சீர்தியால், அறத்தால் செழுமையால், வையப்

போர்த்திறத்தால் இயற்கை புனைந்த

ஓருயிர் நான். என் உயிர் இனம் திராவிடம்.

ஆரியன் அல்லேன் என்னும் போதில் எத்தனை

                  மகிழ்ச்சி. எத்தனை மகிழ்ச்சி.

- புரட்சிக் கவிஞர்

திராவிடத்தால் வாழ்கிறோம் என்றே எங்கெங்கும் முழங்குங்கள். ஏனெனில் வீழ்ந்துக் கிடந்த நம் இனம் வீறுகொண்டு எழுந்த வரலாறு அதில் பின்னிப்பிணைந்துள்ளது. திராவிடம். உச்சரிக்கும் போதே மொழி உணர்வுடன் இன உணர்வும் பீறிட்டுக்கிளம்பும்.

நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்பதை ஏற்கவைப்பது ஆரியம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என ஓங்கி ஒலிப்பது திராவிடம். ஆரியத்தின் அத்தனை அடக்குமுறைகளுக்கும் எதிரான போர்க்குரல், ‘அனைவருக்கும் அனைத்தும்” என்ற திராவிடத்தின் சமூகநீதிக் கோட்பாடே. இத்தகைய சுயமரியாதைக் கோட்பாட்டின் அமைதிப்புரட்சியை வரலாறே உரக்கச் சொல்லும்.

நாம் திராவிடர்

திராவிடம் எனும் சொல் ஏதோ திடீரென முளைத்துவிட்டதல்ல... இந்த நாட்டின் பூர்வகுடி மக்களை திராவிடர் என்றே பல நூற்றாண்டுகளாக வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1856-இல் கால்டுவெல் என்ற அறிஞர் ‘திராவிட மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்” என்ற தமது நூலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியவை ஒரே மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்பதை ஆதாரங்களோடு நிறுவினார். இவற்றுள் தமிழே மூலமொழியாக இருந்தது. தமிழில் பிறமொழி கலந்ததாலே ஏனைய மொழிகள் கிளைத்தன.

தமிழ்தான் தமிழம்-த்ரமிள - திரமிட - திராவிட - திராவிடம் என்று திரிந்தது - (ஆதாரம் - தேவநேயப் பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்).

எனவே, திராவிட மொழியின் இனப்பெயர் திராவிடம். அதுவே நமக்கானது. ஆதலால், நாம் திராவிடர்.

புரட்டிப் பார்ப்போம் வரலாற்றின் பக்கங்களை.

ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள்...

திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்கள் - மனுஸ்மிருதி (10-ம் அத்தியாயம் 43, 44-ஆவது சுலோகம்).

ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் வேரூன்றுவதற்கு முன் அரசர்களிடம் மனுதர்மமே செல்வாக்குப் பெற்றிருந்தது. அதனால், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும் வரையறை செய்யப்பட்டு கல்வி மறுக்கப்பட்டு, சிந்திக்கும் திறனற்று தன்மானமின்றி வாழும் வருந்தத்தக்க நிலை இருந்தது. 1901-இல் ஆங்கிலேயரால் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி தமிழரில் படித்தோர் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு.

நம் முப்பாட்டன் முதல் இப்பாட்டன் வரை அனைவருக்கும் படிப்பு வாசனை அறவே இல்லை.  படிக்க மட்டுமல்ல உடுக்க உரிமையில்லை, நாடார் சமூகம் பெண்கள் இரவிக்கை அணியத்தடை... உணவகங்களில் உண்ண உரிமையில்லை... சென்னையிலே உணவு விடுதிகளில் பஞ்சமர்களும் நாய்களும் குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக்கூடாது என்று அறிவிப்பு வைத்திருந்த திமிர்தனத்தின் உச்சம்... பேருந்துகளில் பயணிக்க உரிமையில்லை, பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று டிக்கெட்டுகளில் அச்சிட்ட கொடூரம்... தெருக்களில் நடக்க உரிமை இல்லை... பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்க உரிமையில்லை.

1932-ஆம் ஆண்டு வரை ‘புரதவண்ணான்” ஜாதியினரை கண்ணாலே காணக்கூடாது எனபதால் பகலிலே அவர்கள் வெளிவரக்கூடாது என்று ஜாதித்திமிர் தலைவிரித்தாடியது... விலங்கினும் கீழாக மனிதனை மனிதனே நடத்திய அவலநிலை... எங்கெல்லாம் தாங்க முடியாத கொடுமைகள் உள்ளதோ அங்குதான் புரட்சி வெடிக்கும் என்ற அடிப்படையிலே அடக்குமுறைகளுக்கு எதிர்வினையாக மீண்டும் துளிர் விட்டது திராவிடர் உணர்வு.

