சுயமரியாதை இயக்கமும், குடி அரசும், “கடவுள்” என்று சொல்லப்படும் ஒன்றை ஒழிப்பதற்கு என்றோ, அல்லது அது இல்லை யென்று நிலை நாட்டுவதற்கென்றோ அல்லது அது உண்டு யென்று நிலைநாட்டுவதற்கென்றோ தோன்றியவைகள் அல்ல; குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தின் மீதும் துவேஷம் கொண்டு அதை ஒழிப்பதற்குப் புறப்பட்டவையுமல்ல. ஆனால், ஜாதியின் பேராலோ, அல்லது மதத்தின் பேராலோ அல்லது சாஸ்திரங்களின் பேராலோ மற்ற எதன் பேராலோ ஜன சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் எவ்வித மான உயர்வு தாழ்வுகளையும் ஒழித்து மக்களுக்குள் சமத்துவத்தை உண்டாக் கவே இவ்வியக்கம் ஏற்பட்டதாகும். மனிதர்களை மனிதர்கள் பலவகையான அர்த்தமற்ற காரணங்களைச் சொல்லிப் பரம்பரையாகக் கொடுமைப் படுத்தி வரும் அக்கிரமத்தை - அது எந்த வகையான பரிசுத்தமான பெயரால் நடை பெற்று வந்தாலும் அதை ஒழிக்கவே இவ்வியக்கம் தோன்றியதாகும். இவ் வியக்கத்தின் உண்மைக் கருத்தை உணர்வோர் இதை ஒரு “ஜீவரக்ஷக அறிவியக்கம்” என்று ஒப்புக் கொள்ளாமல் போக மாட்டார்கள்.

ஆனால் மக்களுடைய சமவுரிமைக்கு விரோதமாகவும், அவர்களைக் கொடுமைக்கு உட்படுத்துவதாகவும், அவர்களுடைய அறிவையும், சுதந்திரத் தையும், தடைசெய்வதாகவும் உள்ளவை எவையானாலும், அவை, கடவுளோ, மதமோ, சாஸ்திரமோ, ஜாதியோ, அரசாங்கமோ, மற்று எவையோ அவை களை யெல்லாம் அடியோடு அழிப்பதற்கு இவ்வியக்கம் சிறிதும் பின் வாங்காது.periyar and thiruvaroor thangarasuஆகையால் இவ்வியக்கத்தைக் கண்டு, மக்கள் அனைவரும் சம வுரிமை பெற வேண்டும் என்று விரும்புகின்ற எவரும் - மனிதர்களின் கையில் அகப்பட்டுப் பரம்பரையாகக் கொடுமையனுபவித்து வருகிற மக்களை விடுதலை செய்ய வேண்டுமென்று நினைக்கின்ற எவரும் - ஜாதிக் கொடுமையினின்றும், மதக் கொடுமையினின்றும் மக்கள் விடுபட வேண்டும் என்று விரும்புகின்ற எவரும் - சிறிதும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், மதத்தினாலோ, ஜாதியினாலோ, மூடச் சடங்குகளினாலோ, சாத்திரங்களினாலோ ஏழை மக்களை அடக்கி வைத்துத் தாமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைக்கின்ற வன்னெஞ்சர்கள் அனைவரும் பயப்பட்டுத்தான் ஆக வேண்டும். இத்தகைய வன்னெஞ்சகச் சுயநல பிரியர் களின் ஜீவாதார உரிமைகளை வேரோடு அறுக்க முனைந்து நிற்பதில் சுயமரியாதை இயக்கத்திற்கு ஒப்பாக வேறொன்றையும் கூற முடியாது.

