திராவிடர் இயக்கக் கொள்கையைப் பரப்புவதில் குத்தூசி குருசாமியின் பங்களிப்பை - மறைத்து நடக்கும் முயற்சிகளை, நாஞ்சில் சம்பத் கடுமையாகக் கண்டித்தார். திருப்பூரில் கழகம் நடத்திய தமிழர் எழுச்சி விழாவில், அவர் ஆற்றிய உரை:
1934-ல் தந்தை பெரியாரும், அறிஞர் பெருந்தகை அண்ணாவும் கை குலுக்கிக் கொண்ட திருப்பூர் இன்றைக்கு மார்வாடிகளின் மடியில் பார்ப்பனிய தாசர்களின் பாதங்களில் விழுந்த கிடக்கிற கோரக் கொடுமைக்கு முடிவு கட்டுவதற்கு தந்தை பெரியாரின் கொள்கைகளை முழு வீச்சோடு இந்த திருப்பூர் நகரில் எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்த திருப்பூர் நகரத்தை தமிழர் எழுச்சி விழா கொண்டாடுவதற்கு தேர்ந்தெடுத்துள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்றைக்கு தந்தை பெரியாரின் கொள்கைகளை முழு வீச்சோடு கொண்டு சேர்ப்பதற்கு சவால்களுக்கு மத்தியிலும் சங்கடங்களுக்கு மத்தியிலும் ஆற்றி வருகின்ற பணியை தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கிற மானமும் அறிவும் உள்ள மக்கள் அங்கிகரித்துத் தீரவேண்டும் என்று நான் அனைவரையும் வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.
தந்தை பெரியாரின் எண்ணங்களை தொடர்ந்து வெளிப்படுத்திய ‘குடி அரசு 1925’ தொகுப்பை கடந்த காலத்தில் வெளியிட்டு நாளை 1926 வெளியிடுகின்ற இந்த இமாலயப் பணியை பாராட்டுவதற்கு நான் கற்ற தமிழில் எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. நான் சொற்பொழிவாளனாக வேண்டும் என்ற கனவுகளோடு களத்திற்கு வந்த கால்ச் சட்டைப் பருவத்தில் ‘குடிஅரசு’ எங்கே கிடைக்கும்; ‘விடுதலை’ எங்கே கிடைக்கும்; அக்காலத்து ‘தென்றல்’ எங்கே கிடைக்கும்; ‘மன்றம்’ எங்கே கிடைக்கும்; ‘அறப்போர்’ எங்கே கிடைக்கும்; ‘புது வாழ்வு’ எங்கே கிடைக்கும் என்று நாஞ்சில் நாட்டில் நான் தேடாத இடமே இல்லை. ஆனால் இன்றைக்கு வருகின்ற தலைமுறைக்கு எங்கே கிடைக்கும் என்று அலைபாய வேண்டாம். ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’த்தை அணுகுங்கள் அங்கே கிடைக்கும் என்று அந்தக் காலத்துக் ‘குடிஅரசை’ இந்தக் காலத்தில் 21 ஆம் நூற்றாண்டின் வைகறையில் தொகுத்துத் தருகின்ற இந்த “வேள்வி”யை எப்படிப் பாராட்டுவது என்றே எனக்குப் புரியவில்லை.
திராவிட இயக்கங்களின் அடிப்படைக் கருத்துகளைச் சொல்லுவதற்கு உரிய இதழ்கள் தமிழ்நாட்டில் இன்றைக்கு இல்லை. ஆனால் இந்த இட்டு நிரப்ப முடியாத இடைவெளியை இன்றைக்கு ‘பெரியார் முழக்கம்’ மூலம் இதோ அந்தக் காலத்து குடிஅரசை பதிப்பித்து புதுப்பித்துத் தருவதன் மூலம் ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ புத்துலகத்தை ‘தரிசிக்க’ வருகின்ற வாலிபத் தமிழர்களுக்கு ஒரு கேடயத்தைத் தந்திருக்கிறது. என்னைப் பொருத்தமட்டில் இது பாராட்டுக்குரியது மட்டுமல்ல வணக்கத்திற்குரிய செயலாகவே கருதுகிறேன்.
