கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சீர்காழியில் சுயமரியாதை முழக்கம்

சகோதரர்களே! பெரியோர்களே!

சில வருஷங்களுக்கு முன் ஒத்துழையாமைக் காங்கிரஸ் பிரசாரத்தின் போது இவ்வூருக்கு வந்திருக்கிறேன். ஆனால், இன்றோ சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி உங்களுக்கு எடுத்துக் கூற வந்திருக்கிறேன். சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் எதிரிகளும் அவர்களது ஆள்களும், தப்பும் தவறுமாகத் திரித்துக் கூறி வருகின்றார்கள். உங்கள் ஊரிலும் அதே காரியம் சற்று அளவுக்கு மீறிச் செய்து விட்டதால் வெகுபேர் ஆச்சரியப்பட்டு பார்க்கலாம் என்றே நான் எதிர்பார்த்ததற்கு மேலாகவே இங்கு கூடியிருக்கின்றீர்கள். இது நமது இயக்க எதிரிகள் தங்களுக்குத் தெரியாமலே நமக்குச் செய்த உதவியாகும். மற்றும் என்றுமே இப்படிப்பட்ட பொதுக் கூட்டங்களுக்கு வராத அரும்பெரும் கனவான்களும் விஜயம் செய்திருப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது.

periyar 34என்னை அன்னிய மதப் பிரசாரகன் என்றும், சர்க்கார் பிரசாரகன் என்றும் எழுதப் பட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நான் இந்து மதம் என்று சொல்லப்படும் மதத்தைத் துவேஷம் செய்து, அன்னிய மதங்கள் என்று அழைக்கப்படும் மதங்களை ஆதரிப்பதாகவும் அவர்களிடம் பிரதிபலன் பெறுவதாகவும் உங்கள் ஊரில் சிலர் கட்டுகட்டி விட்டிருக்கின்றதாக கேள்விப்பட்டேன். எங்கள் ஜில்லாவிலும் ஆலயங்களும் தேவஸ்தான போர்டும் உண்டு. அதில் காரியதரிசியாகவும், பிரசிடெண்டாகவும், வைஸ் பிரசிடெண்டாகவும் 20, 30 - வருஷகாலமாய் இருந்து வருகின்றேன். எங்கள் குடும்பத்தாரிலும் பல கோவில்கள் கட்டப்பட்டும், உற்சவங்கள் செய்யப்பட்டும் வருகின்றன.

எனவே, என்னுடைய இந்தச் சுமார் 25 வருஷ நிர்வாகத்திற்குள்ளாக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து பல கோவில்கள் ரிப்பேர் செய்தும், நிர்வகித்தும் வந்ததின் பயனாக அவற்றின் பயனின்மையையும் அவற்றால் ஏற்படும் தீமைகளையும் நான் நன்றாய் அறிந்திருக்கின்றேன்.

இந்து மதத்தை எப்படிக் கண்டிக்கின்றேனோ அதே கண்ணுடனேயே தான் மற்ற சமயங்களையும் பார்த்துக் கண்டித்து வருகின்றேன். மற்ற சமயக்காரர்களுக்கும் என்மீது சிறிது அபிப்பிராய பேதம் இருக்கலாம். பிறவியில் உயர்வு தாழ்வு ஏமாற்றம் ஆகியவைகளுக்கு மதத்தின் பேரால் இடம் கொடுக்க முடியாது. ஆதலால் இதுவரை ஏமாற்றி வந்தவர்களுக்கு நமது பிரசாரம் கஷ்டமாகத்தான் இருக்கும். அதற்காக அவர்கள் எதையும் சொல்லவும் துணிவார்கள். அதற்கு நாம் பயப்படக்கூடாது.

அதுபோலவே, நான் சர்க்காரை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. எனக்கு எந்த சர்க்கார் தயவும் தேவையில்லை. எனது வாழ்க்கையில் ஸ்தல ஸ்தாபன சம்பந்தமாக என் சக்திக்கியன்றவரை எவ்வளவு உயர்ந்த பதவியிலிருந்து பார்க்க வேண்டுமோ அதெல்லாம் பார்த்தாகி விட்டது. தாலூகா போர்டு, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, ஆனரரி மேஜிஸ்டிரேட்டு ஆகிய வேலைகளில் இருந்து பார்த்தாய் விட்டது. முனிசிபல் சேர்மனாகவும் இருந்தாய் விட்டது. இவைகளை எல்லாம் நானே ஒரே நிமிஷத்தில் ஒன்றாய் ஒரே காகிதத்தில் ராஜிநாமாக் கொடுத்துவிட்டு வெளிவந்து விட்டேன். மற்றபடி சர்க்கார் உத்தியோகம் ஏதாவது எதிர்பார்க்கிறேன் என்பதற்கோ முதலில் எனக்கு ஆங்கிலம் தெரியாது, இவ்வளவு கிழ வயதான நான் இனி எந்த உத்தியோகத்திற்கு லாயக்காயிருக்க முடியும்.

அன்றியும், மூன்று நான்கு தடவை சிறைவாசம் தண்டனை அடைந்தவனுக்கு சர்க்காரில் உத்தியோகம் தான் கொடுப்பார்களா? என்னை சர்க்கார் தங்கள் அடிமையாக ஏற்றுக் கொள்ள நம்புவார்களா? இன்னமும் சி.ஐ.டி. போலீசார் என்கூடவே இருக்கிறார்கள். இதோ இந்தக் கூட்டத்திலும் சி.ஐ.டி. நான் பேசுவதை எழுதுகின்றார்கள், பாருங்கள்.

ஒரு சமயம் நான்தான் பலவிதத்தும் உத்தியோகத்திற்கு லாயக்கில்லை யானாலும் எனது பிள்ளை குட்டிகளுக்காவது உத்தியோகம் வாங்கிக் கொடுக்க, சர்க்காருடன் ஒத்துழைக்கக் கூடுமென்றாலோ, எனக்குப் பிள்ளையும் இல்லை; குட்டியும் இல்லை; என் சகோதரருக்கு சென்ற வாரத்தில் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன் எனது அண்ணன் குழந்தை ஒன்றைச் சீமைக்கு அனுப்பி அங்கு சில வருஷ காலம் படிக்க வைக்கப்பட்டான். மறுபடியும் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தேன். பாதி வழியில் ‘இன்புளூயென்சா’ ஜுரம் கண்டு இங்கு வந்து மதனபள்ளியில் இறந்துவிட்டான். என் பந்துக்களிலும் உத்தியோகத்திற்கு லாயக்கானவர்கள் எவரும் இல்லை. ஆகவே, எனக்கு எவ்விதத்திலும், சர்க்கார் கூட்டுறவோ, தயவோ வேண்டியதில்லை. எனக்கு ஜீவனத்திற்கும், என் தகப்பனார் சம்பாதித்து வைத்துவிட்டுப் போயிருக்கின்றார். அது எனக்குப் போதும், மற்றும் பலருக்கு உணவளிக்கவும் உதவும். ஆதலால் ஜீவனத்திற்கும் யாருடைய தயவும் தேவையில்லை, மற்றபடி காங்கிரசுக்கு நான் விரோதி என்றும் அதை நான் திட்டுகிறேன் என்றும் கூறப்படுகின்றது.

ஆம், இப்பொழுதும் அதையே கூறுகிறேன். காங்கிரஸ் என்ற சபை திரு.காந்தியின் தலைமையின் கீழ் இரண்டு மூன்று வருடம் தேச மக்களின் நன்மைக்குப் பாடுபட்ட காலத்தில் அதிலிருந்த தேசீய வீரர்களில் பெரும்பாலோர் இன்று அதில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அக்காலத்தில் நான் காங்கிரசிற்கு எவ்வளவு உழைத்தேன் என்பதும் உங்களுக்குத் தெரியாததல்ல. ஒத்துழையாத் திட்டத்தில் அதி தீவிரமாக நின்று உண்மையில் பாடுபட்ட ஒரு சிலரில் நானும் ஒருவன் என்பதுடன், நான் மாத்திரமல்லாமல் எனது குடும்பத்தாரும், அக்காலத்தில் திரு.காந்தியின் தலைமையில் காங்கிரசைப் போற்றி அத்திட்டம் வெற்றியுறப் பாடுபட்டோம். காங்கிரசானது, தியாகம், கஷ்டம், சிறை என்பவைகளுடன் பிணைக்கப் பட்டிருந்தபோது, இந்நாட்டிலுள்ள எல்லா அரசியல் சங்கங்களும், சர்க்காரும் காங்கிரசை எதிர்த்த காலத்தில், அக்காங்கிரசின் இம்மாகாணக் கமிட்டியில் தலைவர், காரியதரிசி என்ற பதவிகளைப் பெற்று நான் ஊழியம் செய்ததுடன், என் குடும்பத்தாரும் அவ்விதமே வேலை செய்தார்கள் என்பதற்கும் ஒரு உதாரணம் கூறி அதை முடித்து விடுகிறேன்.