இந்த உண்மையான காரணத்தை உணர்ந்தே, இப்பொழுது இவ் வியக்கத்தைப் பல மதத்தைச் சேர்ந்தவர்களும், பல ஜாதியைச் சேர்ந்த வர்களும், பல கொள்கைகளை உடையவர்களும் ஆதரித்து வருகின்றார்கள். நமது இயக்கத்தில் “கடவுள் இல்லை” என்று சொல்வோரும் இருக்கின்றார்கள் கடவுள் உண்டு என்று சொல்லுவோரும்; நம்புவோரும் இருக்கின்றார்கள். இவ்விஷயம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அபிப்பிராயமாகும். ஆனால் இயக்கத்திற்குக் கடவுளைப் பற்றிய கவலையே இல்லை.

இந்த நிலையில், இப்பொழுது நமது இயக்கத்தைப் பகிரங்கமாக எதிர்க்கப் புறப்பட்டிருகின்றவர்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பாதிரிமார் களேயாவார்கள். இவர்கள் நமது இயக்கத்தைக் கண்டு பயந்து, இப்பொழுது நமது இயக்கத்தையும், குடி அரசையும் எதிர்க்கப் புறப்பட்டிருப்பதன் காரணம் நமக்கு விளங்கவில்லை. ஏழை மக்களைச் சுதந்தரமின்றிக் கட்டுப்படுத்திக் கொடுமைப்படுத்துங் கூட்டத்தார்க்கு நமது இயக்கமும், குடி அரசும் விரோத மாகத்தான் காணப்படும் என்ற உண்மையை வைத்துப் பார்க்கும் போது, இந்த கத்தோலிக்க மதப் பாதிரிமார்கள் சுயமரியாதை இயக்கத்தின் விரோதத்திற்கு இலக்கானவர்களா யிருக்கலாமோ என்ற சந்தேகம் தோன்றுவது இயல்பே யாகும்.

கத்தோலிக்க மதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களின் நிலையை எடுத்துக் கொண்டால், அவர்கள் படும் கஷ்டத்திற்கும், இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் படும் கஷ்டத்திற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை என்றே சொல்லலாம். தாழ்த்தப்பட்டட சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்களுக்கு உயர்குலக் கிறிஸ்துவர்கள் செல்லும் மாதா கோயில் களுக்குட் சென்று அவர்களுடன் சமமாக இருந்து வணங்குவதற்கு உரிமை யில்லை. கிறிஸ்து மத சம்பந்தமாக வைக்கப்பட்டிருக்கும் கலாசாலைகளிலும் சாப்பாட்டு விடுதிகளிலும், உயர்குலக் கிறிஸ்துவர்களுக்குச் செய்து கொடுக்கப்படும் சௌகரியங்கள் தாழ்த்தப்பட்ட சமூக கிறிஸ்தவர்களுக்குச் செய்து கொடுக்கப்படுவதில்லை; இன்னும் இவை போன்ற பல புகார்கள் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர் வீடுகளில் நடைபெறும் நன்மை தீமை ஆகிய விசேஷங்களில் பாதிரிமார்களுக்கும் கோயில்களுக்கும் சேர வேண்டிய பொருளை மாத்திரம் வாங்குவதில் தவறுவதில்லை. இவ்விஷயங்களெல்லாம் தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர்கள் மகாநாடுகளின் மூலம் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

