அறிஞர் அண்ணா ஏழ்மையில் எளிமையாய்க் கற்று உயர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் ஆனவர். இன்றைய அரசியல் வட்டச் செயலர்கூட அல்ல, ஓர் ஊரின் கிளைச் செயலர்கூட ஆடம்பரமாய், பந்தா காட்டி, ஆட்கள் புடைசூழ ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அவரவர் திறமைக்கு ஏற்பச் சுருட்டுகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்த அண்ணா எப்படி நடந்துகொண்டார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும் பாடமாகப் படிக்க வேண்டும்.

வேண்டியவருக்கு சலுகை காட்டாத நேர்மை

annadurai 450அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது திரு. சி.வி.இராசகோபால் அவர்கள் தன் மருமகனுக்கு ஏதாவது ஒரு பதவி அளிக்கும்படி அண்ணாவிடம் வேண்டினார்.

அதற்கு அண்ணா, சண்முகத்தை ஓர் ஏலக்காய் மாலையாக நினைக்கிறேன். உங்கள் மருமகனுக்கு பதவி தந்துதான் முன்னேற்ற வேண்டும் என்பதில்லை. பதவி இல்லாமலே வளரும் தகுதி, திறமை அவரிடமிருக்கிறது. அப்படி நான் ஏதாவது பதவி தந்தால் சி.வி.ஆர். மருமகனுக்குக்கூட பதவி வாங்கித் தந்துவிட்டான் என்ற பெயர் உனக்கும், சி.வி.ஆர். மருமகனுக்கு அண்ணா பதவி தந்தார் என்ற கெட்ட பெயர் எனக்கும் ஏற்பட்டுவிடும்? என்றார்.

அண்ணாவின் பதிலைக் கேட்ட சி.வி.ஆர். அவரது நேர்மையைக் கண்டு வியந்து, அண்ணா உங்கள் நிலைப்பாடுதான் சரியென்று சொல்லி விடைபெற்றார்.

ஒருநாள் விருத்தாசலம் கூட்டம் முடித்துவிட்டு அண்ணா சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அண்ணா முதலமைச்சர். அயல் மாநிலங்களுக்கு அரசி கடத்துவதைத் தடுக்க சோதனைச் சாவடி பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது.

அண்ணாவின் கார் என்று தெரியாமல் ஒரு சோதனைச் சாவடியில் ரெவன்யூ இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார். இரவு நேரம் என்பதால் அண்ணாவை அதிகாரி கவனிக்கவில்லை.

டிக்கியை திறந்துவிடு என்று ஓட்டுநரை கடுக்கினார். டிக்கியை திறந்ததும் டிக்கி முழுக்க ரோசா மாலைகள். வாழ்த்து மடல்கள் என நிரம்பியிருந்தது. அப்போதுதான் வந்திருப்பது அண்ணா என்பது ரென்யூ இன்ஸ்பெக்டருக்குத் தெரிந்தது. பயந்துபோன அவர் அய்யா மன்னித்து விடுங்கள் என்று நடுங்கினார்.

அண்ணா தன் உதவியாளரைப் பார்த்து இவர் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள் என்றார். உடனே அதிகாரி விழுந்து வணங்குகிறார்.

அண்ணா அவரைத் தூக்கி நிறுத்தி, உன் பெயரை எதற்கு எழுதச் சொன்னேன் தெரியுமா? கடமையைச் சரியாகச் செய்த உனக்கு தாசில்தார் பதவி உயர்வு அளிக்கத்தான்! என்றார்.

அதிகாரிக்கு இன்ப அதிர்ச்சி. மகிழ்வோடு கண்கலங்கினார்.

