periyar 343மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டுப் போகின்றது, அம்மன்கள் விக்கிரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டுப் போகின்றது, விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை மற்ற விக்கிரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம் முத்து ரத்தினம் திருட்டுப் போகின்றது.

இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது. அச்சு ஒடிகின்றது. இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில் அந்த விக்கிரகங்களில் அந்த தேர் வாகனங்களில் “புனிதத்தன்மை தெய்வத்தன்மை அருள் தன்மை ஆண்டவனை ஞாபகப் படுத்தும் தன்மை” முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா தயவு செய்து சொல்லுங்கள்.

இன்னும் ஒரே குட்டி சங்கதி. வட்டி வாங்குகின்றவர்கள் கோடீஸ்வரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் பாப்பராய்ப் போகிறான் என்பதைப் பார்த்தும் கேட்டும் இன்னமுமா பாழாய்ப்போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள். இன்னும் ஒன்றுதான், அப்புறம் ஒன்றுமில்லை.

துளியூண்டு சங்கதி. காவடி எடுத்துக்கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய்ப் போன சாமி இருக்குதுண்ணு நினைக்கின்றீர்கள்.

மூடர் :- சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அது தான் கடவுள்.

பதில் :- சரி, அப்படியானால் அந்தக் காரணத்தை கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம். (பகுத்தறிவு)

மூடர் :- கடவுளைப் படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது முட்டாள் தனமாகும்.

பதில் :- அப்படியானால் உலகப் படைப்புக்கு காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.

மூடர் :- உங்களோடு யார் பேசுவார்கள்.

பதில் :- சரி நல்ல காரியமாச்சுது. “சனியன்” தொலைந்தது. ஆனால் காணாத இடத்தில் குலைக்காதே.

(குடி அரசு - உரையாடல் - 04.01.1931)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.