கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

மனித செயல்பாடுகள் அனைத்தும் மூன்று தளங்களில் (அரசியல், சமூகம், பொருளாதாரம்) இருந்து வெளிப்படுகிறது. மூன்று தளங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தும், ஒன்றோடொன்று சேர்ந்தும் செயல்படுகின்றன. இதில் தலைமை ஏற்று மற்ற இரண்டு தளங்களையும் வழிநடத்துவது அரசியல் தளம் மட்டுமே. இத்தளத்தின் முகமான அரசமைப்பு என்பது, மற்ற சமுக அமைப்புகள் போல் அல்லாமல், மனித சமுகத்தின் அனுமதியோடு, அடக்குமுறை ஆயுதங்களுடன் அவதரித்தது என்பதே அதன் தலைமை ஏற்கும் பண்பிற்கு காரணமாகும். அதனால் தான் அரசியல் தலைமையை கைப்பற்றுவதின் அவசியத்தை தோழர் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்தினார்.

       வர்க்கங்கள் ஏதும் இல்லாமல் வாழ்ந்து வந்த மனித குலம், அதன் வரலாற்று தேவையினால் இருவர்க்க  சமூகமாக உருவானது. வரலாற்று தேவை என்பது, பொருள் உற்பத்தியின் அளவும், புதிய தொழில் பிரிவுகளையும் பொறுத்தது என்பதை நாம் அறிவோம். உலகில் பகை முரண் கொண்ட வர்க்க சமுதாயம் தோன்றி சுமார் 4000 முதல் 5000 ஆண்டுகள் ஆவதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். 16 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான தொழிற்புரட்சி விளைவித்த அபரிமிதமான பொருள் உற்பத்தியால், 17 ஆம் நூற்றாண்டில் துவங்கிய காலனிய ஆட்சி முறை, 20 ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது. 1997 ஜூலைமாதம் முதல் தேதி ஹாங்காங் நாடு விடுதலை அடைந்ததோடு, உலகில் காலனிய ஆட்சி முடிவடைந்தது. இக் காலத்தில் நடைபெற்றுள்ள போர்களும், மனித அழிவும், மனித குலத்தை புதிய பாதை நோக்கி பயணம் செய்யத் தூண்டியது.

காலனிய ஆட்சி முறைக்கு முந்தைய காலங்களில் நடைபெற்ற போர்களும், மனித அழிவும், பல மடங்கு அதிகம் என்றாலும் தனித்தனியானவை, தொடர்பு அதிகம் இல்லாதவை .அதன் பலனாகவே, அக்காலங்களில் அரசமைப்பில் தோன்றாத, தேசம், ஜனநாயகம், சோசலிசம் போன்ற புதிய கருத்தாக்கங்களும், நடைமுறைகளும், பெருவாரியான நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இவைகளின் காலம் வரலாற்றில் மிக சொற்பமானது தான். அதாவது ஒரு நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டது தான். என்றாலும் இந்த குறைந்த காலத்திற்குள் இருக்கின்ற அரசமைப்பில் இருந்து ஒரு புதிய முறைக்கு மாற மனிதகுலம் உந்தப்பட்டு வருகிறது. அதற்கும் காரணம் புதிய விஞ்சான கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய  பொருள் உற்பத்தி அளவுகளும், முறைகளும், கருவிகளும், புதிய தொழில் பிரிவுகளும், உற்பத்திப் பொருள்களில் நிலவும் ஏற்றத் தாழ்வான பகிர்வும் என்பது கண்கூடு. ஆகவே இந்த நூறாண்டுகளில் மனித சமுகத்தில் மாற்றம் கண்டுள்ள வர்க்கங்களின்  உட்பிரிவுகளும், கட்டமைப்பும், குணாம்சமும், புதிய தீர்வை நோக்கிச் செல்ல, மனிதகுலத்தை வற்புறுத்தியும், நிர்பந்தித்தும் வருகிறது. இதுவே இன்றைய மனித குலத்தின் வரலாற்றுத் தேவையாகும்.

