மத்திய மாகாண அரசாங்கத்தார் மந்திரிகளுக்கென்று மாற்றப்பட்டிருந்த இலாக்காக்களை எடுத்துக்கொண்டு இனிமேல் மந்திரிகள் இல்லாமலே சகல நிர்வாகத்தையும் தாங்களே நடத்துவதென்று தீர்மானித்துவிட்டார்கள். இதன் பலனாய் இரட்டையாட்சி ஒழிந்ததென்றே வைத்துக்கொள்ளலாம். மத்திய மாகாணத்தில் இரட்டை ஆட்சியை ஒழித்த பெருமையை சுயராஜ்யக் கக்ஷியாருக்கே கொடுத்துவிடலாம். சுயராஜ்யக் கட்சியாருக்கு இந்தப் பெருமையை உண்டாக்கிக் கொடுத்த பெருமையை மகாத்மா சொற்படி நடப்பதாகச் சொல்லிக்கொண்டு சுயராஜ்யக் கட்சிக்கு உதவி செய்த ஸ்ரீமான் முதலியார் போன்ற உண்மைச் சிஷ்யர்களுக்குக் கொடுத்துவிடலாம். ஆனால் தேசத்திற்கு இதனால் என்ன லாபம். மந்திரிகளின் சம்பளம் சர்க்காருக்கு இதனால் மீதியாய் விட்டது. இரட்டை ஆட்சி ஒழிந்து சர்க்காரின் எதேச்சாதிகார ஒத்தை ஆட்சி உறுதியாய் விட்டது. சுயராஜ்யம் கிடைத்து விட்டதா? உரிமை கிடைத்து விட்டதா? சுயராஜ்யத்திற்காவது உரிமைக்காவது ஏதாவதொரு அறிகுறியாவது ஏற்பட்டிருக்கிறதா?

இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு இரட்டை ஆட்சியை ஒழிக்கப் போன சுயராஜ்யக் கட்சியாருக்கு மறுபடியும் சட்டசபையில் என்ன வேலை? சுயராஜ்யக் கட்சியார் சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் ஓட்டர்களிடம் கொடுத்த வாக்குறுதி என்ன? “சட்டசபைக்கு எங்களை அனுப்புங்கள்; நாங்கள் அங்கு போய் முட்டுக்கட்டை போட்டு இரட்டை ஆட்சியை ஒழித்து சர்க்காரை நடைபெறாமல் செய்து விடுகிறோம். அப்படி எங்களால் செய்ய முடியவில்லையானால் சட்டசபையை விட்டு விலகிவந்து ஜனங்களிடம் பிரசாரம் செய்து சட்ட மறுப்பை ஆரம்பிக்கிறோம்” என்று சொன்னார்களல்லவா? இப்பொழுது அந்தப்படி செய்தார் களா? சட்ட சபைக்குப் போன உடனேயே முட்டுக்கட்டை போட தங்களால் முடியவில்லையென்று தெரிந்தும், இரட்டை ஆட்சியை ஒழித்துங்கூட சர்க்கார் நின்று விடவில்லையென்று தெரிந்தும், இரண்டரை வருஷகாலம் சட்டசபைப் பெருமையை அடைத்துக்கொண்டு மறுதேர்தல் வருகின்ற சமயம் பார்த்து, “எங்களால் சபையில் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை; சர்க்காரை எங்களால் ஜெயிக்க முடியாது ; கெஞ்சியும் பார்த்தோம்; கூத்தாடியும் பார்த்தோம்; சர்க்கார் எங்களைக் கொஞ்சமும் லெக்ஷியங்கூட செய்யவில்லை; சட்டமறுப்புக்கும் தேசம் தயாராயில்லை; நாங்கள் இனி இங்கிருப்பதில் பிரயோஜனமுமில்லை. ஜனங்களிடம் இந்த விஷயத்தை எடுத்துச்சொல்லுவதற்காக நாங்கள் வெளியே போகிறோம்” என்று சொல்லிக் கொண்டு வெளியில் வந்தவர்கள் உண்மையில் யோக்கியர்களாயிருப்பார்களானால் இனி செய்ய வேண்டிய வேலையென்ன?

