காந்தீயம் படுத்து விட்டதென்றும், அதனால் இதுவரையில் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும், அதை இனியும் பரீக்ஷிப்பதால் யாதொரு பயனும் ஏற்படாது என்பதோடு அது முட்டாள் தனமும், தற்கொலையுமாகும் என்றும், இமயமலை முதல் கன்னியாகுமரி வரை இன்று ஒரே அபிப்பிராயமாக இருந்து வருகின்றது. ஆனால் தோழர் காந்தியவர்கள் மாத்திரம் தான் “பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்ற பழமொழிபோல் தன்னுடைய சொந்த கௌரவத்தை முன்னிட்டு இதை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதாக காட்டிக் கொண்டு இருப்பது தான் தோல்வி அடையவில்லை என்றும் தனது கொள்கை பயனற்று (வெத்தி வேட்டாய் புஸ்ஸ்ஸென்று) போகவில்லை யென்றும், பாமர ஜனங்களைக் கருதும்படி செய்ய வேண்டும் என்கிற துறை யிலேயே தனது முயற்சியை எல்லாம் செலவழித்து வெகுதீவிரமாய் உழைத்து வருகிறார். இந்த உழைப்புக்கு அவருடைய பிரதம சிஷ்யர்கள் சிலரும் காந்தீயத்தாலன்றி வாழ முடியாத சில காந்தீய சன்னியாசிகளும், காந்திமட சன்னியாசிகளும் தங்கள் தங்களால் கூடிய அளவு உதவி புரிந்து வருகின்றார்கள். என்றாலும் காந்தீயத்தால் பிழைத்து வந்த பத்திரிகைகாரர்கள் அநேகர் இனி இதை நம்பினால் பயன்படாது என்று கருதியதோடு வில்லிங்டனார் அடக்குமுறைக்கு பயந்தும் வேறு வழியில் திரும்பிக் கொண்டதால் இனி யார் எப்படிப்பட்ட உதவி செய்தாலும் அது மறுபடியும் தலைதூக்க முடியாத காரியமாய் போய்விட்டது.

தோழர் காந்தியாருக்கு பத்திராதிபர்களின் ஆதரிப்பு குறைந்து விட்டது என்று தோன்றியவுடன், மிதவாதிகள் என்னும் கூட்டத்தையாவது பிடித்து ஏதாவது பரிகாரம் தேடிக்கொள்ளலாமா என்று பார்த்ததில் அவர் களும் கைவிட ஆரம்பித்து விட்டார்கள். ஏனெனில் மிதவாதிகள் என்பவர்கள் தங்கள் தேர்தல்களுக்குப் பங்கம் ஏற்படாமல் இருக்க வேண்டிய அளவுக்கு மாத்திரமே காந்தியாரின் பெயரை உபயோகித்துக் கொண்டிருந்தவர்களே ஒழிய அவர்களுக்கு காந்தியாரிடத்தில் கடுகளவு நம்பிக்கையோ அனுதாபமோ ஒரு நாளும் இருந்ததில்லை. ஆகவே இனிமேல் தேர்தலில் நிற்கின்றவர்கள் காந்தியாரின் பெயரை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் தெரிந்து கொண்டவுடன் அவர்களும் காந்தியாரை அலட்சியம் செய்ய தீர்மானித்து விட்டார்கள்.

periyar 231நிற்க, இப்போது காந்தியார் தனது ஒவ்வொரு வார்த்தையிலும், தான் எதிர்பாராமல் சிறையிலிருந்து விடுதலையாகி விட்டதாகச் சொல்லிக் கொண்டே வருவதை வாசகர்கள் கவனித்து இருந்தால் அதிலிருந்து ஒரு விஷயத்தை உணரலாம். அதென்னவெனில் இப்போது ஜனங்களில் அதிகம் பேருக்கு காந்தியார் அனாவசியமாய் பட்டினியிலிருந்து விடுதலையானார் என்றும், அப்பட்டினிக்கு விடுதலையாக வேண்டும் என்கின்ற காரணம் அல்லாமல் மற்றபடி வேறு எவ்வித நியாயமான காரணமும் இருக்க இடமில்லை என்றும் கருதி இருப்பதால் இக்கருத்தைமாற்றவே அவர் “நான் எதிர்பாராமல் விடுதலை அடைந்துவிட்டேன்” “எதிர்பாராமல் விடுதலை அடைந்து விட்டேன்” என்று அடிக்கடி சொல்லிக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