            மனித குலத்தின் இத்தேவையை நிறைவேற்ற ஏதாவது ஒரு வர்க்கம் முன்னிற்க வேண்டும். இன்றைய சமுக கட்டமைப்பில் அது எந்த வர்க்கம்? அவ்வர்ஜ்கத்தின் கூட்டாளிகள் யார்? போராட்ட முறை என்ன? போராட்ட ஆயுதம் என்ன? இடைக்கால திட்டம் என்ன? புதிய அரசமைப்பின் சாராம்சம் என்ன? என்பதைத் தீர்மானிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. மனித குலத்திற்கு சுபிட்சத்தை அளிக்க "வர்க்கம் அற்ற சமுதாயத்தை" முன்வைக்கும் கம்யூனிஸ்டுகள் இக் கேள்விகளுக்கு விடை கண்டு மக்கள் முன் வைத்தாக வேண்டும். மனித குலத்தின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் வித்திட்டது, அவர்களுக்குள் நிகழ்ந்த கலப்பும், பரிவர்த்தனையும் தான். மனித குலம் சந்தித்த போர்களுக்கு அளவே இல்லை. ஆனால் 20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலகப் போர்களில், எல்லா நாடுகளும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிணைக்கப்பட்டன. அதன் பின் உலக அமைப்பு ஒன்று ஏற்படுத்த வேண்டிய நெருக்கடி, போர்முறையினாலும், போர் அழிவுனாலும் உருவாக்கப்பட்டது. அதனால் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. இதன் பின்  போர்களின் தன்மையும், போராட்ட ஆயுதங்களும், முறைகளும், பலமாறுதல்களை சந்தித்து உள்ளது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், அவைகளின் பயன்பாடுகளும், மனித வாழ்வை பல முனைகளில் உற்பத்தி, விநியோகம், நுகர்வு அனைத்திலும் மாற்றம் செய்து விட்டது.

         உலகமே, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், டச்சு, ஸ்பெயின் ஆகிய ஆறு நாடுகளின் காலனியாக இருந்தது. காலனிய ஆட்சி முறையில் இருந்து மீண்டு, பல சுதந்திரமான நாடுகள், சுயாட்சி நடத்தி வந்தன. உலக மக்களின் கலப்பும், தொடர்பும், தொழில் நுட்பமும், உற்பத்தி பொருள்களுக்கு தேவைப்பட்ட  விரிந்த சந்தையும், நாடுகளின் சுதந்திரத்தையும், சுயாட்சியையும் கேள்விக்குறியாக மாற்றி விட்டுள்ளது. நாடுகள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தும், சேர்ந்தும் வாழ வேண்டிய தேவையும், நிர்பந்தமும் உருவாகி விட்டது.

வரலாற்றின் இந்த கட்டாயத்தில் இருந்து மீள முடியாமல் மன்னராட்சி நாடுகளும், சர்வாதிகார ஆட்சிகளும் நிலை தடுமாறுகின்றன. சொந்த நலனுக்காக இத்தகைய ஜனநாயக விரோத ஆட்சிகளைப் பாதுகாத்து வந்த ஏகாதிபத்தியம் இன்று வழி தெரியாமல் அச்சம் கொண்டு உள்ளன. மத்திய தரைக்கடல் நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள், மக்களின் எழுச்சியால் பெரும் சேதம் இல்லாமல் சில நாட்களிலேயே ஆட்சியை மாற்ற முடிந்துள்ளது என்பது கூர்ந்து கவனிக்க வேண்டியதாகிறது. அரசாளுபவர்கள் பலம் வாய்ந்த அடக்குமுறை ஆயுதங்கள் பயன்படுத்தினாலும், ஆயுதம் இல்லாத அல்லது எளிய ஆயுத பலம் கொண்ட மக்களை வெல்ல முடியாமல் போவது எதனால்? போராடும் நாட்டு மக்களின் விழிப்புணர்வும், உலக மக்களின் கருத்தாதரவும், ஐக்கிய நாடுகளின் நிர்பந்தமும், திறந்த, தொலை தொடர்பு கருவிகளும், வெளிப்படையான வலைதளமும், தேசிய அரசுகளின் அடித்தளமான ரகசியம் என்பதை தகர்த்து எறிந்து விட்டது தான் காரணமாகி நிற்கிறது.