குத்தூசி குருசாமி நூற்றாண்டு விழாவை இன்றைக்கு நாம் கொண்டாடுகிறோம். கழிஞ்சூர் செல்வராஜ் அவர்கள் பதிப்பித்த ஒரு பழைய புத்தகத்தில் படித்தேன். அவர்கள் மிகக் கவலையுடன் ஒன்றைச் சொன்னார்கள். குத்தூசி குருசாமி பெயரால் சாலைக்கு பெயர் இல்லை. குத்தூசி குருசாமியின் பெயரால் மாளிகைக்குப் பெயர் இல்லை. குத்தூசி குருசாமி பெயரால் இந்த மன்ணில் மன்றங்கள் இல்லை. குத்தூசி குருசாமியின் பெயரால் இந்த மண்ணில் பாசறைகள் இல்லை. குருசாமியின் பெயரைச் சொல்லுவதற்கு யாரும் துணிவதில்லை. ஆனால் இன்றைக்கு குத்தூசி குருசாமி அவர்களின் பெயரால் நூற்றாண்டு விழா கொண்டாடி தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டை, அவர் செய்த சேவையை திராவிட இயக்கத்திற்கும், தன்மான இயக்கத்திற்கும் அவர் ஆற்றிய பணியை எழுத்தாலும், பேச்சாலும் தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சி உருவாவதற்கு அவர் செய்திருக்கிற தியாகங்களையெல்லாம் இங்கே எடுத்துச் சொல்வதற்கு குத்தூசி குருசாமி நூற்றாண்டு விழாவை இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
“இவர்கள் படத்தைப் பார்த்துத்தான் வந்தவர்கள்” என்று சில பேர் குற்றம் சாட்டுகிறார்கள். நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய், காலம் கடந்து நாங்கள் பிறந்ததற்கு நாங்கள் என்ன ‘குற்றம்’ செய்தோம்? ஆகவே படத்தைப் பார்த்து வருவது ஒன்றும் தவறு இல்லை. கரம் பற்றி வந்தவர்கள் எல்லாம் இந்த நாட்டில் கொள்கையை காயப்படுத்துகிற காலத்தில் படத்தைப் பார்க்கிறவர்களெல்லாம் தான் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பாடத்தைச் சொல்லித் தருகின்ற இடத்தில் இருக்கின்றார்கள். (பலத்த கைதட்டல்)
தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராக அவரின் அருகில் இருந்தவராக இன்னும் சொல்லப் போனால் அதனால் எந்த ஆதாயமும் அடையாதவராக குத்தூசி குருசாமி வாழ்ந்தார்; மறைந்தார். குத்தூசி குருசாமி அவர்களே அவரைப் பற்றி சொல்லுகிறார் - “நேர்மை வழியில் நடக்கச் சொன்னது யார்? பொது வாழ்விலே பணியாற்றிவிட்டு வியர்வைகளைச் சிந்திவிட்டு காலங்களையும் கண்ணீரையும் காணிக்கை தந்துவிட்டு உரிய பலன் கிடைக்கவில்லை, இவன் வீணாகிப் போனான் என்று பழி தூற்றக்கூடிய இந்த சமூகத்தில் இவனை நேர்மை வழியிலே நடக்கச் சொன்னது யார், எதார்த்தவாதியாக இருந்தான். எனவே வெகுசன விரோதியாக மாண்டான். தன்னைப் போலவே பிறர் இருக்க வேண்டும் என்று பகல் கனவு கண்டான்; ஏமாந்தான்” என்று தன்னைப் பற்றி மனம் நொந்து ‘விடுதலை’யில் எழுதியவர் குத்தூசி குருசாமி.
