அரசியல் விஷயத்தில் நாம் பார்ப்பனர்களை நம்பக்கூடாது என்றும், அவர்களது அரசியல் நோக்கம் என்பதெல்லாம் பார்ப்பனரல்லாதாரை மிதித்து பார்ப்பனர்கள் எப்படியாவது அதிகாரத்திற்கும் பதவிக்கும் உத்தியோகத்திற்கும் வர வேண்டும் என்பதைத்தவிர வேறில்லை என்றும், பார்ப்பனர் கள் தங்களுக்கு உத்தியோகம் பதவி முதலியவைகள் கிடைக்கக் கூடும் என்று எண்ணுகிற விஷயங்களில் அதற்கு விலையாக தேசத்தையோ மானத்தையோ நாணயத் தையோ கூட விடப் பின்வாங்க மாட்டார்கள் என்றும், இந்தப்படி செய்தே நமது நாட்டை ஆயிரக்கணக்கான வருஷங்களாய் அன்னிய ஆக்ஷிக்கு அதாவது மனிதத்தன்மை அற்ற ஆக்ஷிக்கு அடிமைப்படுத்தி நமது நாட்டிற்கு அடியோடு சுயமரியாதை இல்லாமற் செய்து விட்டார்களென்றும், இக்குணங்களான பார்ப்பனீயம் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லது நமக்கு என்றென்றைக்கும் விடுதலையோ சுயமரியாதையோ ஏற்படாதென்றும் அனேக தடவைகளில் எழுதியும் பேசியும் வந்திருப்பதுடன் அதே வேலையிலேயே நமது வாழ்நாளைக் கடத்தியும் வருகிறோம்.
ஆனால் நம்மில் ஒருசாராருக்கே, அதாவது பார்ப்பனர் களை பின்பற்றினாலொழிய வாழ முடியாது என்கிற கூட்டத்தாருக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந் தாலும் அவைகளை வெளியிடுவது அவர்கள் வாழ்க்கைக்கு அசவுகரியமாய்த் தோன்றுவதோடு அதற்கு எதிர்ப்பிரசாரமும் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படலாம். அந்தப்படி செய்து நாம் செய்து வருவதையும் அழித்துக் கொண்டும் வரலாம். ஆனாலும் நமது நாட்டிற்கு இப்படி உண்மைகளை வெளிப்படுத்துவதைவிட வேறு முன்னேற்ற மார்க்கம் இல்லை என்பதே நமது முடிவு என்பதோடு இந்தப்படி நாம் சொல்லுவதற்கும் சில உதாரணங்கள் காட்டுவோம்.
நமது நாட்டுக்கு புதிய சீர்திருத்தம் என்பதாக ஒன்று அரசாங்கத்தாரால் வழங்கப்பட்டவுடன் அதை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்கிற விஷயத்தில் காங்கிரசுக்காரர்கள் என்பவர்களுக்கே அபிப்பிராய பேதம் ஏற்பட்ட தானது சாதாரண மனிதர்களுக்குள் ஏற்பட்டதாகவும் சொல்ல முடியாது.
லோகமான்யர் என்கிற திலகருக்கும், மகாத்மா என்கிற காந்திக்கும், லோக நாயகி என்கிற பெசண்டம்மாளுக்கும், மகாக்கனம் என்கிற சீனிவாச ஸ்திரிக்கும் மற்றும் இது போன்ற தலைமையும், பெருமையும், பிரக்யாதியும், செல்வாக்கும் உள்ளவர்கள் என்று சொல்லுபவருக்குமே அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. இவற்றுள் ஒரு கூட்டத்தார் சீர்திருத்தத்தை நிராகரித்து விட வேண்டுமென்றார்கள். ஒரு கூட்டத்தார் நடத்திக் காட்டி அதிலுள்ள குற்றத்தை எடுத்துச் சொல்லி திருத்தப்பாடு செய்து மேல் கொண்டு சீர்திருத்தம் கேழ்க்கலாம் என்றார்கள்.
