கோயம்புத்தூர் நகர பரிபாலன சபையின் தேர்தல் முடிந்தது. எட்டுக் கனவான்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். தேர்தல் பிரசாரங்களில் இரண்டு கட்சிகளின் பெயர் சொல்லிக் கொள்ளப்பட்டன. ஒன்று சுயராஜ்யக் கட்சி, மற்றொன்று ஜஸ்டிஸ் கட்சி. சுயராஜ்யக் கட்சிக்கென கோயம்புத்தூர் காங்கிரஸ் நிர்வாகிகள் என்போர் பிரசாரம் செய்தனர். ஜஸ்டிஸ் கட்சிக்காக எவ்விதப் பிரசாரமும் நடைபெறாவிட்டாலும் காங்கிரஸுக்காரர்கள் நடந்துகொண்ட மாதிரியே, ஜஸ்டிஸ் கட்சிக்குப் பிரசாரம் தேவையில்லாமல் போய்விட்டது. உண்மையிலேயே இப்பொழுது தேர்தலில் வெற்றி பெற்ற கனவான்கள் எவ்விதப் பிரசாரத்தினாலும் பாதகமோ, சாதகமோ அடைய முடியாதவர்கள். இவர்கள் எட்டுப் பேரும் உண்மையில் எவ்வித தனிக் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. “அரண்மனை நெல்லுக்குப் பெருச் சாளிகள் சண்டையிட்டுக் கொள்வது போல் ” அநாவசியமாய் சொந்த விரோதங்களையும், சுயநலன்களையும் உத்தேசித்து ஒருவரை ஒருவர் திட்டியும், பழி சுமத்தியும் ஆசை தீர்த்துக் கொண்டதல்லாமல் வேறு எவ்வித பொது நன்மையும் பிரசாரங்களில் தோன்றவில்லை. சுயராஜ்யக் கட்சியின் பேரால் வெற்றி பெற்றதாகச் சொல்லப்படும் மூன்று கனவான்களும் காங்கிரஸ் பிரசாரத்தால்தான் வெற்றி பெற்றனர் என்று சொல்ல முடியாது. ஒரு கனவானுக்குப் போட்டியே இல்லை. அவர்தான் ஸ்ரீமான் பழனிச்சாமி செட்டியார் அவர்கள். அவருக்கு யாதொரு பிரசாரமும் தேவையில்லாதபடி அவ்வளவு மிகுதி செல்வாக்கும், ஜனங்களிடம் நம்பிக்கையும் பெற்றவர். அவருக்கு ஜெயம் கிடைக்கும் என்கின்ற உறுதியைக் கொண்டே அவரை சுயராஜ்யக் கட்சி அங்கத்தினர் என்று விளம்பரம் செய்துவிட்டனர். இரண்டாவதாக, சுயராஜ்யக் கட்சியின் பெயரால் வெற்றிபெற்றவர் என்று சொல்லப்படுபவர் ஸ்ரீமான் சி.எம்.ராமச்சந்திர செட்டியார். இவருக்கு காங்கிரஸ்காரர்களின் பிரசாரமே கொஞ்சமும் தேவையில்லாமலிருந்ததோடு காங்கிரஸ் பிரசாரம் தமக்கு ஏதாவது தோல்வியை உண்டாக்கிவிடுமோ என்கிற பயத்தால் காங்கிரஸ் பிரசாரகர்கள் தமது வார்டுக்குள் வரக்கூடாதென்று கண்டிப்பான உத்திரவு போட்டுவிட்டார். தாமும் கொஞ்சமும் இப்பிரசாரங்களில் கலந்து கொள்ளவே இல்லை. ஸ்ரீமான் செட்டியார் அவர்களின் செல்வாக்கும். பொதுநல சேவையும், தமிழுக்காகவும், மதுவிலக்குக்காகவும் மற்றும் பொது நலத்துக்காகவும் சேவை செய்து வருவது காங்கிரஸ் நற்சாட்சிப் பத்திரத்தை விட எவ்வளவோ மடங்கு மேலானது.