1959 பிப்ரவரி திங்கள் 5 ஆம் தேதி குருசாமி அவர்கள் மீண்டும் எழுதுகிறார், “இந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ள விலாசம் தெரியாமல் மறந்து போன, இவனை இன்றே மறந்துவிட்டு எல்லோரும் வாழ்க்கைப் பாதையில் செல்லுங்கள். வெற்றிப் பாதையில் செல்லுங்கள். இந்தக் கல் ஒரு அபாய அறிவிப்பு. இதன் அடியில் இருப்பவனும் அவ்வாறே” என்று அவரே, அவரை பற்றி உரிய அங்கீகாரம் கிடைக்காததைப் பற்றி அன்றையத் தமிழ்நாடு உரிய மரியாதை தராதது பற்றி பொது வாழ்வில் கடுமையாக உழைப்பவனுக்கு இந்த நாடு கொடுக்கும் பரிசு பற்றி அவரே ‘விடுதலை’யில் 1959 பிப்ரவரி திங்கள் 5 ஆம் தேதி பதிவு செய்திருக்கிறார். அவரைக் கண்டு கொள்ளாமல் நாங்கள் இருக்கப் போவதில்லை. இதோ குத்தூசி குருசாமி நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்று இன்றைக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவரை நினைத்துப் பார்க்கிறது. வரலாற்றில் இது ஒரு அதிசயம் என்றே நான் நம்புகிறேன். ஏனென்றால் அவரே எதிர்பார்க்கவில்லை. வாழுகின்ற காலத்தில் அப்படி நொந்து அவர்கள் ‘விடுதலை’யில் எழுதி யிருக்கிறார்.
பாவேந்தர் பாரதிதாசனின் ‘பாஸ்பரஸ்’ கவிதைகளை, தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தொகுத்து வெளியிட்டு அவருடைய முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் குத்தூசி குருசாமி. பாவேந்தரின் முதல் கவிதை தொகுதி தான் தமிழ்நாட்டில் 21 பதிப்புகள் கண்டது. 21 பதிப்புகள் கண்ட முதல் கவிதை தொகுதியை வெளியிட்டவர் குத்தூசி குருசாமி. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாக எழுதி வெளியிட்டவரும் குத்தூசி குருசாமி அவர்கள் தான்.
சாமி சிதம்பரனார் இடத்திலே எழுதத் சொல்லி அவரை ஆற்றுப்படுத்தி பாதியிலேயே சாமி சிதம்பரனார் விட்டு விட்டு போனதற்குப் பிறகு தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து தொட்டு தொடர்ந்து எழுதி அதை முற்றுப் பெற வைத்து தமிழர்களுக்கு அந்த வரலாற்று ஆவணத்தை தந்த பெருமகனும் குத்தூசி குருசாமி அவர்கள் தான். ‘தமிழ் நூல் நிலையம்’ தான் வெளியிட்டது இன்றைக்கு தமிழ் நூல் நிலையம் என்பது என்ன ஆயிற்று என்றால், சுயமரியாதை பிரச்சார ஸ்தாபனம் என்கிற மறு பெயரில் அந்தநூல் இன்றைக்கு வெளியிடப்படுகிறது.
தமிழ் நூல் நிலையம் என்கிற பெயரால் தான் முதலில் வெளியிடப்பட்டது. முதன் முதலாக சாதி ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவு காட்டி, சாதி ஒழிப்புக்காக முதன்முதலாக சாதி ஒழிப்புத் திருமணம் செய்து கொண்டவர் குத்தூசி குருசாமி. காற்றடிக்கும் பக்கம் அவர் சாய்ந்தவரில்லை. எதிர் நீச்சல் போட்டவர் கடைசிவரையில் சுயமரியாதை இலட்சியத்திற்காக வாழ்ந்து தியாகம் செய்த அந்த உத்தமர் பற்றி இன்றைக்கு இந்த நாட்டில் யாரும் பேசுவதற்கு இல்லை. இன்றைக்கு எந்த இயக்கத்தில் பணியாற்றினாரோ எந்த இயக்கத்தில் தொண்டாற்றினாரோ எந்தக் ‘குடிஅரசி’லும் ‘விடுதலை’யிலும் அவர் மாய்ந்து மாய்ந்து எழுதினாரோ ஒரு அறிவுப் புரட்சிக்கு அடிக்கல்லைத் தந்தாரோ அந்த ‘விடுதலை’யில் இன்றைக்கு அவரைப்பற்றி செய்திகள் வராமல் இருக்கலாம். ஆனால் அந்த இடத்தை இட்டு நிரப்புவதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் களத்திற்கு வந்திருக்கிறது என்பதற்கு இரத்த சாட்சியாகத்தான் இந்த மேடை இன்றைக்கு அமைக்கப் பெற்றிருக்கிறது.
