இன ஒதுக்கலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அவையின்  சார்பாக ஜெனிவா நகரில் 5-8-2002 முதல் 23-8-2002 வரையில் உலக அளவிலான கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள், சாதியின் காரணமாக உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து, தீர்மானம் எண் 29 நாள் 22-8-2002ல் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்று இந்திய அரசு மிகவும் வலுவாக முயன்றது. முதலில் சாதி அடிப்படையில் கொடுமைகள் ஒன்றும் இல்லவே இல்லை என்றும், அப்படி இருந்தால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதி முதலமைச்சராக ஆகியிருக்க முடியுமா என்றும் வாதாடிப் பார்த்தது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் தாழ்த்தப்பட்ட வகுப்புத் தோழர்கள் ஒரே ஒருவர் மட்டும் உயர் பதவிக்கு வருவதால் மட்டும் கொடுமைகள் நிகழவில்லை என்று கூற முடியாது என்றும், கல்வி வேலை வாய்ப்புகளில் பத்தில் ஒரு பங்கு உரிமைகளையும் பெற முடியாமல் தவித்துக்கொணடிருக்கும் புள்ளி விவரங்களைக் காட்டி, இந்திய அரசின் பொய்யான வாதங்களை முறியடித்தனர்.
 
          உடனே இது உள்நாட்டுப் பிரச்சினை என்றும், இதைக் கண்டிப்பதற்கோ கருத்து கூறுவதற்கோ ஐ.நா. அவைக்கு உரிமை இல்லை என்றும் இந்திய அரசு கடுமையாகக் கூறியது. இந்திய அரசு இன ஒதுக்கலுக்கு எதிராகக் கண்டிப்பதையும், கருத்து கூறுவதையும் எடுத்துக்காட்டி எதிர்வாதம் செய்தனர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். இறுதியில் சாதி ஒடுக்கலைக் கண்டித்து ஐ.நா.அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் மனித உரிமைக்கான தேசிய பிரச்சாரக் குழுவினர் (National Compaign for Dalit Human Rights) இத்தீர்மானத்தின் நகல் 25-2-2002 அன்று கிடைத்ததாக ஹைதராபாத் நகரில் தெரிவித்தனர்.
 
          ஐ.நா.அவை, சாதிய ஒடுக்கலைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றி எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறதா?
 
          இல்லை. சாதியக் கொடுமைகள் இந்தியாவில் மட்டுமல்ல; இந்தியர்கள் வாழும் அயல்நாடுகளிலும் கொடி கட்டிப் பறக்கின்றதே தவிர மாறவே இல்லை என்ற செய்திகள் தான் கிடைக்கின்றன.
 
          பிரிட்டிஷ் அரசாங்கம், பிரிட்டனில் வாழும் இரண்டு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, பிரிட்டனில் சாதிக் கொடுமைகளைப் பற்றி ஆராயும் பணியை, தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்திடம் (National Institute of Economic and Social Research) ஒப்படைத்து இருந்தது. அந்நிறுவனம் நாடு முழுவதும் ஆராய்ந்து தனது அறிக்கையை 25-12-2010 அன்று அளித்தது.
 
          அவ்வறிக்கையில், பிரிட்டனில் வாழும் இந்தியர்களிடையே சாதிக் கொடுமைகள் நிலவுகின்றன என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்சாதிக் கும்பலைச் சேர்ந்த எந்த ஒரு தனிப்பட்ட இந்தியர் அல்லது இந்திய வமிசாவழியினர் தனிப்பட்ட முறையில் தாழ்த்தப்பட்ட வகுப்பபைச் சேர்ந்தவர் மீது துவேஷத்தைக் காட்டுவதில்லை என்றும், வேலை வாய்ப்பு என்று வரும்பொழுது, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலை வேலைகளைப் பெற்று விடக் கூடாது என்பதில் மிக மிக மிகத் தீவிரமாக உள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியர் மற்றும் இந்திய வமிசாவழியினரின் நிறுவனங்களில் மட்டுமல்ல, உயர் சாதிக் கும்பலினர் தங்களுக்குச் செல்வாக்கு உள்ள அயல் நாட்டு நிறுவனங்களிலும், தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, உயர்நிலைப் பணிகள் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கிடைக்காமல் செய்கின்றனர் என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
          இவ்வறிக்கையை ஏற்றுக்கொண்டு, பிரிட்டனில் சாதி அடிப்படையில் வேறுபாடு பார்ப்பது குற்றம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவிக்கும் என்று தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அப்படி நடக்க விட்டு விடக்கூடாது என்று இந்திய அரசு கடுமையாக முயன்று கொண்டு இருக்கிறது.
 
          ஐ.நா. அவையின் தீர்மானம் எண் 29 நாள் 22-8-2002 ஒன்று இருப்பதே தெரியாமல் மறைக்க முடிந்த இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த முயற்சியையும் முறியடிக்கும் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.
 
          இதெல்லாம் எப்படி முடிகிறது? உயர்சாதிக் கும்பலினர் இது போன்ற விஷயங்களில் வெற்றி பெறும் இரகசியம் தான் என்ன? உயர் சாதிக் கும்பலினர் அனைவரும் அறிவாளிகளாக இருப்பதால், அவர்களால் வெற்றி பெற முடிகிறதா?
 