காந்தியார் முதல் முதலில் விடுதலை அடைந்ததும் பட்டினியின் காரணத்தினாலேயாகும். அதாவது தீண்டப்படாத மக்களின் தனித் தொகுதியை ஒழிக்க என்று பட்டினி இருந்ததாகும்.

அரஸ்டு செய்யப்பட்டு விடுதலை அடைந்ததும் பட்டினியின் காரணத்தினாலேயாகும். அதாவது தனது சகாக்கள் சில தப்பிதம் செய்ததற்காக என்று பட்டினி கிடந்து விடுதலை அடைந்ததாகும்.

இப்போது விடுதலை அடைந்ததும் பட்டினியின் காரணத்தினாலேயாகும். அதாவது சிறையில் ஹரிஜன வேலை செய்ய சர்க்கார் அதிக சௌகரியம் அளிக்காததினால் என்று பட்டினி இருந்ததாகும்.

இப்படியே ஒவ்வொரு தடவையும் தான் பட்டினி கிடப்பதாகச் சொல்லி பட்டினி ஆரம்பித்தவுடன் சர்க்கார் விடுதலை செய்து கொண்டே வந்திருக்கிறார்கள்.

( இந்தத்தடவை மாத்திரம் சர்க்காரார் முன்போல் உடனே விடுதலை செய்துவிடாமல் பலாத்காரமாய் ஆகாரத்தைச் செலுத்த துணிவு கொண்டார்கள் என்றாலும் தோழர் ஆண்ட்ரூஸ் முதலியவர்கள் பிரவேசத்தினால் விடுதலை செய்து விட்டார்கள்.)

அப்படி இருக்க இந்தத் தடவையும் தான் பட்டினி ஆரம்பித்தால் சர்க்கார் தன்னை விடுதலை செய்து விடுவார்கள் என்று தோழர் காந்தி எதிர்பார்க்காமல் இருந்திருக்க முடியுமா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

அன்றியும் இந்த விடுதலைக்கு தோழர் ஆண்ட்ரூசால் ஏதாவது ஒப்பந்தம் நிகழ்ந்திருந்தாலும், நிகழ்ந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். இது எப்படி இருந்தாலும் தோழர் காந்தியவர்கள் முன்பு விடுதலை அடைந்தவுடன் எப்படி “தனிப்பட்ட சட்ட மறுப்பு செய்ய வேண்டியது தவிர வேறு ஒரு மார்க்கமும் தனக்கு இல்லை” என்று சொன்னதுடன் இந்த சட்டமறுப்பு செய்து சிறை செல்ல வேண்டியதின் அவசியத்தைப்பற்றி சொல்லும்போதும், “நான் வெளியில் வந்து ஜனங்களுடன் பழக நேர்ந்ததில் படித்தவர்களும், படிக்காதவர்களும், மேல்ஜாதிக்காரரும், கீழ்ஜாதிக்காரரும், பணக்காரர்களும், ஏழைகளும் சீர்குலைந்திருப்பதைக் கண்டதாகவும் அவர்கள் தங்கள் உடமைக்கும், சுதந்திரத்திற்கும் ஆபத்து வருமென்று பயப்படுவதாகவும் ஆதலால் அஹிம்சையில் நம்பிக்கையுள்ள நான் சிறைபுகுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி சிறைபுகுந்து இருக்கிறார்.

