பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது போடப்பட்டுள்ள ‘தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழு சார்பில், அதன் பொதுச்செயலாளர் தோழர் தா.பாண்டியன் வலியுறுத்தினார்.

ஒரு நூலை அறுத்தது - தேசத்துக்கு எதிரானது என்றால், இந்தியா என்ற ஒரு நாடு, ஒரு நூலுக்குள்ளே அடங்கி இருப்பதாக காவல்துறை கருதுகிறதா? என்று கேட்ட தோழர் ‘தா.பா.’, ஏதோ அடிபட்ட நான்கு பேர்தான் தேசம்; அவர்களை அடித்தவர்கள் தேச விரோதிகள் என்றால், அதை இந்த நாடு தாங்காது என்றும் அவர் எச்சரித்தார்.

கோவையில் டிசம்பர் 24 அன்று குத்தூசி குருசாமி படிப்பகத்தைத் திறந்து வைத்து - தோழர் பாண்டியன் ஆற்றிய உரை:

ஸ்ரீரங்கத்தில் தந்தை பெரியாருடைய சிலை அவமரியாதை செய்யப்பட்டது, ஏதோ தற்செயலாக இரண்டு பேர் வெறி பிடித்து செய்து விட்டான் என்று நாம் நினைத்தாலும் சரியல்ல. தமிழ் நாட்டை ஆள்கிற, ஆட்சியிலுள்ள பொறுப்பாளர்கள் நினைத்தாலும் அது சரியல்ல; (கைதட்டல்) ஏனென்றால், அந்த நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே உத்திரபிரதேசத்தில், மராட்டிய மாநிலத்தில் கருநாடக மாநிலத்தில் டாக்டர் அம்பேத்கருடைய சிலை பல இடங்களிலே நொறுக்கப்பட்டது. டிசம்பர் மாதம் 6 ஆம் நாள் டாக்டர் அம்பேத்கர் மறைந்த 50 ஆம் ஆண்டு நினைவு நாள். அவரது உடல் எரியூட்டப்பட்டிருந்த இடத்திலே பத்து லட்சம் உழைக்கும் மக்கள் கூடி அஞ்சலி செலுத்தி, உறுதி எடுக்கத் திட்டமிட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தைத் தடை செய்வதற்குத்தான் அங்கிருந்த ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள். ஆட்சியாளர்களும் சேர்ந்து, அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அந்தக் கூட்டம் நடை பெற்றால், கலவரத்துக்கு வித்தூன்றி விடும் என்று அவர்களும் கருதி விட்டார்கள்.

வகுப்புவாதிகள் எப்போதுமே சமூக சீர்திருத்தத்துக்கு தடைபோடத் துடிப்பவர்கள். எனவே தான் அவர்கள் டாக்டர் அம்பேத்கருடைய சிலையை கான்பூரிலே அடித்து நொறுக்கினார்கள். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் வட இந்தியாவிலும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலை வந்தது. அது நடைபெற்ற சில நாட்களிலேதான். இங்கே ஸ்ரீரங்கத்திலே தந்தை பெரியாருடைய சிலை உடைக்கப்பட்ட செய்தி வெளி வந்தது. இந்த செய்தியைக் கேள்விப்பட்டு, எனக்கு முன்னால் பேசியவர் கூறியது போல், ஏதோ பெரியார் மீதான பக்தியின் காரணமாக அல்ல; இந்த மண்ணில், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும், இவ்வளவு சீர்திருத்த இயக்கங்கள் புரட்சிகர இயக்கங்கள் பிறந்த பிறகும், பெரியாருடைய சிலையை உடைப்பதற்கு, நான்கு பேர் தமிழ்நாட்டில் துணிந்து வருகிறான் என்றால், நாம் அத்தனை பேரையும் கோழைகளாகக் கருதக்கூடிய (பலத்த கைதட்டல்) அளவுக்கு இங்கே நாம் விட்டு விட்டோமோ என்ற எண்ணம் இயற்கையாகவே வருகிறது.