          நிச்சயமாக இல்லை. எந்த ஒரு சாதியிலும் அனைவரும் அறிவாளிகளாகவோ அல்லது அனைவரும் முட்டாள்களாகவோ இருப்பது முடியவே முடியாது. அப்படி ஒரு நினைப்பு இயற்கைக்கு முற்றிலும் எதிரானதாகும். அனைத்து சாதிகளிலும் அனைத்து நிலையிலான அறிவுத் திறன் கொண்டோர் இருக்கின்றனர். (ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொண்டு இருப்பார்கள். குறைந்த அறிவுத் திறன் கொண்ட உயர் சாதிக் கும்பலினர் உயர்நிலைப் பதவிகளில் அமர்ந்து கொண்டு கீழ்நிலையில் பணியாற்றுபவர்களைப் படாத பாடுபடுத்துவதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்தே இருப்பார்கள்.)
 
          ஆகவே உயர்சாதிக் கும்பலினர் அனைவரும் அறிவுத் திறன் மிக்கவர்கள் அல்ல என்பது எளிதாக விளங்கும்.
 
          பின் எப்படி அவர்கள் உயர்நிலைகளைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்? அரசு அதகாரத்தைப் பயன்படுத்தித்தான். உயர்நிலைப் பணிகளில் அவர்கள் மட்டுமே இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் அயராத போராட்டம் காரணமாக, அவர்களுக்கு உயர்நிலைப் பணிகளை அளித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுது, முடிந்த மட்டும் மன உறுதி கொண்டவர்களைத் தவிர்த்து விடுகிறார்கள். மேலும் உயர் சாதிக் கும்பலினர் மிக மிகப் பெரும்பான்மையாக இருக்கும்போது சிறு எண்ணிக்கையில் புதிதாக உள்ளே நுழையும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களால் பெரிதாக ஒன்றும் செய்ய முடிவதில்லை. மேலும் அவர்கள் உயர் சாதிக்கும்பலினரை மீற முடியாதபடி கண்காணிக்கப்பட்டும் மிரட்டப்பட்டும் கொண்டிருப்பார்கள்.
 
          போதிய எண்ணிக்கை இல்லாததாலும், மிரட்டப்பட்டுக் கொண்டே இருப்பதாலும், தங்கள் சமூகத்திற்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள். ஆனால் இவர்களுடைய கையறு நிலையை மறைத்து, தங்கள் சமூகத்திற்கு ஒன்றும் செய்யாமல் புதிய பார்ப்பனர்கள் ஆகிவிட்டார்கள் என்று குற்றஞ் சாட்டுவார்கள். அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பிளவை ஏறபடுத்துவார்கள். இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாத உயர்நிலைக்குப் போன ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் காலப் போக்கில் கீழே உருட்டிவிடப்படுவார்கள்.
 
          உயர்சாதிக் கும்பலினரை மட்டும், திறமை இல்லாவிட்டாலும் பாதுகாப்பாக அரவணைப்பதில் அரசு அதிகாரம் முழுமையையும் பயன்படுத்துகிறார்கள்.
 
          இதை இப்படியே தொடர விடுவதா? இதற்குத் தீர்வு தான் என்ன?
 
          கல்விலும் வேலை வாய்ப்பிலும் அனைத்துத் துறைகளிலும் (தனியார்த் துறைகள் உட்பட) அனைத்து நிலைகளிலும் விகிதாசார ஒதுக்கீடு கொண்டு வருவதே இக்கொடுமைகளைக் களையும் ஒரே தீர்வாகும். (இப்படிச் செய்யும்பொழுது  உயர்சாதிக் கும்பலினால் திறமையற்றவர்கள் அதிகாரமற்ற, குறைந்த வருவாயுள்ள, உடலுழைப்பு மிகுந்த பணிகளில் இருந்து தப்பி விடாமல் பார்த்துக் கொள்வது தான் ஒதுக்கீடு ஒழுங்காக அமல் செய்யப்பட்டதற்கான சரியான அளவுகோலாக இருக்கும்.)
 
          திறமை (merit) பார்க்கப்பட வேண்டும் என்று கூச்சலிடுபவர்களிடம் உயர்சாதிக் கும்பலினர் அனைவரும் அறிவுத் திறன் மிக்கவர்களாக இருக்க முடியாது என்பதையும், அறிவுத் திறன் அனைத்து வகுப்பு மக்களிடமும் உண்டு என்பதையும் எடுத்துக் காட்டி, திறமை அடிப்படையில் தேர்வு செய்யும் முறை என்றால் அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலைப் பணிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும் அல்லவா என்று எடுத்துக் காட்ட வேண்டும்.
 
          அவ்வாறன்றி உயர்சாதிக் கும்பலினரை உயர்நிலைப் பணிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களைக் கீழ்நிலைப் பணிகளிலும் தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்தே இன்றையப் பொதுப் போட்டி முறை திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கச் சற்றும் திறனற்றது என்று புரியவில்லையா?
 
          ஆகவே அதை அழித்து ஒழிப்பது தானே திறமையற்றவர்கள் மேல் நிலைக்குச் செல்வதைத் தடுக்கும் முதல் நடவடிக்கையாக இருக்க முடியும்? அவ்வாறு செய்யாமல் திறமையற்ற உயர்சாதிக் கும்பலினரை உயர்நிலையில் இருக்க வைக்கும் இன்றைய பொதுப் போட்டி முறைக்கு உடந்தையாக இருப்பதும், அதனால் நாட்டு நிர்வாகத்தைப் பாழடிப்பதும் தேசத் துரோகச் செயல் அல்லவா?
 
          இந்தத் தேசத் துரோகச் செயலைக் கைவிட்டுவிட்டு, திறமையானவர்களை உயர்நிலைக்கு அனுப்ப வழிகோலும் விகிதாசார ஒதுக்கீடு முறை வேண்டும் என்று என்றைக்குப் போராடப் போகிறோம்? குறைந்த பட்சம் இதற்கு ஆதரவான விழிப்புணர்ச்சியையும் பொதுக் கருத்தையும் உருவாக்கலாம் அல்லவா?

Pin It