ஆனால் இப்போது வெளிவந்த காந்தியவர்கள் வெளிவந்தது முதல் இவ்வளவு நாள்யோசித்தும் தோழர் ஜவஹர்லால் உடன் இரண்டு மூன்று நாள் கலந்து பேசிய பிறகும் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறுவது என்னவென்றால் “நான் இனி ஒரு வருஷ காலம் சட்ட மறுப்பிலிறங்கி சிறைபுகுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்” என்றும் இந்த ஒரு வருஷ காலத்துக்குள் தான் சட்ட மறுப்புச்செய்து சிறைக்குச் செல்லுவது அற்பத்தனம் என்றே தனக்கு படுகின்றது என்றும் விளக்கமாகச் சொல்லி விட்டார். சிறிது நாளைக்குமுன் தான் “தேசம் சீர்கெட்ட நிலையில் இருக்கும் போது அஹிம்சையில் நம்பிக்கையுள்ள சத்தியாக்கிரகி சிறையிலிருக்க வேண்டும்” என்று சொன்னவர் இப்போது ஒரு மாதத்திற்குள் “இந்த சமயத்தில் ஜெயிலுக்கு போகக் கூடாது” என்றும் “ஜெயிலுக்குப் போவது அற்பத் தனம்” என்றும், சொல்லும்படியான நிலைமை எப்படி ஏற்பட்டதென்பது நமக்கு புரியவில்லை. ஒரு சமயம் தேசம் சீரடைந்து விட்டதாக கருதி விட்டாரோ என்பதும் விளங்கவில்லை.

அல்லது ஒரு சமயம் வில்லிங்டன் துரைமகனாரின் சண்டித்தனம் காந்தியாரின் சண்டித்தனத்தை ஜெபித்து விட்டதோ என்னமோ என்றும் நினைக்க வேண்டியிருக்கிறது.

காந்தியாருக்கு வில்லிங்டனாரிடம் போய் நேரில் பேசி ராஜி என்ற பேரால் ஏதாவது ஒருவழியில் தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது, வில்லிங்டனாரோ இதை அறிந்து கொண்டு ஒரே பிடிவாதமாய் கல்உளி சித்தன்போல் சண்டித்தனம் செய்கிறார். அதென்னவென்றால் சட்டமறுப்பை நிறுத்தி விட்டேன் என்று சொன்னால் ஒழிய காந்தியாரின் முகத்தில்கூட விழிக்க மாட்டேன் என்று சிறு குழந்தைகள்போல் ஹடம் சாதிக்கிறார். இந்த நிலையில் காந்தியார் மறுபடியும் சிறைக்குச் சென்று பட்டினி இருந்தால் வில்லிங்டன் அரசாங்கம் என்ன செய்யும் என்பது காந்தியாருக்கு நன்றாய் தெரியும் ஆதலால் இரண்டு சண்டிகள் தங்களது சண்டித்தனத்தை நடத்திக் கொண்டே போனால் (இரண்டு நேர்கோடுகள் எப்படி ஒன்று சேராதோ அதுபோல்) ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டு விடுமாதலால் ஏதாவது ஒரு சண்டி (பலக்குறையுள்ள சண்டி) வழிக்குவந்து சற்று இறங்கி வந்தால்தான் முடியுமெனக் கருதி காந்தியாரே “பெரும் தன்மையுடன்” இறங்கி வந்து, சரி வில்லிங்டனார் இஷ்டப்படிதான் ஆகித் தொலையட்டுமே எனக் கருதி இனிமேல் (ஒரு வருஷ காலத்துக்கு) சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய எந்தக் காரியத்தையும் செய்து ஜெயிலுக்குப் போவதில்லை என்று வாக்குக் கொடுக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாக வேண்டியதாய் போய் விட்டதோ என்பதும் விளங்கவில்லை.

எப்படி இருந்தாலும் இந்தக்காரியம் இவ்வளவும் காந்தியார் தன் இஷ்டப்படி செய்யாமல் “நன்றாய் பிரார்த்தனை செய்து ஆழ்ந்த சிந்தனை என்னும் யோகத்தில் இறங்கி பகவானுடைய உத்திரவு பெற்ற பின்பே அதாவது பகவானின் உத்திரவுப்படியே செய்து வருகிறேன் என்கிறார். ஆத லால் (கடவுள் நம்பிக்கையுள்ள) வேறு எவருக்கும் இதில் குற்றம் கண்டு பிடிக்க இடமில்லை”.

