Anbazhagan 350

உலக அளவில் எந்த இயக்கத்திற்கும் கிட்டாத மாபெரும் பேறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமே கிட்டியுள்ளது. உலகப் பெரும் சீர்திருத்தவாதிகளில் ஒருவரான தந்தை பெரியார் அவர்களாலும், அவரது தலைமாணாக்கர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களாலும் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் இனமானப் பேராசிரியர் அவர்களும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பின் 1969 முதல் கழகத் தலைவராகவும், நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்குப் பிறகு 1977 முதல் இனமானப் பேராசிரியர் அவர்கள் பொதுச் செயலாளராகவும் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இம்மாபெரும் இயக்கத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் சற்றொப்ப அரைநூற்றாண்டு காலம் வழிநடத்தினர்.

அதிலும் முத்தமிழறிஞர் கலைஞர், தந்தை பெரியார் போன்று 95 அகவை வரையிலும், இனமானப் பேராசிரியர், அவர்கள் இருவரையும் கடந்து 98 அகவை வரையிலும் வாழ்ந்து மறைந்துள்ளனர். இன்னும் ஈராண்டுகள் கடந்தால், நூற்றாண்டை எட்டி விடுவார் என்று எண்ணி ஆவலோடு காத்திருந்தோம் .என்றாலும் இயற்கை வென்றுவிட்டது. கடவுள் மறுப்பாளர் களுக்கெல்லாம் நிறைந்த ஆயுள் இருக்காது; அல்ப ஆயுளில் மறைந்து விடுவார்கள்; அவர்கள் வம்சம் விருத்தியாகாது; குழந்தை பிறக்காது ; நல்வாழ்வு கிட்டாது என்று அச்சுறுத்தும் ஆத்திகர்களின் கூற்றுகளை எல்லாம் தவிடுபொடி ஆக்கியவர்கள் நம் தலைவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது நம் பேராசிரியர் அவர்கள் இராமையா என்னும் தன் பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார்; அத்துடன் தன் சகோதரர்களுக்கும் திருமாறன், அறிவழகன் என்று பெயரை மாற்றி அமைத்தார். பேராசிரியர் தன் கல்லூரித் தோழர்களான நாராயணசாமியை நெடுஞ்செழியன் எனவும் சோமசுந்தரத்தை மதியழகன் எனவும், திருஞானசம்பந்தத்தை நன்னன் எனவும், உடுமலை தண்டபாணியைப் பண்ணன் எனவும், கடலூர் தண்டபாணியை இளம்வழுதி எனவும் அழகு தமிழ்ப் பெயர்களை சூட்டி மகிழ்ந்தார். அவர்களைத் திராவிட இயக்கத்தின் கடற்பாறைகள் என்றே ஐயா நன்னன் குறிப்பிடுவார்.

1942ஆம் ஆண்டு அண்ணா அவர்களின் திராவிடநாடு இதழில் திருவாரூரில் மாணவனாக இருந்த கலைஞர் அவர்கள் எழுதிய "இளமைப் பலி" என்னும் கட்டுரை வெளியானது. அக்கட்டுரை கண்டு மகிழ்ந்த அறிஞர் அண்ணா அவர்கள் திருவாரூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்ற போது தன்னுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் அன்பழகனையும் அழைத்துச் சென்றார். திருவாரூரிலிருந்து திராவிடநாடு இதழுக்கு கட்டுரை அனுப்பிய எழுத்தாளர் கருணாநிதியை சந்திக்க அண்ணா விரும்பி,அவரை அழைத்து வரச்சொன்னார்.

அண்ணாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு மாணவனாக கருணாநிதி வந்து நின்றார். மாணவர்கள் அரசியலைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் படிப்பைக் கெடுத்துக்கொண்டு அரசியலில் ஈடுபடக்கூடாது முதலில் படியுங்கள் பிறகு அரசியலில் ஈடுபடுங்கள் என்று மாணவர் கருணாநிதிக்கு அறிவுரை சொல்லி அனுப்பினார். அறிஞர் அண்ணா சொல்லி, தான் ஏற்காத அறிவுரை இது ஒன்றுதான் என்று தலைவர் கலைஞர் அடிக்கடி கூறுவார். அந்த நிகழ்ச்சியில் அண்ணா அவர்கள் பேசும் முன்பாக, மாணவர் அன்பழகன் உரையாற்றினார்.

