முத்துகிருஷ்ணன்கள் எதற்காக இந்தப் பாரத மண்ணில் பிறக்கின்றார்கள்? இது அவர்கள் பிறப்பதற்கான இடமல்ல. பாரத தேசம் எப்போதுமே பஞ்சமர்களின் தேசமல்ல. அது ஆதிக்க சாதி ஆண்டைகளின் தேசம். உழைக்காமல் தொந்தி வளர்க்கும் புல்லுருவிகளின் தேசம். முத்துகிருஷ்ணன்கள் படிப்பதற்கு யார் அங்கீகாரம் கொடுத்தது? அவர்கள் மாடு மேய்க்கவும், செத்த மாடுகளை அப்புறப்படுத்தவும், இழவு செய்தி சொல்லவும், தின்று கொழுப்பெடுத்த மனிதப் பன்றிகளின் மலத்தை அள்ளவும் பாரத மாதாவின் புதல்வர்களால் பணிக்கப்பட்டவர்கள். அப்படி இருக்கும் போது யார் முத்துகிருஷ்ணன்களுக்குப் படிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது? அவர்கள் இருக்க வேண்டிய இடம் சேரிகளே தவிர, மத்திய பல்கலைக்கழகங்கள் அல்ல. சூத்திரர்களுக்கே படிக்க அனுமதி இல்லாத தேசத்தில் பஞ்சமர்கள் படிக்க அனுமதி கிடைக்குமா? அடிமைகள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதுதான் மனுவின் கட்டளை. அதை மீற இங்கு யாருக்கு தைரியம் உள்ளது? மீறினால் என்ன நடக்கும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள். ரோகித் வெமுலாவும், முத்துகிருஷ்ணன்களும் அதை மீறியதால்தான் கிழித்து எறியப்பட்டார்கள். இன்னும் கிழித்து எறியப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். உங்களால் என்ன செய்ய முடியும்?

muthukrishnan jnuஅறிக்கை விடுவீர்கள், ஆர்ப்பாட்டம் செய்வீர்கள், அதிகபட்சம் ஒரு போராட்டம் நடத்துவீர்கள், வேறு என்ன செய்ய முடியும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. பாரத தேசம் பார்ப்பனர்களின் தேசம். இரு பிறப்பாளர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும். இங்கு சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் கல்வி கற்கும் உரிமை எப்போதுமே கிடையாது. அடிமை வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டவர்களுக்கு கல்வி ஒரு கேடா? என்பதுதான் பார்ப்பன மனுவின், அவனின் வாரிசுகளான சங் பரிவாரத்தின் கோட்பாடு. அப்படி இருக்கும்போது முத்துகிருஷ்ணன்கள் எப்படி படிக்கத் துணிந்தார்கள்! அதுவும் பார்ப்பன அக்ரகாரமான மத்திய பல்கலைக்கழங்களில். முத்துகிருஷ்ணன்களுக்கும் ரோகித் வெமுலாக்களுக்கும் செருப்பு தைக்கும் ஆசை வரலாம், மலம் அள்ளும் ஆசை வரலாம்... ஆனால் ஐஏஎஸ் ஆகும் ஆசையும், கார்ல்சாகன் போன்று அறிவியல் எழுத்தாளனாக ஆசையும் வரலாமா?

