அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே!! அக்கிராசனரவர்கள் எம்மைப் பற்றி அதிக புகழ்ச்சியாகக் கூறிவிட்டார்கள். நான் அவைகளுக்கு அருகதையுடையவனல்ல என்றாலும், நமது மக்கள் தங்களது பகுத்தறிவைக் கொண்டு நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொள்கிறது ஒன்றே எமக்கு திருப்திகரமாகவிருக்கிறது.

periyar and vaali“தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும் வழி” என்பதாக என்னை பேசும்படி கேட்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி வியாக்கியானம் அதிகம் செய்ய வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். ஏனெனில் பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் என்பவைகளின் உட்கருத்தை ஊன்றிக் கவனித்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேரும் வழி தானாகவே தோன்றும். எப்படி எனில் குறிப்பிட்ட எந்த விதமான அபிமானத்தை எடுத்துக் கொண்ட போதிலும், அநேகமாக அந்த அபிமானத்தின் பேரால் ஏமாற்றுகளே நடைபெறுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவுள்ளவர்கள் இவைகளை ஊன்றிக் கவனித்து - அலசிப் பார்த்து - உரைகல்லில் வைத்து உரசிப் பார்க்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பார்ப்பார்களேயானால் வாஸ்தவதத்திலே தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேறும் வழியை எளிதில் கண்டு கொள்வதற்கு ஏதுகரமாக விருக்கும்.

மக்களது முன்னேற்றத்திற்கு தடைகல்லாகவிருக்கும் காரியங்கள் எதுவுண்டோ அவைகளை தகர்த்தெரிய வேண்டும். வீணாக - ஆடம்பரமாக நாங்களும் தலைவர்கள் தான் என்று வீரம் பேசிக் கொள்வதில் பயனில்லை. நமக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அப்பகுத்தறிவின் பயனால் இடையூறாக இருக்கும் காரியங்களை மனோதிடத்துடன் தகர்த்தெறிய முன்வர வேண்டும். அன்றே முன்னேற - ஈடேர வழி ஏற்படுமென்பதில் சிறிதும் ஐயமில்லை.

குறிப்பு : ஆதி திராவிட அபிவிருத்தி சங்கத்தின் ஆதரவில் கொழும்பு கும்பனித் தெரு, சி. எம். எஸ். பாட சாலையில் 22. 10. 1932- இல் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு.

(குடி அரசு - சொற்பொழிவு - 06.11.1932)

Pin It