அது அனைவரையும் கவர்ந்தது; தலைவர் கலைஞர் அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் அந்த ஆண்டு கலைஞர் நடத்தி வந்த தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற ஆண்டுவிழாவில் உரையாற்ற அன்பழகன் அவர்களையும், மதியழகன் அவர்களையும் கலைஞர் அழைத்து வந்தார். அன்று தொடங்கிய அந்த நட்பு காலம் முழுவதும் தொடர்ந்தது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் தலைவர் கலைஞர் பேராசிரியரின் நட்பு முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்தது, நிலைத்தது, இறுதி வரை தொடர்ந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் பேராசிரியரைப் பற்றிக் குறிப்பிடும் போது, " தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு, திராவிட இயக்கத்தை வழிநடத்த எனக்குப் பெரும் துணையாக இருந்தவர் பேராசிரியர்" என்று குறிப்பிடுவார், பேராசிரியர் அவர்கள் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும்போது!

என்னிடம் ஐந்து அம்சங்கள் உள்ளன. முதலில் நான் தமிழன். இரண்டாவதாக நான் அன்பழகன். மூன்றாவதாக நான் சுயமரியாதைக்காரன். நான்காவதாக நான் அண்ணாவின் தம்பி. ஐந்தாவதாக நான் கலைஞரின் தோழன். என்று குறிப்பிடுவார்.

1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலையில் கழகத்தின் முன்னோடித் தலைவர்கள் எல்லாம் சிறைப்பிடிக்கப்பட்டு சிறைக் கொட்டடியில் சித்திரவதைக்கு ஆளான போது தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பெரும் துணையாக இருந்தவர் நம் பேராசிரியர். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு கலைஞர் அவர்கள் கழக தலைமையை ஏற்றபோது பேராசிரியர் அவர்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். எனினும், அதன் பின்னர் , கலைஞரை விட்டால் தமிழ் மொழியைக் காப்பாற்ற, தமிழினத்தைக் காப்பாற்ற, தமிழ்நாட்டைக் காப்பாற்ற, வேறு நாதி இல்லை என்று உறுதிபடப் பேசியவரும் பேராசிரியர் அவர்கள்தான்.

1986ஆம் ஆண்டு ஈழத்தமிழர் உரிமை காக்க, தலைவர் கலைஞர் அவர்களும் பேராசிரியர் அவர்களும் இணைந்து தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பைத் துறந்தனர். 1987இல் இந்தியை எதிர்த்து இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்னும் சட்டப்பிரிவைத் தீக்கிரையாக்கி சிறை சென்றபோது அன்றைய முதல்வர் எம்ஜிஆர் பேராசிரியர் உள்ளிட்ட 10 பேரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார். பேராசிரியர் அவர்கள் என்றைக்கும் பதவிகளைத் தேடிச் சென்றவர் இல்லை; அவரை நாடித்தான் பதவிகள் வந்தன. ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர்; ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்; நான்கு முறை மாநில அமைச்சர் பொறுப்புகளை வகித்த போதும் கழகத்தின் பொதுச்செயலாளராக 43 ஆண்டு காலம் திகழ்ந்த போதும் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கு தன் நேர்மையால் தூய்மையால் மகுடம் சூட்டியவர் நம் பேராசிரியர்.

பேராசிரியர் அவர்களின் மறைவால் நாம் நலிந்து விடாமல், ஒவ்வொருவரும் பேராசிரியர் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொட்டுத் தொடர்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி. அவர் தூக்கிப் பிடித்த இரு வண்ணக் கொடியை நாம் நம் தோள்களில் என்றும் தாழாது தாங்கிப் பிடிப்பதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் வீரவணக்கம்.

Pin It