‘மால்கம் எக்ஸ்’ என்ற மனிதரை அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மட்டுமின்றி, வெள்ளை இனத்தவர்களும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது எனலாம். மால்கம் எக்ஸ் அமெரிக்காவில் நிற வெறிக்கெதிராக போராடியவர்களில் முக்கியமானவர். மால்கம் எக்ஸ் சிறு வயது முதலே வெள்ளை இனத்தவர்களின் இனவெறிக்கு ஆளானார். அவருடைய குடும்பமும் விதிவிலக்கல்ல. இதில், மால்கம் எக்ஸ்ன் பெற்றோர்கள் வெள்ளை இனத்தவர்களால் கொல்லப்பட்டனர். இதனால், சிறு வயதில் எந்தவித ஆதரவுமின்றி மால்கம் எக்ஸ் தான்தோன்றித்தனமாக சுற்றித் திரிந்தார். கடத்தல், கள்ளச்சாரயம், சீட்டு விளையாட்டு என்று சுற்றிக் கொண்டிருந்த மால்கம், ஒரு நாள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார்.

malcolm xசிறை வாழ்க்கை மால்கம் எக்ஸின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது. சிறையில் “நேசன் ஆஃப் இஸ்லாம்” அமைப்பைச் சேர்ந்த, வாசிப்பில் அதீத கவனம் செலுத்திய ஒரு கறுப்பினத்தவரின் தொடர்பு அவருக்குக் கிடைக்கிறது. சிறையில் மால்கம் எக்ஸ் வாழ்வு திசை திரும்புகிறது. சிறைச்சாலையில் உள்ள நூலகத்தை அறிவை பெற்றுக் கொள்ள பயன்படுத்தினார் மால்கம். சக கைதிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, இவர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.

சிறையில் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. ஒரே வாசிப்பில் மூழ்கினார். அது அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. சிந்திப்பதற்கு நேரம் தேவையென்றால், அதற்கு மிகச் சிறந்த இடம் கல்லூரிக்கு அடுத்தபடியாக சிறைச்சாலைதான் என்று முழங்கினார் மால்கம் எக்ஸ்.

சிறைக்காவலர் வரும்போது உறங்குவது போல் நடிப்பார். அவர் சென்றவுடன் எழுந்து புத்தகம் படிப்பார். சிறைச்சாலையில் உள்ள புத்தகங்களில், இவருடைய கைப்படாத புத்தகம் என்பதே கிடையாது என்றளவுக்கு, அங்குள்ள அத்தனை புத்தகத்தையும் படித்து முடித்தார்.

ஆங்கில வார்த்தைகளில் தெரியாத வார்த்தைகளை, அகராதியைக் கொண்டு படித்தார். சிறைச்சாலையில் இருந்து ஆங்கிலத்தில் கடிதம் எழுதக் கற்றுக் கொண்டார். சக கைதிகள் இவரை அபூர்வமாக பார்த்தனர். தவறை செய்துவிட்டு சிறைக்கு வந்த மால்கம் எக்ஸிற்கு, சிறைச்சாலை நூலகம் இந்தளவுக்கு நம்மை உயர்த்தும் என்று எண்ணவில்லை.

அவருடைய ஆர்வத்தை உணர்ந்திருந்த, அவரது சகோதரி மால்கம் எக்ஸை ‘கன்கார்டு’ சிறைக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்தார். ஏனென்றால், ‘கன்கார்டு’ சிறையில் அதிகமான புத்தகங்கள் உண்டு. வரலாறுகள் தொடர்பான புத்தகங்கள் இங்கேவிட அதிகம் உண்டு. இதனால், அவரை அந்த சிறைக்கு மாற்ற முற்பட்டார். அதேபோன்று, அந்த சிறைக்கு ‘மால்கம் எக்ஸை’ மாற்றினார்கள். அந்த சிறைச்சாலையில் இதைவிட அதிகமான வரலாறுகளை படித்தார்.

அங்கு ஆங்கிலத்தில் உரையாடக் கற்றுக் கொண்டார். அங்குள்ள ஆங்கில அகராதியை முழுமையாக பயன்படுத்தினார். தினமும் தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்து தெரிந்து கொண்டார். சிறையில் இருந்து மட்டும் அவர் மனப்பாடம் செய்த வார்த்தைகள் 2,60,000 என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் மால்கம் எக்ஸ் படித்ததோ எட்டாம் வகுப்பு வரைதான்.

கறுப்பின மக்களின் விடுதலைக்கான பயணம், இஸ்லாத்தை தழுவுதல், ஹஜ் பயணம், சுட்டுக் கொல்லப்படுதல் என்று மால்கமின் வரலாறு அனைவரும் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவருடைய வார்த்தைகளில் சில இன்றைய தலைமுறைக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இதோ,


“நீ விமர்சிக்கப்படாமல், விரும்பியதை அடைய முடியாது.”


“ஒரு விஷயத்தில் நீ உறுதியாக இல்லையென்றால், எல்லா விஷயத்திலும் சறுக்கி விடுவாய்.”


“எதிர்காலத்திற்காக நீ இன்றே தயாராகி விடு.”


“உலகம் முழுவதும் சுற்றக்கூடிய பேராயுதம் கல்வி.”


“ஊடகம் என்பது ஒரு வலிமையான ஆயுதம். ஒரு குற்றவாளியை அப்பாவியாக்கவும், அப்பாவியை குற்றவாளியாக்கவும் முடியும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தது. அது விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.”


“சுதந்திரம் தானாக கிடைக்காது. சமத்துவமும் நீதியும் அப்படித்தான். மனிதர்களாகிய நாம்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.”

- நெல்லை சலீம்

Pin It