குத்தூசி குருசாமியின் காலம் சுயமரியாதை இயக்கத்தின் பொற்காலம். தன்மான இயக்கத்தின் பொற்காலம். இன்றைக்குகூட இந்த நாட்டில் செய்ய முடியாத காரியங்களை அந்தக்காலத்தில் அவர்கள் செய்தார்கள். பெரியார் ஏன் வெற்றி பெற்றார் என்றால், பெரியாருக்கு இப்படிப்பட்ட வலிமையான தளகர்த்தர்கள் அன்றைக்கு வாய்த்தார்கள். குத்தூசி குருசாமி தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நிகரற்ற புலமை பெற்றவர், பெரியார் தொடங்கிய ‘ரிவோல்ட்’ பத்திரிகையில் பத்திபத்தியாக இராமாயணத்தின் முகமூடியை கிழித்து அவர் கட்டுரை தீட்டியிருக்கிறார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவைகளையெல்லாம் தொகுத்து தமிழ்நாட்டிற்கு தரவேண்டும். குத்தூசி குருசாமி தந்தை பெரியார் அவர்களுக்கு அணுக்கத் தொண்டராக இருந்த காரணத்தால் பெரியார் வெற்றி பெற முடிந்தது. பெரியார் வெற்றி பெறக் காரணம் அவர் சத்தியத்தைச் சொன்னார். உண்மையைச் சொன்னார். பகுத்தறிந்து இந்த மண்ணில் அறிவியல் ரீதியாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகளைச் சொன்னார்.
பெரியாரின் கொள்கைகள் இந்த மண்ணில் நீர்த்துப் போய்விடவேண்டும் என்று பலபேர் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். பெரியாரின் கொள்கைக்கு ஆபத்து ஏற்படுவதற்கு இந்த நாட்டில் பல பேர் இன்றைக்கு புறப்பட்டு இருக்கிறார்கள். பச்சை பாம்பிற்கும், பச்சைக் கொடிக்கும் வித்தியாசம் தெரியாத பாமரத் தமிழர்கள் வெண்ணைக்கும் சுண்ணாம்புக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்கள் அவர்களுடைய எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் பெரியாரின் கொள்கைகளை இன்னும் கூர்மையாகச் சொல்லுவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். சங்பரிவாரின் சதி வரலாறு எழுதிய அண்ணன் இராசேந்திரன் அவர்கள் அந்த நூலில் ஒன்றை கவலையோடு சொன்னார்கள். 1940 மார்ச் திங்கள் 3 ஆம் தேதி சேலம் மாநகரத்தில் தண்டோரா போட்டு பிரசாரம் செய்தார்கள். யார் பேசுகிறார்கள், வீர சாவர்க்கர் பேசுகிறார். வாருங்கள். கட்டணம் நாலணா. நாலணா கொடுத்து வீரசாவர்க்கர் பேசுவதை கேட்க வாருங்கள்!
இந்து மகா சபையின் மகாநாடு. வீர சாவர்க்கர் பேசுகிறார் வாருங்கள் வாருங்கள் என்று அன்றைக்கே தட்டியிலே எழுதி வைத்து தண்டுராப் போட்டு முழங்கியதற்குப் பிறகும் வீரசாவர்க்கர் பேசுவதை கேட்பதற்கு எந்த மானம் உள்ள தமிழனும் அன்றைக்கு வரவிலலை. அதற்கு அடுத்த நாள் நாலணா கட்டணத்தை இரண்டு அணாவாக குறைத்து வீரசாவர்க்கர் பேச்சை கேட்க வாருங்கள் என்று அறிவித்தார்கள். தமிழ்நாட்டில் முதன் முதலாக தள்ளுபடியை கண்டுபிடித்ததே இந்த அயோக்கியக் கூட்டம்தான். நாலணாவை இரண்டனாவாக்கி, வீரசாவர்க்கர் பேச்சை கேட்க வாருங்கள் என்று சொல்லியும் பேச்சை கேட்க யாரும் வரவில்லை. காலி மைதானத்திலே தான் அவன் பேசிக் கொண்டு போனான். இது 1940ல் நடந்தது. இன்றைக்கு அவன் வாரிசுகள் சென்னையிலே தீவுத் திடலிலே வந்து நின்று கொண்டு அண்ணாவை அகிலம் எல்லாம் அறியச் செய்ய வேண்டும் என்று பேசுகின்ற அளவிற்கு அவர்களுக்கு குளிர்விட்டுப் போயிற்று. ஆனால் நாம் அவர்களிடையே எச்சரிக்கையோடும் விழிப்புணர்ச்சி யோடும் இருக்க வேண்டும்.