ஒத்துழையாமை மும்முரமாய் நடந்து நான் சிறையில் இருக்கும்போது சர்.சங்கரன் நாயர் தலைமையில் பம்பாயில் ரவுண்ட் டேபிள் கான்பரன்ஸ் ஒன்று நடந்தது. அதன் பிரதிநிதியாய் திரு.காந்தியும் போயிருந்தார். அப் பிரதிநிதி கூட்டத்தில் முக்கியஸ்தர்கள், திரு.காந்தியைப் பார்த்து, மற்ற சகாக்களான அங்கத்தினர்கள் சொல்லும் திட்டங்கள் இருக்கட்டும். தாங்கள் (திரு.காந்தியை) சமாதானத் திட்டங்களைப் பற்றிப் பேசுமுன் ஒத்துழையாமையைச் சற்று நிறுத்தி வையுங்கள் என்று கேட்டார்கள். அதற்குத் திரு. காந்தி கூறிய பதில் என்ன? “அது முடியாத காரியம். ஏனென்றால் அது என் இஷ்டமல்ல, மற்ற காங்கிரஸ்காரர்களையும் குறிப்பாக, தமிழ் மாகாணத்தில் ஈரோடு என்ற நகரில் உள்ள இரு பெண்மணிகளையும் கேட்டுக் கொண்டு தான் ஒத்துழையா திட்டத்தைத் தள்ளி வைப்பதைப் பற்றி யோசிக்க முடியுமேயன்றி, நானாக எதுவும் சொல்லுவதற்கில்லை” என்று கூறினார்.

அவ்விரு பெண்களும் யார் தெரியுமா? எனது மனைவி ஒன்று; எனது தங்கை ஒன்று. ஆக இவ்விரு பெண்களேயாகும் (கரகோஷம்) இந்த விஷயம் 1922 -ல் ஜனவரி 19 முதல் 22 தேதிக்குள் ‘இந்து’ பத்திரிகையில் இருக்கின்றது. வேண்டுமானால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பெருமைக்காகச் சொல்ல வரவில்லை. மற்றெதற்காக என்றால், திரு.காந்தியும், காங்கிரசும் நாட்டிற்கு உண்மையில் பலனுடைய நல்ல திட்டத்தையும் கொள்கையையும் கொண்டிருந்த காலத்தில் நான் மாத்திரமல்லாமல், என் குடும்பமும் பெண்களும் கூடச் சற்றும் சலிப்பின்றி அதில் பாடுபட்டவர்களே யன்றி, இன்று என்னைக் குறை கூறும் நண்பர்களைப்போல் தியாகம் செய்ய வேண்டிய காலத்தில் ஓடி ஒளிந்தவன் நானல்ல என்பதற்காகவேயாகும். இதுவே என்னைப் பற்றி முதலில் உங்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டிய வார்த்தை. இதில் தற்பெருமைக்காக ஏதாவது சொல்லப்பட்டதாகக் கருதாதீர்கள். உங்களுக்கு என்னைப் பற்றி பார்ப்பனர்களும் அவர்கள் கூலிகளும் செய்திருந்த விஷமப் பிரசாரத்தின் உண்மையை நீக்கவே இதைச் சொன்னேன்.

அரசியல் புரட்டு

நிற்க. அரசியல் உலகில் இன்று விளம்பரப்பட்டிருப்பவர்கள் 1. காங்கிரஸ்காரர்கள், 2. பூரண சுயேச்சைக்காரர்கள். இவர்களின் யோக்கியதை யாது இவர்கள் அரசியல் என்பதின் பெயரால் செய்யும் - செய்து வரும் செய்கைகள், இவர்கள் முன்பின் செய்த தியாகங்கள் என்பவைகள் என்ன வென்பதைச் சற்று ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

ஒரு காங்கிரஸ் தலைவர், மேடையில் பேசும்போது “ஆங்கில அரசாங்கம் மிகவும் மோசம், அதை அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்.” என்று கூறுவார்; நீங்களும் கை தட்டுவீர்கள். அவர் மகனும், அண்ணனும், தம்பியும் சம்மந்தியும் சர்க்காரில் மாதம் ஒன்றுக்கு 500, 1000, 2000, 3000 ரூபாய் வாங்கும் படியான முன்சீபு, ஜட்ஜ், கலெக்டர் ஆகிய உத்தியோகத்தில் இருப்பார்கள். இவர் பேசும் ‘வீரப் பேச்சு’ அவர் உறவினர்களின் உத்தியோகத்தை வலுப்படுத்தவும் உயர்த்தவும் தான் உதவுமே தவிர உங்களுக்கோ, நாட்டிற்கோ கடுகளவு நன்மை உண்டாவதற்கு அதில் ஒன்றுமே இருக்காது.

மற்றொரு காங்கிரஸ் காரியதரிசி, ரெங்கசாமி அய்யங்கார், இங்கு பேசும் போது, “சர்க்காரை முட்டுக்கட்டை போட்டு திக்குமுக்கலாடச் செய்ய வேண்டும். சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் தாடியைப் பிடித்து ஆட்ட வேண்டும்” என்று பேசுவார். அங்கு அவர் தம்பி சர்க்கார் என்கின்ற குகைக்குள் புகுந்து வெள்ளைக்காரர் என்கின்ற சிங்கத்தின் தயவுக்கு வாலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதற்கு அதிகார வர்க்கத்தின் காலடியில் கிடந்து சர்க்கார்வாதியாய் இருப்பார்.

திரு.எஸ்.சீனிவாசய்யங்கார் வெள்ளைக்கார சம்பந்தமே கூடாது என்பார். ஆனால் காலையில் எழுந்ததும் வெள்ளைக்காரர்கள் கோர்ட்டுகளில் போய் அவர்கள் காலடியில் நின்று கொண்டு “அப்பா! அய்யா! பிரபுவே! துரையே! சாமியே! என்று கெஞ்சி, மாதம் 5000, 10000 சம்பாதித்துக் கொண்டிருப்பார். அவர் சம்மந்தி மாமன் மைத்துனன் எல்லோரும் சர்க்காரிடம் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் அடிமைகளா யிருப்பார்கள். அவர்கள் பிரமோஷனுக்கு இவர்கள் பூரண சுதந்திரம் உதவியாகவும் இருக்கும்.

மற்றும் மகாகனம் சீனிவாச சாஸ்திரி ஒரு பெரிய தேசியவாதி. அவர்கள் மகன் சர்க்காரில் µ 1க்கு ஆயிரம் ரூபாய் சம்பளவாதி. திரு.ரங்காச்சாரி ஒரு பெரிய தேசியவாதி, அவர்கள் மக்கள் தற்குறிகள், எல்லாம் µ 1க்கு 500, 1000 ரூபாய்கள் வாங்கும்படியான சர்க்கார் சம்பளவாதிகள்.

திரு.மணி அய்யர் பென்ஷன் பெற்றபின் ஒரு பெரிய தேசியவாதி. அவர்கள் மக்கள் ³ சர்க்கார் சம்பளவாதி, திரு.கிருஷ்ணசாமி அய்யர் பெரிய தேசியவாதி, அவர் மக்கள் சகோதரர்கள் µ 1000, 500 சம்பளவாதி.