இக்காரணங்களால் இப்பொழுது கிறிஸ்துவர்களில் பலர் பாதிரிமார் களைப் பகிஷ்கரித்துச் சுயமரியாதை முறைப்படி கல்யாணம் முதலிய காரியங் களைத் தாங்களே செய்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இம்முறையில் திருச்சி ஜில்லாவில் மாத்திரம் சுமார் 150 கல்யாணங்கள் வரையிலும் பாதிரிமார்களை நீக்கி நடைபெற்றிருக்கின்றன என்று தெரிகின்றது. இதற்கு ஒரு வகையில் சுயமரியாதை இயக்கமும் குடி அரசும் காரணமாகும் என்பதை அவர்கள் நன்றாய் அறிந்திருக்கிறார்கள். இக்காரணத்தால் தான் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை எதிர்க்கப் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அவர்கள், இவ்வியக்கத்தால், தமது மதத்தில் கட்டுண்டு, தமது சொற்களுக்கு அடங்கி நடந்து கொண்டு வரும் பாமர மக்கள் அனைவரும் விழிப்படைந்து விடுவார்கள் என்பதை அறிந்து கொண்டு, தமது முழு அதிகாரத்தையும் செலுத்திக் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் மத்தியில் சுயமரியாதை இயக்கத்தை பரவாமல் தடுக்க முயலுகிறார்கள். சமீபத்தில் கோயம்புத்தூர் ஜில்லாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கெல்லாம், அந்த மதகுருவாகிய “மேற்றிராணியார்” என்பவர் “குடி அரசிலும், சுயமரியாதை இயக்கத்திலும் யாரும் சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது, “குடி அரசு” வரவழைத்துப் படிப்பவர்கள் 15 நாட்களுக்குள் அதை நிறுத்தி விட வேண்டும்” என்று ஒரு சுற்றுத் தரவு அனுப்பி, 15 நாட்களில் குடி அரசை நிறுத்தாதவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

சென்ற 30. 10. 32 - இல் திருச்சியில் நடந்த கத்தோலிக்க வாலிபர் மகாநாட்டில், சுயமரியாதை இயக்கத்தைக் கண்டிப்பதாகவும், வாசக சாலை களிலும் பொதுமேடைகளிலும், பத்திரிகைகளிலும் இவ்வியக்கத்தை எதிர்த்துப் பிரசாரம் பண்ண வேண்டும் என்றும் தீர்மானித்திருக்கின்றார்கள்.

இவ்வாறு பாதிரிமார்களும் அவர்களுடைய பக்தர்கள் சிலரும் செய்யும் வீண் மிரட்டலைக் கண்டு நமது இயக்கமோ, குடி அரசோ சிறிதும் அஞ்சப் போவதில்லை. ஆனால் ஜன சமூகத்திற்கு நன்மையை உண்டாக்கு வதற்கெனத் தோன்றிய இவ்வியக்கத்தைக் கண்டு நடுங்கும் கத்தோலிக்க குருமார்களுக்கும், அவர்களுடைய சீடர்களுக்கும் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகின்றோம்.

கத்தோலிக்க மதத்தில் உள்ள மக்கள், கத்தோலிக்க குருமார்களைப் பகிஷ்கரிக்க ஆரம்பித்திருப்பதற்கும், பாதிரிமார்களின் கட்டுப்பாடுகளை மீற ஆரம்பித்திருப்பதற்கும், சுயமரியாதை இயக்கமே முழுதும் காரணமல்ல; மதத்தினாலும், மத குருமார்களின் நடத்தைகளாலும், கட்டுப்பாடுகளாலும், அந்த மக்களுக்கு உண்டாகி இருக்கும் கஷ்டமே காரணமாகும். ஆகையால் மக்களின் சௌகரியத்திற்கு ஏற்றபடி மதக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும் மதக் கொள்கைகளைத் திருத்தி அமைப்பதுமே மக்களைத் திருப்திப்படுத்தக் கூடிய செய்கைகளாகும். இதை விட்டு, மக்களுடைய அறிவையும், சுதந்தரத் தையும், சமத்துவத்தையும் வளர்க்க முன் வந்துள்ள சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விடுவதென்றால் அது ஒருக்காலும் முடியாத காரியம்.

மத குருமார்கள் சொல்லுவதையெல்லாம் உண்மையென்று நம்பி அவர்களுக்கு அடிமையாக இருக்கும் காலம் மறைந்து வருகிறது. மக்கள் வரவர அறிவு வளர்ச்சி பெற்று வருகின்றனர். “நாமும் மனிதர்” என்ற உணர்ச்சி எல்லா மனிதர்களிடமும் உண்டாகிக் கொண்டு வருகிறது. ஜாதி வித்தியாசங்கள் எல்லாம் பெயரளவில் இருந்தாலும், சில அறிவில்லாதவர்கள் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தாலும், உண்மையில் அது தானாகவே அழிந்து கொண்டே வருகிறது.

