“விடை கொடு தாயே

                தூக்குமேடை செல்கிறேன்.

                மகிழ்வோடு தண்டனையை ஏற்கிறேன்.

                இந்தியர்கள் பார்க்கட்டும்”

                “அம்மா உன் வயிற்றில் மீண்டும்

                நான் பிறப்பேன் குழந்தையாய்,

                அப்போது என் கழுத்தை தடவிப்பார்

                தூக்குக் கயிற்றின் தழும்பிருக்கும்”!

                   -              குதிராம் போஸ்

                பதினான்கு வயதிலேயே ஆங்கிலேய அரசின் அட்டூழியங்களையும், அத்துமீறல்களையும், ஆதிக்கத்தையும் விவரிக்கும் துண்டு பிரசுரங்களை மக்கள் கூடும் இடங்களில் துணிச்சலுடன் வினியோகம் செய்தவன். தமது பத்தொன்பது வயதில் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடி, இந்தியத் தாய் திருநாட்டின் சுதத்திரத்திற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டவன் இளம் தியாகி குதிராம் போஸ்!.

                kudhiram boseவங்காளத்தில் மிட்னாபூர் மாவட்டத்தில் ஹபிப்பூர் கிராமத்தில் 03.12.1889ஆம் நாள், திரிலோகநாத் பாசு, லக்குமிபிரியா தேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் குதிராம் போஸ். தமது ஏழு வயதிலேயே தாய், தந்தை இருவரையும் இழந்தார். பின்னர் தமது சகோதரி அபரூபா தேவியின் வீட்டில் வளர்ந்தார்.

                மிட்னாபூர் நகரில் உள்ள பள்ளியில் கல்வி பயின்றார். 1902-03-ஆம் ஆண்டுகளில் அரவிந்த் கோஷ், சகோதரி நிவேதிதா ஆகியோரின் உணர்ச்சி மிக்க உரைகளைக் கேட்டு, தாய் நாட்டு விடுதலையில் ஆர்வம் கொண்டார்.

                மிட்னாபூர் பள்ளியில் படிக்கும் போது, அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றிய ஞானந்திர நாத் போஸ், ஹேமச்சந்திர கனுங்கோ ஆகியோர் குதிராம் போஸ் உள்ளத்தில் தேச பக்தியையும், தாய் நாட்டுப் பற்றையும் ஊட்டினார்கள்.

                வங்காளத்தைப் பிரிப்பதற்கான ஒப்புதலை கர்சன் பிரபு 1905 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெற்று, அக்டோபர் மாதம் 16-ம் நாள் முதல் அமல்படுத்தினார். அதன்படி முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த கிழக்கு வங்காளம், இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மேற்கு வங்காளம் எனப் பிரிக்கப்பட்டது.

                வங்கப் பிரிவினை தேச பக்தர்களின் நெஞ்சில் பாய்ச்சிய வேல் ஆயிற்று வேதனையால் துடித்த வங்க மக்கள் கொதித்தெழுந்தனர். புரட்சி இயக்கங்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கின. மாணவர்கள் தடையை மீறி ஊர்வலம் சென்றனர். பிரிட்டிஷ் படையினரின் தடியடிகளையும், துப்பாக்கிச் சூடுகளையும் கண்டு மக்கள் அஞ்சாமல் போராடினார்கள்.

                தேசவிடுதலைப் போராட்டத் தலைவர்களான கிருஷ்ணகுமார் மித்ரா, சுதேந்திரநாத் பானர்ஜி, விபின் சந்திர பால் முதலியவர்கள் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பாரிஸால் மாவட்டத் தலைநகரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் வங்கப் பிரிவினையை எதிர்த்தும், கண்டித்தும் தேசத்தலைவர்கள் சிங்கம் போல் முழங்கினார்கள்.

                சுதந்திரப் போரை ஆதிரித்த இதழ் ஆசிரியர்களான பாண்டோபாத்யாயா, அரவிந்த் கோஷ், விபின் சந்திரபால் ஆகியோரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்து சிறையிலடைத்தது பிரிட்டிஷ் அரசு. வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போதே பாண்டோபாத்யாயா சிறையிலேயே மரணமடைந்தார்.