சர் சி.பி. ராமசாமி அய்யர் ஒரு பெரிய தேசியவாதி. காங்கிரஸ் காரியதரிசி, உத்தியோகக் காலத்தில் µ 2000, 5000 சம்பளவாதி, உத்தியோகம் போய் விட்டால் மறுபடியும் தேசியவாதி.

திரு.விஜயராகவாச்சாரியார் ஒரு பெரிய கிழ தேசியவாதி. அவர் சகோதரரும் மருமகனும் சர்க்கார் சம்பளவாதிகள். பார்ப்பனர்களில் உத்தியோகத்திற்கு லாயக்கில்லாதவர்களும் உத்தியோகம் பார்த்து பென்ஷன் வாங்கினவர்களும் பெரிய தேசீயவாதிகள், அவர்கள் பிள்ளைகுட்டி பந்துக்களான மற்றவர்கள் சர்க்கார் சம்பளவாதிகள். இதை நீங்கள் யாராவது மறுக்க முடியுமா?

காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு காங்கிரசின் பலனாக இந்த 30, 40 வருடங்களாக சமீபகாலம் வரை எல்லா ஸ்தல ஸ்தாபனங்களையும் சர்க்கார் உத்தியோகங்களையும் பார்ப்பனர்களே கைப்பற்றும் படியாகி விட்டது. அதற்குமுன் எல்லா உத்தியோகங்களிலும் பார்ப்பனரல்லாதாரே இருந்தார்கள். ஆனால் “தேசீய ஸ்தாபனமாகிய” காங்கிரஸ் ஏற்பட்டபிறகு ஓட்டு ஜனத் தொகையில் நூற்றுக்கு மூன்று வீதமுள்ள பார்ப்பனர்களே நூற்றுக்கு தொண்ணூற்றேழு உத்தியோகங்களை கைப்பற்றி வாழ முடிந்தது என்றால் காங்கிரசின் தேசீயம் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் சம்பாதிக்கும் ஸ்தாபனம் என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?

காங்கிரஸ் தீர்மானம் ஆக ஆக, பொறுப்பாட்சி கேட்கக், கேட்க, சீர்திருத்தம் வழங்க வழங்க உத்தியோகங்கள் அதிகமாயிற்றே அல்லாமல் கந்தாயம், வரிவட்டம் குறைந்தபாடில்லை. சர்க்காருக்கு படித்த கூட்டத்தின் தொந்திரவை அடக்க எப்படியாவது உத்தியோகங்களை உற்பத்தி செய்து அவர்களுக்கு லஞ்சமாக அவற்றை கொடுத்துத் தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இதை சர்க்கார் செய்யாவிட்டாலோ, நாட்டில் பாமர மக்களின் பேரால் பார்ப்பனர்களின் கிளர்ச்சி அதிகமாகின்றது. இந்த மாதிரி காங்கிரசாலும் அதனால் உண்டாகும் உத்தியோகங்களாலும் அவற்றைப் பார்ப்பனர்களுக்கே கொடுப்பதினாலும் சர்க்காருக்கு நாளுக்கு நாள் அதிக சவுகரியம் ஏற்படுகிறது. அதனால் தான் காங்கிரசு என்றால் சர்க்காராரும் அதற்கு உதவி செய்து வந்தனர்.

வெள்ளைக்காரர்கள் சுகமும், சம்பாத்தியமும் பெறவே அவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆங்கில சர்க்காருக்கும், அவர்களது கொள்ளைக்கும், ஏமாற்றத்துக்கும் உடனிருந்து ஏமாற்ற நம்மை காட்டிக் கொடுத்தும் உளவாளாக இருந்தவர்கள் இந்த காங்கிரஸ்காரர்களே யாகும். இந்த காங்கிரஸ்காரர் என்னும் படித்த கூட்டத்தார் நமது நாட்டில் பாமரர்களை சர்க்கார் கொடுமையிலிருந்து காப்பாற்றுவதாக மேடைகளில் பேசிவிட்டு நம்மை சர்க்காருக்கு காட்டிக் கொடுத்து அதிக அடிமைத் தனத்திற்கு ஆளாக்கியதோடு நமது தலை மீது சுமக்க முடியாத அதிக வரியை விதிக்கவும் யேதுவாய் இருந்திருக்கிறார்கள்.

இன்னும் காங்கிரசால் சுயேச்சை, சுயராஜ்யம், விடுதலை, பூரண சுயராஜ்யம், ஹோம்ரூல் என்ற எண்ணற்ற அரசியல் கட்சிகள் நாட்டில் தோன்றின. இவைகள் ஒவ்வொன்றின் பேச்சும், பிரசாரமும், தீர்மானமும், கிளர்ச்சியும் ஆகிய எல்லாம் பாமர ஜன சமூகத்தை காப்பாற்ற வேண்டுமென்ற பல்லவியைப் பாடிக் கொண்டு புதிது புதிதான உத்தியோகங்களும், கமிட்டிகளும், அங்கத்தினர் பதவிகளும், தனித்தனி இலாக்காக்களும், வெளிநாட்டுக்குப் பிரதிநிதிகளாகச் செல்லும் பெருமைகளும் மற்றும் இத்தகைய புதுப்புது சனியன்கள் தோன்றி நன்மையும், நாட்டையும் கெடுத்து, அதிக பளுவான வரியை சுமத்தி ஜனசமூகத்தை பாழ்படுத்தி வந்திருக்கின்றனவேயன்றி வேறு என்ன பலன் உண்டாயிற்று?

உதாரணமாக காங்கிரசுக்கு முன் இருந்த தாசில்தார்கள், மாஜிஸ்ட்ரேட்டுகள், கோர்ட்டுகள், போலீஸ் ஸ்டேஷன்கள், ரெவின்யூ இலாகாவின் அளவுகள், ஹைக்கோர்டு ஜட்ஜுகள், சர்க்கார் நிர்வாக உத்தியோகஸ்தர்கள், இவைகளின் எண்ணிக்கை என்ன? இன்றைய எண்ணிக்கை என்ன? மூன்று மடங்கு அதிகமாயிருக்கின்றதா? இல்லையா? இவ்விதம் அதிகமானதற்கு அன்று இருந்ததைவிட இன்று மூன்று மடங்கு ஜனங்கள் அதிகமாக அபிவிருத்தி யடைந்திருக்கின்றார்களா? இல்லை. முன் இருந்த ஜன சமூக யோக்கியப் பொறுப்பு, கண்ணியம் இவைகள் கூட ஆயிரம் மடங்கு குறைந்து விட்டது என்பதைத் தவிர வேறு என்ன சமாதானம் சொல்லக் கூடும்?

உங்களிடம் வந்து “ஆங்கில பாஷை”, “அன்னிய பாஷை” “நீச பாஷை” அதைப் படிக்கக் கூடாது என்று சொல்லி விட்டு, உங்களை மோக்ஷத்திற்கு அனுப்பவும் உங்கள் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும்படி செய்யவும் என்று சொல்லி உங்களிடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு தங்கள் பிள்ளை குட்டிகளை மட்டும் அவ்வாங்கில பாஷையைப் படிக்கச் செய்து உங்கள் நன்மைக்கென்று காங்கிரசின் மூலம் உத்தியோகங்கள் உண்டாக்கி அவைகளை அவர்களே பெற்று வருகின்றார்கள். அதன் ரகசியம் என்ன என்பதை நீங்கள் சற்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? காங்கிரஸ் ஏற்பட்டதின் பலனாய் சத்திரத்தில் சாப்பிட்டு முனிசிபல் லாந்தர் வெளிச்சத்தில் படித்த பஞ்சாங்கப் பார்ப்பனர்கள், சாஸ்திரிகள் ஆகியவர்களின் வீட்டுப்பிள்ளைகள்தானே இன்று ‘நீச்ச’ அரசாங்கத்தில் - ‘கொடுங்கோல் அரசாங்கத்தில்’- ‘அன்னிய அரசாங்கத்தில்’ உள்ள உயர்ந்த உத்தியோகம் முதல் தாழ்ந்த உத்தியோகம் வரையில் நிரம்பி யிருப்பதுடன், ஜாதி ஆணவமும் கொண்டு நமக்கு எவ்வளவு கொடுமையும், அவமானமும், இழிவும் உண்டாக்க முடியுமோ, அவ்வளவையும் சற்றும் ஈவும் இரக்கமன்னியில் செய்து வருகின்றார்களா இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள்.