இதில் ஒப்புக் கொண்டு நடத்திக் காட்டலாம் என்று அப்போது சொன்ன கூட்டத்தில் சேர்ந்தவர்கள் தான் சென்னை வாசிகளில் மைலாப்பூர் அய்யங்கார் கோஷ்டியான ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, கஸ்தூரி ரங்கய்யங்கார் முதலியவர்களும், அய்யர் கோஷ்டியை சேர்ந்தவர்களும் மிதவாதக் கட்சியாருமான ஸ்ரீமான் சிவசாமி அய்யர், சி.பி.ராமசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரி, பி.என்.சர்மா முதலியவர்களும், பார்ப்பனரல்லாதார் கோஷ்டியாரான ஸ்ரீமான் தியாகராய செட்டியார், டி.எம்.நாயர், பனகால் ராஜா முதலியவர் களுமே ஆவார்கள் .
இவர்களில் அய்யங்கார் கோஷ்டியாரை, அய்யர் கோஷ்டியார்கள் கட்டி சேர்க்காமல் விரட்டிவிட்டதால் அவர்களுக்கு தனி இடம் இல்லாமல் போனதும் சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லிக் கொண்டு ஒத்துழை யாமையில் வந்து சேர்ந்தார்கள் . மற்ற இரு கூட்டத்தாரும் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுக்க முயற்சித்ததில், பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஜனங்களிடை செல்வாக்குப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்கள் .
தோல்வியுற்ற அய்யர் கட்சி சர்க்காரிடம் செல்வாக்குப் பெற்று உத்தியோக வெற்றி பெற்றார்கள். அதன் பலன்தான் இப்போது ஸ்ரீமான்கள் சீனிவாச சாஸ்திரி மாதம் 4000ரூ. சம்பாதிக்கும் தென்னாப்பிரிக்கா கமிஷனரானதும், சி.பி. ராமசாமி அய்யர் மாதம் 5500ரூ. சம்பாதிக்கும் சட்ட மெம்பர் ஆனதும், பி.என். சர்மா மாதம் 6500 சம்பாதிக்கும் இம்பீரியல் கவுன்சில் மெம்பர் ஆனதும், டி.ரங்காச்சாரி மாதம் 3000 சம்பாதிக்கும் பையாஸ்கோப் கமிஷனரானதும், இவர்கள் பிள்ளைக்குட்டி அண்ணன் தம்பி, மாமன், மைத்துனன் முதலானவர்கள் உத்தியோகங்களில் இருப்பதுமாய் ஏற்பட்டது.
அதுபோலவேதான் ஸ்ரீமான் பனகால் ராஜா, பாத்ரோ, சிவஞ்ஞானம் பிள்ளை முதலியவர்களும் மாதம் 4000 சம்பாதிக்கும் மந்திரிகளானதும் என்றும் சொல்லலாம். இப்படி இருந்தாலும் ஒத்துழையாமைப் பார்ப்பன பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர்களும் இவர்களைப் பின்பற்றும் பார்ப்பனரல்லாத சில கூலி பத்திரிகைகளும், போலித் தலைவர்களும் வயிற்றுச் சோற்று தேச பக்தர்களும், பார்ப்பனரல்லாதார் கட்சியை வைது அவர்களை அந்த ஸ்தானத்திலிருந்து விரட்டி, பார்ப்பனர்களையாவது அவர்களது அடிமைகளையாவது அந்த ஸ்தானத்தில் வைக்க அநுகூலமா யிருக்கும்படி பாடுபட்டார்களே ஒழிய உண்மையான ஒத்து ழையாமையையாவது உண்மையான காங்கிரஸ் கட்டளை யையாவது பிரசாரம் செய்தவர்களே அல்ல.
குடி அரசு - கட்டுரை - 02.10.1927