மதங்களும், தற்பொழுது புரோகிதக் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரம் அவர்களால் இருப்பதாகச் சொல்லப்பட்டு வரு கின்றதே ஒழிய, பொது ஜனங்கள் அவற்றைச் சிறிதும் லட்சியம் பண்ணுவதில்லை. பெயரளவில் மதங்கள் உலவி வருகின்றனவேயொழிய உண்மையில் அவைகள் இல்லவேயில்லை; மதக்கட்டளைகளும், மதசாஸ்திரங்களும் பாமர மக்களை ஏமாற்றுவதற்காக மத குருமார்களால் வாயளவில் சொல்லவும் படிக்கவும் மாத்திரம் உபயோகப் படுகின்றனவேயன்றி, அவைகளின் படி நடப்பவர்கள் யாருமில்லை; அவைகள் தாமாகவே அழிந்து கொண்டுதான் வருகின்றன. இன்னும் ஜன சமூகங்களின் பழக்க வழக்கங்களிலும், அதிதீவிரமாக மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன. இந்த மாறுதல் களை இனி எவராலும் தடுக்க முடியாது. இன்னும் சில ஆண்டுகளில் இம் மாறுதல் காரணமாக, மதங்களும், ஜாதிகளும், சடங்குகளும் புரோகிதக் கூட்டங்களும் கட்டாயம் அடியோடு அழிந்தே போகும். இந்த மாறுதலை ஒட்டியே சுயமரியாதை இயக்கமும் சீர்திருத்தம் செய்ய உழைத்து வருகிறது. ஆகையால் இவ்வியக்கத்தை அடக்கி விடலாம் எனக் கனவு காண்பதில் ஒன்றும் அர்த்தமில்லை என்று கூற விரும்புகின்றோம்.

சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்து எவ்வளவு பிரசாரம் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்தாகி விட்டது. சைவப்பெரியார்கள் செய்த எதிர்ப்பிரசாரத்தைவிட, வைணவப் பெரியார்கள் செய்த எதிர்ப் பிரசாரத்தைவிட காங்கிரஸ் பெரியார்கள் செய்த எதிர்ப்பிரசாரத்தைவிட கத்தோலிக்கப் பெரியார்கள் ஒன்றும் அதிகமான எதிர்ப்பிரசாரம் பண்ணி விடப் போவதில்லை. அன்றியும், சுயமரியாதை இயக்கமும், குடி அரசும் எப்பொழுதும் எதிர்ப்பிரசாரத்தைச் சந்தோஷத்தோடு வரவேற்குமே யொழிய அதைக் கண்டு அஞ்சுகின்ற வழக்கமில்லை என்பதை இச்சமயத்தில் நினைப்பூட்ட விரும்புகின்றோம்.

ஏனெனில், இது வரையில் எதிர்ப் பிரசாரத்தினால் இவ்வியக்கமும் குடி அரசும் செல்வாக்கும், வளர்ச்சியும், வலுவும் பெற்றனவே ஒழிய சிறிதும் குறைவடையவில்லை. ஆகையால், கத்தோலிக்கர்கள் செய்யும் ஆர்ப்பாட் டத்தால், இப்பொழுது, தமிழ் நாடு, மலேயா, பர்மா, சிலோன் முதலிய இடங் களில் நன்றாக வேரூன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கமும், குடி அரசும் மற்றய தேசங்களிலும் சென்று பரவும் என்பதில் ஐயமில்லை. ஆகையால், தாராளமாகக் கத்தோலிக்கப் பெரியார்கள் எதிர்ப்பிரசாரம் செய்ய முன் வரட்டும் என்று அறை கூவி அழைக்கின்றோம்.