                விபின் சந்திரபால் ஆறுமாத சிறைத் தண்டனையை அனுபவித்து விடுதலை பெற்றார். அவரை வரவேற்று ஊர்வலமாக அழைத்து வர பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் தடையை மீறி சிறைவாசலில் திரண்டனர். கட்டுமீறிய இளைஞர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸ் படை தடியடித் தாக்கதல் நடத்தியது. சிலரை மடக்கிப் பிடித்தது. பிடிபட்ட இளைஞர்களை நடுத்தெருவில் நிறுத்தி பதினைந்து கசையடிகள் கொடுக்குமாறு உத்திரவிட்டான் முதன்மை மாஜிஸ்திரேட் `கிங்ஸ்போர்டு’.

                இதனால், முதன்மை மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு மீது புரட்சி இயக்கத்தினர் கடும் ஆத்திரமும், கோபமும் கொண்டனர். அவனை ஒழித்துக் கட்டுவதன் மூலம், பிரிட்டிஷ் அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

                வங்கப் பிரிவினையின் போது குதிராம் போசுக்கு 15 வயது. அப்போது ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய `யுகாந்தர்’ என்னும் புரட்சி இயக்கத்தில் இணைந்தார்.

                வங்கப் பிரிவினைக்கு எதிராக 1905 ஆம் ஆண்டு, சத்யன் போஸ் என்பவர் எழுதிய `தங்கவங்கம்’ என்னும் துண்டுப் பிரசுரத்தை வினியோகம் செய்ததற்காக குதிராம் போஸ் கைது செய்யப்பட்டார். சிறுவனாக இருந்ததால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

                “ஒன்றுபட்ட வங்காளம் ஒரு மகத்தான சக்தி, பிளவுபட்ட வங்காளம் பல பிரிவுகளாகப் பிரிந்து ஒவ்வொரு பிரிவும் மூலைக் கொன்றாய் இழுத்துச் செல்ல முனையும், ஒன்றுபட்டு ஒரே சக்தியாக விளங்கும் வங்க மக்கள் நமக்குப் பலமான எதிரிகாளக விளங்குகின்றனர். அவர்களைப் பிரித்து பலவீனப்படுத்துவதே வங்கப் பிரிவினையின் முக்கியமான நோக்கம்” என்று `வங்கப் பிரிவினை ஏன்?’ என்ற தலைப்பில் ரைஸ்லி (சுளைநடல) என்ற ஆங்கிலேயர் எழுதியுள்ளார். அந்த அளவிற்கு வங்கம் விடுதலைப் போரில் முன்னணியில் நின்றது என்பது வரலாறு.

                குதிராம் போஸ், ஹட்கச்சா என்ற ஊரில் 1907-ஆம் ஆண்டு நடந்த பால் பை கொள்ளையிலும், 06.12.1907 ஆம் நாள் நாராயண கார்க் இரயில்வே நிலையத்திற்கு அருகில் வங்காள கவர்னர் சர் ஆண்ட்ரூ பிரேசர் பயணம் செய்த இரயிலை வெடிகுண்டு வைத்துக் கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். மேலும், 1908 ஆம் ஆண்டு இரண்டு கொலை முயற்சிகளிலும் குதிராம் போஸ் பங்கெடுத்துக் கொண்டார். பிரிட்டிஷ் கவர்னர் ஆண்ட்ரூ பிரேசரும், சர் பேம்பிள்டேயும் மயிரிழையில் உயிர் தப்பிவிட்டனர்.

                தேசபக்தர்களுக்க கடுமையான தண்டனைகள் அளித்து, அவர்களை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கும் நோக்கத்தில் வெள்ளைக்கார மாஜிஸ்திரேட் கிங்ஸ் போர்டு செயல்பட்டு வந்தான்.

                அரவிந்த் கோஷ் தம்பி பிரிந்திரகுமார் கோஷ் புரட்சியாளர்களை ஒருங்கிணைந்து `அனுசீலன் சமிதி’ என்னும் புரட்சிகர விடுதலை அமைப்பை ஏற்படுத்தினார்.

