கடந்த வாரம் கோவை சென்றிருந்தபோது, நானும், தோழர்கள் உமாபதி, சிங்கராயர் ஆகியோரும், மருத்துவமனையிலிருந்த கழகத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான விடுதலை விரும்பி அவர்களைச் சென்று கண்டு வந்தோம். அந்த நிமிடங்கள் மிக நெகிழ்வானவை. அது குறித்துத் தோழர்கள் இருவருமே தத்தம் முகநூலில் பதிவு செய்துள்ளனர். அதனைத் தாண்டி, அன்று அவர் மொழி தொடர்பாகச் சொன்ன ஒரு செய்தி மிக முதன்மையானது. அது நம் சிந்தனைக்கு உரியதாக இருந்தது. அது குறித்துப் பேசுவதற்கு முன்பு, எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்திலிருந்து, இன்னொரு செய்தியை இங்கு முதலில் பதிவிட வேண்டும் என்று கருதுகின்றேன்.

சில நாள்களுக்கு முன், ஒன்றிய அரசின் நிறுவனத்தில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டிருந்தேன். விழா முடிந்து, அன்று மதிய உணவை நானும், அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் அவருடைய அறையில் எடுத்துக் கொண்டோம். அவர் உத்திரப்பிரதேசத்துக்காரர். அவருக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியவில்லை. எனக்கு இந்தி தெரியாது. எனவே இருவரும், இருவருக்கும் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் உரையாடினோம். நான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்பதைத் தவிர, என் அரசியல் பின்புலம் எதுவும் அவருக்குத் தெரியவில்லை. ஆகவே, மனம் திறந்து சில செய்திகளை என்னிடம் பேசினார். அந்த உரையாடல் மிகத் தேவையானது என்பதால், அதனை உரையாடல் வடிவிலேயே கீழே தருகின்றேன். உரையாடலை நான் இப்படித் தொடங்கினேன்.

karunanidhi and anna‘நீங்கள் இங்கு வந்து எவ்வளவு நாளாயிற்று?”

“பத்து மாதங்கள் ஓடிவிட்டன”

“அப்படியா, இவ்வளவு நாளாகியும் ஏன் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளவில்லை?”

“நான் எப்போது மாற்றல் வாங்கிக்கொண்டு போகலாம் என்று காத்திருக்கிறேன். நீங்கள் வேறு...”

“ஏன் அப்படி? தமிழ்நாடு பிடிக்கவில்லையா?”

“இது நல்ல ஸ்டேட்தான். எல்லோரும் நன்றாகப் பழகுகிறார்கள். பருவநிலையும் நன்றாகவே உள்ளது”

“பிறகு என்ன?”

“மொழிப் பிரச்சினைதான் சார். இங்கு யாருக்குமே இந்தி தெரியவில்லை. தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எங்கு சென்றாலும், இந்தியை வைத்து நாள்களை நகர்த்திவிட முடியும்”

“கேரளாவில்...?’

“அங்கும் கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் தமிழ்நாடு அளவிற்கு இல்லை. அங்கே அலுவலகத்தில் பலரும் இந்தி பேசுவார்கள். இங்குதான், அலுவலகம், வீடு, கடைவீதி எங்கு சென்றாலும் இந்தி பயன்படுவதே இல்லை. யாருக்குமே இந்தி தெரியவில்லை”

இதற்குப் பிறகு அவர் சொன்ன செய்திதான் மிகுந்த கவனத்திற்குரியது. அவர் சொன்னார் -

“வேறொன்றுமில்லை சார், இங்கு பலருக்கும் ஓரளவு ஆங்கிலம் தெரிந்துள்ளது. அதனால் இந்தி வேண்டுமென்ற எண்ணமே இல்லை. ஆங்கிலம் போய்விட்டால், பிறகு மெல்ல மெல்ல எல்லோரும் இந்திக்கு வந்துவிடுவார்கள்.”

பளிச்சென்று ஓர் உண்மை எனக்குள் பட்டுத் தெறித்தது!

அய்யாவும், அண்ணாவும், கலைஞரும் எவ்வளவு தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள் என்பது புரிந்தது. ‘வேலை செய்பவர்களிடம் கூட ஆங்கிலத்தில் உரையாடுங்கள்’ என்று அய்யாவும், தனியாக 1968இல் ஒருநாள் சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டி, இருமொழிக் கொள்கையை வலியுறுத்தித் தீர்மானமாக நிறைவேற்றிய அண்ணாவும், தமிழுக்கு மாற்றாக அன்றி, இந்திக்கு எதிராகவே ஆங்கிலத்தை நிறுத்தியுள்ளனர் என்பது தெளிவாகப் புரிந்தது.

தாய்மொழி நமக்கு வாளாக இருக்கலாம். ஆனால் ஆங்கிலமே நமக்குக் கேடயமாக இருக்கிறது.

இரண்டும் நமக்கு அந்நிய மொழிகள்தானே, அவற்றுள் எது இருந்தால் என்ன என்று சிலர் கேட்கின்றனர். அப்படியில்லை. ஆங்கிலம் நமக்குப் பயன்படுகிறது. இந்தி நம்மை அடிமைப்படுத்துகிறது! எனவே இருமொழிக் கொள்கை என்பது நம்மை வடநாட்டினருக்கு அடிமை ஆகாமல் காப்பாற்றும் என்பது உண்மை!

இதன் தொடர்ச்சியாகவே, அண்ணன் விடுதலை விரும்பி சொன்ன கருத்தை நான் பார்க்கிறேன். அவருடைய நீண்ட அரசியல் அனுபவத்திலிருந்து அக்கருத்தை அவர் பெற்றிருக்கலாம். அவர் சொன்னார்

- “கர்நாடகம், கேரளம் போன்ற அண்டை மாநிலங்களோடு நமக்குச் சில சிக்கல்கள் இருக்கலாம். அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டுமேயன்றி, அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டியதில்லை. இணக்கமாகப் போவதே நல்லது.

அதே போல, தமிழிலிருந்து பிறந்த கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளையும் நாம் வெறுக்க வேண்டியதில்லை. தென்னாடு ஒற்றுமையாக இருந்தால்தான், வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியும்” என்றார். சட்டென்று எனக்குப் பாரதிதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

 “தெலுங்கு நாடு செப்பு கேரளம்

கன்னடம் துளுவம் என்னும் நாடுகள்

அனைத்தும் புதுப்பெயர் ஆமென அறிக

எல்லாம் பழந்தமிழ் நாடென இயம்புக”

என்று பாடும் புரட்சிக் கவிஞர், மேலும் இரண்டு வரிகளையும் இணைத்துச் சொல்கின்றார்,

“பிறர்கண்டு அஞ்சும்உன் பெரியபட் டாளத்தை

அறுத்துக் குறுக்குதல் அறியாமை அன்றோ?

ஏன்உன் இனத்தை எதிரிக் காக்கி

 ஊனத்தை நாட்டுக்கு உண்டாக்கு கின்றாய்?”

என்றும் அவரே கேட்கின்றார்.

கவனமாயிருப்போம் தமிழர்களே, நமக்கு வாளும் வேண்டும், கேடயமும் வேண்டும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It