அவர்களுக்கு எங்கிருந்து இந்தத் துணிவு வந்தது என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். வடக்கிலும் சரி; தெற்கிலும் சரி; எங்கே இருந்தாலும் கடைசி வரை அவர்கள் ஓய மாட்டார்கள். அவர்கள் திருந்தப் போவதில்லை. அந்த சக்திகள் இந்த மண்ணில் இல்லாமல் அகற்றப்பட வேண்டும் என்பதைத்தான் இது தெளிவுபடுத்துகிறது. (கைதட்டல்) காலத்தினூடே, இதை நாம் மாற்றியாக வேண்டும். அதற்கான இறுதித் தீர்ப்பை நாம்தான் எழுதியாக வேண்டும் என்றால் இறுதித் தீர்ப்பை எழுதுகிற பொறுப்பிலே - நாம்தான் நம்மைப் போன்ற இயக்கங்கள் தான் ஒன்றாக நிற்கும். நாம் சமுதாய மாற்றத்துக்கான போராட்டத்திலே, ஒரு அங்கமாகத்தான் இதைக் கருதுகிறோமே தவிர, நம்முடைய பற்றைக் காட்டிக் கொள்வதற்காக அல்ல. ஆனால், ஆட்சியில், சட்டத்தைப் பாதுகாக்கிற, ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை, பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது, தேசப் பாதுகாப்புச் சட்டத்தைப் போட்டிருக்கிறது. எதைச் சொல்லி, இந்தக் குற்றத்தை சுமத்தியிருக்கிறார்கள் என்ற விவரங்களை தோழர்கள் என்னிடம் காட்டினார்கள்.

நானும் படித்தேன். அதைப் படித்துப் பார்த்தபோதுதான், மிக வேடிக்கையாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினரைப் புண்படுத்திய முறையில் பேசியதும், அவர்களைத் தாக்கியதும் ஆகிய குற்றங்களில் வழக்கமாக ஈடுபட்டவர்கள் என்பதால், அவர்கள் சிறையிலிருந்து வெளியில் ஜாமீனில் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக, தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்படுகிறது என்று போட்டிருக்கிறார்கள். ஆக காவல்துறையின் கணக்குப்படி, தேசத்தினுடைய பாதுகாப்பு என்பது அவர்கள் எழுதியிருக்கிறபடி ஒரு நூலில் சிக்கியிருக்கிறது. (கைதட்டல்)

இந்தியா என்ற ஒரு நாடு, 2006 ஆம் ஆண்டிலும் ஒரு “நூலுக்குள்ளே” அடங்கியிருக்கிறது என்று காவல்துறையும் நினைக்கிறது என்றால், (கைதட்டல்) பிறகு ஏன் காஷ்மீருக்குள் நுழைந்து, தினம்தோறும் குண்டுபோட மாட்டான்? சட்டத்தைப் போட்டு, பயங்கரவாதத்தை அழித்துவிட முடியாது. அதேபோல், இது போன்று ஒரு இயக்கத்தின்மீது, வலிந்து, இழுத்துப் பொய் வழக்குப் போட்டும் அழித்துவிட முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களுடைய ஆட்சியிலும் இத்தகைய வழக்குகள், பதிவு செய்யப்படுவது பற்றி கவலையோடு பார்க்க வேண்டும். நீங்கள், இவர்கள் மீது, உடைத்தார்கள், பொது மக்களுக்கு தொல்லைத் தந்தார்கள் என்று எந்த வழக்கையும் போடுங்கள். தீ வைக்க முயன்றார்கள். கொலை செய்ய முயன்றார்கள் என்று கூட வழக்குப் போடுங்கள். ஏதோ நாலுபேரை அடித்ததற்கு, அல்லது அடிக்க முயன்றதற்கு தேசத்துக்கு விரோதமாக செய்தார்கள் என்று வழக்குப் போடுவீர்களேயானால், ஏதோ அவர்கள்தான் தேசம் - அவர்களை அடிக்கப் போனவர்கள் தேசவிரோதிகள் என்றால், அதை இந்த நாடு தாங்காது! (பலத்த கைதட்டல்)

