periyar and karunanidhi at anna memorial

(அண்ணா நினைவகத்தில் பெரியார் மற்றும் கருணாநிதி)

பஞ்சாப்பில் நடந்த படுகொலைக்கு காரணஸ்தர்களில் ஒருவரான ஜனரல் டயர் துரை செத்துப் போனதற்கு அநேக பத்திரிகைகள் சந்தோஷம் கொண்டாடுவதன் மூலமாய் டயரை பலவாராக கண்டபடி வைது எழுதி வருகின்றன.

செத்துப்போன ஜனரல் டயர் துரையை விட கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்து கொண்டு பிள்ளை குட்டிகள் பெற்றுக் கொண்டு சுகமாய் வாழுகிறார்கள். இந்த டயர்களைப் பற்றி எந்தப் பத்திரிகையாவது எழுதுகின்றார்களா? ஒன்றுமேயில்லை. காரணம் என்ன? நமது பத்திரிகைகளுக்கு பெரும்பாலும் சுயபுத்தி கிடையாது. ஒரு பார்ப்பனப் பத்திரிகை வழி காட்டினால் அதை குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டு “கங்காதரா மாண்டாயோ கங்காதரா மாண்டாயோ” என்று கத்த வேண்டியது தான்.

பாவி டயராவது அவரது வகுப்பு பெண்மீது கல்லுப் போட்டார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி அந்த வீதியில் வயிற்றினால் ஊர்ந்து கொண்டுபோ மூக்கினால் உரைத்துக் கொண்டுபோ என்பதான நிபந்தனை போட்டாவது அவர்களுக்கு இஷ்டமான தெருவில் போகும்படி இடம் கொடுத்தார். நமது நாட்டிலிருக்கும் படுபாவி டயர்கள் நாம் ஒரு குற்றமும் செய்யாமல் ஒருவன் மீதும் கல்லுப்போடாமல் இருப்பதுடன் அவர் கூட்டத்திற்கும் நாம் நன்றாக சோறு போட்டும் பணம் கொடுத்தும் வரும்போதே, அடியோடு தெருவிலேயே போகக்கூடாது, கிட்டத்திலேயே வரக்கூடாது என்கிறார்களே இதைப் பற்றி யாருக்காவது உறைக்கிறதா. இதனால் நமக்கு அவமானமாயிருக்கிறதே என்று படுகிறதா? எந்தப் பத்திரிக்கையாவது இம்மாதிரி நடவடிக்கைகள் படுபாவி டயர்தான் என்று எழுதுகிறதா என்று பார்த்தால் இல்லவேயில்லை. “பாவி டயர்” தன்னுடைய பிறந்த நாட்டுக்காக நன்மை செய்கிறோம் என்கிற எண்ணத்தின் பேரில் நம்மை கொடுமை செய்தான். நம்முடைய நாட்டுப் பாவி டயர்கள் தங்கள் நாட்டையும் காட்டிக்கொடுத்து தங்கள் நாட்டாரையும் வயிற்றுப் பிழைப்புக்கு மாத்திரம் கொடுமை செய்கிறார்கள்.

அதோடு நம் நாட்டுப் படுபாவி டயர் கூட்டத்தார் பாவி டையர் செய்த காரியத்தையும் தாங்கிப் பேசி பெரிய பெரிய உத்தியோகமும் பெறுகிறார்கள். அதைப் பற்றியும் பேசுவாரைக் காணோம். எழுதுவாரைக் காணோம். தவிரவும் ஒருவர் செத்துப்போனதற்கு பிறகு “பாவி செத்தான்” என்பது அவ்வளவு மனிதத் தன்மையாகாது. அதிலும் உயிருடன் இருந்து கொண்டு அதைவிட எத்தனையோ மடங்கு அதிகமான கொடுமைகளை செய்கிறவர்களை மூடிவைத்துக் கொண்டிருக்கிறவர்கள் இப்படிச் சொல்லுவது மிக மிக அக்கிரமமானது என்றே சொல்லுவோம்.

(குடி அரசு - கட்டுரை - 21.08.1927)

Pin It