சமீப காலத்திற்கு முன்வரையில் ஹைகோர்ட் ஜட்ஜிகளாகவும் மாகாண நிர்வாக உத்தியோகஸ்தர்களாகவும் இருந்தது யார்? நம்மவர்களில் படித்தவர்களா? அல்லது பிரபுக்களாகவும் பெரும் பண்ணைகளாகவும் உள்ளவர்களா? அல்லது நம்மிடம் வாழ்வுக்கும் சாவுக்கும் சடங்குகள் பேரால் பிச்சை பெற்று வயிறு வளர்த்து வந்த பார்ப்பனக் கூட்டத்தார்களா என்பதை யோசித்துப் பாருங்கள்.

காங்கிரஸ் ஏமாற்றத்துக்கு முன் அதாவது வெள்ளைக்காரர்கள் பார்ப்பனர்களுக்கு உத்தியோகத்தின் பேரால் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியத்திற்கு முன், நமது தேசத்தில் வருஷம் ஒன்றுக்கு 25 அல்லது 30 கோடி ரூபாய்தான் சர்க்காருக்கு வரும்படி வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. காங்கிரசின் 50 வருஷ வேலையின் பயனாய் இன்று 140, 150 கோடி ரூபாய் வருஷா வருஷம் குடிகளிடமிருந்து வசூலிக்கப்படுகின்றது. ஒன்றுக்கு ஐந்து மடங்கு அதிகவரி ஏற்பட்டதால் கஷ்டப்படுவதும் கொடுமைப்படுவதும் விவசாயமும் வியாபாரமும் செய்யும் குடிகளாகிய நாமும் ஏழைகளும், கூலிகளும் அல்லாமல் பிச்சை எடுத்து வந்த கூட்டத்தாராகிய இன்றைய “பூரண சுயேச்சை” வாதிகளல்ல; ஒருபுறம் மாதம் லக்ஷக்கணக்கான சகல ஜனங்கள் இந்நாட்டில் வேலை இல்லாமல் வெளிநாடுகளுக்குக் கூலிகளாய்ச் செல்லவும் மற்றொரு புறம் சர்க்கார் இவ்விதம் ஒன்றுக்கு ஐந்து மடங்காக அதிக வரி வாங்கவும் என்ன அவசியம் ஏற்பட்டது. காங்கிரசுக்கு முன், ஆள் ஒன்றுக்கு மாதம் 2500 ரூபாய் சம்பளத்தில் 5 ஐகோர்ட்ட் ஜட்ஜிகள் இருந்தார்கள், இன்று மாதம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு 4000 ரூபாய் சம்பளத்தில் 15 ஐகோர்ட்டு ஜட்ஜிகள் இருக்கிறார்கள்.

எனவே, முன்வருஷம் 1-க்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் ஹைகோர்ட்டு ஜட்ஜிகள் சம்பளமென்றால் இன்று 15 பேருக்கு (பதினைந்து- நான்கு- அறுபது, அறுபதாயிரம், ஆறு - பன்னிரண்டு- எழுபத்திரண்டு) வருஷம் ஒன்றுக்கு ஏழு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய் செலவு ஆகிறது. முன்பு அரசியல் நிர்வாக அங்கத்தினராக 5,500 ரூபாயில் இரு மந்திரியும் அவர்களுக்குள்ள 2 காரியதரிசிக்கு 2000 ரூபாய் சம்பளமென்றால் இன்று 5500 ரூபாயில் 7 மந்திரிகளும் ஏற்பட்டு அவர்களுக்கு ஒரு பிரசிடெண்டு, வைஸ் பிரசிடெண்டு, மந்திரிகளுக்கு 5 காரியதரிசி, இவர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் சம்பளம் எத்தனை லட்சம் ரூபாய்கள் ஆகின்றது என்று பாருங்கள்.

முன்பு மாகாண சட்டசபையில் 8 பிரதிநிதிகள் என்றால் இன்று 150 பெயர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அக்கால படிச்செலவைவிட இன்று 15 மடங்கு அதிக படிச்செலவு ஆகிறதல்லவா? இவ்விதமாகவே, இனியும் “விடுதலை”யும், “சுயராஜ்ஜியமும்”, “சீர்திருத்தத் திட்டமும்” “பூரண சுயேச்சையும்” வளர்ந்து கொண்டே போனால் நமது கதி என்ன ஆவது? இதைச் சற்று சுயபுத்தியோடு யோசித்துப் பாருங்கள். இவ்விதம் பலவிதத்தும் அரசியல் பேராலும் மதத்தின் பேராலும் நம்மை ஏமாற்றிச் சகல பொறுப்புடைய பதவிகளிலும் உத்தியோகங்களிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து கொண்டு நம்மை இழிவும் செய்ய ஆரம்பித்த பின்புதான் நாம் சகிக்காது பாமர மக்கள் முன்னேற்றமடைய வேண்டும் என்றும், இருக்கும் உத்தியோகங்களிலும், இனிஆகும் உத்தியோகங்களிலும் நமக்கும் சரியான பங்கு விகிதம் கிடைக்க வேண்டுமென்றும் கேட்கத் தொடங்கி விட்டோம்.

நாம் இப்படிச் செய்தால், இனி பார்ப்பனர்கள் உத்தியோகத்தை ஒருநாளும் அதிகரிக்க மாட்டார்கள். இது பிராமணத் துவேஷமா? தேசத் துரோகமா? என்று தான் உங்களைக் கேட்கிறேன். காங்கிரசின் பேரால் தேசீயத்தின் பேரால் உங்களிடம் வந்து கூச்சல் போடும் நபர்களுக்கு நமது வரிகள் இன்னமும் ஒன்றுக்கு பத்து வீதம் உயர்ந்தாலும் அவர்களுக்கு ஒரு அம்மன் காசு நஷ்டம் வராது. ஆதலால் அவர்களுக்கு வரி உயர்வைப் பற்றி சிறிதும் கவலையில்லை. பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி இங்கு வந்து பேசி விடுகின்றார்கள்.

எனக்குப் பொதுவாக எந்தத் தனிப்பட்ட நபரிடமும் துவேஷமில்லை. எல்லோரிடமும் நான் நேசமாய்த்தான் இருக்கின்றேன். திரு.சீனிவாசய்யங்கார் முதல் எல்லாக் காங்கிரஸ்வாதிகளும் மற்றும் அவர்களது பிரசாரகர்களும் இப்போது என்னை வந்து காங்கிரசை நடத்துங்கள் என்று தான் கூப்பிடுகின்றார்கள். எத்தனையோ பேர் என்னைப் பற்றி எவ்வளவோ விஷமப் பிரசாரம் செய்தும், என் மீது அல்லது எனது சொந்த வாழ்க்கையில் ஒரு குற்றமாவது கண்டுபிடித்து எடுத்துக் காட்டினவர்கள் அல்ல; மற்றபடி புகழ்ந்தும் பேசிக் கொண்டு தான் வருகின்றார்கள்.

உதாரணமாக சென்ற வாரம் கூட திரு.சீனிவாசய்யங்கார் சென்னையில் ஒரு பிரசங்கம் செய்தபோது, திரு. ராமசாமி நாயக்கர் வந்து காங்கிரஸ் நிர்வாகப் பதவியை ஏற்றுக் கொண்டு நடத்தினால் நான் அவரைப் பின்பற்றத் தயாராயிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஒருக்காலமும் இந்தக் காங்கிரசின் பக்கம் திரும்பிப் பார்க்கவே மாட்டேன். ஒரு சமயம் காங்கிரசை ஒழிக்க என்னால் என் வாழ்நாளில் முடியாமற் போனாலும் போகலாம். ஆனாலும் எனது வாலிப வீரர்கள் ஆயிரக்கணக்காய் அதை ஒழிக்கக் காத்திருக்கின்றார்கள். அந்த தைரியத்தில்தான் நான் உயிர் விடுவேன்; அதில் எனக்குச் சந்தேகமில்லை.