         இன்று போராட்டம் நடைபெறுகின்ற நாடுகள் அனைத்தும், உலக  பொருளாதாரத்தின் அடிநாதமான எண்ணை வளம் நிறைந்த நாடுகள். அதனால் தான் ஏகாதிபத்தியம் அந் நாடுகளில் தங்களுக்கு அடக்கமான ஆட்சியாளர்களை, பணபலம், ஆயுதபலம் கொண்டு ஆட்சி புரிய வைத்திருந்தனர். ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று பறை சாற்றிக்கொண்டு, சர்வாதிகரிகளையும், மன்னர்களையும், பொம்மைகளாக வைத்துக் கொண்டு பாதுகாத்து வந்தனர். அந் நாடுகளில் தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் இருப்பினும், நடைபெறும் போராட்டங்களின் தலைமைப் பொறுப்பை தொழிலாளி வர்க்கம் ஏற்று இருக்கவில்லை ஏன்? மாணவர்களும், இளைஞ‌ர்களும், முன்னனி படையாக இருப்பது ஏன்?

சிந்தனை செய்து பார்த்தால், அச்சமூகங்களின்  வர்க்கக் கட்டமைப்பில், வர்க்க குணாம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் என்பது புரியும். அதே வேளையில் அரசாளும் வர்க்கம் ஆயுதங்களின் பலத்தை விட கருத்து எனும் ஆயுதத்தைத் தான் நவீன காலங்களில், மக்களை அடக்கி ஆள பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெரியும். அரசு தோன்றியது முதல் மதம் எப்படி ஆள்பவர்களுக்காக மக்களை தயார்படுத்தியதோ அப்படி, புதிய கருத்துக்களும், புதிய சாதனங்களும், அடக்கி ஆளும் ஆயுதங்களாக அதிகார வர்க்கத்திற்கு பயன்படுகின்றன.

           நாடுகளின் சுதந்திரமான, சுயேட்சையான செயல்பாடுகள் பலன் இன்றிபோனதால், புதிய செயல்பாட்டு முறை ஒன்று உலகிற்கு தேவைப் படுகிறது. அது எது? இதற்கான பதிலை தீர்மானிக்க நாடுகளின் வளர்நிலைகளை பரிசீலனை செய்தாக வேண்டும். இதுவரை நாடுகளை வழி நடத்திய தேசியம், ஜனநாயகம், சோசலிசம் போன்ற கருத்தாக்கங்களும், நடைமுறைகளும், நாடுகளிடையே பகைமையையும், சமச்சீரற்ற வளர்ச்சியையுமே ஏற்படுத்தி உள்ளது. இந்த சமச்சீரற்ற வளர்ச்சிப் போக்கு நாடுகளுக்கு உள்ளேயும் அமைதியின்மையை தோற்றி வைத்துள்ளது. அதே வேளையில் மனிதகுலத்தின் பொருள் தேவையும், நுகர்வும், உலகம் சார்ந்ததாக மாறி உள்ள  நிலையில், உலக நாடுகளுக்கான அமைப்பில், ஐக்கிய நாடுகள் சபையில், சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டிய நிர்பந்தம் உருவாகி உள்ளது. ஐக்கிய நாட்டு சபை தோன்றிய பின் இந்த 65 ஆண்டுகளில் முதன் முறையாக, பாதுகாப்பு சபை உட்பட, ஒரே குரலில் லிபியா மீது நடவடிக்கை எடுப்பதில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது கவனிக்கப் படவேண்டும். அதே நேரத்தில் அந்நாட்டின் மீது படை எடுப்பதை சில நாடுகள் எதிர்க்கவும் செய்கிறது.

          இந்தப் பின்னணியில் இந்தியாவின் அரசியல் நிலைமைகளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்றபின், தற்சார்புக் கொள்கை, கலப்பு பொருளாதாரம், அணிசேரா இயக்கம் என புதிய பாதை கண்டு தன்னை வளர்த்துக்கொண்டது. ஆனால் இந்த வளர்ச்சி அடித்தட்டு மக்களை சென்று அடையவில்லை. அதற்குள்ளாகவே உலக மாறுதல்கள் அனைத்தும், நாடுகளுடனான தொடர்புகளால், இந்திய மக்களையும், அவர்களது நுகர்வு பண்புகளையும் மாற்றி விட்டது. அதனால் இந்தியாவின் தனித்துவமான கொள்கைகள், பலம் இழக்கத் துவங்கியது. இரு துருவ உலகம் மாறி, ஒரு துருவமாக காட்சி தந்த உலகத்தில் வேறு வழியின்றி, தன் பாதையை மாற்றிக்கொண்டது. இதே போல எல்லா நாடுகளின் அடிப்படையும் மாற்றம் கண்டது. இது வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் தவிர்க்க முடியாதது.

