அன்புள்ள சகோதர சகோதரிகளே!

இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும் நீங்கள் வாசித்துக் கொடுத்த பத்திரங்களும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தன.   எனினும் அத்தகைய குதூகலமான வரவேற்புக்கும் இத்தகைய பத்திரங்களுக்கும் நான் பொருத்தமுடையேன் அல்லேன் என்பது எனக்குத் தெரியும்.   நீங்கள் மனதாரப் பொறுத்துக் கொண்டிருப்பதுடன், என் தொண்டை நீங்களெல்லோரும் ஒப்புக் கொண்டு உங்களுடைய மனமார்ந்த ஆதரவளிப்பதற்கு என் மனப்பூர்த்தியான வந்தனத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். (கரகோஷம்).   இக்கூட்டம் திருவண்ணாமலை தாலூகா தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் திறப்பு விழாவின் பொருட்டு கூட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட போதிலும், இங்கு ஏற்கனவே சங்கம் நிறுவப்பட்டு வேலைகளும் செய்து வந்திருப்பதாகத் தெரிகின்றது.   அன்றியும் இன்று இக்கூட்டம் என்னை வரவிடுத்து என் கடனாற்றச் செய்வதன் பொருட்டானதன்றி சில தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்காகவும் கூட்டப்பட்டதென்பது நிகழ்ச்சிக் குறிப்பினாலறியப்படலாம்.   ஆதலால் இது ஒரு மகாநாட்டுக்குச் சமானமானதென்றே கருதுகின்றேன்.

  கடைசியாக உங்களுடைய வரவேற்புப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்குத் தனித் தனியாகப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றேன்.   மேலும் எனக்குச் சில தினங்களாக தேக அசௌக்கியமாயிருப்பதால் அவ்வாறு பேசுவதற்கும் ஆற்றலில்லை.   ஆயினும், முக்கியமாக ஒன்றை மட்டும் குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்.   அதாவது நீங்கள் நம் சுயமரியாதையை நிலைநிறுத்தவும் நம் தேசத்தின் குறைகளையுணர்ந்து அவற்றை ஒழித்து நமது இலட்சியத்தை நிறைவேற்றப் பெரும் உறுதியுடன் உழைக்க முற்பட்டிருப்பதற்கு நான் அளவற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.   அதோடு கதர் விஷயத்தில் நீங்கள் மனப்பூர்த்தியான ஆதரவு அளிக்க முன் வந்திருப்பது எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றது.

periyar anna ki veeramani

  நமது நிர்மாணத் திட்டத்தின் வேலைகளின் சம்பந்தமாக என்னாலான உதவியை அப்போதைக்கப்போது செய்து உங்களை ஊக்கமூட்ட எப்போதும் தயாராகவிருக்கிறேன் (கரகோஷம்).   மற்றபடி முடிவுரை ரூபமாகவோ   அல்லது உபந்நியாச ரூபமாகவோ, எல்லா விஷயங்களையும் நடவடிக்கைகளின் முடிவில்   கூறலாமென்று கருதி நிகழ்ச்சிக் குறிப்பிற் கண்ட விஷயங்களை கவனிக்க உத்தேசிக்கின்றேன்.   நிகழ்ச்சிக் குறிப்பில் இனி நடக்க வேண்டிய விஷயங்களில் முதலாவதாக பொங்கல் வசூல் உண்டி திறக்கப்படுமென்றும், பின் *தீர்மானங்களென்றும், அடுத்தபடியாக இத்தகைய சங்கங்களினால் ஏற்படும் நற்பயன்கள் என்பது பொருளாக தேசபக்தர் ஸ்ரீ ஆரியா அவர்களும், திராவிடன் ஆசிரியர் திருவாளர் கண்ணப்பரவர்களும், திரு. புரிசை முருகேசனும், தண்டபாணி பிள்ளையும் சொற்பெருக்கிடுவார்களென்றும் காணக்கிடக்கின்றன.   கடைசியாக அக்குறிப்பில் அக்கிராசனரின் முடிவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றது.   கனவான்கள் கடைசி வரையில் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்து இம்மகாநாட்டை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். (பெருத்த கரகோஷம்).

குறிப்பு :   திருவண்ணாமலையில் 6.2.27 இல் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க மகாநாட்டில் தலைமை வகித்து முன்னுரையாக ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 13.02.1927

* மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-

  • பொங்கல் உண்டி வசூலில் இருந்து ரூபாய் நூறு தியாகராயர் ஞாபக நிதிக்களித்து மிகுதியை இச்சங்க உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளும்படி அனுமதி கொடுக்க வேணுமாய்த் தீர்மானிக்கப்படுகிறது.
  • இச்சங்கம் மதுரைப் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் நிறைவேறிய எல்லாத் தீர்மானங்களையும் மனமுவந்து ஒப்புக் கொள்வதுடன் அவற்றை அனுபவத்தில் நடைபெறச் செய்வதற்குக் கீழ்க்கண்ட கனவான்கள் அடங்கிய நிர்வாக சபையை நியமிக்கிறது:-

போஷகர்கள்:-

ராவ்பகதூர் வீரப்ப செட்டியார், திருஞான சம்பந்த முதலியார்                     

உப பிரஸிடெண்டுகள் :-   

முத்துக் குமாரசாமி முதலியார், ராஜரத்தின முதலியார்.