மந்திரிகள் விஷயம்

இன்றைய மந்திரிகளான திருவாளர்கள் டாக்டர். சுப்பராயன் அவர்களும், எஸ்.முத்தைய முதலியார், சேதுரத்தினமய்யர் ஆகியவர்களும் காங்கிரஸ்காரர்களால் கண்டிக்கப்படுகிறார்கள். விசேஷமாய் கனம் எஸ்.முத்தைய முதலியார் அவர்கள் அடிக்கடி கண்டிக்கப்படுகிறார். துரோகம் விளைவித்ததாகத் தூற்றப்படுகிறார். இதன் ரகசியம் என்ன, ‘இரட்டை ஆட்சி பயனில்லை,’ என்பதும் மந்திரிகளை, ஆதரிக்கவோ ஆதரிப்பவர்களுக்கு ஆதரவு காட்டவோ கூடாதென்பதும் அக்காங்கிரசின் திட்டமும் தீர்மானமும் ஆகும்.

சென்ற சட்டசபை தேர்தல் முடிந்ததும் கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களின் மந்திரி சபையை அமைத்துக் கொடுத்தது இந்தக் காங்கிரசின் “வீரர்”களா அல்லவா? என்று கேட்கின்றேன். இவர்கள் சொன்னபடி ஆடுவதாக ஒப்புக் கொண்டதின் மீது திருவாளர்கள் ரெங்கனாத முதலியாரும் ஆரோக்கியசாமி முதலியாரும் காங்கிரசுக்காரர்களால் ஆதரிக்கப்பட்டார்கள். காங்கிரசுக்காரர்களின் இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்து மாகாண காங்கிரஸ் கமிட்டியிலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், சென்று திரு.எஸ். முத்தைய முதலியார் வாதாடினார். அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பேசுவதற்குக் கூட சந்தர்ப்பம் அளிக்க மறுத்துவிட்டு, தாங்கள் மந்திரிசபை ஏற்படுத்தினதையும் அதை ஆதரித்ததையும் பற்றியும் தங்களையே பாராட்டி ஒரு தீர்மானமும் செய்து கொண்டார்கள். இதற்குக் காரணம் என்ன வென்றால் பார்ப்பனரல்லாதார் கக்ஷி ஆகிய ஜஸ்டிஸ் கக்ஷியை அழிக்க இப்படிச் செய்ய நேரிட்டதாம். இதை அறிந்த பின் உண்மையான பார்ப்பனரல்லாத ரத்தம் ஓடும் எந்தப் பார்ப்பன ரல்லாதாராவது காங்கிரசில் இருக்க முடியுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.

எனவே திரு. எஸ். முத்தைய முதலியார் காங்கிரஸ் கமிட்டியை விட்டு விலகிவிட வேண்டியது அவசியமாயிற்று? எனவே விலகின முதலியார் தனிக்கக்ஷி அமைத்து மந்திரி வேலை ஒப்புக் கொண்டு பார்ப்பனரல்லா தாருக்குத் தம்மால் கூடிய நன்மை செய்ய வேண்டியதாயிற்று. பழய மந்திரிகள் 7 வருஷமாய்ச் செய்ய முடியாத வேலையை, திரு. முத்தைய முதலியார் மந்திரியானவுடன் செய்து முடித்தார். அவர்தான் சர்க்கார் உத்தியோகங்களை இதுவரை பார்ப்பனர்கள் மாத்திரம் கொள்ளை யடித்து வந்ததுபோல் இல்லாமல் எல்லா மக்களுக்கும் சமசந்தர்ப்பமும் சமஉரிமையும் இருக்கும்படி செய்துவிட்டார். இதனாலேயே பார்ப்பனர்கள் திரு.முத்தையா முதலியாரை அதிகமாக வைகின்றார்கள்; வையவும் கூலி கொடுக்கின்றார்கள்.

பார்ப்பனர்களுக்கு அவர்களின் ஏகபோக அனுபவத்தில் ஒரு சிறு நஷ்டம் வருவதானாலும் அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி விடுவார்கள். ஒரு சிறு மாறுதல் செய்ய ஆரம்பித்தால் கூட உடனே காங்கிரஸ் துரோகிகள் என்று சொல்லி விடுகிறார்கள். இப்படிப்பட்ட காங்கிரஸ் நமக்கு வேண்டாம். இப்படிப்பட்ட தேசாபிமானமும் நமக்கு வேண்டாம். இதனால் என்ன வந்தாலும் வரட்டும், நீங்கள் காங்கிரஸ் துரோகப் பூச்சாண்டிக்கோ தேசத்துரோகப் பூச்சாண்டிக்கோ பயப்பட்டு விடாதீர்கள்.

அடுத்து வரும் தேர்தலில் திரு. முத்தைய முதலியாருக்கு விரோதமாய்ப் பார்ப்பனர்கள் வெகுபாடுபடுவார்கள். அநேக கூலிகளை அமர்த்தி உங்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். நீங்கள் ஏமாந்து போகாதீர்கள். நன்றாய் உங்கள் சுயபுத்தியைக் கொண்டு யோசித்துப் பார்த்து எதையும் செய்யுங்கள், இதனால் பெரும்பாலான சமூகம் ஏமாற்றப் படுவதுடன் அநீதியும் நடைபெறுகிறதே என்று வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை அனுஷ்டிக்க எஸ்.முத்தையா முதலியார் கிளம்பினால் உடனே பெரும் ராக்ஷஸனாகவும் ஜனசமூகத் துரோகியாகவும் மாறி விடுகிறார். இவ்விதம் ஒவ்வொன்றிலும் நீண்ட நாளாய் ஏமாற்றப்பட்டோம். இன்று அதை உணர்ந்து ஒரு வழியைத் தேட முயலுகிறோம். இதைத்தான் என்னென்னவோ என்று உங்களுக்கு கூறி ஏமாற்ற முயலுகிறார்கள்.

சகோதரர்களே!

இன்றைய மந்திரி கக்ஷியைத் தூற்றும் ‘தேசீய வீரர்கள்’ சொல்லும் காரணம் என்ன? ‘இரட்டை ஆட்சியை ஒழிக்க வேண்டும்’ என்பது. அப்படியானால் தேர்தல் முடிந்ததும், இரட்டை ஆட்சியை நிலை நிறுத்தியது மந்திரி கட்சியை அமைத்தது காங்கிரஸ் வீரர்கள் தானே! என்று கேட்டால், நாம் காங்கிரஸ் துவேஷியா? நீட்டின காகிதத்தில் கையெழுத்துப் போட்ட கனம் ஆரோக்கியசாமி முதலியார் நல்லவராக இருந்ததற்கும் கையெழுத்துப் போடு என்று கேட்கப் பயப்படக்கூடிய நிலையில் உள்ள கனம் எஸ்.முத்தையா முதலியார் பார்ப்பனக் கண்ணுக்குத் தேசத் துரோகி போல் தோன்றுவதற்கும் காரணம் விளங்கவில்லையா? இதைப் பார்த்த பின்பும் கூட நம்மவர்கள் கண் விழிக்க வில்லையானால் கெதி மோக்ஷம் இந்த நாட்டுக்கு எப்பொழுது கிட்டப் போகிறது?

சைமன் கமிஷன்

சைமன் கமிட்டியை நான் ஆதரிப்பதைப் பற்றி என்மீது பெரிய குற்றம் சுமத்தப்படுகின்றது. சென்ற தேர்தலில் உங்களிடம் ஓட்டுக் கேட்ட காங்கிரஸ்வாதிகள் (ராயல் கமிஷன்) சைமன் கமிஷனிடம் சாட்சி சொல்வதாய் ஒப்புக் கொண்டு அதற்காக வேண்டியே தங்களுக்கு ஓட்டு கொடுக்க வேண்டு மென்று கேட்டார்கள். இப்போது அக்கமிட்டியில் பார்ப்பனர்களையும், பார்ப்பனதாசர்களையும் சேர்க்காததால் அதைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று கூச்சல் போடுகிறார்களே ஒழிய வேறில்லை. உண்மையில் பகிஷ்கரிக்கும் யோக்கியர்கள் தங்கள் மெம்பரை ராஜிநாமா கொடுத்துவிட்டு கமிஷனைப் பகிஷ்கரிப்பதாய்ச் சொல்லி ஓட்டு வாங்கி மெம்பராகி பிறகு தான் பகிஷ்கரிக்க வேண்டும். இதுதான் நாணயமாகும்.

