பரமசினைப் பார்த்தீர்களா?

ஆகாய விமானத்தில் போய் இமயமலையின் அதிக உயரமான சிகரமாகிய ‘எவரஸ்ட்’ டைப் பார்த்து விட்டு வந்தார்கள், என்று பத்திரிகைகள் கூறுகின்றன.

“அங்கே எங்கள் பரமசிவம் இருந்திருப்பாரே, பார்த்தீர்களா” என்று கேட்க வேண்டுமென்று லோகோபகாரப் பிள்ளை ஆவலோடிருக்கிறார்.periyar bharathidasan 350மாமாங்கம்

உபாத்தியாயர்:- சமீபத்தில் நடந்த மகாமகத்தை (மாமாங்கம்) பற்றி நீ தெரிந்து கொண்ட தென்ன?

பிராமணப் பையன்:- நமது ஹிந்துக்கள் இந்தப் பண நெருக்கடியான காலத்தில்கூட எவ்வளவு கடவுள் பக்தியோடு இருக்கிறார்கள், என்பதைக் காட்டுகிறது சார்.

உபாத்தியாயர்:- சரி, நீதெரிந்து கொண்டதென்ன?

சு.ம. பையன்:- யோக்கியமாய் உலகத்தில் வாழ்வதைவிட ஏமாற்றிக் கொண்டே வாழ்வது ரொம்ப லகுவு என்பது தெரிகிறது சார்.

ஆஸ்திகக் குழந்தைகள்

“குறித்த அளவுக்குமேல் உஷ்ணமோ குளிர்ச்சியோ ஒருவன் உடம் பில் ஏற்பட்டதும் அவன் இறந்து விடுவதற்குக் காரணமென்ன? என்று வைத்தியப் பள்ளிக்கூட (Medical college) ஆசிரியர் வகுப்புப் பிள்ளைகளைக் கேட்டார்,

‘ஹிந்து’ மாணவன்:- அது அவனுடைய தலைவிதி சார்.

கிறிஸ்து மாணவன்:- அது கர்த்தனுடைய கட்டளை சார்.

முஸ்லீம் மாணவன்:- அல்லாஹ்விடைய ஆக்ஞை சார்.

இந்த பதில்களைத் தப்பு என்று சொல்கிறவர்களெல்லாம் பச்சை நாஸ்திகர்கள் என்பதே நமது அபிப்பிராயம்.

கொசுவலையா? கடவுளா?

“கொசுக்கள் நிறைந்த இடத்தில் நீ வசிக்கிறாய். உன்னிடம் 5 ரூபாய் தான் பணமிருக்கிறது. நீ கடவுளுக்காக ஒரு பிரார்த்தனை செய்ய வேண்டி யிருக்கிறது. நீ கொசுவலை வாங்குவாயா? பிரார்த்தனைக்குச் செலவிடுவாயா? காரணங்களோடு விடை கூறவும்” என்று ஒரு சுகாதார உபாத்தியார் பரீட்சைக் கேள்விகளில் கேட்டிருந்தார்.

“நான் கொசுவலைதான் வாங்குவேன். ஏனெனில் நமது உடம்பைப் பார்த்துக் கொண்டல்லவா கடவுளைப் பற்றி பிறகு நினைக்க வேண்டும்” என்று 46 குழந்தைக்கு 44 குழந்தைகள் பதில் எழுதியிருந்தன.

இந்த 44 குழந்தைகளும் சு.ம. காரர் வீட்டுக் குழந்தைகள் அல்ல என்பதைக் கடவுளுக்காக வக்காலத்து வாங்கியிருக்கும் வக்கீல் குழாங்களுக்கு அர்ப்பணம் செய்கிறோம்.

“பிச்சையெடுக்குமாம் பெருமாள்:-”

நீடாமங்கலத்திலும், காரைக்குடியிலும் சு. ம. தோழர்களைப் போலீசார் அகாரணமாய் அடித்து விட்டதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

ஊரை ஏமாற்றிச் சேர்த்திருக்கும் பார்ப்பான்கள் பணத்தைப் பிடுங்குவதற்கு நல்ல யோசனை செய்தீர்கள். போலீஸ்காரர்களே! விடாதீர்கள்! பஸ். ஜட்கா இல்லாத ஊர்களில் இது ஒரு சரியான வழிதான்!

திடீர் சந்தேகம்

ஒருவன்:- வருணாச்சிரமக் கட்சிக்கும் ‘ஜஸ்டிஸ்’ கட்சிக்கும் என்ன வித்தியாசம்?

மற்றவன் :- வருணாசிரமக் கட்சியிலிருப்பார்களெல்லோரும் பூணூல் போட்டிருக்கிறார்கள், “ஜஸ்டிஸ்”கட்சியில் இருப்பார்களுக்கு அது கிடையாது.

(ஒரு திருத்தம்:- அதிலும் இரண்டொரு பதில் வெட்டு உண்டு. இதிலும் இரண்டொரு பதில் வெட்டு உண்டு.

'குறும்பன்' என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - உரையாடல் - 07.05.1933)

Pin It