இந்தக் கருத்தை ஆட்சியாளர்கள் முதலில் மறுக்க வேண்டும். தங்களது காவல்துறை, தங்களது பெயரால், இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறது என்றால், அது நல்லதல்ல என்பதைப் புரிந்து கொண்டு, உடடினயாக அந்த வழக்கை ரத்துச் செய்து அறிவிப்பதுதான் (பலத்த கைதட்டல்) நியாயத்தை நிலைநாட்டுவதற்கு, இந்த அரசு நிற்கிறது என்பதற்கான அடையாளம். அதைச் செய்ய வேண்டும் என்று, தமிழக அரசை, இந்திய கம்யூனிஸ்டு, கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்)

அவர்களை நீங்கள் பாராட்ட வேண்டாம்; தேசத் துரோகிகள் என்று குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தவும் வேண்டாம். அவர்கள் கடமையைச் செய்திருக்கிறார்கள். அந்தக் கடமை தொடரட்டும். (பலத்த கைதட்டல்) இதற்கு மேல், நான் இது பற்றி எதையுமே கூற விரும்பவில்லை. சென்னையிலே, இது தொடர்பாக - அரசு தரப்பிலே சந்தித்துப் பேசி, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று காட்டாயமாக வலியுறுத்துவேன்.

எனவே, இது ஒரு தவறான முன்னுதாரணம்; இந்திய அரசியல் சட்டம் மதச் சார்பற்ற சட்டம் என்று கூறிவிட்டு, இம் மாதிரியான குற்றச்சாட்டை தேசத் துரோகம் என்று சொல்லத் தொடங்கினால், நீங்கள் போட்டிருக்கிற வழக்குதான், அரசியல் சட்டத்துக்கு எதிரானதே ஒழிய இளைஞர்கள் எடுத்த நடவடிக்கை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்போதுமே நாம் நல்ல செய்திகளை மக்களுக்குச் சொல்ல விடாமல் கெடுப்பதற்கே இப்படி செய்கிறார்கள். இப்போது நாம் பெரியார் கொள்கைகளைப் பேசுவதற்கு பதிலாக, அந்தக் கொள்கையின் தேவையைப் பேசுவதற்கு பதிலாக, எவன் எவனை அடித்தான் என்று பேசவேண்டிய நிலைக்குத் தள்ளி விட்டார்கள். நல்ல காரியங்களைச் செய்யவிடாமல், பிரச்சனையை திருப்பி விடுவது அவர்களின் கைவந்தக் கலை. தவிர்க்க முடியாமல், நாம் அதை சந்திக்க வேண்டியிருக்கிறது.

விஞ்ஞானம் வேகமாக வளருகிறது; ஆனால் இந்த மண்ணில், விஞ்ஞான வளர்ச்சியோடு, மூட நம்பிக்கையும் சேர்ந்து வளருகிறது. வீதிகளில் போகும்போது பாருங்கள். “கம்ப்யூட்டரில் ஜாதகம் பார்க்கப்படும்” என்று போர்டு மாட்டியிருக்கிறான். இவன் கையிலே விஞ்ஞானத்தைக் கொடுத்தாலும், அவன் அதையும் பஞ்சாமிர்தம் ஆக்கி விடுவான். (கைதட்டல்) எனவே இந்த மண்ணிலே விஞ்ஞானிகள்கூட எச்சரிக்கையோடு இருந்தாக வேண்டும். விழிப்போடு இருந்தாக வேண்டும். நாம் மிகுந்த சிரமத்தோடு, கால மாற்றத்துக்கு ஏற்ப, இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் வழிகாட்ட விரும்புகிறோம்; முயற்சிக்கிறோம்.