தமிழ்நாட்டின் முதல்வர் எந்த ஆடம்பரமும் இல்லாமல், காவல்துறை அணிவகுப்பு, கட்சிக்காரர் அணிவகுப்பு காட்டாமல், ஒரு எளிய மனிதராய் பயணம் செய்த மாண்பு எத்தகையது பாருங்கள்! அது மட்டுமல்ல. முதல்வர் காரை இன்று நிறுத்தியிருந்தால் அந்த அதிகாரி பாடு என்ன ஆகியிருக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் அண்ணாவின் உயர் பண்பு தெரியும்.

மக்களோடு அமர்ந்து திரைப்படம் பார்த்த எளிமை!

இவை மட்டுமல்ல தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்தபோதே திரையரங்கிற்கு சாதாரண மனிதராய் படம் பார்க்கச் சென்றார். மதுரையில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணா மாலை அன்பில் தருமலிங்கத்திடம் பிளாசா தியேட்டரில் என்ன படம்? டிக்கெட் வாங்கி வா! என்றார். படம் ஆரம்பித்ததும் எந்த பாதுகாப்பும் இன்றி இவரும் தருமலிங்கமும் கவிஞர் கருணாநந்தமும் தியேட்டருக்குள் சென்றனர்.

அண்ணா இருக்கையில் அமர்ந்ததும், இவர்கள் இருவரும் சிரித்தனர். உடனே அண்ணா நீங்க ஏன்யா அப்படி நினைக்கிறீங்க, நான் நிறைய சினிமா பார்ப்பேன். முதலமைச்சரே நம்மோடு உட்கார்ந்து படம் பார்க்கிறார் என்று உயர்வாகத்தானே நினைப்பார்கள்! என்றார்.

இதேபோல், காரைக்காலில் கூட்டம் முடித்துவிட்டு முதல்வர் அண்ணா காரில் வந்தபோது, திருநள்ளாறு என்ற இடத்தில் கார் பழுதாகி நின்றுவிட்டது. பிறகு பழுதுபார்த்த பின் கார் புறப்பட்டது.

பேரளம் என்ற இடத்திற்கு கார் வந்ததும் அண்ணா காரை நிறுத்தச் சொன்னார். உடன் வந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

எம்.ஜி.ஆர். நடித்த, அன்பே வா! ஓடுது! பார்த்துவிட்டுப் போகலாம்! என்றார் அண்ணா, விளையாட்டுப் பிள்ளைபோல.

படம் தொடங்கும் நேரத்தில் அண்ணா வாழ்க! முழக்கம் எழுந்தது. அண்ணா வந்தது அறிந்த மக்கள் ஆரவாரம் செய்தனர். பின் அண்ணா படத்தைப் பார்த்தார். படம் முடிய அய்ந்து நிமிடம் இருக்க மக்களுக்குத் தெரியாமல் புறப்பட்டுச் சென்றார்.

நாட்டின் முதலமைச்சரானாலும் தானும் சராசரி மக்களில் ஒருவர் என்ற எண்ணமும், முதலமைச்சர் ஆனாலும் தன் அன்றாட விருப்பங்களை அவர் மக்களோடு மக்களாய் கலந்து பழகியே நிறைவேற்ற விரும்பினார் என்ற உயர் பண்பும் இந்நிகழ்வு மூலம் வெளிப்படுகிறது.

தன் உயிருக்குப் போராடும் நிலையில் பிறர் உயிர் காத்த மனிதம்

அண்ணா நோய்வாய்ப்பட்டு மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று டாக்டர்கள் கூறி, அவ்வாறே செய்தும் வந்தார்கள். ஒருநாள், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஒரு பெண் கைக்குழந்தையுடன், ஒரு வக்கீலுடன் வீட்டிற்கு வந்து அண்ணாவைப் பார்க்க வேண்டுமென்று அவரது உதவியாளரிடம் அங்கிருந்தோர் கூறினார்கள். அவர் நிலைமையை விளக்கி, பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின் திருமதி ராணி அண்ணாதுரை கீழே வந்தபோது அந்தப் பெண் தன் கைக்குழந்தையை திருமதி அண்ணா காலடியில் போட்டுவிட்டு என் கணவரைத் தூக்கிலிட உள்ளார்கள். நீங்கள்தான் காப்பாற்ற வேண்டுமென்று கதறினாள். திருமதி அண்ணா உதவியாளரிடம் இதுகுறித்து கேட்டபோது, ஏற்கெனவே கேட்டு வைத்திருந்த விவரங்களைக் கூறினார். அந்த அம்மையாரும் மிகவும் இளகிய மனம் உள்ளவர். எனவே மாடிக்குச் சென்று விவரங்களைச் சொல்ல, அண்ணா உதவியாளரைக் கூப்பிட்டு முழு விவரங்களையும் கேட்டார்.