                பிரீந்திரகுமார் கோஷ் தோட்ட வீட்டில் 1908 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த இரகசியக் கூட்டத்தில் `அனுசீலன் சமிதி’ அமைப்பு உறுப்பினர்கள் கூடி விவாதித்தனர். “பிரிட்டிஷ் ஏகாபத்தியக் கொடுமைகளின் மொத்த உருவமாகத் திகழும் கிங்ஸ்போர்டை ஒழிப்பது நமது முதல் கட்டப் பணியாக இருக்க வேண்டும். புனிதமான அந்தப் பணியைச் செய்வதற்கு துணிவுமிக்க இளைஞர்கள் தேவை. அந்த வாய்ப்பு யாருக்கு கிட்டப் போகிறது?” என்று ஆவேசத்தோடு பேசினார் பரீந்திர குமார் கோஷ்.

                பத்தொன்பது வயதே நிரம்பிய குதிராம் போஸ் `கிங்ஸ்போர்டை ஒழித்துக் கட்டும் பணியை நான் செய்து முடிக்கிறேன்’ என வீரத்தோடு அறிவித்தான்.

                குதிராம் போசும், பிரபுல்ல சக்கியும், 1908 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் முஸாபர்பூருக்குச் சென்று, அங்கே உள்ள ஒரு தர்ம சத்திரத்தில் தங்கினார்கள். இருவரும் ஒரு வார காலம் வெள்ளைக்கார மாஜிஸ்திரேடின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு அடிக்கடி வெளியே செல்லாமல், காலையில் நீதிமன்றத்திற்கும், மாலையில் கிளப்புக்கு மட்டுமே சென்று வருகிறான் என்பதைக் கண்டறிந்தனர்.

                1908-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியன்று இரவு 9.00 மணிக்கு குதிராம் போசும், பிரபுல்ல சக்கியும் மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு தங்கியிருந்த பங்காளவுக்குள் சுவரேறிக் குதித்து, அங்கிருந்த மரங்களின் நிழலில் பதுங்கிக் கொண்டனர்.

                மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு தமது மனைவியுடன் பக்கத்திருந்த கிளப்புக்குச் சென்று, `பிரிட்ஜ்’ விளையாடினார். அவர்களோடு `பிரிட்ஜ்’ விளையாடிய திருமதி கென்னடி என்ற பெண்மணியும், அவரது மகள் குமாரி கென்னடியும், வீட்டிற்குப் புறப்பட்டனர். கிங்ஸ்போர்டு தம்பதியினர் தங்களது வீட்டுக்கு வந்து தேநீர் அருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களும் சம்மதித்து வந்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு தம்பதியினர் ஒரு விக்டோரியா கோச் வண்டியிலும், திருமதி கென்னடியும் அவரது மகளும் மற்றொரு கோச் வண்டியிலும் புறப்பட்டனர். இரண்டு கோச் வண்டிகளும் ஒரே மாதிரியாக இருந்தன.

                கிங்ஸ் போர்டு வீட்டுக்குள் திருமதி கென்னடியும் அவரது மகளும் ஏறி வந்த கோச் வண்டி தான் முதலில் நுழைந்தது. முதலில் வந்த கோச் வண்டிதான் மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு தம்பதியினர் ஏறி வந்த கோச் வண்டி என்று கருதி மரங்களின் நிழலில் பதுங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறிய குதிராம் போசும், பிரபுல்ல சக்கியும் பாய்ந்து சென்று, கோச் வண்டியை மறித்து தங்களிடமிருந்த வெடிகுண்டுகளை வண்டியின் மீது வீசினார்கள்.

                வெடிகுண்டு வெடித்த சப்தம் முஸாபர்யூர் நகரையே குலுக்கியது. கோச் வண்டி சுக்கு நூறாக உடைந்து சிதறியது. குமாரி கென்னடி அந்த இடத்திலேயே மரணமடைந்தார். திருமதி கென்னடி மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் மரணமடைந்தார். பாவம் அந்தப் பெண்கள், மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டுக்கு வைத்த வெடிகுண்டு அவர்களை பலி கொண்டுவிட்டது. மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு தப்பித்துவிட்டான். குதிராம் போசும், பிரபுல்ல சக்கியும் உடனடியாக அங்கியிருந்து தப்பித்துவிட்டனர்.

                பிரபுல்ல சக்கி சமஸ்திபூனரை நோக்கி ஓடினார். அங்கிருந்து மொகாமேகட் என்னும் ஊருக்கு செல்லும் இரயிலில் ஏறி அமர்ந்தார். அந்த இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நந்தலால் பானர்ஜி என்ற காவல் ஆய்வாளருக்கு, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு முஸாபர்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து விட்டார்.