நிற்க, வைஸ்ராய் நிர்வாக சபையில் மெம்பராயிருந்த திருவாளர் எஸ்.ஆர்.தாஸ் பார்லிமெண்டை மிரட்டி விட்டாராம்! அதாவது ஏதாவது ஒரு பார்ப்பானை ராயல் கமிஷன் கமிட்டியில் போட்டால் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சி செய்வார்கள். ஆதலால் போடுவதாயிருந்தால் சென்னை மாகாணத்திய ஒரு பார்ப்பன ரல்லாதாரைப் போடும்படி சொன்னாராம்.

வைஸ்ராய் சபையிலுள்ள மற்றொரு கனவான் பார்ப்பனரல்லாதாரைப் போட்டால் பார்ப்பனர்கள் கிளர்ச்சி செய்வார்கள். ஆதலால் மகமதிய கனவானைப் போடும்படி சொன்னாராம். எனவே, பார்லிமெண்டார் பயந்து கொண்டு யாரையும் போடாமல் வெள்ளைக்காரர்களாகவே பார்த்துப் போட்டு விட்டார்கள். இதனால் எந்த விதத்தில் இந்தியாவின் சுயமரியாதைக்கு ஆபத்து வந்து விட்டது. மேல்கண்ட மூவரில், யாரையாவது ஒருவரைப் போட்டிருந்தால் மற்ற இருவருக்கும் இதைவிட சுயமரியாதைக்கு அதிகமான பங்கம் வந்துவிட்டதாகக் கூப்பாடு போட்டிருப்பார்கள்.

இந்தப் போலி பகிஷ்காரக் கூச்சலினால் இப்போதும் சைமனுக்கு வேண்டிய தகவல்களில் எது தடைப்பட்டு விட்டது? நேரு ரிப்போர்ட், காங்கிரஸ் ரிப்போர்ட், எல்லாக் கட்சி ரிப்போர்ட், திருவாளர் பெசண்ட் திட்டம், விஜயராகவாச்சாரி திட்டம், ரங்கசாமி அய்யங்கார் திட்டம், சீனிவாசய்யங்கார் திட்டம், வர்ணாஸ்ரமத் திட்டம், பார்ப்பனத் திட்டம், பார்ப்பனரல்லாதார் திட்டம், மகமதியர் திட்டம், கிறிஸ்தவர்கள் திட்டம், ஆதிதிராவிடர்கள் திட்டம், ஜமீன்தார் திட்டம், வியாபாரிகள் திட்டம், நிலச் சுவான்தார்கள் திட்டம், நூற்றுக்கணக்கான உள்பிரிவு ஜாதிகள் திட்டம், சர்க்கார் உத்தியோகத்தில் உள்ள பார்ப்பனர்கள் - பார்ப்பனரல்லாதார்கள், வெள்ளைக்காரர்கள் ஆகியவர்கள் திட்டம் இன்னமும் என்னென்னமோ திட்டம் வண்டி வண்டியாக அவர்கள் முன் குவிந்து இருக்கின்றது. எனவே சைமன் பகிஷ்காரம் என்பது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது? எந்த அர்த்தத்தில் செய்து, எந்த அர்த்தத்தில் நிறைவேற்றப்பட்டது? என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

மதம்

கனவான்களே! முதலாவது மதம் என்றால் என்ன? அது கால, தேச, வர்த்தமானத்திற்கும், அக்காலத்திய அறிவின் தன்மைக்கும் தக்கபடி மக்களின் வாழ்க்கைக்கென்று ஏற்படுத்திக் கொள்ளும் சில கொள்கை யேயாகும். அக்கொள்கைகள் எப்போதும் எல்லா இடத்திற்கும் ஒன்று போலவோ அல்லது மாற்ற முடியாததென்றோ சொல்வது சுத்த மடமையேயாகும்.

உதாரணமாக, விளையாட்டுச் சங்கத்திற்கோ அல்லது ஒரு ஓய்வு சங்கத்திற்கோ, அச்சங்கத்தில் உள்ளவர்கள் தங்கள் சங்க காரியங்கள் கிரமமாய் நடைபெறுவதற்கு என்று சில கொள்கைகள் வகுத்துக் கொள்ளுவதை நாம் பார்க்கின்றோம். நாளாக நாளாக அதன் நிலைமைக்கும் தேவைக்கும் தக்கபடி அவற்றை மாற்றிக் கொண்டு வருவதையும் பார்க்கின்றோம்.

அதுபோலவே, மக்கள் சமூக வாழ்க்கைக்கும் சில நிபந்தனைகள் ஏற்படுத்திக் கொள்வதும், நாளாக நாளாக அவைகளைத் தேவைக்குத் தக்கபடி, காலத்திற்குத் தக்கபடி மாற்றிக் கொள்ளுவதும் அவசியமானதே யாகும். இந்நிபந்தனைகள் சில சமயங்களில் மக்கள் அறிவுக்குத் தக்கபடி சுயலநலக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்கு ஏற்ற வண்ணமாயும் செய்து விடுவதுமுண்டு. உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு வெள்ளைக்காரர்கள் நிபந்தனை ஏற்படுத்துவது போல, கையில் வலுத்தவனோ, அறிவில் வலுத்தவனோ, ஏமாற்றத்தில் வலுத்தவனோ தன் தன் சௌகரியப்படி நிபந்தனைகள் அமைத்துக் கொள்கிறான். இதை உணராமல் மதம் என்பது ஒரு சர்வ வல்லமையுள்ளது என்று சொல்லப்பட்ட ‘கடவுள்’ கட்டளை யென்றும் அதை எப்போதும் சிறிதுகூட மாற்றக் கூடாது என்றும், அதிலுள்ளவைகள் எல்லாம் கடவுள் வாக்கு என்றும் சொல்லுவதானால், அது எந்த மதமானாலும் சரி, அவற்றை அடியோடு ஒழிக்கத்தான் வேண்டும். அதனிடத்தில் மக்களுக்குள்ள குருட்டு நம்பிக்கையும் குரங்குப் பிடிவாதத்தையும் மாற்றத்தான் வேண்டும்.

அராபிப் பாலைவனத்திலுள்ள மக்களுக்கு அவர்கள் மதம் தினம் மூன்று வேளை குளிக்கும்படி கட்டளையிட முடியவே முடியாது. ஐரோப்பிய குளிர் தேசத்திலிருக்கும் மக்களுக்கு அவர்கள் மதம் ஜலமல பாதைகளுக்குப் போனால் அடிக்கடி தண்ணீர் விட்டுச் சுத்தி செய்யச் சொல்லாது. அது போலவே, வடதேசத்தின் மலைச்சார்புப் பகுதிகளில் குளிரில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு, அவர்கள் மதம் எப்போதும் நெருப்புக்கனல் இல்லாமல் இருக்கும்படி சொல்லியிருக்காது.

அதுபோலவே தென்னாட்டில் உஷ்ண தேசத்து மக்களுக்கு எப்போதும் நெருப்புக் கனல் இருக்க வேண்டுமென்று அவர்கள் மதம் சொல்லியிருக்க முடியாது.