இன்னும் இரண்டு தினங்களில் அவரது கணவரை தூக்கிலிட உள்ளதாகவும், இது சம்பந்தமாகத் தங்களைப் பார்க்க ஒரு பெண் வக்கீலுடன் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். உடனே அவர்களை அழைத்து வரும்படி அண்ணா கூற, அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அண்ணா தன் நோயையும், வலியையும் மறந்து, முழு விவரங்களையும் கேட்டு அவர்கள் கொடுத்த கருணை மனுவையும் பெற்றுக்கொண்டு, மதுரை சிறையிலிருக்கும் அவரது கணவரைத் தூக்கிலிடுவதை உடனே நிறுத்தி வைக்கம்படி பணித்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தனது உதவியாளரிடம் கூறினார்.

உடனே அப்போது உள்துறை செயலாளராகப் பணியாற்றிய ஏ.வெங்கடேசன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கும், மதுரை சிறை கண்காணிப்பாளருக்கும் விவரங்களை தொலைபேசி மூலம் கூற தூக்கிலிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முதல்வர் என்பதைவிட தான் ஒரு மனிதாபிமானம் உள்ளவராக வாழவேண்டும் என்றே விரும்பினார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

உதவியாளரை மருத்துவமனையில் சேர்த்து காத்துக் கிடந்த மாண்பு

அண்ணா முதல்வராக இருந்தபோது, அவரின் நேர்முக உதவியாளராய் பணியாற்றிய எஸ்.கஜேந்திரன் அவர்களுக்கு மாலை 6 மணியளவில் வாந்தியும், வயிற்றுவலியும் வந்து துடித்தார். அதைப் பார்த்த அண்ணா, அரசு பொதுமருத்துவமனைக்கு தானே அவரை அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை முடியும்வரை அங்கேயே இருந்து, அவரைப் படுக்கையில் சேர்த்த பின்னரே வீட்டுக்கு வந்தார்.

இப்படி ஒரு உயர் உள்ளம் கொண்டவரை ஆடம்பரமில்லா எளிய மனிதரை உலகத்திலே காட்ட முடியுமா?

அற்பர்கள் ஆடுவார்கள்-_ ஆர்ப்பரிப்பார்கள், உயர்ந்தோர் அடக்கத்தின் அடையாளமாய் இருப்பர் என்பதை அண்ணாவே ஓர் உதாரணம் மூலம் காட்டினார்.

ஒருநாள் சேலத்தில் உள்ள தன் நண்பா வீட்டில் மதிய உணவு உண்ண அமர்ந்ததும், இலையில் அப்பளமும் முட்டையும் வைத்தார்கள். மின்விசிறி சுற்றியதும் அப்பளம் படபடத்தது. முட்டை ஆடாமல் இருந்தது.

அதைப் பார்த்து அண்ணா நாலணா முட்டை அமைதியாய் உள்ளது. காலணா அப்பளம் எப்படி ஆட்டம் போடுகிறது பார் என்றார்.

இன்றைய அரசியல்வாதிகள் அப்பளம் போல ஆடாமல், அண்ணாவிடம் பாடம் கற்றால் அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது! மதிப்பும் உயர்வும் ஆடம்பரத்தில் இல்லை. அடக்கம் எளிமையில்தான் உள்ளது.

- மஞ்சை வசந்தன்

Pin It