அன்றைக்கு காந்தி அடிகள் கொலை செய்யப்பட்டார்; வீரசாவர்க்கரை, ‘தேசபக்தர்’ என்று வெட்கம் கெட்டவர்கள் இப்போது பேசுகிறார்களே காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கிலே அவர் ஒரு குற்றவாளி. ஆனால் அந்தக் குற்றவாளியை அம்பலப்படுத்த இந்த மண்ணிலே பல பேர் தயங்கினார்கள். அன்றைக்கு கல்வி அமைச்சர் ஒரு பள்ளிக் கூடத்திற்கு ‘விசிட்டிங்’ போகிறார். அந்த பள்ளிகூடத்திலே கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியரால் காந்தியடிகள் கொலை குறித்து மாணவர்களுக்கு ஒரு கேள்வி கொடுக்கப்படுகிறது. அப்பொழுதுதான் அந்த கல்வி அமைச்சர் சென்னையில் உள்ள முத்தையா செட்டியார் பள்ளியை பார்வையிடப் போகிறார். காந்தியார் கொலை வழக்கு பற்றிய கேள்விக்கு பதில் கூறுமாறு ஆசிரியர் மாணவர்களிடத்திலே வற்புறுத்துகிறார். இதைப் பார்த்துவிட்டு கல்வி அமைச்சர் கேட்கிறார், “காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார் என்பதையே நாம் மறந்து விட வேண்டும். அதை யாருக்கும் கற்பிக்கக் கூடாது என்று கல்வி அமைச்சர் சொல்லுகிறார்.
உடனே குத்தூசி குருசாமி ‘விடுதலை’யில் ‘பலசரக்கு’ப் பகுதியில் அதற்கு பதில் எழுதுகிறார். “ஏன் அய்யா மறந்து விடவேண்டும். கல்வியைக் கரை கண்ட அமைச்சர் அவர்களே, பிரிட்டிஷ் மன்னர் முதலாம் சார்லஸ் என்பவர் சனநாயகத்தில் தூக்கில் இடப்பட்டான் என்பதை மறந்து விட்டதா உலகம்? சாக்ரட்டிசுக்கு நஞ்சு கொடுத்துக் கொன்றார்கள் கிரீஸ் நாட்டுக் கயவர்கள் என்பதை மறந்து விட்டதா உலகம்? ஆபிரகாம் லிங்கன் துரோகி ஒருவனால் கொல்லப்பட்டான் என்பதை மறந்து விட்டதா உலகம்? சுபாஷ் சந்திரபோஸ் மேலிடத்தின் துரோகச் செயலால் நாட்டை விட்டு ஓடி எங்கோ அனாதையாக மாண்டார் என்பதை மறந்து விட்டதா உலகம்? இட்லர் எதிரியிடம் கைதியாக இருப்பதைக் காட்டிலும் இறப்பது நல்லது என்று முடிவு செய்து தற்கொலை செய்து கொண்டதை மறந்து விட்டதா உலகம்?” என்று எழுதினார் குத்தூசி. நான் கேட்கிறேன் இப்படி செய்திகளைத் தருகிற ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா? ‘சன்டேன்னா இரண்டு’ங் கிறான். இப்படி எழுதுகிற கூட்டம் தான் இங்கே இருக்கிறது.
குத்தூசி குருசாமி மேலும் எழுதுகிறார் : “கோட்சே என்ற மராத்திய பார்ப்பான் மதவெறிக் காரணமாக காந்தியைக் கொன்று விட்டான் என்பதை நாம் ஏன் மறக்க வேண்டும்? அந்த மதத்தில் பிறந்திருக்கிற அவமானத்திற்காகவா? அதற்காக உண்மையை மறைக்கலாமா? யோசித்துப் பாருங்கள்! இப்போது தான் அனேகமாக எல்லோருமே மறந்து விட்டார்களே! நந்தனார் ஈசுவர சோதியில் கலந்தது போலவே, காந்தியடிகளும் சோதியில் கலந்து விட்டார். இறைவனே கோட்சே உருவத்தில் வந்து அவர் அபராச் செயலை மெச்சி தம் ‘பாதார விந்தத்துக்கு’ அழைத்துச் சென்றார் என்றும் இவர்கள் எழுத மாட்டார்களா? 1948-லே இவ்வளவு பித்தலாட்டம் என்றால் பண்டை நாட்களில் அசுரர்களைப் பற்றி கூறியிருப்பது எல்லாம் எவ்வளவு பித்தலாட்டமாக இருக்கும் பாருங்கள்” என்று கேட்கிறார் குத்தூசி குருசாமி.
