periyar with kidsமேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதியாகிய லார்ட் இர்வின் அறிக்கை யானது இந்தியாவுக்கு முதன் முதல் செய்த நன்மை என்னவென்றால், இந்தியாவின் உண்மையான பிரநிதிதித்துவம் பொருந்திய தலைவர் யாரும் இல்லை என்பதை நன்றாய் வெளிப்படுத்தி விட்டமையே.

லார்ட் இர்வின் அறிக்கை வெளியாகாதிருந்திருக்குமானால், இந்தியாவின் கவுரவம், (இல்லையானாலும்), சற்றாவது காப்பாற்றப் பட்டிருக்கலாம். ஆனால், அது வெளியான பிறகு இப்போது மிகவும் கேவல நிலைமைக்கு வந்து விட்டது.

அறிக்கை வெளியானவுடன் வெகு அவசர அவசரமாய் ‘தலைவர்’ ஒன்று கூடி அதை பாராட்டுவதாகவும், ஒப்புக் கொண்டதாகவும் தீர்மானித்து பல ‘தலைவர்’களிடம் அவசர அவசரமாக கையெழுத்தும் வாங்கி ஆய்விட்டது.

இவ்வறிக்கையை லண்டனுக்கு அனுப்பி இருந்தாலும் அவர்களும் குப்பைத் தொட்டியில்தான் போட்டிருப்பார்கள். ஆனால், நல்ல சம்பவமாய், அது இந்தியக் குப்பைத் தொட்டிக்கே போய்ச் சேரும்படி ஆகி விட்டது.

என்னவென்றால், வழக்கம்போல் அறிக்கைக்கு கையெழுத்தான மறு நாளிலிருந்தே ஒவ்வொரு தலைவர்களும் வியாக்கியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

திரு.காந்தி, நான் இன்ன கருத்தின் மேல்தான் அறிக்கையை தயார் செய்தேன் என்று சொல்லி வெளிவந்து விட்டார். கையெழுத்துப் போட்டவர்களோ, ‘நான் இன்ன கருத்தின் மேல்தான் கையெழுத்துப் போட்டேன்’ என்று சொல்ல வந்துவிட்டார்கள்.

பலர் வாபீசு வாங்கிக் கொள்ளவும் முன்வந்து விட்டார்கள். பலர் அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லி விவகாரம் பேசுகிறார்கள், இந்தியா மந்திரியோ வைசிராய் அறிக்கைக்கு இதுதான் அர்த்தம் என்று வியாக்கியானம் சொல்லி விட்டார். சர். சைமனோ வைசிராய் அறிக்கைக்கு யார் என்ன அர்த்தம் சொன்னாலும் எனக்கு அக்கரை இல்லை; நான்தான் இந்தியாவுக்கு ‘ஜாதகம்’ எழுதப் போகிறேன் என்று சொல்லி விட்டார்.

எனவே இந்திய அரசியல் தலைவர்கள் என்பவர்களும் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் மெம்பர் என்பவர்களுக்கும் இந்தியாவைக் கொள்ளையடிக்கும் கூட்டுக் கொள்ளைக்காரர்களே தவிர, இந்தியாவைப் பற்றின கவலையுள்ளவர்கள் என்று சிறிதும் சொல்ல முடியாதென்றே சொல்லுவோம்.

சாதரணமாக, நமக்கு வினா தெரிந்தது முதல், இந்திய காங்கிரசின் யோக்கியதை, டிசம்பர் மாதத்தில் கூட்டம் கூடி ஏதாவது ஒரு தீர்மானம் செய்வதும், ஜனவரி முதல் அடுத்த டிசம்பர் வரை அத்தீர்மானத்திற்கு வியாக்கியானம் செய்து கொண்டு ஆளுக்கொருவிதமாய் தங்கள் தங்கள் நன்மைக்கு ஏற்றவிதமாய் நடந்து கொள்ளுவதும் வழக்கமாகவே வந்திருக்கின்றது.

இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் கட்சி கள் என்பவையும் ஏறக்குறைய காங்கிரசையே பின்பற்றி வந்திருக்கின்றன. அரசியல் தலைவர்கள் என்றால் நாணயமற்றவர்கள் என்றும், சுயநலக்காரர்கள் என்றும், அகராதியில் எழுதிவிட வேண்டிய நிலையில் வந்து விட்டது.

ஏற்கனவே, அரசியல் என்றால் பித்தலாட்டம் என்று ஆங்கிலத்தில் சொல்லிக் கொள்ளப்பட்டிருந்தாலும், தமிழில் தெளிவாய் நாணயமற்றவர்கள் என்றும், சுயநலவாதிகள் என்றும் பொதுமக்களுக்கு தெரிந்துவிடவேண்டியது மிகவும் முக்கியமான காரியமாகும்.