காரியதரிசி:-   சாமி செட்டியார்.

கூட்டுக்காரியதரிசி:- முத்துச்சாமி நாயனார்.

நிர்மாண கர்த்தாக்கள்:-                  எம்.பி. ரங்கசாமி ரெட்டியார்,                                                                                                                               ஆதி மூல உடையார்.

பொக்கிஷதார் :-    ஆறுமுக முதலியார் மற்றும் பலர் நிர்வாக சபை                                                     மெம்பர்கள்.

  • தேவஸ்தான மசோதாவை சட்டமாக அங்கீகரித்ததற்காக மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதி அவர்களையும் சென்னை கவர்னர் அவர்களையும் இக்கூட்டம் சந்தோஷத்துடன் பாராட்டுகின்றது. இந்தத் தீர்மானத்தை மேற்படியார்களுக்கு தந்தி மூலம் அனுப்பிவைக்கும்படி அக்கிராசனரைக் கேட்டுக்கொள்கின்றது.
  • நமது மாகாணத்தில் நமது சங்கத்தினர் பெயரால் கதர் போர்டு ஒன்றை ஏற்படுத்தியும் மற்றும் கூடுமான இடங்களிலும் இக்கதர் உற்பத்தி சாலையும் வியாபார சங்கத்தையும் ஏற்படுத்தி அத்தாக்ஷிப் பத்திரம் கொடுக்கவும், இதற்காக நிதி திரட்டவும் மகாத்மா காந்தி அவர்களின் வருகையை நாமும் கதரின் அபிவிருத்திக்காக வரவேற்கவும் தீர்மானிக்கிறது. இக்கதர் போர்டு தலைவராக இருக்கும்படி திரு.ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறது.
  • பிராமணரல்லாதாரின் நன்மையைக் கோரி உழைத்து வரும் பத்திரிகைகளுள் முக்கியமான குடி அரசு, திராவிடன், ஜஸ்டிஸ் ஆகிய பத்திரிகைகளை அவசியம் ஒவ்வொருவரும் ஆதரித்து வரவேண்டுமென்றும், அப்படி மேற்படி பத்திரிகைகளை ஆதரிக்க சௌகரியமில்லாதவர்கள் பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதையை அழிக்கவென்றே கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் பார்ப்பன பத்திரிகைகளை நிராகரிக்கவாவது செய்ய வேணுமாயும் கேட்டுக் கொள்ளுகிறது.
  • தென் பெண்ணையாற்றில் அணைகட்டும் விஷயமாய் செங்கம் மகாநாட்டில் தீர்மானித்த இடத்திலும் இன்னும் சில இடங்களிலும் அதனை கட்டி கால்வாய் பிடித்து ஜலாதாரம் செய்து கொடுக்க வேணுமாயும் எல்லா காடுகளிலும் (விவசாயிகளுக்கு) இலவசமாய் தழை அறுத்துக்கொள்ள அனுமதி கொடுக்க வேணுமாயும், துண்டு கேதுகளுக்கு வஜா செய்து கொடுக்க வேண்டுமாயும் செங்கம் டிவிஷனைச் சேர்ந்த குடிகள் சுமார் முப்பது மைலுக்கு மேலாக வந்து திருவண்ணாமலை கஜானாவில் பணம் செலுத்த வேண்டி இருப்பதால் இந்தக் குறையை நீக்க செங்கம் டிப்டி தாசில் தார் ஆபிசிலேயே பணத்தைக் கட்ட ஏற்பாடு செய்யும்படி கவர்ன்மெண்டாரைக் கேட்டுக் கொள்ளுகிறது.
  • இவ்வூரில் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் ஒன்றைத் திறந்து வைக்கும்படி ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியா அவர்களை கேட்டுக் கொள்ளப் படுகிறது.

மதுரை கோயில் சுவாமிக்கு சுயமரியாதையுடன் ஆராதனை செய்த ஸ்ரீமான் ஜே.என். ராமநாதன் அவர்களையும், சேலம் ஜில்லா ஆத்தூர் தாலுகா ஏத்தாபூரில் பிராமணர்களின் அக்கிரமங்களைப் பகிஷ்கார மூலமாய் நிவர்த்தி செய்துகொண்ட அவ்வூர்வாசிகளையும் இம்மகாநாடு பாராட்டுகின்றது.

Pin It