 மூன்றாவது கனவான் ஸ்ரீமான் குப்புச்சாமி நாயுடு அவர்கள். இவர் வெற்றியைப் பற்றியும் காங்கிரஸ்காரர்களின் பிரசாரத்தினால்தான் வெற்றி பெற்றார் எனப் பெருமை பாராட்டிக் கொள்ளமுடியாது. ஸ்ரீமான் நாயுடு அவர்கள் வெகு காலமாகவே காங்கிரஸ் அபிமானியாகவும் பொது நல ஊக்கமுள்ளவராகவும் இருந்து வந்திருக்கிறார். மற்றும் பல காரணங்களாலும் ஸ்ரீமான் நாயுடு அவர்களின் வெற்றிக்குக் காங்கிரஸ்காரர்கள் காரணமல்ல வென்று காங்கிரஸ்காரர்களுக்கே தெரியும். இம்மூன்று கனவான்களும் நிச்சயமாய் வெற்றி பெறுவார்கள் என்கிற எண்ணத்தைக் கொண்டே சுயராஜ்யக் கட்சியின் ஜாப்தாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. நிற்க , காங்கிரஸ் பிரசாரகர்களுக்கு விரோதமாய் வெற்றி பெற்ற கனவான்கள் ஐவர். இவர்களில் முதலாவதவர் ஸ்ரீமான் சி.வி.சுப்பையா செட்டியார் அவர்கள். இவர் வெற்றிக்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் பிரசாரத்தின் போக்குதான். இவருக்கு எதிரிடையாக நின்றவரும், காங்கிரஸ் அபிமானியும் பொதுநல ஊக்கமும் அவர் வார்டில் நல்ல செல்வாக்கும் உள்ளவர். முன்பு கவுன்சில ராகவுமிருந்தவர். இவர் வெற்றி அடைந்திருக்க வேண்டியது தான். அப்படி யிருக்க அதிகப்படியான ஓட்டுகளால் தோல்வி அடையக் காரணம் காங்கிரஸ் பிரசாரத்தின் ஊழலானது ஜனங்களின் மனதை அவ்வளவு தூரம் மாற்றி விட்டது. காங்கிரஸ் பிரசாரம் இல்லாதிருந்தால் இவர் வெற்றியடையப் போது மான சவுகரியம் இருந்ததாகவே சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் ஒரு ஸ்தாபனத்திற்கு இரண்டு பேர் நின்றால் ஒருவருக்குத்தான் வெற்றி கிடைக்கும்.

 அடுத்தபடியாக, காங்கிரஸ் பிரசாரத்திற்கு விரோதமாக வெற்றி பெற்றவர் ஸ்ரீமான் வி.எஸ். செங்கோட்டய்யா அவர்கள். இவருடைய வெற்றி யைப்பற்றி கோயம்புத்தூர் ஜில்லாவிலேயே எவரும் பொறாமைப்பட மாட்டார்கள். இவர் காங்கிரஸ் அபிமானி. காங்கிரஸிற்கும் பொருள் உதவி வந்திருக்கிறார். கதர் உற்பத்திக்கு சென்னிமலையில் எவ்வளவோ ஏற்பாடு செய்தார். மற்ற பொது நன்மையான விஷயங்களுக்கும் எவ்வளவோ தாராள மாகப் பொருள் உதவி செய்து வருகிறார். பொது நன்மைக்குத் தாராளமாகப் பொருள் உதவி செய்வதில் கோயம்புத்தூருக்குள் ஸ்ரீமான் சென்னிமலை க. கிருஷ்ணன் செட்டியாருக்கு அடுத்தாற்போல் ஸ்ரீமான் செங்கோட்டய்யா அவர்களைத்தான் சொல்ல வேண்டும். இவர் கோயம்புத்தூர் பிராமணர் களுக்கும் நல்லவராக நடந்துகொண்டு வருபவர். ( ஆனால் இந்தத் தேர்தலில் வெகு பிராமணர்கள் இவருக்கு வாக்குத்தத்தம் செய்தபடி ஓட்டுச்செய்ய வில்லையெனச் சொல்லப்படுகிறது. இது மெய்யானால் கூட இதில் ஒன்றும் அதிசயமில்லை )