இந்தியாவின் வட மாகாணத்து அரசியல் மகமதியர், மகமதியரல்லாதார் என்கின்ற விஷயத்தையும், தென்னாடானது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற விஷயத்தையுமே அடிப்படையாகக் கொண்டே, அதற்கேற்ற காரியங்களை அரசியல் என்னும் போர்வையைப் போட்டுக் கொண்டு நடைபெறுகின்றதே அல்லாமல், வேறுகாரியங்கள் சிறிதாவது இருப்பதாக நமக்கு விளங்கவில்லை.

இந்து முஸ்லிம் தகராறும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் தகராறும் இந்திய நாட்டு அரசியல் லட்சியமாக இல்லாமலிருந்திருக்குமானால் இன்றைய தினம் இந்தியாவின் நிலைமை வேறாய் இருக்கும் ஒரு வகுப்பை அழுத்தி அதன்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே அரசியல் போர் நடத்துவதும், அவ்விதம் ஆதிக்கம் செலுத்த முற்பட்டவர்களின் கொடுமையில் இருந்து தப்புவதற்கு மற்ற வகுப்பார்கள் அதற்கு எதிரிடையாயிருப்பதும், இவ் விரண்டுவித சம்பவத்தின் பயனாய் அன்னிய அரசாங்கம் தனது ஆதிக் கத்தை நிலைநிறுத்திக் கொள்ளுவதும் இந்தியாவுக்கு இயற்கையாகவே இருந்து வருகின்றது.

இந்தியாவுக்கு இதுவரை வெளிநாட்டில் இருந்துவந்த படைஎடுப்புகளும், அரசாங்கங்களும் இந்த தத்துவத்தின் மீதுதான் வரப்பட்டதே அல்லாமல் மற்றபடி வேறுவழியில் அல்ல என்பது சரித்திரம் படித்தால் நன்றாய் விளங்கும்.

இன்றைய தினம் அரசியல் பிரச்சனைகளாய் இருக்கும் நேரு ரிப்போர்ட்டும், சைமன் ரிப்போர்ட்டும் எதை ஆதாரமாய்க் கொண்டிருக்கின்றது என்பதைப் பார்த்தாலே நாம் சொல்லுவதின் உண்மை விளங்காமல் போகாது.

அதாவது, நேரு ரிப்போர்ட்டை மகமதியர்களும், ‘தீண்டாதார்களும்’ நம் நாட்டில் பார்ப்பனரல்லதாரும் ஆட்சேபிப்பதன் காரணமும், வடநாட்டு மகமதியரல்லாதாரும் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் நேரு ரிப்போர்ட்டை ஆதரிப்பதன் காரணமும், வகுப்பு பிரச்சனையே அல்லாமல் மற்றபடி வேறு எவ்வித அரசியல் விஷயமான ஆட்சேபனையோ சமாதானமோ இதுவரை யாரும் சொல்லவே இல்லை.

அதுபோலவே, சைமன் கமிஷனைப் பற்றியும் உள்ள ஆட்சேபனைகள் எல்லாம் நேரு ரிப்போர்ட்டை அப்படியே ஒப்புக் கொள்ளாமல் நேருக்கு நேராக பொது மக்களை விசாரித்து அவர்களுடைய கஷ்ட சுகங்களை சர்க்கார் அறிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டதே என்கின்ற ஆத்திரமல்லாமல் வேறு சரியான காரணம் எதாவது சொன்னார்களா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.

தவிர, இந்திய நாட்டில் பெரும்பான்மையான மக்களின் கஷ்டத்திற்கும் தரித்திரத்திற்கும் முக்கிய காரணமாய் இருப்பது மதக் கொடுமைகளும், சமூகக் கொடுமைகளுமேயாகும் என்பது இப் போது எல்லா அறிவாளிகளாலுமே ஒப்புக் கொள்ளப்பட்டாய் விட்டது.

ஆனால், அந்த விஷயத்தில் மாத்திரம் இந்திய அரசியல் தலையிடுவதென்றால் ஒரே பிடிவாதமாக மறுத்து வருகின்றார்கள். ஆகவே, வட்டமேஜை மகாநாடோ, தலைவர்கள் மகாநாடோ கூடினாலும் ஒன்றுதான்; கூடாமல் சைமன் கமிஷன் அறிக்கைப்படியே சீர்திருத்தம் வந்தாலும் ஒன்றுதான்.

இந்த இரண்டிலும் இந்தியாவின் உண்மையான தேவைக்கு எவ்வித மார்க்கமும் ஏற்படாதென்பது நமது உறுதியான முடிவாகும்.

(குடி அரசு - கட்டுரை - 17.11.1929)

Pin It