இதுதவிர தோழர் காந்தியார் மற்றொரு விஷயத்தையும் ஒளிக்காமல் சொல்லி விட்டார். அதென்னவென்றால் நான் பொதுத்தொண்டில் இறங்கிய காலம் முதல் ஒரு காரியம் ஏதோ ஒரு வழியில் முடிவு பெற்று விட்டால் அடுத்தபடியாக என்ன செய்ய வேண்டுமென்பது தெளிவாக முன்னதாக தெரிந்துவிடும். ஆனால் (இந்த எதிர்பாரத விடுதலையினால்) இப்போது என்னை இருட்டு (அறியாமல்) மூடிக் கொண்டது. எனது உடமை என்ன என்பது எனக்கு விளங்கவில்லை என்று சொல்லுகிறார்.

“ஒவ்வொரு காரியத்தையும் கடவுள் பிரார்த்தனை செய்து ஆழ்ந்து யோசிப்பவர்” யோக்கியதை இப்படியிருக்குமானால் இனிமற்ற சாதாரண ஆத்மாக்களுக்கு என்ன விளங்கக் கூடுமென்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆகவே காந்தீயத்தின் நிலை இப்போது எப்படி இருக்கின்றது என்பதற்கு இது ஒரு தக்க சந்தர்ப்பமாகும்.

இனி மற்றொரு வீரரின் நிலையைப் பற்றி சிறிது யோசிப்போம். அதாவது காந்தியாருக்குப் பின் இந்திய தேசியத் தலைவராக வரவேண்டும் என்று வாலிபர்களால் எதிர் பார்க்கப்படும் தோழர் ஜவஹர்லால் அவர்களைப் பற்றியேயாகும்.

இவர் தன்னை பொதுவுடமைக்காரர் என்று பொதுஜனங்கள் கருதும் படியும் நடந்து வந்திருக்கிறவர். ஆனால் காந்தியாரின் அபிமான புத்திரர் என்றும், அந்தரங்க சிஷ்யர் என்றும் காட்டிக் கொள்வதால் கிடைக்கும் பயனையும் விட்டுவிட சம்மதிக்காதவர். அல்லது காந்தியாரின் தாக்ஷண்ணியத்துக்குக் கட்டுப்பட்டவர் என்றாவது சொல்லியாக வேண்டிய நிலையிலிருப் பவர்.

காந்தியாரிடத்திலும், காந்தீயத்தினிடத்திலும் சலிப்பும், வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட வாலிபர்கள் பலருக்கு தோழர் ஜவஹர் லாலிடத்தில் ஒருவித நம்பிக்கை இருந்து வருவதை நாம் அறிகிறோம்.

ஆனால் இந்த நம்பிக்கைகள் ஜவஹர்லால் அவர்களின் ஏதோ இரண்டொரு வாய் வார்த்தையைக் கேட்டு ஏமாந்து போய்க் கொண்டிருப்பதாலேயே ஒழிய அவருடைய செய்கையைக் கொண்டோ அல்லது அவரது உறுதியான அபிப்பிராயத்தைக் கொண்டோ என்று சொல்லி விடுவதற்குப் போதிய ஆதாரம் ஒன்றையும் நம்மால் காணமுடியவில்லை. அவருக்கு இரணடுவித மனப்பான்மை இருந்து வருகிறது என்பதே நமதபிப்பிராயம்.