பாரத தேசத்தில் பிறந்துவிட்டு. நாம் அனைவரும் பாரத மாதாவின் பிள்ளைகள் என்ற வெற்றுக்கோசத்தை நம்பி, நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன். சூத்திரன் பார்ப்பனனின் மனைவியைத் தொட்டாலோ, இல்லை தொட நினைத்தாலோ அவனுக்கு மரண தண்டனை விதிக்கின்றான் மனு. அப்படி இருக்கும் போது பார்ப்பன பாரத மாதாவுக்கு சூத்திரர்களும், பஞ்சமர்களும் எப்படி புதல்வர்களாக இருக்க முடியும்? பாரத மாதாவின் கணவன் நிச்சயமாக பூணூல் போட்ட பார்ப்பனனாகவோ, இல்லை சத்திரியனாகவோ இல்லை வைசியனாகவோ கூட இருக்கலாம் ஆனால் எப்படி அவன் ஒரு சூத்திரனாகவோ, இல்லை பஞ்சமனாகவோ இருக்க முடியும்? அதனால் இந்த நாடு உங்களுக்கானதல்ல. அதைத்தான் அம்பேத்கர் சொன்னார். நாங்கள் நாடற்றவர்கள் என்று.

பஞ்சமர்களின் மரணத்தைப் பார்த்து இந்த நாடு ஒரு நாளும் பதைபதைத்ததில்லை. இந்த பாரத தேசம் ஒரு வெட்கம் கெட்ட தேசம். அடிமை வேலை செய்ய நிர்பந்திப்பதற்கும், தினவெடுத்த ஆதிக்க சாதி ஆண்டைகள் அடித்து உதைப்பதற்கும், ஏன் கொல்வதற்கும் அது வரம்பற்ற அதிகாரத்தையும், உரிமையையும் ஆதிக்க சாதிகளுக்குக் கொடுத்திருக்கின்றது. அவர்கள் சமூக நீதி என்ற வார்த்தையையே பாரத தேசத்தின் மூலைமுடுக்களில் இருந்து எங்கும் காணாதபடி ஒழித்துக்கட்ட உறுதி பூண்டிருக்கின்றார்கள். அந்த வார்த்தை அவர்களின் காதுகளில் ஒரு ஈனசுரமாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அதைக் கேட்கும் போதெல்லாம் அவர்களுக்கு உடலில் புழுக்கள் ஊறுவதுபோல் உணர்கின்றார்கள். அதனால் தான் இடஒதுக்கீட்டில் வரும் மாணவர்களைக் கண்டு அசுத்தத்தை பார்த்தது போல அருவருப்பு அடைகின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை மனு ஏற்கெனவே சமூகத்தில் யார் யார் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டான். அதை மாற்றுவது என்பது மனுவுக்கு மட்டும் அல்லாமல், கடவுளுக்கே செய்யும் துரோகம். ஆனால் அம்பேத்கரும், பெரியாரும் அதை மாற்றிவிட்டார்கள். தங்களின் கண்முன்னாலேயே தங்களுக்கு மட்டுமே உரிமையான கல்வி சூத்திரர்களும், பஞ்சமர்களும் பெற அவர்கள் வழி ஏற்படுத்திவிட்டார்கள். அதனால் என்ன, தமிழ்நாட்டில் மட்டும்தானே நம்மால் தர்ம சாஸ்திரத்தை மீற முடியும். ஆனால் அதற்கு வெளியே அவர்களை நம்மால் என்ன செய்துவிட முடியும்?

மனுவின் கட்டளைகளை மீறிய, மீறத் துணிந்த அந்த சூத்திர, பஞ்சம மாபாதகர்களைக் கொல்வது மனுநீதிப்படி சரியே ஆகும். அவர்கள் இந்தப் பாரத தேசத்தில் வாழத் தகுதியற்றவர்கள். தொழிற்தருமம் மிக முக்கியம். சூத்திரனும், பஞ்சமனும் கல்வி கற்று ஐஏஎஸ் ஆகவும், ஐபிஎஸ் ஆகவும், வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், எழுத்தாளனாகவும் வந்துவிட்டால் பிறகு யார் மலம் அள்ளுவது, செத்த மாட்டை அடக்கம் செய்வது, இழவுச் செய்தி சொல்வது, சாவு வீட்டில் பறையடிப்பது? அதனால் அவர்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த உரிமையைப் பிறப்பின் அடிப்படையிலேயே பெற்றவர்கள் அவர்கள். அதை மீறினால் தூக்குக்கயிற்றில் மட்டும் அல்ல கழுவில் கூட ஏற்றிக் கொல்வார்கள். நம்மால் என்ன செய்ய முடியும்? காவல்துறையில் புகார் தரமுடியும். இல்லையா, நீதி மன்றம் போகலாம். ஆனால் அவர்களை ஒன்று நம்மால் செய்ய முடியாது. அவர்களது காலைக் கழுவி கடவுளின் தீர்த்தம் என்று குடிக்கும் அடிமைக்கூட்டத்தால் அவர்களை எப்படி தண்டிக்க முடியும். பாரத தேசத்தில் பார்ப்பனனைத் தண்டிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.