வருமானத்தைப் பெருக்குவதற்கு வழி என்ன? அன்றைக்கு அர்ச்சர்கர்கள் கூடி ஒரு தீர்மானம் போடுகிறார்கள். என்ன தீர்மானம்? தற்காலம் ஆலயங்களில் நம் சமூகத்திற்கு வருமானம் போதுமான அளவு இல்லாதபடியால் அதிகபடியான வருமானம் கிடைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யும்படி அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று ஒரு தீர்மானம் போடுகிறார்கள். இன்றைக்கு அர்ச்சகர்கள் பூரா பைக்ல வர்றா, ஸ்கூட்டர்ல வர்றா. ஒரு நாள் அஞ்சு கோயில்ல அர்ச்சனை பண்றா. அய்.ஏ.எஸ். ஆபிசரைவிட அதிக சம்பளம் இப்ப அவுங்களுக்குத்தான். இது இன்றைய நிலை. அன்னிக்கு அப்படி ஒரு தீர்மானம் போட்டான். உடனே குத்தூசி குருசாமி ‘பலசரக்கு’ பகுதியில் எழுதுகிறார்:
“அர்ச்சகர்களுக்கு போதுமான வருமானம் இல்லையாம். சர்க்கார் உதவி செய்ய வேண்டுமாம். கல்லூரிகளையும், பள்ளிகளையும் இடித்துவிட்டு கோயில்களை கட்டலாம். மேசை, நாற்காலி, பெஞ்சுகளையெல்லாம் உடைத்து, பெரிய தேர் கட்டி வைக்கலாம். ஆஸ்பத்திரிகளை இடித்துவிட்டு அனுமார் கோயில்கள் கட்டலாம். அவர் சஞ்சீவி இலைகளைக் கொண்டு வந்து செத்தவர்களை உயிர்ப்பிக்கக் கூடியவர் அல்லவா? மேலும் இப்போது உள்ள டாக்டர்கள் என்றைக்கு இருந்தாலும் சாகக் கூடியவர் தானே. அதனால் என்றுமே சாகாத ‘சஞ்சீவி’ மருந்து தரக்கூடிய டாக்டர் அனுமான் அல்லவா? மேலும் சென்னை ரிக்ஷா வண்டிகள் ஸ்டேஷன்களில் முளைக்கும் சிறு செங்கல் சாமிகளுக்கு பதிலாக கருங்கல் சாமிகள் வைத்து அவைகளைச் சுற்றி கோயில் கட்டலாம். சென்னை எழும்பூர் மியூசியத்தில் பல கற்சிலைகள் இருப்பதால் அந்த மியூசியத்தை ஒரு பெரிய கோயிலாகக் கட்டி அதற்குள் சில அர்ச்சர்களை விரட்டலாம். ரோடு ஓரத்திலுள்ள மைல் கற்களையெல்லாம் லிங்க உருவத்தில் மாற்றி அமைத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்ச்சகரை நிறுத்தி வைக்கலாம். அவைகளுக்கு மைல் நாதர் என்று பெயரிட்டு, பண்டார சந்நதிகளிடம் பணம் வாங்கி ஸ்தலப் புராணம் பாடச் செய்யலாம். திருவண்ணாமலையில் ஒரு விதவை அம்மாமி பெயரால் பல லட்சத்தில் கோயில் கட்டும் பொழுது மைல் கல்லுக்கு ஸ்தல புராணம் பாடுவது தவறாகுமா? அர்ச்சகர்கள் என் யோசனையை சர்க்காருக்கு அனுப்புவதுடன் அடுத்த மாநாட்டிற்கு என்னை தலைவராக வைத்தால் இன்னும் அருமையான பல திட்டங்களைச் சொல்லுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அர்ச்சகர்கள் வருமானம் குறையும்படி செய்தவர்கள் யார் யாரோ அவர்களையெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன். அர்ச்சகர்களே அஞ்சாதீர்கள். ஆனால் ஓய்வு நேரத்தில் உழுவதற்கோ, கல் உடைப்பதற்கோ கற்று வையுங்கள்; என் உதவி உங்களுக்கு நிச்சயம் உண்டு” என்று எழுதுகிறார்.