                பிரபுல்ல சக்கி மொகாமேகட்டில் இறங்கியதும் அவரைக் கைது செய்திட காவல் ஆய்வாளர், நந்தலால் பானர்ஜி முயற்சித்தார். அவரது கையை இறுக்கிப் பிடித்தார். அவரை உதறித்தள்ளிவிட்டு, தமது பையில் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு வீர மரணமடைந்தார்.

                குதிராம் போஸ் முஸாபர்பூரிலிருந்து அருகில் உள்ள `வாய்னி’ இரயில் நிலையத்தை அடைந்து, அருகிலுள்ள உணவு விடுதியில் சாப்பிடுவதற்கு ரொட்டி வாங்கும் போது, அங்கிருந்த காவல் துறையினரால் 1908 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.

                குதிராம் போஸ் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது. குதிராம் போஸ் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

                மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டு இந்திய தேச பக்தர்களுக்கு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதில் தீவிரம் காட்டியதால், அவரைக் கொலை செய்ய தான் மனப்பூர்வமாக விரும்பியதாகவும், ஆனால் ஒரு பாவமும் அறியாத திருமதி கென்னடி மற்றும் அவரது மகள் குமாரி கென்னடி ஆகிய இரண்டு அப்பாவிப் பெண்களின் மரணத்திற்காகத் தாம் மிகவும் வருந்தவதாகவும் தெரிவித்தார்.

                குதிராம் போஸ் மீது கொலைக் குற்றமும், பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தாகவும், வெடி குண்டுகளை வீசியதாகவும் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

                முஸாபர்பூர் நீதிமன்றம் குதிராம் போசுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு, அச்சமோ, கவலையோ, கலக்கமோ கொள்ளாத வீர இளைஞன் குதிராம் போஸ், “வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று நீதிமன்றமே அதிரும்படி முழங்கினார். அவரது துணிவைக் கண்ட நீதிபதி, `உனக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன என்பதை நீ உணர்ந்து கொண்டாய் அல்லவா?’ எனக் கேட்டார். `நன்றாக உணர்ந்து கொண்டேன். ஆனால் எனது வருத்தம் என்னவெனில் நான் எறிந்த வெடிகுண்டுகள், கொடுமைகளின் வடிவமான மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டைக் கொல்லாமல் வேறு அப்பாவி நபர்களை பலிவாங்கிவிட்டதே என்பது தான். தாய் நாட்டின் விடுதலைக்காக உயர்த்தியாகம் செய்வதை விட எனக்கு மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்?” எனப் பெருக்கோடு கூறினார் குதிராம் போஸ்.

                இந்தச் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட புரட்சியாளர்கள் மீதான வழக்கு அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதனால், இது அலிப்பூர் சதிவழக்கு என அழைக்கப்பட்டது. புரட்சியாளர்களுக்காக தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் நீதிமன்றத்தில் வாதாடினார். நீதிமன்றம் பதினைந்து பேருக்கு தண்டனை அளித்தது. பரீந்தர குமார் கோசுக்கும் மற்றும் சிலருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர்.

                குதிராம் போசுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

                குதிராம் போஸ் முஸாபர்பூர் சிறையில் 11.08.1908 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். அப்போது அந்த வீர இளைஞனுக்கு வயது பத்தொன்பது.

                “குதிராம் போஸ் மகிழ்ச்சியோடும், புன்னகையோடும் அவன் மரணமடைந்தான். காலை 6.00 மணிக்கு அவனைத் தூக்கிலேற்றினார்கள். அவன் தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக வீரத்துடன் நடந்து சென்றான். முகத்தில் கருப்புத்துணி மூடும் வரை மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்” என ‘அமிர்த பஜார்’ என்னும் இதழ் 12.08.1908 ஆம் நாள் குதிராமின் முடிவு என்ற தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது.

                “குதிராம் போஸ் இன்று காலையில் தூக்கிலிடப்பட்டான். அவன் மிகவும் விரைப்பாக மகிழ்ச்சியோடு சிரித்த முகத்தோடு தூக்கு மேடையேறினான்” என்று ‘எம்பயர்’ என்ற பிரிட்டிஷாரின் ஆங்கில ஏடு செய்தி வெளியிடப்பட்டது.

- பி.தயாளன்

Pin It