periyar 314சென்னை அரசாங்க கல்வி மந்திரி திவான்பகதூர் கனம் குமாரசாமி ரெட்டியாரவர்கள் திருநெல்வேலியில் முனிசி பாலிடியாரால் வழங்கிய ஒரு உபசாரப் பத்திரத்திற்கு பதிலளிக்கும் போது பேசியிருப்பதில் காணப்படுவதாவது: -

“இன்று தேசமிருக்கும் நிலையில் நமக்கு வேண்டியது ஆரம்பக் கல்வியேயாகும். உயர்தரக் கல்வியை நிறுத்தியாவது ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டியது இன்றியமையாதது.

இந்தக் கவலை மீது இதுவரை கல்வி முறையில் சரியானபடி கவனம் செலுத்தப் படவில்லை. சரியான கொள்கையும் திட்டமும் ஏற்படுத்தாததே இதற்குக் காரணம்.

மக்களுக்கு வரவர அறியாமை அதிகரித்துக் கொண்டு வருவது யாவரும் அறிந்ததாகும். கல்வி விஷயத்திலாகும் வீண் பணச் செலவு அதிகம். செலவுக்குத் தகுந்த பலனில்லை.

என்னுடைய உத்தியோக காலத்தில் கல்வி முறையை நேர்மையான வழியில் திருப்பி ஆரம்பக் கல்வியை நாட்டில் எல்லாப் பக்கமும் புகுத்தி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் இந்த நாட்டில் இல்லையென்று ஏற்பட்டால் அதுதான் கல்வி விஷயத்தில் நான் செய்த நல்ல காரியமாகும்” என்று பேசியிருக்கிறார்.

இதை நாம் மிகுதியும் சரியான அபிப்பிராயம் என்று சொல்வதோடு திரு. ரெட்டியாரையும் மனதாரப் பாராட்டுகிறோம். கல்வி விஷயத்தில் நமது நாட்டிலுள்ள குறைகள் உலகத்தில் எங்குமேயிருக்காதென்று கூறலாம். இதற்கு முக்கிய அத்தாட்சிக்கு வெகுதூரம் போக வேண்டியதில்லை. சர்க்காரின் 1921 ம் வருஷத்திய ஜனகணிதப்படி பார்த்தால் 100க்கு இந்தியர்களில் 7 பேர்களே படித்தவர்களாகும்.

இந்தக் கணக்கிலும் 100க்கு 3 பேராயுள்ள பார்ப்பனர்களில் 100க்கு 100 பேர் படித்திருப்பதைக் கழித்து மற்ற மக்களில் மொத்தம் படித்தவர்கள் வீதாசாரம் பார்ப்போமானால் இந்தியர்கள் 100க்கு 4 பேரே படித்தவர்கள். அதாவது எழுத்து வாசனையுடையவர்களாயிருக்கிறார்கள்.

ஒரு தேசத்தின் இழிவுக்கும் அறியாமைக்கும் பாமரத்தன்மைக்கும் இதைவிட வேறு அத்தாட்சி என்ன வேண்டும் என்று கேட்கின்றோம். இந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் இந்த அரசாங்கத்தினால் கல்விக்காக செலவழிக்கப்படும் பணங்களும் முயற்சிகளும் பெரும்பாலும் முன் சொல்லப்பட்ட 100க்கு 3 பேராயுள்ள ஜன சமூகம் மாத்திரம் 100க்கு 100 பேராக படிக்கப் படுவதற்காகவே சூக்ஷி செய்து கொண்டு செலவழிக்கப்பட்டிருப்பதோடு இந்த இலாக்காவின் ஆதிக்கம் அந்த வகுப்பாரிடமே சிக்கிக் கொண்டிருந்ததே முக்கிய காரணமாகும்.

இந்த புரட்டை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவேயில்லை. இன்றைய தினமும் இந்தியாவில் தற்குறித்தன்மை ஒரு இருபது வருஷத்திற்குள்ளாவது இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டுமானால், கல்வி இலாக்காவிலிருந்து பார்ப்பனர்களை விலக்கி வைத்தோமானால் தான் கண்டிப்பாய் முடியக்கூடிய காரியமாகும்.