இப்படியெல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு நான் பேச்சாளனாக கல்லூரி முடித்துவிட்டு ஒரு தாகத்தோடு வருகிற பொழுது சொல்லித் தர ஏடுகள் இல்லை. அன்றைக்கு குத்தூசி குருசாமி அவர்கள் இப்படி இந்த நாட்டிலே ஆத்திகத்தை இடித்து எழுதினார். தந்தை பெரியாரின் வெண்தாடி அசைந்த பொழுது, கலைஞர் ஈரோட்டு குருகுலத்தில் இருந்து எழுதினார். “பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம், ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார். எட்டிய மட்டும் பாய்வதற்கு நாங்கள் கட்டிய நாய்கள் அல்ல. ஈட்டியின் முனைகள்” என்று பெரியாரின் வீச்சு கால்சட்டைப் பருவத்தில் கந்தகம் மணக்க அன்றைக்கு கலைஞரை எழுத வைத்தது. இன்றைக்கு தமிழ்நாட்டில் நிலைமை தாறுமாறாகப் போயிடுச்சு. எங்கு பார்த்தாலும் சாதிச் சங்கங்கள்.
குத்தூசி குருசாமி சாதிச் சங்கங்களைப் பற்றி சொல்லும் போது சொல்லுகிறார் - முதன்முதலாக சாதி ஒழிப்புக் கொள்கைக்காக சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து சுயமரியாதை இயக்கத்திற்கு வழிகாட்டிய அந்தப் பெருமகன் சொல்லுகிறார், “சாதி இருக்கிற வரையில் இங்கு ஒரு நல்ல சமூகம் சாத்தியமில்லை. சோசலிச பாதை அமைக்க வேண்டுமானால் சாதி புத்திக்குத் தீ வைத்தே ஆக வேண்டும். சாதி என்ற சிமெண்ட் தரை மீது, சோசலிச விதையை ஊன்றவே முடியாது இது” என்று எழுதுகிறார்.
தமிழ்நாட்டில் இப்பொழுது ஏதோ எஜமானர்கள் ஏவிவிட்ட அடிமைகள் தந்தை பெரியார் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் எதுவும் செய்யவில்லை என்று இன்றைக்கு பல பேர் பேசப் புறப்பட்டு இருக்கிறார்களே. அந்த பெரியார் என்கிற ஆகாயத்தை அழுக்காக்குவதற்கு அண்டங்காக்கைகள் எல்லாம் முயற்சிக்கின்றன. பெரியாரே தனது பணியை எடை போட்டுக் கொள்கிறார். “எனக்கு முன் யாரும் இந்தப் பணியை செய்ய முன்வராத காரணத்தால் இந்த காரியத்தை செய்ய வந்திருக்கிறேன். வேறு யாராவது செய்யத் துணிந்தால் நான் அதை விட்டுத் தரவும் தயாராக இருக்கிறேன்” என்று பெருந்தன்மையோடு பொது வாழ்வுக்கு புது இலக்கணம் தந்தவர் பெரியார். பொது இலக்கணம் அல்ல புது இலக்கணம் வரைந்து 96 வயது வரை வாழ்ந்து, 96 வயது தொண்டு செய்து பழுத்த தந்தைக் கிழவர்!
அந்த தந்தை பெரியாரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து கண்ணை மூடுகிற கடைசி நிமிடம் வரையிலும், கல்லறைக்குப் போகிற கடைசி நொடி வரையிலும், தமிழா உனக்கு மானமும் அறிவும் வேண்டும் என்று யாரோடும் சமரசம் செய்யாமல் வாழும் காலம் எல்லாம் கொள்கையில் வைராக்கியத்தோடு வாழ்ந்த பெரியாருக்கு, வலதுகரமாய், தக்க துணையாய் பக்க பலமாய் அவரது கொள்கையை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியும் பேசியும் எல்லா திசைக்கும் கொண்டு சென்று பெரியாரின் கொள்கைக்கு சிகரம் அமைத்துத் தந்த குத்தூசியாரின் புகழ் ஓங்குக! - என்று கூறி முடித்தார்.