்கி கல்லூரி களின் வாயில்களிலும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட மாணவர் விடுதிகளிலும் விழிப்புணர்வூட்டும் வெளியீடுகள், துண்டறிக்கைகளை வழங்கவும் வாயிற் கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப் பட்டது.

தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் இந்தப் பணியை கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். சேலம், தருமபுரி மாவட்டங்களில் மாணவர்களை சந்திக்கும் திட்டத்துக்கு நாகராஜன், திருப்பூர் மாவட்டத்துக்கு தேன்மொழி, கனல்மதி, பிரசாந்த், கோவை மாவட்டத்துக்கு வைத்தீ°வரி, திருவண்ணா மலை, விழுப்புரம் மாவட்டத்துக்கு வினோத், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கு குடியாத்தம் சிவா, சென்னை மாவட்டத்துக்கு ஜெயப்பிரகாஷ், விருதுநகர் மாவட்டத்துக்கு பெ. இராமநாதன், நாமக்கல் மாவட்டத்துக்கு மனோஜ் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். பிற மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

தமிழக மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை வலியுறுத்தும் மண்டல மாநாடுகளை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

டிசம்பர் 29ஆம் தேதி கழக தலைமை செயற் குழுவை சேலத்தில் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Pin It