இம்மாதம் இருபதாந்தேதி தமிழ் சுயராஜ்யா பத்திரிகையில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஆட்சேபித்து எழுதுவதில் ஜனங்களை மகம்மதியர் என்றும், இந்தியக் கிறிஸ்தவரென்றும், ஐரோப்பியரென்றும், ஆங்கிலோ இந்தியரென்றும், ஒவ்வொரு வகுப்புக்காரர்களால் அவ்வவ் வகுப்பிலுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதால் தங்கள் வகுப்புக் காரியங் களைப் பார்க்கிறார்களே யல்லாமல் பொதுக்காரியம் பார்ப்பதில்லை என்றும் இதனால் வகுப்புத் துவேஷமும் வகுப்புப் பிரிவினையும் ஏற்படுகின்றன என்றும் எழுதியிருக்கிறது. இதற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒரு சாஸ்திரி யாரின் உபதேசத்தைக் காட்டுகிறது. சுயராஜ்யா பத்திரிகையோ தேசீய பிராமணர் என்று சொல்லப்படும் “பகற்கொள்ளை”க்காரருடைய பத்திரிகை. திரு சாஸ்திரியார் அவர்களோ மிதவாதப் பிராமணர் என்று சொல்லப்படும் “இராத்திரிக் கொள்ளை”க் கட்சியைச் சேர்ந்த பிராமணர். இப்பகற் கொள்ளைக் கட்சிக்கு ராத்திரிக் கொள்ளைக் கட்சியார் சாட்சியைத்தான் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

போராக் குறைக்கு ஒரு பெரிய பிரட்டு என்னவென்றால் ஒரு பிராமணரல்லாத மந்திரியான ஸ்ரீமான் பாத்ரோ வும் இதை அங்கீகரித்திருக்கிறாராம். இந்த ஒரு விஷயம் பிராமணப் பத்திரிகைகளின் சூழ்ச்சி என்று குடிஅரசும் அதன் சக பத்திரிகைகளும் எழுதி வரும் ஒவ்வோரெழுத்துக்களையும் கல்லின்மேல் எழுதச் செய்கிறது. மந்திரி பாத்ரோ அவர்கள் சம நியாயம் கிடைப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இன்றியமையாதது என்றும், இக் கொள்கை புதிதானதல்ல என்றும், எல்லா சமூகத்தார்களும் சமூக அரசியல் பொறுப்புகளை சமமாய் ஏற்றுக் கொள்ளும் காலம்வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தே தீர வேண்டும் என்றும், ஆனால் இது நிரந்தரமாய் இருப்பது நன்மை அல்ல கெடுதி என்றும் பேசியிருக்கிறார். அப்படி இருக்க சுயராஜ்யாவின் கூற்றை எந்த வார்த்தை யால் மந்திரி அங்கீகரிக்கிறார் என்பதை பொது மக்கள் கவனிக்கவேண்டும்? சுயராஜ்யா பத்திரிகையின் மற்ற கூற்றுகளுக்கு மறுமுறை பதிலெழுதுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.08.1925)
Pin It