periyar rajajiஈரோடு முனிசிபாலிட்டியாரால் ஒரு ஹைஸ்கூல் திடீரென்று ஏற்படுத்தினதின் கருத்தையும், அதன் பேரில் மஹாஜன ஸ்கூல்காரர்கள் முதன் மந்திரிக்கு எழுதியதின் பேரில் ஹைஸ்கூலில் 4வது 5வது பாரங்களை எடுத்துவிட வேண்டுமென்று மந்திரி உத்திரவு போட்டார் என்பதையும், 2,3 வாரங்களுக்கு முன்பு ‘குடி அரசில்’ எழுதியிருந்தோம். முதன் மந்திரியின் இந்த உத்திரவின் பேரில் ஈரோடு சேர்மென் சில பலமான சிபார்சுகளைப் பிடித்துக் கொண்டு போய் அதாவது நம்பிக்கையில்லாத தீர்மானத்திற்கு எதிரிடையாய் கக்ஷி சேர்ப்பதாய்ச் சொல்லி, அந்த உத்திரவை மாற்றி மறுபடியும் ஒரே அடியாய் 4வது, 5வது, 6 வது பாரங்கள் வைத்துக் கொள்ள உத்திரவு போடும்படி கேட்க, நமது மந்திரியார் அதே மாதிரி உத்திரவு போட்டார். தவிரவும் இந்தப் பள்ளிக்கூடத்தை திறந்து வைக்க இதே மந்திரியை ஆரம்பத்தில் முனிசிபல் சேர்மன் சீமான் சீனிவாச முதலியார் கேட்டுக் கொண்ட பொழுது, வருவதாய் வாக்களித்து விட்டு மறுபடி, யார் யாரோ முதல் மந்திரியிடம் சேர்மெனின் யோக்கியதைகளைச் சொன்ன பிறகு, அப்படியானால் நான் அங்கு வருவதில்லையென்று சொல்லி வராமல் நின்று கொண்டார். சேர்மென் எத்தனையோ தந்தி அடித்தும் எத்தனையோ சிபார்சு பிடித்தும்ஒரே அடியாய் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். பிறகு நம்பிக்கையில்லாத தீர்மானம் வருவதை அறிந்ததும் யார் என்ன சொன்னாலும் கேழ்க்க வேண்டியவராய் விட்டதோடு ஸ்ரீமான் ராமலிங்கம் செட்டியார் சொல்படி நடக்க வேண்டியவரானதினாலும் மறுபடியும் அதே பள்ளிக்கூடத்திறப்பு விழாவுக்கு பள்ளிக்கூடம் திறந்து ஒரு மாசத்திற்கு மேலான பிறகு வந்து சேர்ந்தார்.

முனிசிபல் பள்ளிக் கூடத்திற்கு ‘பிரப்’ பள்ளிக்கூடம் என்று பெயர் வைக்கப்பட்டது. முனிசிபல் ரீடிங் ரூமுக்கு ‘காக்ஸ்’ ரீடிங் ரூமென்று பெயர் வைக்கப்பட்டது. இந்தப் பெயர்களுடன் பள்ளிக் கூடத்தையும் ரீடிங் ரூமையும் திறந்து வைத்தார்.

இந்தப் பெயர்கள் முனிசிபல் பணங்களை சேர்மென் அடித்த கொள்ளைக்கு உதவியாகவிருந்த கனவான்களுக்கு லஞ்சமாகக் கொடுப்பதாய் எண்ணிக்கொண்டு இட்ட பெயராக விளங்கிற்று. இந்த பெயர் வைக்கும் சடங்குக்கு குறைந்தது 500 ரூபாயாவது முனிசிபாலிட்டி கணக்கில் செலவு எழுதக் கூடும். பகுதியாவது பாடுபட்டவருக்கும் ஆகும். இந்த மந்திரி முதலில் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்ததும், முதலில் பள்ளிக் கூடம் ஒரே அடியாய் 4, 5, 6 வது பாரங்கள் வைக்க உத்திரவு கொடுத்துவிட்டு மறுபடி அதை கேன்சல் செய்ததும், மறுபடி அதை 5 வது 6 வது பாரங்கள் வைக்க உத்திரவு கொடுத்ததும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வேலை செய்வதற்கு லஞ்சமாகக் காணப்பட்டது.

இவ்வளவோடு போகவில்லை “குதிரை கீழே தள்ளினதோடு குழியும் பறித்தது” என்பது போல் முதல் மந்திரியார் மகாஜன இஸ்கூலையும் வந்து பார்ப்பதாக தானாகவே சொல்லி அனுப்பி வந்து பார்த்து பள்ளிக் கூடத்தில் பிள்ளைகள் இவ்வளவு கூட்டமாயிருந்தால் வாத்தியார்களுக்கு கஷ்டமல்லவா, ஆதலால் வேறு பள்ளிக்கூடம் ஏற்பட்டதால், எட்மாஸ்டருக்கு நன்மை தானே என்று சொன்னாராம். அய்யோ பாவம் மகாஜன ஹைஸ்கூல் பேரிலும், எட்மாஸ்டர் பேரிலும் மந்திரிக்கு எவ்வளவு பரிதாபம். அதிகமாக பிள்ளைகளை பெறுவது கூட தாயிக்கும் தகப்பனுக்கும் கஷ்டம்தான். சிலவற்றை வேறு ஒருவன் ஒப்புக்கொள்வது தாய் தகப்பனுக்கு நன்மைதானே என்று கூட மந்திரிக்கு தோன்றலாம். நமது மந்திரிகளின் தர்பார் அந்தக் காலத்தில் கதைகளாக எழுதி வைத்த நவாபுகள் தர்பாரிலும் இப்படி நடந்ததாக எழுத அவர்களுக்கு தோன்றவில்லை.

இந்த மாதிரி நடந்தால் திருப்பூரில் மாத்திரம்தானா மந்திரிகளை ஆதரிக்கக் கூட்டம் போடுவார்கள். இன்னம் சந்து பொந்து மூலை முடுக்கு எல்லா இடங்களிலும் நமது சேர்மன் சீனிவாச முதலியார் ஸ்ரீமான்கள் ராமலிங்க செட்டியார் கம்பெனியார் மாத்திரமல்லாமல் இன்னும் எத்தனையோ கம்பெனியாரும் போடுவார்கள். நடக்கிற வரையில் நடக்கட்டும். இந்த மந்திரிகளோடேயே உலகம் முடியப் போவதில்லை.

(குடி அரசு - துணைத் தலையங்கம்- 14.08.1927)

Pin It