அதாவது வானதத்துவ நிபுண உபாத்தியாயர் ஒருவர் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளுக்கு கிரஹணத்தைப் பற்றிப் போதிக்கும் போது கிரஹணம் என்பதில் உண்மையை வானசாஸ்திரப்படி போதித்து விட்டு அதாவது பூமியும் சூரியனும் சுற்றுவதினால் ஒன்றின் நிழலில் ஒன்று மறைபடும்போது ஏற்படும் மறைவுக்கு கிரஹணம் என்று சொல்லப்படுகின்றது என்று சொல்லிவிட்டு அதே வாத்தியார் தன்வீட்டுக்குப் போனவுடன் சூரிய சந்திரர்களுக்கு ஏற்பட்ட சாப தண்டனையாக ராகு, கேது என்கின்ற பாம்புகள் விழுங்குகின்றன என்று கருதி ஸ்நானம், ஜபம், விரதம் முதலியவைகள் செய்வது போல் தோழர் ஜவஹர்லால் அவர்கள் வாலிபரிடம் பேசும்போது ஒரு விதமாகவும் பிறகு காந்தியாரிடம் இருக்கும்போது ஒருவிதமாகவும் நடந்து வருகிறார். இவை இரண்டில் அவருடைய உண்மையான மனப்பான்மை என்ன என்று கண்டுபிடிப்பது கஷ்டமாகவே இருக்கிறது. ஆனால் அரசியல் உலகில் உள்ள மற்ற பெரியவர்கள் என்று சொல்லப்படுகின்ற அனேகருக்கு ஜவஹர்லால் அவர்களிடம் மதிப்பு இல்லை என்பதும், ஜவஹர்லால் அவர்களுக்கும் மற்ற பெரியார்களில் காந்தியாரைத் தவிர மற்றவர்களிடம் மதிப்பு இல்லையென்பதும் கவனித்துப் பார்த்தவர்களுக்கு நன்றாய் விளங்கும்.

ஜவஹர்லால் அவர்களின் பொதுவுடமைக் கொள்கையையும், அவரது பூரண விடுதலை கொள்கையையும், வெளி தேசத்து பொது உடமைக் கொள்கைக்காரர்களும் பூரண விடுதலைக்காரர்களும் நம்பி அவரை உலக ஏகாதிபத்திய மறுப்பு சங்கத்திற்கு உபதலைவராக தெரிந்தெடுத்து இருந்தார்கள். ஆனால் தோழர் ஜவஹர்லால் அவர்கள் காந்தி-இர்வின் ராஜியை ஒப்புக் கொண்டவுடன் இவரை மேற்படி உபதலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டார்கள். இதற்காக வேண்டியே ஜவஹர்லால் அவர்கள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஒரு போர் நிறுத்த (அதாவது தர்க்கால சாந்தியாய் இளைப்பாறுவதாக செய்து கொண்ட) நிபந்தனைகளே தவிர சமாதான உடன்படிக்கை அல்ல என்று பல தடவை கூறினார். இப்போதுகூட அப்படியே சொல்லி வருகிறார் என்றாலும் இவரை உபதலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டது மாற்றப்படவில்லை.

இவர் இந்தமாதிரி காந்தி-இர்வின் ஒப்பந்தத்துக்கு வியாக்கியானம் சொன்னதினாலேயே வில்லிங்டன் பிரபு “ஒப்பந்தப்படி காங்கிரசுக்காரர்கள் நடந்து கொள்ளவில்லை” என்று சொல்லி ராஜியை அலட்சியம் செய்ய வேண்டியவரானார்.

இப்போது தோழர் ஜவஹர்லால் அவர்கள் சிறையிலிருந்து காந்தி யாரைச் சந்தித்துப் பேசியபிறகு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் காந்தி யாரின் இன்றைய நடவடிக்கைகள் எல்லாம் அவருடைய (காந்தியாருடைய) சொந்த விஷயமே ஒழிய தேசிய விஷயமல்லவென்றும் ஆனாலும் அத னால் தேசீய விஷயம் பாதிக்கப்படலாம் என்றும் சொன்னதோடு தேசீய விஷயம் வேறு என்றும் சொல்லி இதற்கும் அதற்கும் சம்மந்தமில்லை யென்று ஜனங்கள் கருதும்படி பிரிவுபடுத்திக் கூறிஇருக்கிறார்.