         புதிய பாதையின் வளர்ச்சிப் போக்கிலும் அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெற முடியவில்லை. பல தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் இந்தியாவில், சமச்சீரற்ற வளர்ச்சி, தேசிய இனங்களின் உணர்வுகளை தூண்டியதைத் தடுக்க முடியவில்லை. இந்திய சமூகங்களுக்கே தனித்துவமான சாதியப் பிரிவுகளும், உள் முரண்பாடுகளை கூர்மைப்படுத்திவிட்டது. அதே போல இதர சமுக அமைப்புக்களிலும், பிரிவுகளும், பிளவுகளும் விரிந்து வருகிறது. உலகம் ஒன்றிணைவை நோக்கிப் பயணம் செய்யும் பொழுது நாம் தனித்து பயணம் செய்திட முடியாது. நடைமுறையில் நம் நாட்டில் உள்ள ஜனநாயக செயல்பாடுகள், அடைந்துள்ள வளர்சிகள், வர்கங்களுக்குள் நிகழ்ந்துள்ள அடுக்குகள், எல்லாம் அமைதின்மையை தோற்றிவைத்திருந்தாலும், ஆவேசத்தைத் தூண்டவில்லை. ஆனால் அரசியலாளர்களின் நேர்மை இன்மையும், ஊழலும், ஆடம்பர வாழ்வும்,மக்களை எரிச்சல் அடையச் செய்துள்ளது. உலக நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகள் இந்திய மக்களையும் வீறு கொண்டு எழச் செய்யும். இந்த நடவடிக்கை எல்லா நாடுகளிலும் ஒன்று போல் இருக்காது. நம் நாட்டில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த கால முறையான தேர்தல் அந்த வாய்ப்பை அளிக்கிறது. அரசுகளின் செயல்பாடுகளைப் பற்றிய உண்மைகள் மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டால், மக்கள் தங்களின் உரிமைகளுக்காக எழுச்சி கொள்வர். ஆனால் இருக்கின்ற அரசியல் கட்சிகள் இத்தகைய உணர்வை பெற்று இருக்கவில்லை.

          இதுவரை பல முறை மத்தியிலும், மாநிலங்களிலும், ஆட்சிகளை மக்கள் மாற்றி அமைத்து உள்ளனர். அத்தகைய மாற்றங்களும் அவர்களுக்கு விடிவைத் தரவில்லை; அதனால் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்களுக்குக் குழப்பம் உள்ளது. இந்திய கட்சிகள் எதுவும்,முறையான மாற்றை மக்கள் முன் வைத்தது இல்லை, அது தான் மக்களின் குழப்பத்திற்குக் காரணம். அந்தப் பணியை செய்வதுதான், உண்மையான அரசியல் கட்சியின் வேலையாக இருக்க முடியும். குறிப்பாக கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.

         இந்திய மாநிலங்கள், சுதந்திரத்தின் மூலமும், அரசியல் சட்டத்தின் வழியாகவும், அரசியல் சுதந்திரம் மட்டும் பெற்றுவிட்டது. ஆனால் மாநிலங்களின் பொருளாதார, சமூக சுதந்திரங்களைப் பெறவில்லை. அதே போல சமூகத்தின் அடிமட்ட அரசமைப்பான கிராம சபைகளும் சுதந்திரம் உட்பட எந்த பலனையும் அனுபவிக்கவில்லை. இவைகளுக்கான போராட்டங்களை கருத்தியல் வடிவில் வடிவமைப்பது இன்றுள்ள உடனடிக் கடமையாகும். ஒன்றுபட்ட உலகத்தில் ஒற்றுமையான மக்கள் அரசுகளை உருவாக்குவோம்.

- சுந்தரராஜன் மார்க்கசகாயம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)