டாக்டர் நடேசனாரால் 1912-இல் ‘திராவிடர் சங்கம்’ என்ற அமைப்பு உண்டானது. இதற்கு முன் 1894-இல் அயோத்திதாசர் மற்றும் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் ஏற்படுத்திய திராவிட மகா ஜன சபாக்கள் இதற்கு முன்னோடியாக இருந்தன.   திராவிடச் சங்கம் நீதிக்கட்சியாக உருமாறியப் பின் வலுப்பெற்றது.. நீதிக்கட்சி ஆட்சியிலே ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபிறந்தது. ஆரியம் மெல்ல மெல்ல ஆட்டங்காணத் துவங்கியது. பெரும்பான்மை மக்கள் கல்வி கற்க உரிமையும் வசதியும் செய்துதரப்பட்டது. 

மருத்துவம் உள்ளிட்ட எந்தப்படிப்பிற்கும் சமஸ்கிருதம் கட்டாயம் எனும் நிலை நீக்கப்பட்டது.  தாழ்த்தப்பட்டோர் பேருந்துகளில் பயணிக்கவும், தெருக்களில் நடக்கவும் உரிமைப் பெற்றனர். அரசாங்கப் பதிவேடுகளில் இருந்த ‘‘சூத்திரன்” என்ற இழிவானப் பட்டம் ஒழிக்கப்பட்டது.  1922இல் தாழ்த்தப்பட்டோரை ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும் என்ற உத்தரவு வெளியானது.  1925-இல் வகுப்புவாரி உரிமைக்கேட்டு காங்கிரசை விட்டு வெளியேறி பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதும் ஆரியத்தின் பழைமைக்கோட்டை மேலும் வலிமையோடு தாக்கப்பட்டது. 

சீனிவாசய்யங்காரின் அடுப்பங்கரை வரைச் செல்லும் உரிமை காந்தியாரின் மனைவிக்கே அப்போது தான் கிடைத்தது. சுயமரியாதைத் தீ கொழுந்துவிட்டு எரியத்துவங்கியதும் பத்திரிக்கை, சினிமா, நீதித்துறை, சட்டத்துறை, கலைத்துறை, அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் அத்தனையும் பார்ப்பனமயம் என்ற நிலையில் மாற்றம் உருவெடுத்தது.  இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது.  தரையில் பெண்களும், நாற்காலியில் ஆண்களும் என்ற நிலை மாறியது பெண்களும் ஓட்டுரிமைப் பெற்றனர்.

பெண்களை இழிவாகச் சித்தரிக்கும் மனுதர்மப் பார்வைக்கு மரண அடி கொடுக்கும் வகையில் தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்” புத்தகம் உலகிலேயே இதுவரை பேசாத பெண்ணுரிமையைப் பேசியது. தம் குடும்பப் பெண்களையே பொதுவாழ்விற்கு கொண்டு வந்தார் பெரியார். தன் குடும்பத்திலேயே கைம்பெண் மறுமணம் செய்து புரட்சி செய்தார். பெண்களுக்கான மண விலக்கு உரிமை, சொத்துரிமை, கல்வி உரிமையெல்லாம் விவாதப்பொருளாயின. நிமிர்ந்தனர் திராவிடர். 1951-இல் முதன் முதலில் தந்தை பெரியாரின் போராட்டத்தால் இடஒதுக்கீட்டிற்காக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு காமராஜர் அவர்களால் பல்லாயிரக் கணக்கானப் பள்ளிகள் திறக்கப்பட பெரியார் பெரும் உந்துசக்தியாக விளங்கினார். தமிழர்கள் படித்தனர். இன்றைக்கு தமிழகம் எங்கெங்கு காணினும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்என அலங்கரித்திருக்கிறதே. பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்கள் இல்லாமல் கல்விப்பட்டங்களாய் மிலிர்கிறதே. இது திராவிடம் தந்த அருட்கொடை அல்லவா?