இதுமாத்திரமல்லாமல் சத்தியாக்கிரகம் என்பதில் மததத்துவம் இருக் கிறது என்பதை தான் நம்புவதில்லை என்றும் அது ஒழுக்கமுள்ளதா, அனுபவத்தில் பலன் தரத்தக்கதா என்பதைப் பொருத்தேதான் தான் சம்மந் தப் பட்டிருந்ததாயும் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து காந்தியாருடைய தத்துவத்தை இவர் தேசீய பொதுக்காரியத்தைச் சேர்ந்தது என்று கருத வில்லை என்பதும் எல்லாவற்றையும் இவர் அப்படியே ஒப்புக்கொள்ளுபவர் அல்ல என்பதையும் காட்டிக் கொள்ளுகிறார் என்றே கருதவேண்டி இருக்கிறது.

ஆனால் இந்த அபிப்பிராயம் இவருக்கு எதுவரையில் இருக்கும் என்று கண்டுபிடிக்க முடியாது. மறுபடியும் காந்தியாருக்கு நெருக்கடியான சமயம் வரும்போது மறுபடியும் வேதாளம் முருங்கமரத்தில் ஏறிவிட்டது என்பது போல காந்தியின்றிக் கதி இல்லை என்கின்ற அடிமை மந்திரத்தை உச்சரித்து விடுவார் என்று நான் இவரது பழய நடவடிக்கையில் இருந்து கருதவேண்டி இருக்கிறது.

இவ்வளவும் தவிர இந்த இரண்டு மூன்று நாளாய் தோழர்கள் காந்தியும், ஜவஹர்லாலும் பேசிய பேச்சுக்கள் வெளியிட தைரியமற்றதாய் விட்டதும் வெளிப்படையானதும், தெளிவானதுமான ஒரு அறிக்கையை வெளியிட முடியாமல் இரண்டருத்தமுள்ள வார்த்தைகளையும், வாசகங்க ளையும் கொண்டே இருவரும் அறிக்கை வெளியிட்டிருப்பதும் இனியும் இருவருக்குள்ளும் ஒரு முடிவு ஏற்படாமல் இனியும் இருவரும் செய்து கொள்ளும் கடிதப் போக்குவரத்தினாலேயே விளக்கக்கூடும் என்று முடிவு செய்து கொண்டதும் ஆகிய காரியங்களால் இருவருக்கும் பலமான அபிப் பிராய பேதம் இருப்பதாகவும் உணரக் கிடக்கின்றது. இனி இருவருக்கும் இடையில் பஞ்சாயத்து தரகர்கள் சரோஜனிதேவி போன்றவர்களின் தூதினால் இன்னும் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

எது எப்படியானாலும் இப்போது ஜனங்கள் செய்யவேண்டிய வேலை என்ன என்பது இது வரையில்செப்பனிடமுடியவில்லையென்பதும், காந்தீயம் கடைசி மூச்சில் இருக்கின்றது என்பதும் அது அடியோடு புதைக் கப்பட்டு பல தேசீயவாதிகள் என்பவர்களாலேயே “உத்திரக்கிரிகைகள்” நடந்துவருகின்றது என்பதும் தெளிவாய் விளங்குகின்றது.

ஆனால் தீவிர உணர்ச்சி உள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் வாலிபர்களுக்கு இவைகளை ஒப்புக் கொள்ள வெட்கமாயிருப்பதும் துணிந்து வந்து காந்தீயத்திற்கு எதிரான காரியங்களைச் செய்ய தைரியமில்லாமல் இருப்பதும் பார்க்க நமக்குப் பரிதாபமாகத்தான் இருக்கின்றது. என்றாலும் இதைத்தவிர வேறு மார்க்கமில்லையென்றும் இன்னும் எத்தனை நாளைக்கு இம்மாதிரி வெட்கப்பட்டும் தைரியமற்றும் கிடந்தாலும், தங்களை வீரர்கள் என்று காட்டிக் கொள்ள இனியும் எத்தனை தரம்தான் ஜெயிலுக்குப் போனாலும் முடிவில் சு.ம. கொள்கைகளைத்தான் ஒப்புக்கொண்டு அதன் படிக்குத்தான் நடந்து ஆக வேண்டுமென்றும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 17.09.1933)

Pin It