அதற்கு வழிகாட்டக் கூடிய வகையிலேதான் இன்று குத்தூசி குருசாமி படிப்பகத்தைத் திறக்கிறோம். நான் அவரோடு பழகியதில்லை. ஆனால் அவரது எழுத்துக் களைத் தவறாமல் படித்திருக்கிறேன். அவர் குத்தூசி என்ற பெயரிலே எழுதினார். அது தமிழகத்திலே நிலையான பதமாக நிலைத்துவிட்டது. பலசரக்குக் கடையிலே சாக்கு மூட்டையிலே உள்ள பொருள் தரமாக இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படுவது தான் குத்தூசி இதை லாவகமாக பயன்படுத்தினார்.

‘விடுதலை’ப் பத்திரிகையைப் படிப்பவர்கள், முதலில் குத்தூசி பக்கத்தைத் திருப்பும் அளவுக்கு வலிமையோடு எழுதியவர். ‘எந்த அதிகாரியை இன்று அம்பலப்படுத்தியிருக்கிறார்? எவன், எந்த துறையிலே குறும்புத்தனம் செய்தான்?’ என்று ஆவலோடு படிப்பார்கள். ஒவ்வொரு நாளும், அது ஒரு விவாதத்தையே கிளப்பும். அந்தக் கட்டுரை, அவரது தலையங்கம், விமர்சனம் என்பதுதான், அரசியலிலே மிகப் பெரும் விவாதமாக மாறும். எனவே ஒரு மய்யமான விவாதத்தைக் கிளப்பி விடுகிறவராக, தூண்டி விடுபவராக, குத்தூசி குருசாமி அவர்கள் கடைசி வரை வாழ்ந்தார். அவர் ஆற்றிய பணியை மறைத்துவிட முடியாது. ஒரு இயக்கத்திலிருந்து வெளியேறியதால் அல்லது வெளியேற்றப்படுவதால், அவர் செய்த காரியம் மறைந்து விடாது. அவர் இங்கிருந்தாலும், எங்கிருந்தாலும், இறுதி வரை பகுத்தறிவாளராகத்தான் வாழ்ந்தார். சமூக மாற்றத்துக்குத் தான் சிந்தித்தார்.

எனவே அந்த வகையில் அவரது நினைவு போற்றப்பட வேண்டும். அவர் பிற்போக்கான கொள்கைக்கு என்றைக்கும் பலியானதில்லை. அல்லது, அந்த இயக்கத்திலிருந்து ஏதோ பதவி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக, இன்னொரு கட்சிக்குத் தாவியவரும் அல்ல. கொள்கைக்காக நின்றார். நடைமுறைகளில், கொஞ்சம் கருத்து வேறுபாடு வந்தபோது, விலகி நிற்க வேண்டிய கட்டாயம் வந்தது. இதைத் தவிர, அவர் எழுத்தால், சிந்தனையால், தமிழக மக்களுக்கு வழி காட்டக் கூடியவராகத் தான் கடைசி வரை திகழ்ந்தார். இன்றைக்கு அந்தப் பணி முன்பைவிட மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. நாம் சமூக சீர்திருத்தத்தை விரும்பு கிறவர்கள்; சமூக மாற்றத்தை விரும்புகிறவர்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அரங்கிலும்கூட, அரசியல் கட்சிகள் என்பவை தோன்றியதே, கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளேதான். அதற்கு முன்பு அரசியல் கட்சிகள் என்பவை இல்லை.

