ஈரோட்டில் குச்சுக்காரிகள் தொல்லை என்பதாகவும், விபசாரிகள் தொல்லை என்றும் தலையங்கங்கள் கொண்ட இரண்டு வியாசங்கள் “குடி அரசி”ல் உபதலையங்கங்களாக எழுதி அதைக் குறித்து போலீசாரும், முனிசிபாலிட்டியாரும் முயற்சியெடுத்து “விபசார ஒழிப்பு” சட்டத்தை ஈரோட்டிற்கு அமுலில் வரும்படி செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொண்ட விஷயம் நேயர்களுக்குத் தெரியுமென்றே நினைக்கிறோம்.

Periyar 235அந்தப்படியே ஈரோடு முனிசிபல் கௌன்சிலில் கௌன்சிலர் தோழர் கேசவலால் அவர்களால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு தோழர் ஈ.எஸ்.கோவிந்தசாமி நாயுடு அவர்களால் ஆமோதிக்கப்பட்டு மற்ற எல்லா கௌன்சிலர்களாலும் ஏகமனதாய் ஆமோதிக்கப்பட்டு சேர்மென் அவர்களுடைய பலமான குறிப்பின்மேல் கவர்ன்மெண்டுக்கு அனுப்பப்பட்ட தில் கவர்ன்மெண்டார் அதை ஏற்று ஈரோட்டிலும், கோயமுத்தூரிலும் இந்தச் சட்டம் அமுலுக்குவரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு அடுத்த மாதம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வர விளம்பரம் செய்யப்பட்டாய் விட்ட விபரம் நமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுவிஷயமாய் ஈரோடு முனிசிபல் கௌன்சிலர்களையும், பிரத்தியேகமாய் தோழர் கேசவலாலையும், சேர்மென் அவர்களையும் பாராட்டுவதுடன் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

அன்றியும் போலீஸ் அதிகாரிகள் இதற்கு அனுகூலமாய் இருந்து வந்ததற்காக அவர்களையும், கவர்ன்மெண்டாரையும் பாராட்டுகிறோம்.

இந்தச் சமயத்தில் ஒருவிஷயத்தை மறுபடியும் ஈரோடு முனிசிபல் கௌன்சிலர்களுக்கும், சேர்மென் அவர்களுக்கும் தெரிவித்து கொள்ளுகிறோம். அதாவது ஈரோட்டுக்கு ஒரு பெண் டாக்டர் அவசியமாய் இருப்பதையும், ஏனெனில் சர்க்கார் சம்பளப் பெண் டாக்டரை எடுத்துவிட்டு கௌரவ டாக்டரை நியமித்து இருப்பதால் அது போதாததால் தனியே பொது ஜன சேவகராக ஒரு டாக்டர் வேண்டியிருப்பதால் தயவுசெய்து ஒரு பெண் டாக்டரை முனிசிபாலிட்டியார் தங்களுக்குச் சௌகரியப்பட்ட சீக்கிரத்தில் நியமிக்க வேண்டும் என்று முன் தெரிவித்துக் கொண்டதை இப்போது ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

அதோடு ஈரோடு காரைவாய்க்கால் ஓடையில் தேங்கி நிற்கும் ஜல தாரைக் கசுமாலத் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அதிகம் பேருக்கு மலேரியா காய்ச்சல் ஏற்படுவதால் அந்தத் தேக்கத்தை ஒழிக்க ஒரு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.09.1933)

Pin It