ஆனால் உண்மை எப்பொழுதாவது வெளிப்பட்டுத்தான் தீரும். உண்மையை எப்பொழுதும் பின்பற்ற மக்கள் தயாராகத்தான் இருப்பார்கள். பொய்யான கட்டுப்பாடுகளும், மக்களை ஏமாற்றுவதற்கு - அடிமைப் படுத்து வதற்கு என்று ஏற்படுத்தி வைத்துள்ள மதக் கட்டுகளும் இனி நிலைத்து நிற்க முடியாது; அழிந்து தான் தீரும் என்று மாத்திரம் கடைசியாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அன்றியும், தங்கள் கொள்கைகளும் செய்கைகளும், நடத்தைகளும், வார்த்தைகளும், பரிசுத்தமானவை; உண்மையானவை; அழிய முடியாத “தெய்வீகத்” தன்மை பொருந்தியவை என்ற உண்மையான நம்பிக்கை யுடையவர்களாயிருந்தால் அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. உண்மையான - அழியாத - “தெய்வீக”த் தன்மை பொருந்திய மதத்தைச் சுயமரியாதை இயக்கமோ, மற்ற எதுவோ அழித்து விட முடியாது. ஆதலால் கத்தோலிக்கப் பெரியார்கள் தங்கள் மதத்திலும், தங்களுடைய கட்டுப்பாடுகளிலும், பழக்க வழக்கங்களிலும் உண்மையான நம்பிக்கையு டையவர்களாய் இருந்தால் ஏன் சுயமரியாதை இயக்கத்தையும் குடி அரசையும் கண்டு நடு நடுங்க வேண்டும் என்று கேட்கின்றோம்? ஆகவே, அவர்களுடைய கொள்கையில் அவர்களுக்கே நம்பிக்கையில்லையா என்று கேட்கின்றோம்.

மதக் கட்டுப்பாடுகளினாலும், மதகுருமார்களாலும், தங்கள் அறிவும், சுதந்திரமும், செல்வமும் பாழாகின்றன என்ற உணர்ச்சி பெற்ற மக்களை, “சுயமரியாதை இயக்கத்தோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லுவதனாலோ, “குடி அரசைப் படிக்கக் கூடாது” என்று கூறுவதனாலோ அடக்கி விட முடியாது என்று எச்சரிக்கின்றோம். நாலா பக்கமும் அறிவு வெள்ளமும், சுதந்தர வெள்ளமும், சமத்துவ வெள்ளமும் பெருக்கெடுத்து வந்து பெரிய பெரிய அலைகளுடன் மோதும் போது நடுவில் உள்ள மூடப் பழக்க வழக்கம், அர்த்த மற்ற பயங்கரமான கட்டுப் பாடுகள், அறிவுக்குப் பொருந்தாத கோட்டுபாடுகள் ஆகியவைகள் சேர்ந்த மணல் முட்டு எப்படி நிலைத்து நிற்கும்? என்று யோசனை செய்து பார்க்க வேண்டுகிறோம்.

ஆகையால் இனி, எந்த விதமான பிரசாரம் செய்தாலும் ஜாதிப் பகிஷ்காரம், மதப் பகிஷ்காரம், போன்ற பூச்சாண்டிகளைக் காட்டினாலும் பகுத்தறிவுடைய மக்களை பயமுறுத்த முடியாது. ஜாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம் என்று சொல்லும், சுயமரியாதை இயக்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் குடி அரசைப் படிப்பவர்கள், ஜாதி பிரஷ்டத்திற்கும் மதப் பிரஷ்டத்திற்கும் அஞ்சுவார்களா? ஆகையால் கத்தோலிக்கப் பெரியார்களின் மிரட்டலும் ஆர்ப்பாட்டமும் வீண் என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 06.11.1932)

Pin It