lala rajpati raiநமது பத்திரிகை முடிந்து கடைசித் தாள் அச்சுக்குப் போகுந்தருவாயில் பாஞ்சால சிங்கம் முடிசூடா மன்னர் உண்மைத் தலைவர் லாலா லஜபதிராய் அவர்கள் திடீரென்று மாரடைப்பு வியாதியால் மரணமடைந்தாரென்று தந்தி கிடைத்ததைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் இருந்த - இருக்கிற - தலைவர்களில், லஜபதியவர்கள் சொல்லும் வார்த்தைக்குத் தப்பு எண்ணம் அவரது எதிரியாலும் கற்பிக்க முடியாத உத்தம வீரர் இவர் ஒருவர்தான் என்றே சொல்ல வேண்டும். இவரது மரணத்தால், தனது மனத்திற்குப் பட்டதை தைரியமாயும் ஒளிக்காமலும் வெளியிடக் கூடிய ஒரு ஒப்பற்ற தலைவர் இந்தியாவில் இல்லை என்றும் சொல்லும்படியான நிலைமை உண்டாகி விட்டது.

சுயராஜ்யக் கக்ஷியாரைப் பார்த்து, “பஞ்சாப் மாகாணத்தில் உள்ள எல்லா தொகுதிகளில் வேண்டுமானாலும் நான் ஒருவனே தேர்தலுக்கு நிற்கின்றேன். யாராவது வந்து என்னுடன் போட்டி போடுவதாயிருந்தால் வாருங்கள் ஒரு கை பார்க்கலாம்” என்று சொன்ன தீரர். திரு. மோதிலால் நேருவின் வாடையே பஞ்சாப் நாட்டிற்குள் அடிக்க விடாமல் செய்த தனி வீரர்.

சமீபத்தில் தமிழ் நாட்டையும் மலையாளத்தையும் பார்த்து விட்டுப் போன பிறகு தமிழ் நாட்டின் நிலையை பயப்படாமல் சிறிதும் ஒளிக்காமல் வெளியிட்டவர். தமது ஆயுள் காலமெல்லாம் தமது உடல் பொருள் ஆவி மூன்றையும் மக்களுக்கு என ஒதுக்கி வைத்து விட்ட உண்மைத் தியாகி. தேசத்துக்காக முதல் “சீர்திருத்தத்”தின் போது 20 வருஷத்திற்கு முன் நாடு கடத்தப்பட்டவர். இரண்டாவது, “சீர்திருத்தத்”தின் போது 15 வருஷத்திற்கு முன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரவிடாமல் தடை செய்யப்பட்டவர்.

ஒத்துழையாமையின் போது 2 வருடம் சிறை சென்றவர். 3வது “சீர்திருத்தம்” வரப் போவதற்கு முன் சர்க்காரால் அடியும் பட்டவர். அதாவது அதனாலேயே உயிர் விட நேர்ந்ததோ என்று எண்ணத் தக்க அளவு அடியும் பட்டவர். இப்பேர்ப்பட்ட ஒப்பற்ற ஒரு மகான் உண்மைத் தியாகி இறந்தது ஈடு செய்ய முடியாத நஷ்டமாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 18.11.1928)

Pin It