நிர்மாணத் திட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும். அல்லது சட்ட மறுப்புக்காவது தேசத்தை தயார் செய்யவேண்டும். இரண்டையும் விட்டுவிட்டு “மறுபடியும் நாங்கள் சட்டசபைக்குப் போகிறோம். எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்” என்று பொது ஜனங்களைக் கேட்பதிலும் ஸ்ரீமான் முதலியார் போன்றவர்கள், “சுயராஜ்யக் கட்சியார் வானத்தை வில்லாய் வளைத்து விடுவார்கள்; மணலைக் கயிறாய்த் திரித்து விடுவார்கள்; சுயராஜ்யக் கக்ஷியார் ஒருவர்தான் தேசத்தில் யோக்கியர்கள்; அவர்கள்தான் சொல்லுகிறபடி நடக்கிறவர்கள்; அவர்கள் மேல் ஒத்துழையா வாசனை வீசுகிறது, ஆதலால் அவர்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்” என்று ஓட்டு வாங்கிக் கொடுக்க ஊரூராய்த் திரிவதிலும் ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்கிறதா? பாமர ஜனங்களுக்குப் போதுமான அறிவில்லை யென்பதையும், தங்களுடைய ஓட்டுக்களை யோக்கிதா யோக்கிதை அறிந்து ஓட்டுக் கொடுக்கும் சக்தியில்லையென்பதையும் ஆதாரமாக வைத்துக் கொண்டு, நமது நாட்டில் ஒரு கூட்டத்தார் தேச சேவை என்கிற பெயரால் இம்மாதிரி அயோக்கியத்தனமான காரியங்களையெல்லாம் செய்யத் துணிவார்களேயானால் பாமர ஜனங்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக் கொடுப்பதனால் என்ன பலன் கிடைக்கும்? இம்மாதிரி பொறுப்பற்ற ஓட்டுரிமை நமது தேசத்தில் இல்லாதிருந்திருக்குமானால் மேற்கண்ட ஆள்களுக்கு இவ்வளவு அக்கிரமங்கள் செய்ய இடமேற்பட்டிருக்காது.

ஓட்டர்களுக்கு அறிவில்லையென்று சொல்லுகிறபோது யாருக்கும் கோபம் வருவதில்லை. ஆனால் இம்மாதிரி அறிவில்லாதவர்களை ஏமாற்றும் ஜனங்கள் மலிந்து கிடக்கும் இந்த நாடு இது சமயம் எவ்விதத்தில் உரிமை பெற யோக்கிதை உடையது என்று எவராவது கேட்பார்களேயானால் உடனே அவர்கள் பேரில் கோபித்துக் கொள்வார்கள். “தேசத்துரோகி” என்று சத்தம் போட்டுவிடுவார்கள். அறிவில்லாத பாமர ஜனங்கள் நிறைந்த நாடு என்பதற்கும், உரிமை பெற யோக்கியதை இல்லாத நாடு என்று சொல்லுவதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. பெரும்பான்மையோரான பாமர ஜனங்களை உரிமைபெற யோக்கியதை உடையவர்களாக்க வேண்டுமென்கிற எண்ணங்கொண்டே “மகாத்மா காந்தி” எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பார்த்தார். எத்தனையோ உண்மையாளர்களும் அவரைப் பின்பற்றியும் பார்த்தார்கள். கடைசியாய் மானமற்றவர்களும் நாணயமற்றவர்களுமே ஜெயித்தார்கள். மகாத்மா “இந்தப் பாவிகள் நமது நாட்டில் உள்ளவரை ஏழை மக்கள் உரிமையடைய யோக்கியதையுடையவர்களாக மாட்டார்கள்” என்கிற முடிவின் பேரில் இவர்களை விட்டே விலகி, ஏதோ தன்னாலானதைத் தனித்து செய்து வருகிறார். இனி, தேசம் கையில் வலுத்தவன் காரியமாய்ப் போய்விட்டது. எவனுக்கு மானமில்லையோ, எவன் தைரியமாய் பொய் சொல்லக் கூடியவனோ, எவன் பணம் செலவு செய்து சிஷ்யர்களைச் சேர்த்து தன்னைத் தலைவனாக்கிக் கொள்ள சக்தியுடையவனோ, அவனுக்கு ஏழைகள் அடிமையாகத் தகுந்த நிலைமைக்கு வந்துவிட்டது. இந்த நிலைமையில் தேச பக்தர்கள் செய்யவேண்டிய வேலையென்ன என்பதை ஒவ்வொரு உண்மை தேசபக்தர்களும் ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். தேசத்துக்கு உரிமை சம்பாதிக்கிறோமென்று சொல்லிக் கொண்டு அயோக்கியர்கள் பாமரர்களை வஞ்சிக்க இடங்கொடுப்பதா அல்லது இவர்களின் யோக்கியதையை பாமர ஜனங்களுக்குத் தைரியமாய் எடுத்துச் சொல்லி உரிமை அடைய யோக்கியதையுடையவர்களாக்குவதா? என்பதே நமது கேள்வி.

(குடி அரசு - கட்டுரை - 02.05.1926)

Pin It