பாரத தேசத்தில் இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே படிக்கும் உரிமையும், பதவிகளை அனுபவிக்கும் உரிமையும் உள்ளது. அதை ஒப்புக்கொண்டுதான் சூத்திரனும், பஞ்சமனும் இங்கு உயிர் வாழ வேண்டும். அதை மீறினால் ரோகித் வெமுலாக்களுக்கும் முத்துகிருஷ்ணன்களுக்கும் ஏற்பட்ட நிலைதான் நாளை உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் ஏற்படும். நம்முடைய அதிகாரங்களைத் தமிழ்நாட்டில் மட்டும்தான் வைத்துக்கொள்ள முடியும். இது டெல்லி, மனுநீதியின் கோட்டை, இங்கேயே வந்து அதை மீறப் பார்க்கும் முத்துகிருஷ்ணன்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? மனுநீதியின் கோட்டையில் நம்மால் என்ன செய்ய முடிந்தது, அமைதியாக முத்துகிருஷ்ணன் பிணத்தை தூக்கிக்கொண்டு வாயை மூடிக்கொண்டு அங்கிருந்து வந்ததைத்தவிர. முத்துகிருஷ்ணன் பிணத்தைப் பார்த்த எவனாவது இனி ஐஏஎஸ் ஆகின்றேன், ஐபிஎஸ் ஆகின்றேன் என அந்தப் பக்கம் போவானா? இனிமேல் இதுதான் நிலை. முத்துகிருஷ்ணன் பிணத்தைப் பார்த்தாவது சூத்திர, பஞ்சம நாய்களுக்குப் புத்திவருமா என்று பார்க்கலாம் என நினைக்கின்றார்கள்.

நீங்கள் இன்னமும் இதை இந்தியா என்று நினைத்துக் கொண்டு இருந்தீர்கள் என்றால் நீங்கள் முட்டாள்கள். மோடி எப்போது பிரதமராக பதவியேற்றாரோ அப்போதே இது பாரத தேசமாக மாற்றப்பட்டுவிட்டது. இப்போது இங்கே சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை, மனுவின் ஆட்சி தான் நடந்துகொண்டு இருக்கின்றது. சட்டப்படி வேண்டுமானால் முத்துகிருஷ்ணன்களும், ரோகித் வெமுலாக்களும் கொல்லப்பட்டது தவறாகலாம். ஆனால் மனுநீதிபடி அது மிகச்சரியானது. பாருங்கள், பாரத தேசம் முத்துகிருஷ்ணன்கள் கொலையைப் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று. இந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்றால், இன்னும் ஆயிரம் முத்துகிருஷ்ணன்களைக் கொல்வது தவறல்ல. ஏன் முத்துகிருஷ்ணன்கள் வம்சத்தையே கூட அழிப்பது தவறல்ல. எல்லாவற்றுக்கும் ஒரு பிராயச்சித்தம் உள்ளது. இதற்கு என்ன பிராயச்சித்தம் என்றால், பஞ்சமன் வீட்டில் தினம் ஒரு வேளை உணவு உண்பது. அவர்கள் பிராயச்சித்தம் செய்யத் தயாராக இருக்கின்றார்கள், நீங்கள்?

- செ.கார்கி