கல்வியிலாக்காவானது பார்ப்பனர்கள் கையில் இருந்ததினாலேயே அதற்காக ஒதுக்கிய பணங்கள் பெரும்பகுதி நிர்வாகிகள், உபாத்தியாயர்கள் சம்பளம் என்கின்ற பேரால் கொள்ளை போய்விட்டது. இப்போதும் கொள்ளை போகின்றது.

கல்வி இலாக்காவிலுள்ள சம்பளம், வேறு எந்த இலாக்காவிலும் இவ்வளவு தாராளமாயில்லை என்றே சொல்லலாம். உதாரணமாக, ஒரு பையன் பி. ஏ. படித்து விட்டு சர்க்கார் செலவில் ஒரு வருஷம் உபாத்தியாயர் வேலைக்கு எல். டி. படித்து விட்டு வந்து விட்டால் உடனே மாதம் 75 ரூபாய் சம்பளம் வாங்க அருகனாய் விடுகிறார். பிறகு வருஷம் 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை கிரேடு அதிகச் சம்பளம் பெற அருகராயிருக்கிறார்.

எதற்காக இவர்களுக்கு இவ்வளவு சம்பளம் என்பதைப் பற்றி யாருமே கவனிப்பதில்லை. இந்த சம்பளம் சாதாரணமாய் மூன்றாவது பாரம் வரை சொல்லிக் கொடுக்கக் கூடிய 3 உபாத்தியாயர்களுக்குக் கொடுக்கலாம். இன்னம் புரொபசர்கள், லெக்சரர்கள், எட்மாஸ்டர்கள், பிரின்ஸ்பால்கள் ஆகியவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் இதைப் போல் பலமடங்கு ஆகிறது.

இந்தப் பணம் ஏழைகளிடமிருந்து வரி வசூலித்ததும், பிள்ளைகளின் பெற்றோர்களும் இதற்காக என்று மற்றவை களில் அதிகமாக சம்பாதித்ததுமாகும். இந்த மாதிரி சம்பளம் உபாத்தியாயர்களுக்குக் கொடுப்பதற்காக பிள்ளைகள் சம்பளங்களை உயர்த்துவதாலேயே எல்லாப் பிள்ளைகளும் படிக்க முடிவதில்லை.

இது தவிர கல்வியிலாக்கா சர்க்கார் ஆதிக்கத்தில் சிக்கியிருப்பதால் சம்பளம் குறைப்பதற்குக் கூட அவர்கள் சம்மதிக்காததால் சர்க்கார் நிர்ப்பந்தத்திற்காகவே தனிப்பட்ட பள்ளிக்கூட நிர்வாகிகள் கூட அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

சாதாரணமாக இன்றைய நிலைக்கு க்ஷ.ஹ.டு.கூ. கள் µ ரூபாய் 40, சம்பளத்திற்கு தாராளமாய் கிடைக்கும்படி செய்யலாம். கிடைக்கவும் செய்யும்.

மற்ற உத்தியோகங்களைப் போல் சம்பளம் குறைந்தால் லஞ்சம் வாங்குவார்கள், நடுநிலையில் இருக்கமாட்டார்கள் என்று சொல்லவும் இதில் இடமில்லை. இந்த மாதிரி சம்பளத்தை அனுசரித்து பிள்ளைகள் சம்பளமும் மற்ற செலவுகளும் குறைத்து விட்டால் 10000க்கணக்கான க்ஷ.ஹ.க்கள் தோன்றி விடுவார்கள்.

சாதாரண மக்கள் படிக்க முடியாத செலவுகள் வைத்திருப்பதால் அதிகமான பேர்கள் படிக்க முடியாமல் இருக்கின்றதே தவிர படிக்கத் தகுந்த புத்தி இல்லாததால் அதிகம் பேர் படிக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது.

இது போலவே அந்த இலாக்கா அதிகாரிகளுக்கும் சிப்பந்திகளுக்கும் கொடுக்கப்படும் சம்பளமும் இது போலவே ஒன்றுக்கு இரண்டாகவும் சில சமயங்களில் மூன்றாகவும் கொடுக்கப்படுகின்றன. இந்த அதிக செலவுகள் எல்லாம் மேல் வகுப்பு படிப்புகளை உத்தேசித்தேதான் செய்யப்பட்டு வருகின்றன.