மதம் என்ற பெயரால் மாறுபட்டு நிற்பார்கள்; ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வார்கள்; கொலை செய்வார்கள்; யுத்தங்களும், இன அடிப்படையில், மத அடிப்படையில் நிகழ்ந்தனவே ஒழிய, கட்சி என்ற ஒரு அமைப்பு, அரசியல் என்ற ஒரு அமைப்பின் அடிப்படையில் நிகழவில்லை. மதத்துக்கும் அப்பால் - சகலருக்கும் பொதுவான ஆட்சி அமைப்பு ஒன்று வரவேண்டும் என்ற அரசியல் கொள்கை, தொழில் புரட்சி தொடங்கி, மனித குலத்திலே மாற்றங்களும் ஏற்பட்டு, மதத்தைக் கோவிலோடு நிறுத்தி, அரசைப் பொதுவாக நடத்த வேண்டும் என்ற சண்டையிலேதான் - சர்ச் வேறு, அரசு வேறு என்ற மோதலில்தான் அரசியல் கட்சியே பிறந்தது. அது ஒரு நூற்றாண்டு போராக நடந்தது.

மூடநம்பிக்கை உலகம் முழுதும் உண்டு. இந்தியாவில் மட்டும் தான் என்று நினைத்துவிட வேண்டாம். மதம் எங்கேயெல்லாம் பரப்பப்பட்டதோ, அங்கெல்லாம் அந்த மதத்துக்கு ஏற்ப மூடநம்பிக்கை இருந்தது. இதில் ஆங்காங்கே கொஞ்சம் வேறுபாடு. அவ்வளவு தான்.

இந்து மதம், கிறிஸ்தவ மதம், புத்த மதம், முஸ்லீம் என்று எடுத்துக் கொண்டால், இந்த மதங்களுக் குள்ளேயே வேறுபாடுகள் உண்டு. ஆனால், இந்து மதத்திலுள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால், இந்து மதத்துக்குள்ளேயே ஆறு, ஏழு மதங்கள் உண்டு. இந்து மதத்துக்குள்ளேயே ஆறாயிரம் சாதிகள் உண்டு. இன்னும் எண்ணிக்கையில் வராத சாதிகள் உண்டு. இங்கே அத்தனைக்கும் பிறப்பு காரணம், முன்னர் செய்த பாவ புண்ணியம் காரணம் என்று கற்பனையாகப் படைத்து வைத்ததுதான். அந்த நம்பிக்கை இங்கே ஆழமாக வேர் விட்டு நிற்கிறது. இந்த ஆழமான பிடிப்புத்தான், நாட்டின் வளர்ச்சியையே தடைபடுத்திக் கொண்டிருக்கிறது.

எப்போதுமே, ஒரே சிந்தனையில் சேர்ந்து இணைந்து நிற்கிறவர்கள், பிரிவுபட்டு நிற்பதால், நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுவிடும். திராவிடர் இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் சேர்ந்து நிற்க வேண்டியவர்கள். இவர்கள் பல நேரங்களிலே பிளவுபட்டு நின்றதால், தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பைத்தான், இப்போதும் நாம் சந்தித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால், இரண்டு பேருமே சேர்ந்து வகுப்புவாதிகளை எதிர்க்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் நாம் நிற்கிறோம்.

இன்று இந்தியா முழுமையிலும் வகுப்புவாத சக்தி அரசியலுக்குள்ளே நுழைந்திருக்கிறது. அது அரசியல் ஆதிக்கத்திலே இருந்தால் என்ன செய்யும் என்பதை ஆறு ஆண்டுகாலம் ஆட்டம் போட்டும் காட்டியிருக்கிறது. இனியும் அது தலை தூக்காமல் தடுக்க வேண்டுமென்றால், மூடநம்பிக்கைகள் அற்ற எல்லா மனிதர்களையும் சமமாகப் பாதிக்கக் கூடிய, சகலரும் ஒன்றுபட்டு நாட்டுக்கு வழிகாட்டியாக வேண்டும். இது பெரிய கடமை; கடுமையான கடமை. ஆனால்,சேர்ந்து நின்றால் நாம்தான் வெற்றி பெறுவோம். அவர்கள் தோற்றுப் போவார்கள்.

Pin It