வெள்ளைக்காரர்கள் ஆதிக்கத்தினால் எப்படி அவர்களது கொள்கைகளையும், அவர்களுக்கு அனுகூலமானதையும் சிலவற்றை நம் மீது சுமத்தி இருக்கின்றார்களோ, அதுபோலவே நமது நாட்டில் முன் காலத்தில் பூர்ண ஆதிக்கம் செலுத்த சந்தர்ப்பம் அடைந்தவர்கள் அவர்களது கொள்கைகளையும், அவர்களுக்கு அனுகூலமான கொள்கைகளையும் நம் மீது சுமத்தி விட்டார்கள். ஏகபோக ஆதிக்கத்தின் பலனாய் அவற்றிற்கு ஆதாரங்களும் எழுதி வைத்து அவற்றை எல்லாம் மதக் கொள்கைகள் என்றும் அவைகள் கடவுள் கட்டளை என்றும், கடவுள் வாக்கு என்றும் சொன்னால் நாம் நிரந்தரமாய் ஒப்புக் கொண்டு பின்பற்ற முடியுமா? நமக்கு பகுத்தறிவு என்கின்ற தன்மை எதற்காக இருக்கின்றது? இப்பேர்ப்பட்ட விஷயத்திற்கு உபயோகப்படுத்திப் பார்க்காத பகுத்தறிவு வேறு என்ன வேலை செய்ய உபயோகப்படும்? ஆதலால், கண்டிப்பாய் மத விலங்கிலிருந்து விடுதலையடைய வேண்டும். பிறகுதான் நாட்டை விடுதலை யடையச் செய்யலாம்.

நாடு வெறும் வெள்ளைக்கார ஆட்சியிலிருந்து மாத்திரம் விடுதலை அடைந்தால் போதும் என்பது அர்த்தமற்ற வார்த்தை. நாடு வெள்ளைக்காரர் ஆட்சியில் இல்லாதபோதுதான் நாம் மத அடிமைத் தன்மையில் மூழ்கினோம். நாடு முகமதியர் ஆட்சியில் இல்லாத காலத்தில் தான் மக்கள் மிருகப் பிராயத்தில் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள். நாடு சுயராஜ்யத்திலும் ராமகிருஷ்ண அரிச்சந்திராதி கடவுள்கள் ஆட்சியிலும் இருக்கும் போதுதான் பார்ப்பனரல்லாதார்கள் சூத்திரர்களாகவும், வேசி மக்களாகவும், குரங்குகளாகவும், அரக்கர்களாகவும், படிக்கக் கூடாதவர்களாகவும், கடவுள் வணக்கத்திற்கும் தவத்திற்கும் லாயக்கில்லாதவர்களாகவும் நடத்தப்பட்டதுடன் வேற்று அரசர்கள் கைக்கு நாடும் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றது.

இந்நாட்டில் வெள்ளைக்கார அரசாங்கமும் மகமதிய அரசாங்கமும் இல்லாத காலத்தில் தான் சம உரிமை, ஜீவகாருண்யம் ஆகியவைகளைக் கொள்கைகளாகக் கொண்ட பவுத்த மதம் அழிக்கப் பட்டது. சமணர்களைக் கழுவேற்றிச் சமண மதம் ஒழிக்கப்பட்டது. இப்பவும் வெள்ளைக்கார ஆட்சி இல்லாததும் சுய ஆட்சியும் இந்து அரசர்கள் ஆட்சியும் உள்ள மைசூர், திருவாங்கூர், கொச்சி முதலிய சுதேச அரசர் நாடுகளில்தான் மனிதர்களை மனிதர்கள் நாய், கழுதை, பன்றி, மலம், மூத்திரம், எச்சில், நாறிப் புழுத்த வஸ்துகளுக்கும் கீழாக மதிக்கின்றனர். எனவே இந்த நிலையில் இந்த வெள்ளைக்கார ஆட்சி போனால் இன்னும் ஒரு மஞ்சள்காரர் அல்லது சிகப்புக்காரர் ஆட்சி தான் ஏற்படுமே ஒழிய கருப்புக்காரர் (இந்திய மக்கள்) ஆட்சி உண்டாகவே உண்டாகாது. ஏனெனில் நமது நாட்டில் எந்தெந்த குணங்களும் கொள்கைகளும் நம்முள் ஒற்றுமையைக் கெடுத்து அன்னிய ஆட்சியை வலியக் கூவி அழைத்ததோ அந்தக் கொள்கைகளும், குணங்களும் மாறினால் ஒழிய இனி எந்தக் காலத்திலும் நமது நாட்டை விட்டு அன்னிய ஆட்சியை விரட்டி விட முடியாது.

கடவுள்

நிற்க, கடவுள் என்பது பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்பு கின்றேன். கடவுள் இல்லையென்று சொன்னதாகவும் அதனால் நாஸ்திகப் பிரசாரம் செய்கின்றதாகவும் சொல்லப்படுகின்றது. அது உண்மையானாலும், பொய்யானாலும் இங்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டிக் கொடுக்க இந்த மாதிரியான விஷமப் பிரசாரங்கள் அனுகூலமாயிருந்ததால் ஒரு விஷயத்தில் நான் நாஸ்திகனானதற்கு மகிழ்ச்சியடைகின்றேன்.

சுயமரியாதை இயக்கம் கடவுள் உண்டா இல்லையா? என்கின்ற விஷயத்தில் சற்றும் கவலையெடுத்துக் கொள்வதேயில்லை. மற்றபடி நமது மக்கள் கடவுளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் குணங்களைப் பற்றியும், கடவுள்களுக்கு என்று செய்யப்படும் பூசை, அபிஷேகம், உத்சவம் முதலிய செலவுகளைப் பற்றியும்தான் நான் மிகுதியும் ஆட்சேபிக்கின்றேன்.

கடவுளுக்கு இவ்வளவு பெரிய கோவில் எதற்கு? உத்சவத்திற்கு லக்ஷசக் கணக்கான ரூபாய்கள் செலவு எதற்கு? மேல்நாட்டார் நம்மைவிடக் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்கள். இப்போது உலகத்தில் பெரும் பகுதியை ஆளச் சக்தி கொண்டு விட்டதற்கு இம்மாதிரியான பெரிய கோவில்களும், உத்சவமும் செய்வதிலும் பணம் செலவழித்ததாலா? அல்லது இவற்றிற்குப் பணம் செலவழிப்பதை நிறுத்திக் கொண்டு அவற்றைக் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் செலவழித்ததாலா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

நமது நாட்டிலுள்ள கற்கள் எல்லாம் சாமிகள்; மரம், செடிகள் எல்லாம் சாமிகள்; ஆறு, மலை, குளம், குட்டை, இடி, மின்னல், மழை, நட்சத்திரம், வானம், சந்திரன், சூரியன், காற்று, நெருப்பு, தண்ணீர், பிளேக்கு, பேதி, அம்மை முதலிய காணப்படும் பொருள்கள் குணங்கள் எல்லாம் சாமிகளாய்க் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இது மக்களுக்கு அறிவு வளர்ச்சி இல்லாத காலத்தில், காரண காரியங்களை அறிய முடியாத காலத்தில் ‘சையின்ஸ்’ என்னும் விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில், காட்டுமிராண்டி பருவத்தில் ஏற்பட்ட நிலைமையாக இருக்கலாம்.

உதாரணமாக, வேத காலம், புராண காலம் என்று சொல்லப்பட்ட காலம் மனிதனுக்கு சற்றுக் கூட அறிவு வளர்ச்சியும் பகுத்தறிவு விசாரமும் இல்லாத காலமென்பதற்கு உதாரணம் வேண்டுமானால் எனக்குத் தோன்றுவதைச் சொல்லுகின்றேன் - உலகம் என்பதைப் பற்றிச் சொல்லும்போது இந்தியாவிற்கு அப்புறம் ஒன்றையுமே வெகுவாய்க் கண்டதாக எவருமே எதிலும் குறிக்கவே இல்லை. வேதகாரர்களுக்கு இமயமலையோடு உலகம் முடிந்து விட்டது. அதன் மீது செல்ல முடியாததால் அதுவே கையிலாயமாகி விட்டது. இம்மலையின் மீது பனிக்கட்டிகள் உறைந்து கலந்து மலையையே அடியோடு மூடிக் கொண்டதாலும் சூரிய வெளிச்சத்திற்கு அது வெள்ளையாய் பளிங்கு போல் காணப்பட்டதாலும், அதை வெள்ளியங்கிரி என்றும், அங்கிருந்து நதி (கங்கை) வருவதால் சிவனின் தலையிலிருந்து வருவதாகவும் இம்மாதிரி சிறு குழந்தைகளுக்குச் சோறு ஊட்ட பாட்டிகள் கதை சொல்லுவது போல் மூடக் கதையாய் உளறிக் கொட்டி விட்டார்கள்.