கல்வி இலாக்காவையே இரண்டாகப் பிரித்து ஆரம்பக் கல்விக்கு ஒரு இலாக்காவும், உயர்தரக் கல்விக்கு ஒரு இலாக்காவுமாக ஏற்பாடு செய்து ஆரம்பக் கல்வியை சர்க்கார் செலவிலும் உயர்தரக் கல்வியை முழுதும் மாணாக்கர்கள் செலவிலும் வைத்துவிட்டால் ஆரம்பக் கல்வியை நாமெல்லாம் பரப்புவதற்கு பணம் கிடைக்காமல் போகவே போகாது.

அந்த உபாத்தியாயர்களுக்கும் வயிரார சாப்பாடு போடலாம். டு.கூ. படித்து விட்டதினாலேயே அவன் குடும்பத்திற்கு “ 75 ரூ.க்கு கம்மியாயிருந்தால் போதாது என்று சொல்லும் கல்வி இலாகா உத்தியோகஸ்தர்கள் ஆரம்பக் கல்வி சொல்லிக் கொடுக்கும் உபாத்தியாயர்களுக்கு µ 15 ரூ. போராதா 20 ரூ. போராதா என்பதற்குக் காரணம் உபாத்தியாயர்களிலும் பெரும்பாலும் அது ஒரு ஜாதி, இது ஒரு ஜாதி என்று ஏற்பட்ட சூக்ஷியே தவிர வேறில்லை.

ஆகையால் கல்வி மந்திரி கல்வியை பரப்ப வேண்டுமானால் பார்ப்பனர்களுக்கே ஏகபோக ஆதிக்கமாய் இருக்கும் அந்த இலாக்காவை விகிதாச்சாரம் எல்லா மக்களுக்கும் பொதுவான ஆதிக்கம் இருக்கும் படியாக்கி கூடுமான வரையில் பார்ப்பனர்கள் அதில் இல்லாமலே செய்வாரானால் அவருடைய உத்தேசத்திற்கு ஏதாவது ஆரம்ப விழாவாவது செய்தவராவார்.

தவிர மந்திரியார் எவ்வளவு தான் கல்வியை பரப்பினாலும் சாப்பாடும், புஸ்தகமும் சிலேட்டுமில்லாமல் படிக்க முடியாமல் இருக்கும் சமூகத்திற்குள் கல்வியை புகுத்தவே முடியாது என்பதை அவர்கள் நன்றாய் உணர்ந்து அதற்கு ஒருவகை செய்தாக வேண்டும் என்பதையும் ஞாபக மூட்டுகின்றோம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாப்பாடும், படிப்பு, சாதனப் பொருளும் கொடுப்பதால் தான் அவர்கள் ஆரம்பக் கல்வியாவது அடைய முடியுமே தவிர மற்றபடி வெறும் பேச்சிலும், உத்தரவிலும் ஆகிவிடாது என்பதை மறுபடியும் வலியுறுத்துகின்றோம்.

தவிர, கல்வியில் இருக்கும் பல நிர்பந்தங்கள் அனாவசியப் பாடங்கள் ஆகியவைகள் ஒழிக்கப்பட வேண்டும். கல்விப் பாடங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். தொழில்கல்வி பள்ளிக் கூடங்களென்பது ஒழுங்காய் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இப்போது பிள்ளைகளுக்கு தொழில் சொல்லிக் கொடுப்பது என்பது மற்றப் புரட்டுகளைப் போலவே இதுவும் ஒரு பார்ப்பனப் புரட்டு என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக் கூடத்தில் நெசவு வகுப்பும், தச்சு வகுப்பும் வைத்து வக்கீல்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், மிராசுதாரர் ஆகியவர்கள் பிள்ளைகளையும் மற்றும் மேல் கண்ட வேலைகளுக்குப் போகப் படிக்கும் பள்ளிக் கூடப் பிள்ளைகளை எல்லாம் அதில் படிக்கச் செய்து அதை கற்றுக் கொள்ளச் செய்வதாகிய பயனற்ற காரியமானது அந்த இலாகா தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள ஞானத்தைக் காட்டுவதற்கும் போதுமான ஆதாரமாகும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.11.1930)

Pin It