வெர்னாகுலர் (அடிமை மொழி) என்று சொல்லப்பட்டு வந்த தமிழ் மொழிக்கு அண்ணா அவர்களின் ஆட்சியில் தனி மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. மேடைகளில் அழகுத்தமிழ் அடுக்குமொழியில் முழக்கமாகியது.  திருவானது, வணக்கம் என்ற அழகிய சொல் எங்கும் ஒலித்தது. விவாக சுபமுகூர்த்தம், திருமணம் என்றானது, அழகிய தமிழ்ப் பெயர்கள் குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டது. தலைவர்கள் தங்கள் பெயரையெல்லாம் தமிழ்படுத்தினர். சென்னை மாநிலம் தமிழ்நாடு என்றானது. இந்திக்கு இடமில்லை இங்கே இருமொழிதான் என்று பலர் இன்னுயிர் தந்து போராடியதால் தான் இன்றைய நம் இளைஞர்கள் உலகத்தோடு போட்டிப்போட முடிகிறது. பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தினார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, தாய்மொழி உணர்வு எனப்பலத் தளங்களில் புரட்சிக்கு வித்திட்ட சுயமரியாதைத் திருமணங்கள் சட்டவடிவம் பெற்றன. தொடர்ந்தது திராவிடர் ஆட்சி... மகளிர்க்கு சொத்துரிமைக் கொடுத்து இந்தியாவிற்கே வழிகாட்டியது கலைஞர் ஆட்சி. அரவாணிகள் என்ற பெயர் மாற்றப்பட்டது, திருநங்கைகள் என்ற பெயராலே அழைக்கப்பட்டு அவர்களுக்காக தனி வாரியம் ஏற்பட்டது, ஜாதி ஒழிப்பின் குறியிடாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகப் பயிற்சிப் பள்ளிகள்... சமத்துவபுரம் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். 69 சதவிகித இடஒதுக்கீடு.

இந்தியாவிலேயே 69 சதவிகித இடஒதுக்கீடு திராவிடர் ஆட்சியில் தன்னிகரற்றச் சாதனையாகும்.

ஒரு சமுதாயம் எழுச்சிபெற வேண்டுமானால் தங்களுடைய வரலாற்றை நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு துணிச்சலான சமூகநலத்திட்டங்களை முன்னெடுத்தது. அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மதிய உணவு, பள்ளிகள், சுகாதார மய்யங்கள், சாலைகள், பொதுப் போக்குவரத்து, குடிநீர் பகிர்மானம், மற்றும் மின் இணைப்பு வழங்கல் ஆகியவற்றில் பெருவெற்றி பெற்றுள்ளது என்று பொருளாதார அறிஞர் அமர்த்தியாசென் அவர்களால் பாராட்டப்படும் அளவிற்கு பெருத்த மாற்றம் ஏற்பட்டது திராவிட இயக்கங்களின் சாதனை அல்லவா? அதனாலே உரக்கச் சொல்வோம் திராவிடத்தால் வாழ்கிறோம் என்று.

திராவிட உணர்வை மேலும் கூர்மைப்படுத்துவோம்

இன்றைய அரசியல் சமூக சூழலிலும் பல்வேறு அறைகூவல்கள், நீட், நவோதயா வடிவிலும் சமூகநீதிக்கு எதிராய் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இடஒதுக்கீடு என்பது ஒரு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல என்பதை வெகுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். தகுதி-திறமை என்ற மாயவலையில் நம் மாணவர்கள் சிக்காமல் விழிப்புற நம் வரலாற்றை அறிய வேண்டும். ஆரியத்தின் வேர்கள் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாய் வேரூன்றியுள்ளது. இன்னமும் சமஸ்கிருத மந்திரங்களே நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. இன்னமும் நாம் நம் குழந்தைகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை விரும்பிச் சூட்டுகிறோம். இன்னமும் பெண்களுக்கு எத்தனைக் கொடுமைகள், ஆணவக் கொலைகள் தொடர்கின்றன.

மதத்தை அறிவியலோடு தொடர்புபடுத்தவும், வரலாற்றை திரித்து எழுதவும் ஆரிய சூழ்ச்சி தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறது. (கவனிக்க: விநாயகருக்கு யானைத் தலையைப் பொருத்தியது தான் உலகின் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, குந்திதேவி தான் உலகின் முதன் முதலில் சோதனைக் குழாய் மூலம் குழந்தைப் பெற்றவர், பிரதமர் மோடி 7000 ஆண்டுகளுக்கு முன்பே  இந்தியாவில் ஆகாய விமானத்தின் பயன்பாடு இருந்தது, அய்ன்ஸ்டீன் தத்துவத்தை விட உயர்ந்த தத்துவம் வேதங்களில் உள்ளது.) மதத்தின் பேரால் மீண்டும் மனுதர்ம ஆட்சி தலைதூக்கிப்பார்க்கிறது. எனவே தான் ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்று சொன்ன திராவிடச் சிந்தனையை மேலும் மேலும் நாம் கூர்மைப்படுத்துவோம். திராவிடத்தாலே வெல்வோம்.                        

Pin It