வெள்ளைக்காரர்கள் வந்தபிறகுதான், இமயமலை மீது ஏறிப் பார்த்து வருகின்றார்கள். இமயமலை இன்னது என்று உணர முடியாத, சென்று பார்க்க முடியாத முடங்கள், மேல் ஏழு லோகம், கீழ் ஏழு லோகம் இருக்கின்றது என்பதும் கங்கையின் உற்பத்தியைக் கண்டு பிடிக்காத முடங்கள் பாற்கடல், தயிர்க்கடல் இருப்பதாகச் சொல்லுவதும் எவ்வளவு மடமை என்பதும் அதை நம்புவது அதைவிட எவ்வளவு முட்டாள்தனம் என்பதும் நான் உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டியதில்லை.

மற்றும் கல்வியைக் கடவுளாக மதித்து அதற்காக கோடிக்கணக்காய்ப் பணம் செலவு செய்து வரும் நாட்டில் ஆண்களில் 100-க்கு 10 பேர் கூட பெண்களில் 1000-க்கு 10 பேர் கூட படித்தவர்கள் இல்லையானால் உண்மையிலேயே கல்வி என்பதாக ஒரு கடவுள் இருந்து நமது பூஜையை ஏற்றுக் கொண்டு வருகின்றது என்று நம்புகின்றீர்களா? காளி, கருப்பன், வீரன் என்று வீரத்தன்மைக்குக் கூடக் கடவுள்களைச் சிருஷ்டித்து அதை வணங்கி வரும் மக்கள் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டவுடன் காய்ச்சல் வருவதானால் ஒரு வீரக் கடவுள் இருந்து பூஜைகளை ஏற்கின்றது என்று நம்புகின்றீர்களா?

வியாதிகளையெல்லாம் தெய்வமாகக் கும்பிட்டு, அவற்றிற்கு கோவில், பூஜை, உற்சவம் செய்து வந்தும் நமது நாட்டில் வியாதிகளும் சாவுக் கணக்குகளும் மற்ற நாட்டாரை எல்லாம்விட ரெட்டிப்பாய் இருந்து வருகின்றது. இந்த வியாதி தெய்வங்கள் என்பவைகள் உண்மையிலேயே நமது பூஜை, உத்சவம், செலவு ஆகியவைகளை ஏற்றுக் கொண்டது உண்மை யானால் இப்படி நடக்குமா? என்று கேட்கின்றோம்.

மற்றும் இதுபோலவே, தொட்டதற்கெல்லாம் கடவுளை ஏற்படுத்தி அதற்குப் பூஜை, உத்சவம் செய்வதில் நமது புத்தியும், பணமும் நேரமும், ஊக்கமும் பாழாகின்றதே யல்லாமல் காரியத்தில் ஏதாவது கடுகளவு பயனுண்டா? என்று கேட்கின்றேன்.

விவசாய விஷயத்திலும், மாடு கடவுள், ஏர் கடவுள், உழவு கடவுள் ஆகிய கடவுள்களுக்கு பூஜை, உத்சவங்கள் செய்து பணம் செலவழிக்கின்றோமே யொழிய காரியத்தில் என்ன பலனடைகின்றோம். ஏரும், உழவும் மாடும் கடவுளாகக் கருதப்படாத ஆஸ்திரேலியா தேசத்தில் ஒரு ஏக்கராவில் 3000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வெள்ளாண்மை எடுக்கின்றார்களாம். நாம் இன்னும் ஏர்பூட்ட அய்யரைக் கூப்பிட்டு நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இன்னும் எவ்வளவோ வழிகளில் நாம் மூடர்களாகவே, காட்டு மிராண்டிகளாகவே இருக்கின்றோம்.

நாம் எந்த அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்கின்றோமோ அந்த அரசாங்க தேசபக்தர்கள் தங்கள் தேசங்களில் ஆராய்ச்சித் துறையில் இறங்கி, அநேக அற்புதங்களைக் கண்டு பிடித்து இரசவாதம் போல் செல்வத்தைப் பெருக்கி பிரஜைகள் எல்லோரும் அரச போகத்தை அடைய ஏற்பாடு செய்து உலகத்தில் பெரும்பாகத்தை ஆட்சி புரிகின்றார்கள். அன்றியும் அவர்களது தர்மம் நம்மைப் போன்று உத்சவத்திலும், பூஜையிலும், வாகனத்திலும், கும்பாபிஷேகத்திலும், தடிராமன்களுக்கு அன்ன சத்திரத்திலும், திதியிலும், அறுபதாம் கல்யாணத்திலும் செலவாக்கப்படாமல் அவர்கள் நாட்டு ஆராய்ச்சிக்குச் செலவு செய்தது போக மீதியை நமது நாட்டில் நமது மக்களுக்கு நன்மைக்கான பிரசவ ஆஸ்பத்திரி, குஷ்டரோக ஆஸ்பத்திரி, க்ஷயரோக ஆஸ்பத்திரி, கண் ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், அனாதை ஆஸ்ரமம், கைத்தொழிற்சாலை, புஸ்தகசாலை முதலான விஷயங்களுக்குச் செலவு செய்யப்படுகின்றது. எனவே, எந்த நாட்டார் முன்னுக்கு வருவார்கள் என்பதை நீங்களே யோசியுங்கள்.

ஒரு மனிதனுடைய ஒழுக்கத்தை திருத்துப்பாடு செய்வதற்கு மாத்திரம் அதுவும் அறிவில்லாதவனுக்கு பயத்தை உண்டாக்கி அவனுடைய நடவடிக்கைகளைத் திருத்த என்று கடவுள் என்கின்ற உணர்ச்சி வேண்டுமானால் எனக்கு ஆnக்ஷபணையில்லை. மற்றபடி மக்களின் பணத்தையும் நேரத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டுவிட்டு யாதொரு பயனும் இல்லாமல் கல்லைப் போல் நெட்டுக் குத்தாய் நின்று கொண்டிருக்க மாத்திரம் கடவுள் உணர்ச்சியும் வேண்டுமானால் அதை நான் அரை வினாடியும் ஒப்புக் கொள்ள முடியாது.

எனவே, இதுதான் எனது நாஸ்திகம் என்பது. இதைப் பற்றி நீங்கள் எப்படி நினைத்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை. என் அபிப்பிராயத்தை உங்களுக்குத் தெரிவித்து விட்டேன். ஏற்கவும் தள்ளவும் உங்களுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. மற்றபடி பார்ப்பனர்களைப் போல் “சிவன் பார்வதிக்குச் சொன்னார், நாரதர் விசுவாமித்திரருக்குச் சொன்னார்”. பராசரர் சொன்னார், நம்பாவிட்டால் நரகம், நம்பினால் மோட்சம் என்று சொல்லி உங்களை நாம் ஏய்க்கவில்லை. ராமசாமி என்னும் பெயர் கொண்ட- ஒரு மனிதன் அதுவும் எழுத்து வாசனை இல்லாதவன், பள்ளிக் கூடத்தில் படிக்காதவன் சொல்லுகின்றான் என்பதாகக் கருதி நான் சொன்னவற்றை உங்கள் சொந்த புத்தியைக் கொண்டு அலசிப் பார்த்து சரி என்று தெரிந்தால் நடவுங்கள்.

நேரம் அதிகமாய் விட்டதால் மற்றும் பல விஷயங்களைப் பற்றிப் பேச போதிய சாவகாசம் இல்லை. சமீபத்தில் இந்த ஊரில் சுயமரியாதை மகாநாடு கூட்டுவதாக உங்கள் ஊர் பிரமுகர்கள் தெரிவித்தபடியால் அது சமயம் வந்து மற்ற விஷயங்களையும் செங்கற்பட்டுத் தீர்மானங்களைப் பற்றியும் விளக்க இருக்கின்றேன்.

(குறிப்பு; 11.03.1929 இல் சீர்காழி சட்டநாத சாமி கோயிலில் திரு ஆர். சின்னையா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சுயமரியாதைப் பிரசார சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 24.03.1929)