 மூன்றாவதாக காங்கிரஸ் பிரசாரத்திற்கு விரோதமாய் வெற்றி பெற்றவர் ஸ்ரீமான் லெட்சுமணத்தேவர் அவர்கள். அவருடைய வார்டில் அவர்கள் வகுப்பைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையான ஓட்டர்களானதால் அவ்வகுப்பைச் சேர்ந்தவர்தான் வரமுடியும். இதுபோலவே ஒவ்வொரு வார்டிலும் பெரும்பான்மையான ஓட்டர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களோ அவர்கள்தான் எப்பொழுதும் வரவேண்டுமென்று விரும்புகிறோம். இவர் பழைய கவுன்சிலரெனவே தெரிகிறது.

 நான்காவது ஐந்தாவதாக வெற்றிபெற்றவர்கள் ஸ்ரீமான்கள் அரி நாராயண பிள்ளை அவர்களும் கேசவப்பிள்ளை அவர்களும் ஆவார்கள். இவர்கள் பழைய கவுன்சிலர்களெனத் தெரிகிறது. ஆகவே இரு கட்சியின் பெயரால் வெற்றி பெற்ற எட்டுக் கனவான்களும் உண்மையில் எத் தனிக் கட்சியையும் சேர்ந்தவர்களல்லர். ஆதலால் அவர்களின் வெற்றி எந்தக் கட்சிக்கும் தோல்வியுமில்லை, வெற்றியுமில்லை. நகர பரிபாலனசபைக்கும் லாபமுமில்லை. காங்கிரஸிற்குச் சிறிது கெட்ட பெயர் ஏற்பட்டதேயன்றி பிரமாதமாக ஒன்றும் முழுகிப்போய்விடவில்லை. காங்கிரஸின் எதிர்கால நிலைமைக்கு தற்காலப் போக்குகள் பலவிதத்திலும் ஆபத்தாகத்தான் இருந்து வருகின்றன. ஆகையால் இதனாலேயே காங்கிரஸ் முழுகிப் போய்விட்டதென்று சொல்லுவதற்கும் இடமில்லை. காங்கிரஸின் பெயரால் பிரசாரம் செய்தவர்களுக்கும் ஒன்றும் பெரிய தோல்வி வந்துவிடவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு சிலரை ஆசை தீர வைய வேண்டுமென்பதுதான் அவர்களது விருப்பம். அதுவும் அவர்களுக்கு நிறைவேறிவிட்டது. அவர்களால் திட்டப்பட்டவர்களுக்கும் ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. யாருக்கும் எவ்வித செல்வாக்கும் குறைந்து விடவுமில்லை. எவரோ நான்குபேர் மேடை மீதேறி ஒருவரைத் தூற்றுவதால் அவருடைய செல்வாக்குக் குறைந்து போகுமானால் அவ்விதச் செல்வாக்கு இவர்களுக்கிருந்தும் பயன் என்ன ? முடிவாக கோயம்புத்தூர் நகர பரிபாலன சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பெற்ற எட்டுக் கனவான்களையும் நாம் பாராட்டுகின்றோம். அவர்களைத் தேர்ந்தெடுத்த ஓட்டர்களுக்கும் நன்றி செலுத்துகிறோம்.

 (குடி அரசு - சித்திரபுத்திரன் என்னும் பெயரில் பெரியார் எழுதிய கட்டுரை - 06.09.1925)

Pin It